தள்ளாடும் பொதுத்துறை வங்கிகள்

By வாசு கார்த்தி

கடந்த வாரத்தின் தலைப்பு செய்தியாக பங்குச் சந்தையின் சரிவு இருக்கலாம். ஆனால் அவ்வளவு பெரிய சரிவை உண்டாக்கியதில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு மிக முக்கியமானது. கடந்த வாரம் பல பொதுத்துறை வங்கிகளின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியானது. இதில் பெரும்பாலான வங்கிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தன. வாராக்கடன்களுக்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்ததன் காரணமாக நஷ்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது.

இந்த நிலைமையில் கடந்த மூன்று வருடங்களில் பொதுத்துறை வங்கிகள் 1.14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன. கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் எஸ்பிஐ அதிகபட்சமாக 21,313 கோடி ரூபாய் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அலகாபாத் வங்கி உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகள் கடந்த நிதி ஆண்டில் மட்டும் கணிசமான தொகையை தள்ளுபடி செய்திருந்தன.

இதற்கிடையே செப்டம்பர் 2015 நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ. 3,00,743 கோடி என்ற நிலையை தொட்டது. கடந்த மார்ச் மாதத்தில் ரூ. 2.67 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையில் இருந்து ஆறு மாதங்களில் வாராக்கடன் கணிசமாக அதிகரித்துள்ளது.

வாராக்கடன் நிலைமை குறித்து அதிருப்தி தெரிவித்த ரிசர்வ் வங்கி, 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தங்களது நிதி நிலை அறிக்கையில் உள்ள சுமைகளை நீக்குவதற்கு அவகாசம் கொடுத்திருந்தது. இந்த பிரச்சினையை பேண்டேஜ் போட்டு மறைக்க முடியாது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன். இது மட்டுமல்லாமல், துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ராவும் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்தே பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனுக்காக அதிக தொகையை ஒதுக்க ஆரம்பித்தன. இதனால் பல வங்கிகள் நஷ்டத்தை சந்தித்தன.

பங்குகள் சரிவு

நஷ்டத்தை சந்தித்ததால் பொதுத்துறை வங்கி பங்குகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமானது தினமும் 52 வார குறைந்தபட்ச விலையை பல பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் தொட்டன. கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்துக்கு மேல் பல பங்குகள் சரிந்துள்ளன.

முதலீடு செய்யலாமா?

பங்குகள் சரிந்தாலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இப்போது இந்த பங்குகள் முதலீடு செய்வதற்கு ஏற்றவையா என்ற ஒரு விவாதம் உருவாகி இருப்பதுதான். பொதுத்துறை வங்கிகள் பேசல் 3 விதிமுறையை பூர்த்தி செய்ய மத்திய அரசு 70,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு விட்டது. இந்த நிலைமையில் மத்திய அரசு கூடுதலாக முதலீடு செய்யும் பட்சத்தில் பொதுத்துறை வங்கிப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பது குறித்த கருத்துகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலைமையில் வாராக்கடன் பிரச்சினை பூதாகரமாக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். இந்த பிரச்சினையைத் தீர்க்க ரிசர்வ் வங்கி பல கொள்கை முடிவுகளை எடுத்திருக்கிறது. ஒரு வேளை வங்கிகளுக்கு கூடுதல் முதலீடு தேவைப்படும் பட்சத்தில் முதலீடு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. வங்கிகள் சிறப்பாக இருந்தால்தான் பொருளாதாரம் பலமடையும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.

இன்னும் சில காலாண்டுகள்

2008-ம் ஆண்டைப் போலவே பங்குச்சந்தை சரிகிறது. அப்போது அமெரிக்காவில் வங்கிகள் திவால் ஆனது. இப்போது வங்கிகள் நஷ்டம் அடைகிறது என்று பல சிறு முதலீட்டாளர்கள் இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கின்றனர். இந்திய வங்கித்துறைக்கு நிச்சயம் இது பிரச்சினைக்கு உரிய காலம்தான். ஆனால், அமெரிக்க பிரச்சினை வேறு, இந்திய பிரச்சினை வேறு. இன்னும் சில காலாண்டுகளில் நிலைமை மேம்பட வாய்ப்பு இருக்கிறது என்று வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தவிர, வங்கிகள் வளர்ச்சியை பற்றி இப்போதைக்கு கவலைப்படத் தேவையில்லை, நிதி நிலை கணக்குகளை சரி செய்யும்பட்சத்தில் வளர்ச்சி தானாக இருக்கும். வளர்ச்சியா, நிதி நிலை அறிக்கையை சரி செய்வதா என்றால் நிதிநிலைமை அறிக்கையை சரி செய்வதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு இதற்கு ஆதரவாகவே இருக்கிறது. அதனால் குறைந்தபட்சம் இன்னும் ஓரிரு காலாண்டுகளுக்கு பொதுத்துறை வங்கி கள் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய் யும் தொகை அதிகரிக்கவே செய்யும்.

அதனால் வங்கி பங்குகள் மேலும் சரியவே வாய்ப்பு இருக்கிறது. இப்போதைக்கு பல வங்கி பங்குகள் புத்தக விலைக்கு கீழே வர்த்தகமாகியுள்ளது. இவை மதிப்பாக இருந்தாலும் நடுத்தர காலத்தில் மேலும் சரிவதற்கு வாய்ப்பு உள்ளன.

ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர் கள் இப்போது கொஞ்சம் முதலீடு செய்ய லாம். இந்த நிலைமையில் குறைந்த பட்சம் மூன்று முதல் ஐந்து வருடங்கள் முதலீட்டை தொடரலாம். இந்த காலத்துக் குள் வங்கிப் பங்குகள் சில மடங்கு கூட விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுத்துறை வங்கிகள் நாட்டின் முதுகெலும்பு என்பதால் இந்த வங்கி பங்குகளில் முதலீட்டாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தலாம். சிறிது சிறியதாக முதலீடு செய்யும் பட்சத்தில் சில வருடங்களுக்கு பிறகு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் பொறுமையும் நம்பிக்கையும் அவசியம்.

- karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்