நலத் திட்டங்கள் மக்களை சோம்பேறிகளாக்குமா?

By செய்திப்பிரிவு

பொருளாதாரரீதியிலும், சமூக ரீதியிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு அரசினால் அளிக்கப்படும் உதவித் திட்டங்கள் குறித்து அண்மைக் காலத்தில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்குமட்டுமல்ல சமமற்ற பொருளாதார வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்குமே சமூக உற்பத்தியின் பொது விளைவைப் பகிர்ந்தளிப்பது சமுதாயத்தின் கடமையாகவும் நடைமுறையாகவும் உள்ளது. இதனால்தான் கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு, ஓய்வூதியத் திட்டம், பொது விநியோக முறை, கட்டணமில்லா மின்சாரம், உர மானியம், கடன் தள்ளுபடி போன்ற பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறையிலுள்ளன.

பின்தங்கிய பகுதிகளில் தொழில் தொடங்குவோர்க்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் கூடப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இத்தகையத் திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் என்றும் மக்களை சோம்பேறிகளாக்கும் என்றும் விமர்சனங்கள் சமீப காலங்களில் தீவிரமடைந்துள்ளன. நலத் திட்டங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் இந்த விமர்சனங்கள் அனைத்தும் நியாயமற்றவை. ஏன் என்று பார்ப்பதற்கு முன்னால், நலத் திட்டங்கள் மீதான விமர்சனங்களின் தோற்றுவாயைப் பார்க்கலாம்.

மக்கள் நல அரசுகளும் நவ தாராளவாதிகளும்

நலத்திட்டங்கள் மீதான விமர்சனங்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. 1930களில் நிகழ்ந்த பொருளாதாரப் பெருவீழ்ச்சியைத் (Great Depression) தொடர்ந்து பொருளாதாரத்தில் அரசின் குறிப்பிடத்தக்க பங்கேற்புடன் கூடிய நல அரசுகள் (welfare state) பல நாடுகளில் தோன்றின. கெய்னீசியப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றி, பொதுப் பணிகள் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெருக்கி, வறியோர்க்கு வருமானப் பகிர்வு செய்யப்பட்டதன் மூலம் சந்தைத் தேவையை ஊக்குவித்து உற்பத்தியையும் பொருளாதார வளர்ச்சியையும் முடுக்கிவிடும் திட்டங்கள் அரசுகளால் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தொடக்க காலம் முதலே இதற்குச் சில பொருளியலாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் தோன்றின.

பொருளாதாரத்தில் அரசு எவ்விதத்திலும் தலையிடக் கூடாது, அவ்வாறு செய்வது அரசுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கி, அனைவரையும் பாதிக்கக்கூடிய பணவீக்கத்துக்கும் தொழில் வளர்ச்சியின் முடக்கத்துக்கும் வழிகோலும் என்பது அவர்களின்வாதம். நல்ல நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்கள் இறுதியில் கெட்ட பலனைத்தான் தருமென்பதும் அவர்கள் கருத்து. இதே போல, குறைந்தபட்சக் கூலி நிர்ணயச் சட்டமும் உழைப்புச் சந்தையில் "சுதந்திரமாகச்" செயல்படுவதைத் தடுத்து வேலையின்மையை அதிகரிக்கத்தான் செய்யும். குறைந்தபட்சக் கூலி என்கிற நல்ல நோக்கம், வேலையின்மை என்கிற தீயவிளைவை உருவாக்குகிறது; குறிப்பாக, குறைந்த கூலிக்கு உழைக்கத் தயாராக இருக்கும், குறைதிறனுடைய (low-skilled) தொழிலாளர்களின் வேலையின்மையை அதிகரிக்கும் என்பது அவர்களின் வாதம். நலஅரசுகள், பொருளாதார சுதந்திரத்தில் தலையிட்டு இடையூறு செய்வதால், அவை ஒரே சமயத்தில் பொருளாதார சுதந்திரத்திற்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன என்பதுதான் நவ தாராளாவாதத்தின் (Neo-liberalism) அடிப்படைக் கோட்பாடு.

நல அரசுகள் மட்டுமன்றி தொழிற்சங்கங்கள் மூலம் கூலி உயர்வு கோருவதும் சந்தையின் சுதந்திரமான செயல்பாட்டில் தலையிடுவதால் அதுவும் சுதந்திரத்தின் எதிரியே. இத்தகைய நவ தாராளவாதக் கோட்பாடுகளின் மூலவர்களில் ஒருவர்தான் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராக இருந்த மில்ட்டன் ஃப்ரீட்மேன். அதற்காக அவருக்கு நோபெல் பரிசும் வழங்கப்பட்டது. அவர் 1982-ஆம் ஆண்டு நியூஸ்வீக் இதழில் எழுதிய கட்டுரையில், அரசினால் செயல்படுத்தப்பட்ட சமூக நலத்திட்டங்களில் எதிர்பார்த்த அளவு மக்களுக்குப் பலனளித்த ஏதாவது ஒரேயொரு உதாரணத்தையாவது வாசகர்களால் கூற முடியுமா எனச் சவால் விடுக்கிறார்.

நலத் திட்டங்கள் ஏன் அவசியம்?

ஃப்ரீட்மேன் போன்ற நவ தாராளவாதிகள், உழைப்புச் சந்தை உள்ளிட்ட அனைத்துச் சந்தைகளும் அரசுத் தலையீடில்லாமல் சுதந்திரமாகச் செயல்படும்போது, அச்சந்தைகளில் பங்கேற்கும் அனைவரும் தன்னார்வத்துடன் பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றனர்; இது பொருளாதார பலம் ஓரிடத்தில் குவிவதைத் தடுத்து பொருளாதார சுதந்திரத்தை அனைவருக்கும் உறுதி செய்கிறது என்கிறார்கள். ஆனால், இது கூட்டுக்குதவாத ஏட்டுச்சுரைக்காய் என்பது போலத்தான். எதார்த்தம் முற்றிலும் வேறொன்றாக இருக்கிறது.

காரணம், சந்தையில் பங்கேற்பவர்கள், குறிப்பாக மிகப்பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களும், ஏழை, எளியோரும் தன்னார்வத்துடனோ பொழுதுபோக்கிற்காகவோ சந்தையில் பங்கேற்பதில்லை, வாழ்க்கையின் கட்டாயத்தினால் பங்கேற்கிறார்கள். அது, உழைப்புச் சந்தையாக இருந்தாலும் சரி, கல்விச்சந்தையாக இருந்தாலும் சரி, மருத்துவச் சந்தையாக இருந்தாலும் சரி, உணவுப்பண்டங்களை விற்கும் சந்தையாக இருந்தாலும் சரி, உணவுப்பண்டங்களை வாங்கும் சந்தையாக இருந்தாலும் சரி. அப்படியிருக்க, சந்தை "சுதந்திர"மானது என்றும், அதில் பங்கேற்பவர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்கிறார்கள் என்றும் கூறுவது அறமற்றது.

வருமானப் பங்கீட்டு உறுதி

மக்களுக்குத் தெரிவு செய்யும் சுதந்திரம் இருந்தாலும், தெரிவு செய்வதற்கான பொருளாதார வலிமை இல்லாதபோது அது பொருளற்றதாகிவிடுகிறது. "அதிகபட்ச தனிநபர் சுதந்திரம்தான் சமுதாயக் கொள்கையின் ஒரு முக்கியமான இலக்கு என்று வாதிடுபவர்கள் சுதந்திரத்தையும் பொருளாதார பலத்தையும் போட்டுக் குழப்புவது ஒரு மாபெரும் தவறு; ஒரு வேலையைச் செய்வதற்கான பலம் (அல்லது அதிகாரம்) இல்லாதபோது அந்த வேலையைச் செய்வதற்கான சுதந்திரம் என்பது பொருளற்றது" என்று தனது ஆசிரியர் ஃப்ரேங்க் நைட் கூறியதை ஃப்ரீட்மேன் கவனத்தில் கொள்ளவில்லை.

ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமூகத்தில் தொடர்ந்து செல்வம் சேர்ப்பதற்கான சுதந்திரமானது பொருளாதார பலத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்யுமென்பதுடன் பொருளாதார பலமுள்ளவர்களுக்கே அரசியல் பலம் உள்ளிட்ட இதர பலங்களும் கிடைக்குமென்கிறார் ஃப்ராங்க் நைட். இச்
சவாலை உணர்ந்துள்ள சமுதாயம் வருமான வரி மற்றும் வாரிசுரிமை வரிகள் மூலம் நியாயமான வருமானப் பங்கீட்டை உறுதி செய்கின்றன. உடல் நலம், கல்வி ஆகியவற்றை நேரடியாக வழங்குவது நல திட்டங்களின் நோக்கமல்ல. மாறாக, வேலை உத்தரவாதத்தின் மூலம் வருவாயை அதிகரிக்கும் ஒருவித பொருளாதார அதிகாரப்படுத்தலே அவற்றின் முக்கிய நோக்கமாகும்.

ஏழைகள் மீது உளவியல் தாக்கங்கள்

கிராமப்புறங்களில் அதிகமாக இருந்த வறுமை நகரங்களை நோக்கிய தொடர்ச்சியான புலம்பெயர்வால், இந்தியாவின் நகரங்கள் வறியோர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன, அதாவது, வறுமையும் புலம் பெயர்ந்துவிட்டது என்கின்றன ஆய்வுகள்; இந்தியாவின் நகர்ப்புற வறுமை 25 சதவீதமாகும். அதிகரித்துவரும் நகர்ப்புற மக்கள் தொகை மற்றும் வறுமையால் கடுமையான சூழலியல் சிக்கல்களும் உருவாகி வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. வீடு, குடிநீர், சுகாதாரம் போன்ற இதர அடிப்படை வசதிகள் பற்றிய சிக்கல் கிராமப்புறங்களைவிட நகர்ப்புற ஏழைகளுக்கு மிகப்பெரும் நெருக்கடியாக உள்ளன என்று அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் பேராசிரியர் ராமநாத் ஜா கூறுகிறார்.

அதே போல, கிராமங்களைவிட நகர்ப்புறங்களில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நகர்ப்புற ஏழைகள்மீது கடும் உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி குற்றங்கள் பெருகுகின்றன என்றும் அவர் கூறுகிறார். நகர்ப்புறங்களில் நல்ல ஊதியத்தை உறுதியளிக்கும் நிரந்தரமான வேலைகள் கிடைத்தால் கிராமப்புற மக்கள் ஏன் அங்கேயே அடைந்து கிடக்கப் போகிறார்கள் என்பதையும் புலம்பெயரும் உரிமையை மறுக்கும் திட்டம் என்று விமர்சிப்பவர்கள் நன்கு யோசிக்க வேண்டும். சாதிய ஒடுக்குமுறையை, ஏழ்மையை உணராதவர்களின் ஆதிக்க மனப்பாங்கானது அரசுகளின் வறியோர் நலத்திட்டங்களை எதிர்ப்
பதில் முன்னிலை வகிக்கின்றன.

நமது சமூகங்களில் நிலவும் பிளவுகளாலும், உக்கிரமான போட்டியினாலும் பிறருக்கு அளிக்கப்படும் சலுகைகள், முன்னுரிமைகள், நலத்திட்டங்கள் அனைத்தையும் தம்முடைய இழப்பாகக் கருதுவதுதான் பொருளியல்-உளவியல் அடித்தளம். வறியோரை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரப்படுத்துவது, பெரு உழவர்களின், முதலாளிகளின் மலிவான உழைப்புத் தேவைக்கு ஒரு சவாலாக அமைவதை அவர்களால் சகிக்க முடிவதில்லை. உழைப்பவர்கள் ஓய்வெடுத்தால் அது பல்லாங்குழி விளையாட்டாகவும், சோம்பேறித்தன மாகவும் தெரிகிறது; பணம் படைத்தவர்கள் விண்வெளிக்கும் சுவிட்சர்லாந்துக்கும் சுற்றுப் பயணம் சென்றால், அது சுற்றுலாத் தொழிலை மேம்படுத்து வதாகவும், மேன்டிவில் கூறியது போல வேலை வாய்ப்பளிப்பதாகவும் தெரிகிறது.

சமுதாயத்தின் சுமை

அறிவார்ந்தவர்கள் பணியாற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்கூட போட்டி, பொறாமைகளின் காரணமாகச் சாதியத்தின் நிலைக்களன்களாக மாறிவிட்டன; கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை, ஓய்வூதியம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு செல்வச் சீமான்களாகிவிட்ட பலர் இன்று நலத்திட்ட எதிர்ப்பாளர்களாகவும், "திறமை", "தகுதி" ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கும் 'அறிவுத்தூண்களாகவும்' மாறியிருக்கிறார்கள். இதன் நீட்சிதான், "நமக்குக் கிடைத்த வெற்றிகளெல்லாம் நம் திறமைக்குக் (சுதந்திரமான சந்தையின் மூலமாக) கிடைத்தவை, பிறர்க்குக் கிடைத்ததெல்லாம் அரசின் தலையீட்டால் கிடைத்தவை" என்கிற மனப்பாங்கும், "எனக்கு இனிமேல் (அரசுத் தலையீடு) தேவையில்லை, எனவே, அது யாருக்குமே தேவையில்லை, அது சமுதாயத்தின் சுமை" என்கிற மனப்பாங்கும் உருவாகக் காரணம்.

இந்த மனப்பாங்கின் நீட்சிதான் மானியங்கள், பொது விநியோக முறை மூலம் மலிவு விலையில் உணவுப் பண்டங்கள் விற்பனை, குறைந்தபட்சக் கூலி நிர்ணயம், விளை பொருட்களை அரசே நேரடிக் கொள்முதல் செய்தல் ஆகிய அரசின் நேரடி சந்தைத் தலையீடுகள் அனைத்தையும் நிறுத்த வேண்டுமென்று குரல் எழுப்புகிறது. என்னுடைய மாணவியொருவர் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக, பொது வினியோக முறையையும் கிராமப்புற வேலையுறுதித் திட்டத்தையும் ஒப்பிட்டுப் பொருளியல் ஆய்வு செய்து, பொது வினியோக முறையைவிடக் கிராமப்புற வேலையுறுதித் திட்டம் நல்ல பலனை அளிப்பதாகக் கண்டறிந்தார். அண்மைக் காலத்தில் கிராமப்புற வேலை உறுதித் திட்டம் விவசாய வேலைகளையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டிருப்பதையும், இயற்கை வளப் பாதுகாப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் கவனிக்க வேண்டும்.

லஞ்சம், ஊழல் புகார்கள் குறையும்

அரசின் திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படுவதோடு, நவீன தொழில்நுட்ப உதவியோடு பலன்கள் அனைத்தும் நேரடியாக பயனாளிகளைச் சென்று சேரும் வகையில் செயல்படுத்த வேண்டும். நேரடி பண பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்தப்படும்போது, இடைத் தரகர்கள் பயன்பெறுவது குறையும். அரசியல் குறுக்கீடுகளால் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட புகார்களும் முற்றிலும் இல்லாமல் போகும்.

இது போன்ற திட்டங்கள் கிராமப்புறங்களில் பணப்புழக்கத்தை அதிகரித்து பண்ட நுகர்வு, ஊட்டச்சத்து ஆகியவற்றை அதிகரிப்பதுடன், மொத்தப் பொருளாதார உற்பத்தியையும், எண்ணற்ற சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துகிறது. கிராமப் பொருளாதாரம் நலமாக இருந்தால்தான், விவசாய வேலைகளுக்கேகூட ஆட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்; கட்டற்ற நகர்மயமாதலின் சீரழிவுகளை மட்டுப்படுத்தவும் பரந்துபட்ட பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யவும் முடியுமென்பதையும் இது போன்ற திட்டங்களை விமர்சிப்பவர்கள் உணர வேண்டும்.

பேராசிரியர் ரு.பாலசுப்ரமணியன்
(rubalu@gmail.com)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்