மீண்டும் விவசாயத்தை நோக்கி இந்தியா

By ஜெ.சரவணன்

‘இன்னும் எவ்ளோ காலத்துக்கு இப்படி கஷ்டப்படப்போற... நல்ல விலை வருது.. வித்துட்டு பசங்களயாவது படிக்க வச்சு நல்ல உத்தியோகத்துக்கு அனுப்புவியா’. ரியல் எஸ்டேட் துறை இந்தியாவில் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் விவசாயிகள் பெரும்பாலும் எதிர்கொண்ட வார்த்தைகள் இவை. இப்படியெல்லாம் பேசி வாங்கிய நிலங்களை மனைகளாக்கி விற்க முடியாமல் படுத்துக்கிடக்கிறது ரியல் எஸ்டேட் துறை. ஆனால் விவசாயத்தை நோக்கி தற்போது மக்கள் மீண்டும் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

காரணம் இந்தியாவில் விவசாயம்தான் வேலைவாய்ப்பின் கடைசி புகலிடமாக எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது. இது இந்த கரோனா காலத்தில் மிகத் தெளிவாக அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. கரோனா காலத்தில் மற்ற துறைகளில் கடும் வேலையிழப்பு ஏற்பட்ட போது விவசாயத் துறையில் 25.2 சதவீதம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் விவசாயத்துக்கான சூழல் எப்படி இருக்கிறது என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் விவசாயத்தை நோக்கி ஆர்வமுடன் திரும்புபவர்களை பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது.

சமீபத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள சூழ்நிலை மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் இந்திய விவசாயத் துறை மற்றும் விவசாயிகளின் பொருளாதார சூழல் பற்றி மிக விரிவான அதிகாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வில் இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளோடு ஒப்பிடுகையில் விவசாயத் துறைதான் அதிக வேலைவாய்ப்பை தரும் துறையாக உள்ளது என்பது நிரூபணமாகியிருக்கிறது. இந்திய வேலைவாய்ப்பு கணக்கெடுப்பில் 42.5 சதவீத வேலைவாய்ப்புகளை வேளாண் துறை வழங்குகிறது. ஆனால் மிகப்பெரிய முரண்பாடு என்னவெனில் விளைச்சல் என்ற வகையிலும், வருமானம் என்ற வகையிலும் பார்க்கும்போது ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான சூழல் இல்லை என்பதுதான்.

என்எஸ்ஓ அறிக்கை சொல்வது என்ன?

ரூ.4,000க்கும் மேல் மதிப்புள்ள விளை நிலமோ, தோட்டமோ, கால்நடைகளோ அல்லது பிற விவசாயம் சார்ந்த பொருட்களோ உள்ள குடும்பங்கள் விவசாயக் குடும்பங்களாக அடையாளம் காணப்படுகின்றன. சமீபத்திய கணக்கெடுப்பின்படி கிராமப் புறங்களில் 9.31 கோடி குடும்பங்கள் விவசாய குடும்பங்களாகவும், 7.93 கோடி குடும்பங்கள் விவசாயம் அல்லாத குடும்பங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனில் கிராமப் புறங்களில் பாதிக்கும் மேலான குடும்பங்கள் குறைந்தபட்ச விவசாயப் பங்களிப்பு கூட இல்லாத நிலையில் உள்ளன. அதேசமயம் கிராமப்புறங்களில் 99 சதவீத குடும்பங்கள் ஒரு ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் உள்ளவையாக உள்ளன. 0.2 சதவீதத்தினருக்கு மட்டுமே 10 ஹெக்டேருக்கும் மேல் நிலங்கள் உள்ளன.

விவசாயம் சார்ந்த குடும்பங்களின் வருமானத்தை ஆய்வு செய்யும் போது 9.31 கோடி குடும்பங்களின் 71 சதவீத வருமானம் வேளாண் விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை நம்பியிருக்கிறது. இவர்களுடைய மொத்த வருமானத்தில் விளைச்சல் மூலமாக 38 சதவீதமும், விவசாயப் பணிகளில் ஊதியமாக 40 சதவீதமும் கிடைக்கிறது. 2012-13 மற்றும் 2018-19 ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை ஒப்பிடுகையில் விவசாய பணிகளுக்கான ஊதிய வருமானம் உயர்ந்திருக்கிறது. கால்நடை வளர்ப்பு மூலமான வருவாய் உயர்ந்திருக்கிறது. ஆனால்வேளாண் விளைச்சல் மூலமான வருவாய் குறைந்திருக்கிறது.

2012-13 காலத்தில் 47.9 சதவீதமாக இருந்த விளைச்சல் வருவாய் 2018-19 காலத்தில் 37.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், விவசாயிகளின் வருமானம் உயரவில்லை. விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், தரகர்கள் பணம் கொழித்துக்கொண்டிருக்கிறார்கள். உணவு, பதப்படுத்தல் நிறுவன தொழிலதிபர்கள் வளர்ச்சியின் உச்சத்துக்குப் போகிறார்கள். ஆனால் விவசாயிகள்?

ஏழைகளுக்கும் ஏழைகள்

என்எஸ்ஓ ஆய்வறிக்கையில் 2018-19ஆண்டு காலத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி இந்திய விவசாயிகளின் சராசரி ஒருநாள் வருமானம் 27 ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது. இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுவதன் மூலம் கிடைக்கக்கூடிய சராசரி தினசரி வருமானத்தைக் காட்டிலும் குறைவு. விவசாயி ஒருவருடைய தினசரி சராசரி வருமானம் ரூ.27. மாதம் ரூ.810ஆக உள்ளது. ஆனால் வீட்டுக்கு ஒருவர் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிலும் கூட அவருடைய ஒருநாள் வருமானம் ரூ.245ஆக உள்ளது. 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒரு நபரின் சராசரி வருமானமாகக் கணக்கிட்டால் ரூ.49ஆக உள்ளது. அப்படியெனில் விவசாயி ஒருவருடைய சராசரி தினசரி வருமானம் இதற்கும் கீழே உள்ளது. ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளில் பபணியாற்றுபவர்கள் ஏழைகளுக்கும் ஏழைகள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். எனில் அவர்களை விடவும் குறைவாக வருமானம் ஈட்டும் விவசாயிகளை என்னவென்று வகைப்படுத்துவது? இந்தியாவில் விவசாயம் எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட இதைவிட வேறு எந்த தரவுகளும் தேவையில்லை. ஆண்டு முழுவதும் விவசாய நிலங்களில் பாடுபட்டு குறைந்த வருமானம் ஈட்டுவதற்கு பதிலாக 100 நாள் மட்டும் அதுவும் பெரும்பாலும் தினசரி சில மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்யக்கூடிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் பரவாயில்லை என்ற சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

விவசாயம் அல்லாத துறைகளின் தோல்வி

விவசாயத் துறை இந்த அளவுக்கு மோசமாக உள்ள நிலையிலும் மக்கள் அதை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்க இன்னொரு காரணமும் உள்ளது. அது விவசாயம் அல்லாத துறைகளின் தோல்வி. விவசாயத்திலிருந்து விவசாயம் அல்லாத துறைகளுக்கு வேலைவாய்ப்பைத் தேடி மக்களை மடைமாற்றும் போக்கு உலக மயமாக்கலுக்குப் பிறகு நடந்தது. ஆனால், இது மிகப்பெரும் தோல்வியையே சந்தித்தது. தொடர்ந்து பொருளாதாரங்களில் பல்வேறு நெருக்கடிகள் பல ரூபங்களில் சந்தித்துவரும் நிலையில் பெரும்பாலான துறைகள் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பெரும் தோல்வி அடைந்துள்ளன. உலகிலேயே மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்று, ஆனால் இந்தியாவில் உற்பத்தி துறையினால் வளர்ச்சியையோ வேலைவாய்ப்பையோ போதுமான அளவுக்கு உருவாக்க முடியவில்லை. நுகர்வுச் சந்தையாக மட்டுமே இந்தியாவை மாற்றியதில் அரசின் பொருளாதார கொள்கைகளுக்குப் பெரும் பங்குண்டு. தவறான பல பொருளாதார கொள்கைகளால் உற்பத்தி துறை வளர்ச்சி அடையாமல் போனது. படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பின்மை சூழல் இதனால் அதிகரித்தது. இதுபோன்ற நெருக்கடிகள் இன்னும் பெரிய அளவில் வெடிக்காமல் இருக்க காரணம் விவசாயத் துறை கணிசமான வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருப்பதுதான். விவசாயம் பசியை மட்டுமே தீர்க்கவில்லை, சில நேரங்களில் பெரும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றுவதாகவும் இருக்கிறது.

ஆனால், விவசாயத் துறையில் போதிய கவனம் செலுத்தாததால் தொடர்ந்து ஏற்படும் விளைச்சல் சரிவும், போதுமான வருமானமின்மையும் இந்தியாவில் விவசாயிகளே விவசாயத்தை ஓரங்கட்டும் நிலையை உருவாக்கும் அபாயமும் ஒருபக்கம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதன்காரணமாகவே விவசாயத்தை மேம்படுத்துவதிலும், அதன் விளைச்சல் மற்றும் வருமானத்தில் நிலைத்தன்மையைக் கொண்டுவருவதிலும் தனியார் முதலீடுகள் தீவிரமாக இறங்குவது குறித்து தயக்கத்திலேயே இருக்கின்றன.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற வாக்குறுதியை வழங்கிய, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதமான விலை தரப்படும் என்று பேசிய ஆட்சியின் கீழ்தான் இந்த நிலையை விவசாயிகள் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்ற துறைகளில் வருமானம் அதிகம் இருந்தாலும் செலவுகள் அதைவிட அதிகம். அதைவிட முக்கியமாக வேலை பாதுகாப்பு என்பதும் மிகக் குறைவு. இதனால் பலரும் விவசாயத்தின் பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாற்றத்தை ஆக்கபூர்வமாகவும் நிரந்தரமாகவும் ஆக்க வேண்டுமெனில் இங்குள்ள சூழலை மேம்படுத்த வேண்டியிருக்கிறது.

நாட்டின் முதுகெலும்பு எனச் சொல்லப்படுகிற விவசாயத் துறையின் நெருக்கடியான சூழலை சரிசெய்வதில் கவனம் செலுத்தாமல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு இவ்வளவு என்று ஒரு தொகையை வழங்குவதால் மட்டுமே அவர்களைக் காப்பாற்றிவிட முடியுமா?

எவ்வளவு காலத்துக்கு?

இந்தியாவில் விவசாயம் என்பது ஒரு துறையாகவே முதலில் பார்க்கப்படுவதில்லை. விவசாயப் பணி மதிக்கத்தக்க பணியாக இருப்பதில்லை. இந்த நிலையை மாற்றும் வகையிலான கொள்கைகளை அரசு வகுப்பது காலத்தின் கட்டாயம். சுயசார்பு பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட முதலில் விவசாயத் துறையைப் பலப்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில்தான் வேளாண் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். பசியோடு இருப்பவர்கள் சுதந்திரமாக இருக்க முடியாது என்று ஒரு பழமொழி உண்டு. அந்தச் சூழலுக்குத்தான் நாட்டின் பெரும்பகுதியான மக்கள் இந்தச் சுதந்திர நாட்டில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

ஜெ.சரவணன் saravanan.j@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்