கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மித்து சாண்டில்யா ராஜிநாமா செய்தார். இந்த ராஜிநாமா ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. கடந்த பல மாதங்களாக அந்த நிறுவனத்தில் நடந்த பல நிகழ்வுகளின் இறுதி வடிவம்தான் அது.
மலேசியாவை சேர்ந்த பர்ஹார்ட் (Berhard) (49%), டாடா குழுமம் (30%) மற்றும் டெலஸ்ட்ரா நிறுவனத்தின் அருண் பாட்டியா (21%) ஆகிய மூவரும் சேர்ந்து ஏர் ஏசியா நிறுவனத்தை 2013-ம் ஆண்டு தொடங்கினர்.
ஆனால் நிறுவனம் தொடங்கிய ஒரு வருடத்துக்கு பிறகு நிறுவனர்களில் ஒருவரான அருண் பாட்டியா, இயக்குநர் குழு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பெரும்பாலான முடிவுகள் மலேசியாவிலேயே எடுக்கப்படுகின்றன. இங்கு இருப்பவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஒரு வருடத்தில் லாபம் ஈட்டுவோம் என்ற நம்பிக்கையில் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால் லாபம் இல்லை என்பது போல பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த நிலையில் இவரிடம் உள்ள 21 சதவீத பங்குகளில் 11 சதவீத பங்குகளை டாடா குழுமம் வாங்கியது. இப்போது டாடா குழுமத்திடம் 41 சதவீத பங்குகள் உள்ளன.
நிறுவனத்தில் மூன்று நிறுவனர்கள் இருக்கின்றனர். நஷ்டம் அதிகரித்துள்ளதால் முதலீடு செய்ய தயங்குகின்றனர். 200 கோடி ரூபாயில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு விமான நிறுவனம் தொடங்க இந்த தொகை போதுமானதல்ல என்று இந்த துறையை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். உதாரணத்துக்கு டாடா குழுமத்தை சேர்ந்த இன்னொரு விமான நிறுவனமான விஸ்தாரா 700 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது.
நிறுவனம் தொடங்கி 2 வருடங்களுக்கு பிறகும் நிறுவனர்கள் கூடுதல் முதலீடு செய்யவில்லை. முதலீடு இல்லாததால் வளர்ச்சி இல்லை. குறைவான விமானங்களை கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த நிறுவனம் 2 சதவீத சந்தையை மட்டுமே வைத்துள்ளது.
நிறுவனம் முழுவதும் மலேசியாவில் இருந்து இயங்குகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பாட்டியா முதலீடு செய்ய விரும்பவில்லை. டாடா நிறுவனம் முதலீடு செய்ய விரும்பினாலும் நிறுவனத்தின் செயல்பாடுகள் காரணமாக முதலீடு செய்யாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சினை நடந்துகொண்டிருந்த சமயத்தில் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி விஜய் கோபாலன் உள்ளிட்ட பல முன்னணி அதிகாரிகள் ராஜிநாமா செய்தனர்.
பாட்டியா கூறும் போது, மித்துவிடம் என்ன நடக்கிறது என்று கேட்டால், `நான் என்ன செய்ய முடியும் சார், எனக்கு ஒரு தகவலும் கிடைப்பதில்லை அனைத்துமே மலேசியாவில் முடிவு செய்யப்படுகிறது’ என்று சொல்கிறார்.
கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் சூழ்நிலையில் அனைத்து விமான நிறுவனங்களுமே லாப பாதைக்கு திரும்பி வருகிறது. ஆனால் ஏர் ஏசியா மட்டும் இன்னும் நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது. கடந்த செப்டம்பர் காலாண்டில் 65 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நான் முதலீடு செய்த தொகை அனைத்தையுமே இழந்துவிட்டேன். ஒருவேளை நிறுவனம் இப்போது லாபத்தில் இருந்தால் என்னுடைய அனைத்து பங்குகளையும் நான் விற்றிருப்பேன் என்று பாட்டியா இரு மாதங்களுக்கு முன்பு கூறினார்.
முதலீடு செய்வது, பாட்டியா கூறிய பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் என்று ஏர் ஏசியாவின் தலைவர் டோனி பெர்னான்டஸ் கடந்த ஜனவரியில் கூறினார். ஆனால் பிரச்சினை தீர்க்கப்படும் என்று அறிவித்து ஒரு மாதத்துக்குள் மித்து சாண்டில்யா ராஜிநாமா செய்திருக்கிறார்.
அனைத்து விதமான செய்தியும் விளம்பரம்தான். அது தவறான செய்தியாக இருந்தால் கூட விளம்பரம்தான் என்று டோனி பெர்னாண்டஸ் ஒரு மாதத்துக்கு முன்பு கூறினார். ஆனால் நீண்ட நாளைக்கு தவறான செய்தியில் இடம் பிடிப்பது ஒரு பிராண்டுக்கு நல்லதல்ல என்பது அவருக்கு தெரியாதது அல்ல.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago