ramesh.m@hindutamil.co.in
மருந்து, மாத்திரைகள் எதற்காக தயாரிக்கப்படுகின்றன? நோயைக் குணப்படுத்த, உயிரைக் காக்க… ஆனால், அவை நோயாளிகளை குணப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் உயிரையே பறிக்கக்கூடியவையாக இருந்தால்? இத்தகைய சிக்கலில்தான் மருத்துவ உலகம் இன்று சிக்கித் தவிக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் போலி மருந்துகளால் உயிரிழக்கின்றனர். அதிலும், இந்தியாவின் நிலவரம் மிகுந்த கவலையளிக்கக் கூடியதாக உள்ளது.
இந்திய மருத்துவச் சந்தை உலக அளவில் மருந்துத் தயாரிப்பில் இந்தியா முக்கிய கேந்திரமாக விளங்குகிறது. இந்தியாவின் மருத்துவத்துறை சந்தை 4,200 கோடி டாலராகும். இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,500 கோடி டாலரைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டில் இது 12,000 கோடி டாலர் முதல் 13,000 கோடி டாலரை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மருத்துவ உபகரணங்கள் சந்தை தற்போது 1,036 கோடி டாலராக உள்ளது. இது அடுத்த நான்கு ஆண்டுகளில் 5,000 கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 3 ஆயிரத்துக்கும் மேலான மருந்து தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இந்தியாவின் மருத்துவத்துறை ஏற்றுமதி 2,444 கோடி டாலராக உள்ளது. உலக அளவில் மருந்து ஏற்றுமதியில் இந்தியா 12-வது இடத்தில் உள்ளது. இப்படி இந்தியாவில் மருத்துவத்துறை சந்தை மிகப் பெரியதாக இருந்தாலும், இந்தியாவில் தயாராகும் மருந்துப் பொருட்களின் தரம் குறித்து உலக நாடுகளுக்கு நல்ல மதிப்பு இல்லை. அச்சுறுத்தும் அளவுக்கு இந்தியாவில் போலி மருந்து, மாத்திரைகள் புழங்குகின்றன.
இந்தியாவும் போலி மருந்துகளும்
உலக அளவில் விற்பனையாகும் மருந்துகளில் 10 சதவீதம் போலி மருந்துகள் என்றும், இவை பெரும்பாலும் ஆசிய நாடுகளான சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 20 சதவீதம் போலியானவை என்று அமெரிக்க வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் மருந்துகளின் தரம் குறித்தே இவ்வளவு சந்தேகங்கள் முன்வைக்கப்படுகிறது என்றால், இந்தியாவுக்குள் எத்தனை தரம் குறைந்த மருந்துகள், போலி மருந்துகள் புழங்கிக்கொண்டிருக்கும்?
கடந்த ஆண்டு இமாசலப்பிரதேசத்தில் 5 வயதுக்குட்பட்ட 13 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சோக சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இவர்கள் அனைவரும் கொடிய தொற்று நோயாலோ அல்லது தீர்க்க முடியாத நோயாலோ உயிரிழக்கவில்லை. இருமலுக்கு மருந்து சாப்பிட்டதன் விளைவாக உயிரிழந்தனர் என்பதுதான் சோகத்திலும் சோகம். இவர்கள் சாப்பிட்ட இருமல் மருந்தில் டைஎத்திலீன் கிளைகோல் இருந்தது. அது அக்குழந்தைகளின் கிட்னிகளை முழுவதுமாக செயலிழக்கச் செய்துவிட்டது. அந்த 13 குழந்தைகளுமே சிறுநீரக செயலிழப்பால்தான் உயிரிழந்தனர். போலி மருந்துகளின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகம் என்பதற்கு மத்திய அரசின் ஜன் ஔஷதி திட்டத்தில் வழங்கப்பட்ட மருந்துகளில் 5 மருந்துகள் தரமற்றவை என கண்டுபிடிக்கப்பட்டு பிறகு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது சமீபத்திய உதாரணமாகும்.
கரோனா காலகட்டத்தையே எடுத்துக்கொள்வோம். கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தபோது, தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் ஆக்சிஜன் சிலிண்டருக்கும், ரெம் டெசிவர் மருந்துக்கும் மக்கள் பரிதவித்தனர். அடித்தது ஜாக்பாட் என்று போலி மருந்துகளையும், தீயணைக்கும் சிலிண்டரில் ஆக்சிஜனையும் அடைத்து விற்பனை செய்தது ஒரு கும்பல். ரெம்டெசிவர் மருந்து ‘கோவிபிரி’ என்ற பெயரில் கிடைப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. அதன் பிறகு, அரசு தலையிட்டு ரெம்டெசிவர் மருந்தை ‘கோவிபிரி’ என்ற பெயரில் தயாரிக்கவும் இல்லை, அதற்கு அனுமதியும் வழங்கப்படவில்லை, அது போலி மருந்து என்று அறிவித்தது.
அவ்வளவு ஏன் கரோனா தடுப்பூசிகளிலே போலிகள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கொல்கத்தாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளைக் கண்டுபிடித்தது இந்தியாவில் போலி மருந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதற்கு மிகச் சிறந்த சான்றாகும். மேற்கு வங்க மாநிலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மிமி சக்ரவர்த்திக்கே போலி கோவிஷீல்டு தடுப்பூசியும் போடப்பட்டது. அந்த அளவுக்கு போலி மருந்து தயாரிப்பாளர்களின் நெட்வொர்க் வலுவாக உள்ளது என்பதை நமக்குக் காட்டுகிறது. இந்திய மருந்துச் சந்தையில் போலி மருந்துகளின் பங்களிப்பு 20 சத
வீதமாக உள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகமே தெரிவித்துள்ளது.
போலி மருந்துகளின் பிறப்பிடமாக தலைநகர் டெல்லியின் சாந்தினி சௌக் பகுதிதான் திகழ்கிறது. இந்தியாவில் போலி மருந்துகளின் வளர்ச்சி 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சட்ட விரோதமான மருந்து விநியோகத்தில் இந்தியாவுக்கும், துருக்கிக்கும் இடையே நெருங்கி தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள போலி மருந்து வர்த்தகர், பணத்தை ஹாங்காங்கில் உள்ள போலி மருந்து வர்த்தகருக்குக் கை மாற்றுவார். அவர் மூலம், துருக்கி சந்தையில் போலி மருந்துகள் வாங்கப்பட்டு அவை கப்பல் மூலமாக டெல்லியை வந்தடையும். இவ்வாறு போலி மருந்துச் சந்தை சர்வதேச அளவில்கிளை பரப்பியுள்ளது.
போலி மருந்துகள் அதிகரிப்பதற்கு என்ன காரணம்
இந்தியாவில் மருந்துகளின் தரத்தை சோதிப்பதற்கு போதிய எண்ணிக்கையில் ஆய்வகங்கள் இல்லை என்பது ஒரு முக்கியக் காரணமாகும். மொத்தமே 47 ஆய்வகங்கள்தான் உள்ளன. இவற்றில் 6 மத்திய ஆய்வகங்கள். இவற்றில் ஆண்டுக்கு 8 ஆயிரம் மருந்துகள் வரைதான் பரிசோதிக்க முடியும். மருந்து தயாரிப்பு ஆலைகளுக்கென பல கட்டுப்பாட்டு வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ளது. மொத்தம் இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேலான மருந்து தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு தொழிற்சாலைகள்தான், அதாவது 4 ஆயிரம் ஆலைகள்தான் தரமாக உள்ளன. மருத்து
வர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் இந்தியாவில் மருந்து கட்டுப்பாட்டு கொள்கைகள் உள்ளன. இதுவும் போலி மருந்துகளின் நடமாட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு முக்கியக் காரணமாகும்.
நாம் இன்னொன்றையும் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். போலி மருந்துகள் என்பது முறையான ஒப்புதலின்றி தயாரிக்கப்படுவை ஆகும். இந்தியாவில் அதிக அளவில் போலி மருந்துகள் புழங்குவது மட்டும் பிரச்சினை இல்லை, இந்தியாவில் மருந்துக் கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதலோடு வெளிவரும் மருந்துகளின் தரமுமே சந்தேகத்துக்குரியதாக உள்ளன. இந்தியாவின் தடுப்பூசியான கோவாக்சினை, பல உலக நாடுகள் ஏற்க மறுத்ததை இந்தப் பின்புலத்தில் நாம் பார்க்க வேண்டும். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் பரவலான பயன்பாட்டில் உள்ளன. அதேபோல், நாம் போலி மருந்துகள் பிரச்சினையை மருத்துவத் துறையோடு மட்டும் சுருக்கி விடக்கூடாது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் தொடர்பான பிரச்சினைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்தியாவில் தரக் கட்டுப்பாட்டு வாரியங்களே தரமற்றவையாக இருப்பதுதான் அடிப்படை பிரச்சினை.
மருத்துவத் துறையில் கூடுதல் கண்காணிப்பு
மருத்துவத் துறையில் உலக அளவில் இந்தியா முதன்மை நாடாக வளரும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்திய மருத்துவத் துறை அபரிமித வளர்ச்சியை எட்டுவதற்கான அனைத்துச் சாத்தியங்களும் உள்ளன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மருத்துவச் செலவு குறைவு என்பதால், வளைகுடா நாடுகள், ஆப்ரிக்க நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படியான சூழலில், போலி மருந்துகள் புழக்கம் அதிகரிப்பதும், தரமற்ற மருந்துகள் தயாரிக்கப்படுவதும் இந்தியாவின் மருத்துவத் துறையின் வளர்ச்சியை பின்னுக்கு இழுக்கக் கூடியதாக அமையும்.
மருந்தில் அசல் எது, போலி எது என்று சாமானியனுக்கு எப்படி தெரியும்? நம் நோயைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் மருந்துகளை உட்கொள்கிறோம். அது மருந்தல்ல விஷம் என்றால், அந்த இழப்புக்கு யார் பொறுப்பேற்பது? இத்தகைய அவலங்களைத் தடுப்பது ஒரு அரசின் அடிப்படைக் கடமை.
இந்திய மருத்துவத் துறையின் சந்தை விரிவடைவதில் பெருமை கொள்வதைத் தாண்டி, இந்திய மருந்துப் பொருட்கள் மீது இந்திய மக்களுக்கும் சரி, உலக நாடுகளுக்கும் சரி நம்பிக்கை ஏற்படும் வகையில் அவற்றின் தரத்தை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முதலில், மருந்துத் தயாரிப்பில் கடுமையான நெறிமுறைகளை இந்திய அரசு கொண்டு வர வேண்டும். தரக் கட்டுப்பாட்டு வாரியங்களில் சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். போலி மருந்துப் புழக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், இந்தியா போலி மருந்துகளின் தலைநகரமாக மாறிவிடக்கூடும்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago