இளம் தலைமுறையினரை ஈர்க்கும் பங்குச் சந்தை

By முகம்மது ரியாஸ்

எங்கு திரும்பினாலும் பங்குச் சந்தைகள் பற்றிய பேச்சுகள்தான். கிரிக்கெட் ஸ்கோர் பற்றி பேசுவது போல் பங்குச் சந்தை ஏற்ற, இறங்களை - சில மாதங்களுக்கு முன்பு வரையில் பங்குச் சந்தையைப் பற்றி அறிந்திராதவர்கள்கூட - பேசிக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு என்னதான் ஆச்சு?

கடந்த ஒராண்டுகளாக பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மட்டும் 45 லட்சம் பேர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக புதிதாக டிமேட் கணக்கைத் தொடங்கியிருக்கின்றனர். சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 20 லட்சம் பேர் டிமேட் கணக்குத் தொடங்கினர். அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது பங்குச் சந்தையை நோக்கிய மக்களின் வருகை இருமடங்கு அதிகரித்து இருக்கிறது. கரோனாவுக்கு முன்பே பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டார்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது என்றாலும், கரோனாவின் வருகை அந்த எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 13 லட்சம் பேர் என்ற அளவில் 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரையில் மொத்தமாக 1.4 கோடி டிமேட் கணக்குகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.

நிறுவன ரீதியிலான பெரும் முதலீட்டாளர்களுடன் ஒப்பிடுகையில் சில்லறை முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடும் செய்யும் தொகை குறைவு. ஆனால், சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், மொத்தமாக அவர்களின் முதலீடு அதிகமாக இருக்கிறது. அந்த வகையில், தற்போது இந்தியப் பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் ஆதிக்கம்தான் அதிகம். 2016-ம் ஆண்டில் தேசியப் பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு 33 சதவீதமாக இருந்தது. அது தற்போது 44 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதில் கவனிக்கத்தக்க விசயம் என்னவென்றால் இதற்கு முன்பும் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும். டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை என பெருநகரப் பின்புலத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால், தற்போது 2-ம் நிலை மற்றும்3-ம் நிலை நகரங்களிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் சில்லறை முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றனர்.

என்ன காரணம்?

முதலீடு தொடர்பாக இந்தியர்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்தான் இதற்கெல்லாம் காரணம். தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி மற்றும் அஞ்சலகத் திட்டங்கள் போன்றவைதான் நடுத்தர வர்க்க இந்தியர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய மற்றும் சேமிப்பதற்கான தளங்களாக இருந்தன. ஆனால், தற்போது அவை லாபகரமானவையாக இல்லை என்று மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். தங்கத்தின் விலை நிச்சயமற்றதாக இருக்கிறது, ரியல் எஸ்டேட் திடீரென தேக்கம் காண்கிறது, வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் வட்டிவிகிதம் குறைவாக உள்ளது….. இந்நிலையில் புதிய முதலீட்டுத் தளத்துக்கான தேவை உருவாகியுள்ளது. அந்த வகையில் பங்குச் சந்தை அவர்களின் தேர்வாக உள்ளது. அதேசமயம், பங்குச் சந்தை குறித்து - பங்கு மதிப்பு திடீரென்று ஏறும், இறங்கும் - மக்களிடம் ஒருவகை அச்சம் எப்போதும் உண்டு. ஆனால், கரோனாவும், தொழில்நுட்பங்களின் ஊடுருவலும் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான மக்களின் பார்வையை மாற்றி அமைத்திருக்கிறது.

கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வீட்டினுள் முடங்கு சூழல் ஏற்பட்டது. ஒரு ஆர்வத்தின் அடிப்படையில் பொழுதுபோக்குக்காக பங்குச் சந்தை தொடர்பாக ஆராய்ந்து அதில் முதலீடு செய்யத் தொடங்கியவர்கள் பலர். இதற்கு நவீன தொழில்நுட்பம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஸ்மார்ட்போனும், இணையம் கிராமங்கள் வரையில் சென்று சேர்ந்திருக்கிறது. பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக யூடியூபில் வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைதளங்கள் அனைத்தும் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான தகவலை வழங்கிய வண்ணம் உள்ளன. இவை தவிர, பங்குச் சந்தை முதலீடு தொடர்பான கைபேசி செயலிகள் பெரும் உதவியாய் இருக்கின்றன. பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களை கணிப்பதற்கான சாத்தியத்தை அவை தருகின்றன.

இது நீடிக்குமா?

கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையைச் சமாளிக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மத்திய வங்கிகள் நாட்டின் நிதி அமைப்புக்குள் பணப்புழக்கத்த அதிகரிக்கச் செய்தன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, தொழில்துறை சரிவிலிருந்து வேகமாக மீண்டு வரத் தொடங்கியது. இதனால், உலகளாவிய அளவில் பங்குச் சந்தைகளில் சமீப காலமாக ஏற்றம் காணப்பட்டுவருகிறது. மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டெண் 60 ஆயிரத்தை தொட்டிருக்கிறது.

இவ்வாறு பங்குச் சந்தையில் தொடர் ஏற்றம் காணப்படும் நிலையில், ஆர்வக் கோளாறில் நிறைய பேர் முதலீடு செய்ய வருவர். அவர்களில் பலர், பங்குகளின் சற்று சரியத் தொடங்கியதும் வாங்கிய பங்குகளை விற்றுவிட்டு பங்குச் சந்தையில் மேற்கொண்டு முதலீடு செய்வதைத் தவிர்த்துவிடுவார்கள். இந்தப் போக்கு எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், தற்போதுள்ள சூழலை இந்தப் பின்புலத்தோடு பொருத்திவிட முடியாது. ஏனென்றல், முதலீடு மற்றும் சேமிப்பு தொடர்பான இளம் தலைமுறையினரின் பார்வை முந்தைய தலைமுறையினரிடமிருந்து மாறுபட்டு இருக்கிறது. எதிலும், பலனை உடனடியாக எதிர்பார்க்கக் கூடியவர்களாக இளம் தலைமுறையினர் இருக்கின்றனர். பங்குச் சந்தையை தங்களுக்கான களமாக அவர்கள் காண்கின்றனர். அந்தவகையில், இனி பங்குச் சந்தை என்பது இந்தியர்களின் முதன்மையான முதலீட்டுத் தேர்வாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்