இந்திய உணவு கார்ப்பரேஷன் என்பது (எஃப்.சி.ஐ.) அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்களைப் பொது விநியோகத்துக்காகவும் அவசரகால கையிருப்புக்காகவும் அரசு உருவாக்கிய தானியக் கிட்டங்கி நிறுவனம். அறுவடைக் காலத்தில் கோதுமை, அரிசி போன்ற உணவு தானியங்களை லாரி மற்றும் சரக்கு ரயில்கள் மூலம் கொண்டுவந்து சேர்க்கவும் எடுத்துச் சென்று விநியோகிக்கவும் வசதியான இடங்களில் கிட்டங்கிகளை இது அமைந்தது. பொது விநியோகத்துக்காக இங்கிருந்து எடுப்பார்கள்.
சந்தையில் விலையுயர்வைத் தடுக்க தனியார் வியாபாரிகளுக்கும் இங்கு ஏல அடிப்படையில் விற்பனை நடக்கும். அப்படி விற்கும்போது கடைசியாகக் கொண்டுவந்து சேர்த்த, நல்ல நிலையில் உள்ள மூட்டைகள் வியாபாரிகளுக்குக் கிடைக்கும். உள்ளே அடுக்கி நீண்ட நாள்களான புழுத்த, புழுக்கள் நிறைந்த அரிசி பொது விநியோகத்துக்குக் கிடைக்கும். இதனாலேயே ரேஷன் அரிசி என்றால் கல், மண், புழு, பூச்சிகள் நிறைந்ததாக இருந்து பொது விநியோகத்தில் வாங்கிய மக்களை விரட்டின. ஏழைகள் வேறு வழியில்லாமல் இதை வாங்கிக்கொள்வார்கள்.
இந்த நிலையில்தான் இந்திய உணவுக் கழகத்தின் நிர்வாகத்தைச் சீரமைக்க, லட்சுமி காந்த ஜா (எல்.கே.ஜா) என்ற நிர்வாகத் திறமையும் நீண்ட அனுபவமும் மிகுந்த அறிவாளியுமான ஐ.சி.எஸ். அதிகாரியின் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து, கிடங்குகளில் உணவு தானியங்களை பாதுகாக்கும் வழிமுறைகளை பரிந்துரை செய்தது. கிடங்குகளுக்குள் போதிய காற்றும் வெளிச்சமும் கிடைப்பதற்கு ஏற்ப கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றது. அதைவிட முக்கியம் கிராமப்புற பஞ்சாயத்து பணிகளுக்கான கூலியைப் பணமாக முழுதாகக் கொடுக்காமல், உணவு தானியத்தை கூலியில் பாதியாகவும் மீதித் தொகையை ரொக்கமாகவும் கொடுக்கலாம் என்று பரிந்துரைத்தார்.
இதை ‘வேலைக்கு உணவு’ திட்டம் என்று அழைத்தார்கள். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதே கிடைத்த இந்தப் பரிந்துரை பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஜனதா ஆட்சியில் மொரார்ஜி தேசாய் பிரதமரானதும் இது நாடு முழுக்க நடைமுறைக்கு வந்தது. இதை கிராமப்புற மக்கள் பெரிதும் வரவேற்றார்கள். ஆனால் சரண் சிங், ஜனதா அரசின் உள்துறை அமைச்சரானதும் இந்த திட்டத்தை முடக்கி விட்டார். பிறகு நிதியமைச்சரானதும் இதற்கான நிதி ஒதுக்கீட்டிலும் கை வைத்தார். பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகுகூட வேலைக்கு உணவு திட்டம் பெரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை.
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்ததும், இந்த திட்டத்தை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற பெயரில் மீண்டும் கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் பத்தாவது ஆண்டு நிறைவில், இதைக் கொண்டு வந்தது நாங்கள்தான் என்று காங்கிரஸும் இதைச் சரியாக நிர்வகிப்பது நாங்கள்தான் என்று பாஜகவும் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால் இந்தத் திட்டத்துக்குச் சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்துள்ளன. வறுமை ஒழிப்புக்கும், வேலைவாய்ப்பு உறுதிக்கும், கிராமப்புற வளர்ச்சிக்கும் ஏற்ற திட்டம் இது என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைவரே பாராட்டி ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கும் பரிந்துரைத்திருக்கிறார்.
2006ல் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ஒருவர், ஆண்டில் குறைந்தபட்சம் 100 நாள்களுக்கு வேலை பெற முடியும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய்கள் இத்திட்டத்துக்குச் செலவிடப்பட்டிருக்கிறது. இச் செலவில் கிட்டத்தட்ட 71% மக்களுக்கு ஊதியமாகவே தரப்பட்டிருக்கிறது.
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. வாங்கும் சக்தி கூடியிருக்கிறது. அரசு நம் பக்கம் என்ற நம்பிக்கை மக்களிடையே துளிர்விட்டிருக்கிறது.
உணவு பாதுகாப்பு சட்டம்
இந்திய அரசியல் சட்டப்படி உணவு பெறுவது அடிப்படை உரிமை என்று கூறி பி.யு.சி.எல். என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டன் உணவு தானியங்கள் யாருக்கும் வழங்கப்படாமல் புழுத்தும் பூச்சி அரித்தும் கெட்டுப்போயும் வீணாகக் கொட்டப்படுவதைத் தவிர்த்து அவற்றை ஏழைகளுக்குக் குறைந்த செலவில் ஏன் அரசு விநியோகிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேட்டதன் விளைவாக உருவானது இந்த திட்டம்.
கிராமங்களில் 75% குடும்பங்களுக்கும், நகரங்களில் 50% குடும்பங்களுக்கும் உணவு தானியம் கிடைக்க சட்டம் இயற்றப்பட்டது. அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கும் கீழே மிகவும் மோசமான நிலையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு கிலோ ரூ.3 என்ற விலையில் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசியும், ஒரு கிலோ ரூ.2 விலையில் ஒரு நபருக்கு 5 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. புன்செய் தானியம் ஒரு கிலோ 1 ரூபாய்க்கு தரப்படுகிறது.
இந்த திட்டத்தை 9 மாநில அரசுகளும் 2 மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளும் அமல் செய்யவில்லை. அமல் செய்யாத மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் குஜராத் இருந்ததால், “மத்திய திட்டம் குஜராத்துக்குக் கிடையாதா, குஜராத் இந்த நாட்டில் இல்லையா, நாடாளுமன்றம் இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை” என்றெல்லாம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. இந்த திட்டத்தை அமல் செய்வதற்கான பூர்வாங்க வேலைகளை முடித்துவிட்டதாகவும் விரைவிலேயே அமல் செய்துவிடுவோம் என்றும் குஜராத் அரசின் சார்பில் உறுதி மொழி அளிக்கப்பட்டிருக்கிறது.
டபுள்யு.டி.ஓ.வின் எரிச்சல்
உணவு பாதுகாப்பு திட்டம் கிட்டத்தட்ட நாட்டின் விளைச்சலில் 74% மக்களால் உள்நாட்டில் நுகரப்படுவதை உறுதி செய்கிறது. ஆனால் இத்திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று உலக வர்த்தக நிறுவனம் (டபிள்யுடிஓ) வலியுறுத்துகிறது. இந்தியாவின் விளைச்சலில் பெரும்பகுதியான தானியங்கள் உள்நாட்டு நுகர்வுக்காக நிறுத்திக் கொள்ளப்படுவதால் சர்வதேசச் சந்தைக்கு தானியங்களின் வரத்து குறைந்து விடுகிறது, இது உலக வாணிபத்துக்குப் பெருத்த பின்னடைவு என்று குற்றஞ்சாட்டுகிறது.
குறைந்த விலைக்கு ரொக்கம் கொடுத்து வாங்கி அதிக விலைக்கு விற்று கொழுத்த லாபம் சம்பாதிப்பவர்கள் வியாபாரிகள்தான். அவர்களால்தான் நுகர்வோர்களுக்கு எதுவும் குறைந்த விலையில் கிடைத்துவிடுவதில்லை. இந்தியாவில் இடதுசாரி அரசுகள் இல்லையென்றாலும் மேற்கூறிய 3 சமூக பாதுகாப்பு திட்டங்களும் வறியவர்களுக்கு உதவுவதால் இவற்றை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற நோக்கில் வெவ்வேறு விதத்தில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அரசு இத்திட்டங்களை மேலும் வலுப்படுத்தி குறைகளையும் ஊழல்களையும் களைந்து அதிக நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் வறுமை குறைந்து உற்பத்தி பெருகும்.
- rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago