``தோல்வி என்பது மீண்டும் வாய்ப்பு உருவாவதன் தொடக்கமே, ஆனால் இம்முறை மிகுந்த புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும்,’’ - ஹென்றி போர்டு.
இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் உள்ள ஆலைகளை மூடப் போவதாக செப்டம்பர் 9-ம் தேதி போர்டு நிறுவனம் தெரிவித்தது. இந்த அறிவிப்பு, இந்நிறுவனத்தில் பணி புரியும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இடியாக இறங்கியிருக்கும் என்பது நிச்சயம்.
நிறுவனர் ஹென்றி போர்டு கூறியதைப் போல இந்திய மண்ணில் தோல்வி ஏற்பட்டுவிட்டது என்பதால் புத்திசாலித்தனமாக வேறு புதிய வாய்ப்புகளை நோக்கி புறப்பட்டுவிட்டது போர்டு. ஆனால் இங்குள்ளவர்களின் நிலை?
நான்கு ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வெளியேறும் இரண்டாவது அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் போர்டு. ஏற்கெனவே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இதைப்போல இந்தியாவில் இரண்டு ஆலைகளையும் மூடிவிட்டு சென்றுவிட்டது. கார் தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்ல அமெரிக்காவின் இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சனும் இந்திய மண்ணிலிருந்து வெளியேறிவிட்டது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது அமெரிக்க நிறுவனங்கள் இந்திய மண்ணில் தோல்வியைத் தழுவுகின்றன என்பது கண்கூடு.
தோல்வி ஏன்?
இந்தியாவில் தாராளமயமாக்கல் பொருளாதாரம் ஏற்கப்பட்டு சந்தை திறந்துவிடப்பட்டபோது இந்தியாவில் தடம்பதித்த முதலாவது கார் தயாரிப்பு நிறுவனம் போர்டு. ஏறக்குறைய 25 ஆண்டுகளாக இங்கு செயல்பட்ட நிறுவனம் அது. ஆனால் 10 ஆண்டுகளில் 200 கோடி டாலர் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது அந்நிறுவனம்.
25 ஆண்டுகளாக செயல்படும் போர்டு நிறுவனம் இந்தியச் சந்தையை சரியாக கணிக்கவில்லை என்பது அதன் தோல்விக்கான காரணங்களுள் முக்கியமானது. இந்நிறுவனத் தயாரிப்புகளில் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான கார்களே இல்லை. இந்திய கார் சந்தை என்பது விலையை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் மாருதியும், ஹூண்டாயும் சக்கை போடு போடும் சூழலில் போர்டு நிறுவனத்தால் 2.3 சதவீத சந்தையை மட்டுமே 25 ஆண்டுகளில் கைப்பற்ற முடிந்துள்ளது. இது நிறுவனத்தின் வியாபார உத்தியின் தோல்வியைத்தான் காட்டுகிறது.
காரின் விலை குறைவாக இருக்க வேண்டும், எரிபொருள் சிக்கனமானதாக இருக்க வேண்டும். ரீ-சேல் எனப்படும் மறு விற்பனையில் அதிக விலைக்கு விற்பனையாக வேண்டும் என்பன போன்ற இந்தியர்களின் எதிர்பார்ப்பு எதையுமே போர்டு பூர்த்தி செய்யவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
தமிழகத் தலைநகர் சென்னையில் மறைமலை நகரில் போர்டு ஆலை அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் அது முழு உற்பத்தி அளவை எட்டவேயில்லை. அமெரிக்காவில் பெரும்பாலான டாக்சிகள் பெரும்பாலும் போர்டு கார்கள்தான். ஆனால் இந்தியாவில் வாடகைக் காருக்கான மாடல் எதையுமே இந்நிறுவனம் தயாரிக்கவில்லை. இதனால் வர்த்தக ரீதியில் போர்டு நிறுவனத்தால் சோபிக்க முடியவில்லை. 2019 மார்ச் மாத முடிவில் போர்டு நிறுவனத்தின் விற்பனை வெறும் 93 ஆயிரம் கார்கள். அதேசமயம் மாருதி சுஸுகி 27 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. போர்டு நிறுவனத்தின் வியாபார உத்தியின் போதாமையை புரிந்துகொள்ள இதுவே போதுமானது.
இந்தியாவில் மட்டுமல்ல பிரேஸிலிலும் போர்டு நிறுவனத்துக்கு தோல்விதான். அங்கு 1,200 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டதாக அறிவித்து, அங்கிருந்தும் வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸும், ஹார்லி டேவிட்சனும் சமீபத்தில் இந்தியச் சந்தையில் தடம்பதித்த ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமான கியா மோட்டார்ஸ் மற்றும் சீனாவின் மோரிஸ் காரேஜ் (எம்ஜி) ஆகிய நிறுவனத் தயாரிப்புகள் இந்திய சாலைகளில் சிறப்பாக வலம் வருகின்றன. அந்நிறுவனங்கள் இந்தியச் சந்தையைப் பற்றி மிகத் தெளிவான புரிதலைக் கொண்டிருக்கின்றன. அந்தப் புரிதல் இல்லாததனால் போர்டு நிறுவனம் இந்தியாவில் தோல்வியைச் சந்தித்து இருக்கிறது.
போர்டு மட்டுமல்ல ஜெனரல் மோட்டார்ஸும், ஹார்லி டேவிட்சனும் இந்தியச் சந்தையை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ‘ஸ்பார்க்’ என்ற சிறிய ரக காரை தயாரித்தது. இது பரவலாக வரவேற்பைப் பெற்ற மாடலாகும். ஆனால் சந்தையை சரிவர கணிக்காமல், எஸ்யுவி தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி தோல்விக்கு வழி வகுத்துக் கொண்டது ஜெனரல் மோட்டார்ஸ். இருசக்கர வாகனத் தயாரிப்பில் ஹார்லி டேவிட்சனுக்கு இந்தியாவில் சிறந்த வரவேற்பு இருந்தது. ஆனால், இங்கு சாதாரண நடுத்தர மக்களின் போக்குவரத்துக்கு அத்தகைய சூப்பர் பைக் உதவாது என்பதைஅந்நிறுவனம் உணரவில்லை. அந்நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார் சைக்கிளின் விலையே ரூ.6 லட்சமாகும். கள நிலவரத்தை அறியாமல் கடை விரித்து காணாமல் போனது ஹார்லி டேவிட்சன்.
அரசுக்கும் பங்கு இருக்கிறது
இப்படி வரிசையாக நிறுவனங்கள் வெளியேறுவதற்கு அரசுக்கும் பங்கு இருக்கிறது. ஜிஎஸ்டி-யில் சலுகை வேண்டும் என ஆட்டோ
மொபைல் நிறுவனங்களின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை. மேலும் அதிகரித்து வரும் சாலைவரி மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்வு ஆகியனவும் கார் விற்பனையை மந்தமாக்கியுள்ளன. அனைத்துக்கும் மேலாக இரண்டு ஆண்டுகளாக கரோனா வைரஸ் பரவல் தொழில்துறையை கடுமையாக பாதித்துள்ளது. ஆட்டோமொபைல் துறை மிக அதிக பாதிப்பைச் சந்தித்தது.
பிஎஸ்-4 நிலையிலிருந்து பிஎஸ்-6 தரத்துக்கு வாகனங்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகமுதலீடுகளை செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கியது. இப்போது சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் அடுத்தகட்டமாக பேட்டரிவாகனங்களை அரசு ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது. இவையும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மண்ணில் கால் நூற்றாண்டு செயல்பட்ட பிறகு போர்டு வெளியேறும் முடிவு அந்நியமுதலீடுகளை பாதிக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள அரசியல் உள்ளிட்ட புறச் சூழல் காரணமாக வெளியேறினால் அது முதலீட்டை பாதிக்கும். ஆனால் தங்களுக்கு தொடர் நஷ்டம் ஏற்பட்டதால் வெளியேறுவதாக போர்டு அறிவித்துள்ளதால் அந்த வகையில் இந்தப் பிரச்சினையை மத்திய அரசு பெரிய அளவில் பொருட்படுத்தாது என்றே தோன்றுகிறது.
வேலையிழக்கும் ஊழியர்கள்
போர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் 2,700 நிரந்தர பணியாளர்கள் உள்ளனர். இது தவிர பிற பணிகளில் மேற்கொள்ளும்
தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாகும். இந்நிலையில் போர்டு போன்ற பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டால் அதில் நேரடியாக வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளவர்கள் மட்டுமல்ல, அந்நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்படும். இந்நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் வேலையும் கேள்விக்குறியாகும். இந்நிறுவனத்துக்கு உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்படும். போர்டு நிறுவனத்தால் 24 ஆயிரம் பேர் மறைமுக வேலை வாய்ப்பைப் பெறுவதாகக் கூறப்படுகிறது. தற்போது இவர்கள்அனைவரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
கடுமையான நெருக்கடியில்....
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் ஆட்டோ மொபைல் துறையின் தலைநகராகத் திகழ்கிறது. இங்குதான் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தைக் கூறுவர். போர்டு, ஹூண்டாய், சில காலம் செயல்பட்ட மிட்சுபிஷி லான்சர், பிஎம்டபிள்யூ, நிசான், இரு சக்கர வாகனங்களைப் பொருத்தமட்டில் ராயல் என்பீல்டு, யமஹா ஆகிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளும் இங்குள்ளன. இவற்றுக்கெல்லாம் உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் பல சிறுதொழில்நிறுவனங்களும் இங்குள்ளன.
ஆனால் போர்டு நிறுவனம் மூடப்பட்டால் அங்குள்ள பணியாளர்களுக்கு பிற நிறுவனங்களில் வேலை கிடைப்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஏனெனில் ஏற்கெனவே ஆட்டோமொபைல் துறை கடுமையான நெருக்கடியில் உள்ளது. கரோனாவை காரணம் காட்டி பல நிறுவனங்கள் கடுமையாக ஆள்குறைப்பு செய்துள்ளன. மேலும் செமி கண்டக்டர் தட்டுப்பாடு காரணமாக பல நிறுவனங்கள் பகுதியளவிலேயே உற்பத்தி செய்கின்றன. இதனால் வேலை கிடைப்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது.
வேலையிழப்பை தடுக்க தமிழக, குஜராத் மாநில அரசுகள்தான் முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள போர்டு நிறுவன ஆலையில் வேறு வாகனத் தாயரிப்பு நிறுவனங்களை பயன்பாட்டுக்கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆனால் இதுவரையில் எந்த நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையும் முன்னேறிய கட்டத்தை எட்டவில்லை. எப்படியானினும், வேலையிழப்பு நெருக்கடியைச் சந்திக்க புதிய வாய்ப்பை உருவாக்குவதுதான் நம்முன் இருக்கும் ஒரே வழி.
“எதிலும் தவறை மட்டுமே கண்டுபிடிக்காதீர்கள். அதற்கான தீர்வை கண்டுபிடியுங்கள்” என்ற ஹென்றி போர்டின் பொன்மொழி, இப்பிரச்சினைக்கு நாமேதான் தீர்வு கண்டாக வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
- எம்.ரமேஷ்,
ramesh.m@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago