ஓடிடியும் தமிழ் சினிமாவும்!

By ஜெ.சரவணன்

பொழுதுபோக்குவது மனித வாழ்க்கை முறைகளில் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே பல்வேறு பொழுதுபோக்கு முறைகளைக் கடந்து வந்துள்ளான். விளையாட்டு, வீரம், கலை என அவற்றின் போக்குகள் தொடர்ந்து மாறிவந்திருக்கின்றன. இன்று பொழுதுபோக்கு வேறொரு தளத்துக்கு மாறியிருக்கிறது. அந்த மாற்றம் எத்தகையதாக இருக்கிறது எனில் ‘i want nobody, i have wifi' என்று சொல்லும் அளவுக்கு மாறியிருக்கிறது.

இன்றைய இணைய தலைமுறையினர் 24 மணி நேரத்தில் வேலை செய்வதை விடவும், ஓய்வு எடுப்பதை விடவும் அதிகமாக மொபைலிலும் இணையத்திலும் பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் சமூக வலைதளங்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் துறை சார்ந்தும் பொருளாதாரம் சார்ந்தும் வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ள துறையாகவும் ஓடிடி உருவெடுத்துள்ளது. கரோனா காலகட்டத்தில் முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்றான திரையரங்குகள் மூடப்பட்டதால் ‘ஓவர் தி டாப்’ என்று சொல்லப்படுகிற இணையத் திரையரங்குகளான ஓடிடி தளங்களின் வருகை தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கிறது. காலம் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பை தவறவிடாமல், முழுமையாக சந்தையைக் கபளீகரம் செய்துவிட வேண்டும் என்று ஓடிடி தளங்கள் வீரியத்தோடு செயலாற்றி வருகின்றன.

கரோனாவுக்கு முன்பு வரை பழைய கிளாசிக் சினிமாக்களும், டிவி தொடர்களும் மட்டுமே ஓடிடி தளங்களில் பெரும்பான்மையாக இருந்துவந்தன. நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றவற்றில் ஆங்கிலம், ஹிந்தி தயாரிப்புகள்தான் அதிகமாக இடம்பெற்றிருந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பிராந்திய மொழிகளில் பெரிய அளவில் ஒரிஜினல் ரிலீஸ் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், அந்த நிலையை கரோனா மாற்றி அமைத்தது. கரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் பிராந்திய மொழிகளின் சினிமாக்கள் ஓடிடி தளங்களை நாட வேண்டிய நிர்பந்தம் உண்டானது. ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் ஓடிடியில் நேரடியாக வெளியான படைப்புகள் பரவலான வரவேற்பைப் பெற்றது தமிழ் சினிமா துறையினருக்கும் நம்பிக்கை அளித்தது.

தரமான நல்ல கதையம்சமும் பொழுதுபோக்கு அம்சமும் கொண்ட வெளியீடுகளுக்கு மக்களிடையே வரவேற்பு நிச்சயம் உண்டு என்பதை ஓடிடி தளங்கள் நிரூபித்தன. அதேசமயம் பெரிய பட்ஜெட், மாஸ் ஹீரோ என்று தயாரிக்கப்படும் சினிமாக்களை ஓடிடி தளங்களில் வெளியிட முன்வருவார்களா என்ற கேள்வியும் இருந்தது. ஆனால் திரையரங்குகள் மூடப்பட்டதால் வேலை வாய்ப்பை இழந்த திரைத்துறையினர் பெரிய லாபத்தை எதிர்பார்க்காமல் ஓரளவேனும் வருமானம் ஈட்டினால் போதும் என்ற நிலைக்கு வந்தனர். தமிழ் சினிமாவில் அந்தப் போக்கை தொடங்கி வைத்தவர் நடிகர் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ அமேசானில் நேரடியாக வெளியானது. இதற்கு திரையரங்குகளின் தரப்பில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இந்தப் போக்கு தொடர்ந்தால் திரையரங்கங்களுக்குப் பெருத்த நஷ்டம் உண்டாகும் என்ற அச்சம் உண்டானது. ஆனால், நெருக்கடி காலங்களில் ஒரு தரப்புக்காக பல தரப்பினரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்க முடியாது என்பதால் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், கலைஞர்கள் என அனைவரும் ஓடிடி வருகையை ஆதரித்தனர். அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து பல படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகிவருகின்றன.

இதனால் இந்தியாவில் ஓடிடி தளங்களின் சந்தாக்கள் 60 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. பிராண்ட் ஈக்விட்டி ஃபவுண்டேஷன் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி ஓடிடி தளங்களில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 30 மில்லியனைக் கடந்துள்ளது. 2020 ஏப்ரல் மாதத்தில் மட்டுமே 5 மில்லியன் சந்தாதாரர்கள் சேர்ந்திருக்கிறார்கள். ஒரே மாதத்தில் அவ்வளவு சந்தாதாரர்கள் அதுவரையிலும் சேர்ந்தது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடி தளங்களில் செலவிடும் நேரம் 14.5 சதவீதம் உயர்ந்
திருக்கிறது. ஓடிடி சந்தையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. தற்போது ரூ.13,000 கோடியாக உள்ளது. 2030ல் இந்திய ஓடிடி சந்தையின் மதிப்பு ரூ.1.15 லட்சம் கோடியாக வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்கள், கிராமங்களிலும் ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இன்று 40க்கும் அதிகமான ஓடிடி தளங்கள் புழக்கத்தில் உள்ளன.

ஓடிடி தளங்களின் இந்த அசுர வளர்ச்சி, ஓடிடி தளங்களின் படைப்பு தேர்வு, மற்றும் அதன் தொழில் நிமித்தமான நடைமுறைகள் போன்றவற்றை பற்றி குட்ஷோ என்ற ஓடிடி தளத்தின் நிறுவனர் ஸ்ரீராமிடம் பேசியபோது அவர் கூறியதாவது, ‘ஓடிடி தளங்கள் எதிர்காலத்தின் பொழுதுபோக்கு ஊடகமாக கரோனாவுக்கு முன்வரை இருந்தது. அதாவது முன்னணி பொழுதுபோக்கு ஊடகமாக ஓடிடி தளங்கள் மாறுவதற்கு 10 ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனா பாதிப்பு ஏற்படுத்திய நெருக்கடிகள் வெகு விரைவாகவே பத்தாண்டு வளர்ச்சியை இரண்டாண்டுகளில் நிகழ்த்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதேசமயம் ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் ஓடிடி தளங்களால் திரையரங்குகள் அழிந்துவிடும் என்பதோ, அதன் தேவை குறைந்துவிடும் என்பதோ உண்மையல்ல. இன்று ஓடிடி தளங்களில் இளம் தலைமுறையினர், நல்ல வருமானம் ஈட்டும் வகுப்பினர் மட்டுமே சந்தாதாரர்களாக மாறிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையரங்கங்களில் சினிமாக்களைப் பார்க்கும் மக்கள் எண்ணிக்கை என்பது மக்கள் தொகையில் மிகக் குறைவான சதவீதம்தான். ஆனால், குறைந்த விலையில் இருந்த இடத்திலிருந்தே சினிமாக்களைப் பார்க்கும் வசதிகள் வந்தபிறகு சந்தாதாரர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்கிறது. எனவே ஓடிடி தளங்களால் திரையரங்கங்கள் அழிந்துவிடாது. கரோனா காரணங்களால் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. அவை திறக்கப்படும்போது மக்கள் வந்து சினிமாக்களைப் பார்ப்பார்கள்.

ஓடிடிகளில் பெரும்பாலும் ஹாரர், திரில்லர் வகை கதைகள் அதிகம் விரும்பப்படுகின்றன. அதை அடுத்து ஆக்‌ஷன், காமெடி, ட்ராமா என இந்த வரிசையில்தான் தயாரிப்புகள் நுகரப்படுகின்றன. மேலும் வெப் சீரியல்களுக்குப் பலத்த வரவேற்பு இருக்கிறது. பெரும்பாலான வேற்று மொழி சீரியல்கள் மக்களால் அதிகம் பார்க்கப்பட்டிருக்கிறது. மணி ஹெய்ஸ்ட், பிரேக்கிங் பேட், டார்க் பற்றி சிலாகித்து பரவசமாகப் பேசுகிறார்கள். ஆனால் இந்திய மொழிகளில் மிகக் குறைவாகவே வெப்சீரியல்கள் உள்ளன. அவையும் சொல்லும் அளவுக்கு இல்லை. இதில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. கதைகளுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. ஓடிடி தளங்கள் அந்தந்த பிராந்திய மொழிகளில் சுவாரஸ்யமான கதைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றவற்றில் பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி கன்டெண்ட் நிறைந்தவையாக உள்ளன. எங்களுடைய குட்ஷோ ஓடிடி பிராந்திய மொழிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் தயாரிப்புகளை வெளியிடுவதில் கவனம் செலுத்திவருகிறோம். எனவே ஓடிடி தளங்களில் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குனர்கள், கதாசிரியர்கள் ஓடிடி தளங்களுக்கான கதைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தலாம். என்றார் இவ்வளவு வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் சமரசமில்லாமல் திரை அனுபவங்களை உருவாக்கக்கூடிய சாத்தியங்களையும் ஓடிடி உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. வழக்கமாக இந்தியத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு உள்ள தடைகள் ஓடிடியில் பெரும்பாலும் இல்லை. எனவே காத்திரமான படைப்புகளை, பல்வேறு ஜானர்களில் படைப்புகளை உருவாக்க முடியும். ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து வெளியாகி கவனம் ஈர்த்துவருகின்றன. ஹிந்தியில் பல வெப் சீரியல்கள் வெளியாகிவிட்டன. மலையாளத்தில் இதுவரை வெளியான ஓடிடி படைப்புகள் அனைத்துமே விமர்சன ரீதியாக மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

ஆனால் தமிழ் சினிமா ஓடிடிக்கான இடத்தைப் பிடித்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவின் பி|ற மொழிகளில் ஓடிடியில் வெளியான படைப்புகளையும், தமிழில் வெளியான படைப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஓடிடிக்கான படைப்புகளில் தமிழ் சினிமா அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று சொல்லலாம். இதுவரை தமிழில் வெளியான ஓடிடி சினிமாக்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற அனைத்துமே எப்போதும்போல திரையரங்குகளுக்கு உருவாக்கப்பட்ட சினிமாக்களாகத்தான் இருக்கின்றன. திரையரங்குகள் இல்லாததால் வேறு வழியில்லாமல் சினிமாக்களை ஓடிடியில் வெளியிட்டுவருவதுபோல் இருக்கிறது.

ஓடிடி தளங்கள் தற்போது பிராந்திய மொழிகளில் தீவிரமாக முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றன. குறும்படங்களிலிருந்து, வெப் சீரியல்கள், முழு நீளத் திரைப்படங்கள், ஆவணப் படங்கள், காமெடி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான சினிமாக்கள் என பல்வேறு வகையான பொழுதுபோக்கு படைப்புகளுக்கு ஓடிடி தளங்களில் வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள தமிழ் சினிமா தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதுவரை தமிழ் சினிமாக்கள் உருவாக்கி வைத்திருக்கும் வரம்புகளை உடைத்து வேறொரு தளத்துக்கு நகர்ந்தால் மட்டுமே ஓடிடி தளத்தை முழுமையாக தமிழ் சினிமா பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொள்ள முடியும். நாயகத்தனமோ, பாடலோ, இசையோ என ஏதோ ஒன்றை வைத்து மட்டும் ஒரு சினிமாவை காப்பாற்றிவிடலாம் என்ற போக்கு இனியும் செல்லுபடியாகாது. மக்களுக்குப் பல்வேறு விதமான திரை அனுபவங்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், அதே பழைய பாணியை வைத்துக்கொண்டு ஓடிடியில் ஜெயிக்க முடியாது. ஓடிடியில் கிடைக்கக்கூடிய சினிமாக்கள் முழுவதையும் பார்க்கவே ஒரு ஜென்மம் போதாது. அவ்வளவு சினிமாக்கள், தொடர்கள் ஓடிடிகளில் கிடைக்கின்றன. எனவே திரையரங்குகள் திறந்த பிறகும்கூட ஓடிடி படைப்புகளே போதும் என்று கணிசமான மக்கள் இருந்துவிடவும் வாய்ப்புள்ளது. எனவே நாட்டின் மிகப்பெரிய சினிமா துறையான தமிழ் சினிமா ஓடிடி வாய்ப்புகளைப் பயன்படுத்தி வளர்வதற்கு ஏற்ற வகையில் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு சினிமா ரசிகனின் ஆதங்கமாகும்.

ஜெ.சரவணன்
saravanan.j@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்