இந்தியாவில், 2016-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, டிஜிட்டல் பண பரிவர்த்தனை நட
வடிக்கைகள் அதிகமானது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, மொபைல் செயலி வாயிலாக பணம் செலுத்துவதும் பெறுவதும் அதிகரித்தது. கரோனா பரவலுக்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக, யு.பி.ஐ., (Unified Payments Interface) வாயிலாக, ஜி-பே, ஜியோ-பே, அமேசான்-பே, போன்-பே, பேடிஎம், வாட்ஸ்அப்-பே போன்ற மொபைல் செயலி வழி பணப் பரிவர்த்தனை மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் பரிவர்த்தனைகள் என்.பி.சி.ஐ., (National Payments Corporation of India) வின் கீழ், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ்வருகிறது.
முன்பு வங்கிகளில் பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. வர்த்தக நிறுவனங்களின், ஒருநாளின், பெரும்பாலான பொழுது, வங்கி நடவடிக்கைகளிலேயே கழிந்தது. கிரெடிட், டெபிட் கார்டுகளும், ஏ.டி.எம்., பயன்பாடுகளும் வந்தபின், வங்கி கணக்குகளில் பணம்செலுத்துவதும், பணம் எடுப்பதும் மிகவும் சுலபமானது. ரொக்கத்தை கத்தை, கத்தையாக பர்சில் எடுத்துச் செல்லாமலேயே, ஒரு அட்டை வாயிலாக அனைத்தையும் வாங்க முடிந்தது. பயணங்கள் எளிதாயின.
பணம் செலவழிப்பதும் பாதுகாப்பாக இருந்தது. ஒரு காலத்தில், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த கிரெடிட் கார்டுகள், பின்னர் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கவும், நுகர்வு கலாச்சாரத்தை நிலைநிறுத்தவும், விருப்பமுள்ளவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் வருமான அளவு, கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் கடன் அட்டை(கிரெடிட்கார்டு) வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
கிரெடிட்கார்டு வாயிலாக செலவழிக்கும் பணத்தை, குறிப்பட்ட கால இடைவெளிக்குள் திரும்ப செலுத்தி விடலாம். அந்த நாட்களுக்கு வட்டிகிடையாது என்பதால், அதைப் பயன்படுத்தி, மக்கள் பொருட்கள் வாங்க ஆரம்பித்தனர். இதனால் மேற்கத்திய பொருளாதார கலாச்சாரம் இங்கும் பரவியது. கிரெடிட்கார்டு கையில் இருந்தால், எதற்கும் ஆசைப்படலாம் என்றும் ஆனது. இப்படி, கடந்த10 ஆண்டுகளாக, கிரெடிட் கார்டு புழக்கம், நுகர்வு கலாச்சாரத்தை செழிக்க வைத்தது. அதனால், நாட்டின் பொருளாதாரம் செழித்தது. வங்கிகளின் நடவடிக்கைகள் பெருகியது. மக்களின் தேவைகள் பூர்த்தியானது. இப்படியான கிரெடிட், டெபிட், பிரீபெய்டு கார்டுகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக, அந்தந்த வங்கிகளாலும், என்.பி.எப்.சி. ( Non-Banking Financial Company) எனப்படும் வங்கி அல்லாத பிற நிதி நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு வங்கியும் தங்கள் பெயரில் கிரெடிட்/டெபிட் கார்டு வழங்கினாலும், ஒவ்வொரு வரும் தனித்தனியாக அவற்றை நிர்வகிப்பது, கண்காணிப்பதும் சிரமம். இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் இதற்கான ‘பேமண்ட் செட்டில்மென்ட் கேட்வே’க்கள் உள்ளன. அதில், விசா கார்டு, மாஸ்டர் கார்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் முதன்மை இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் உள்ள வங்கிகள், என்.பி.எப்.சி.க்கள் இவற்றின் சேவையைப் பயன்படுத்துகின்றன. 1966 இல் தொடங்கப்பட்டு பல்வேறு நாடுகளில், 25,000க்கும் மேற்பட்ட வங்கி/ நிதி நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் மாஸ்டர் கார்டின்2020 ஆம் ஆண்டு வருமானம், 1,530 கோடி அமெரிக்க டாலர்.
உலகின் 2வது பெரிய ‘பேமண்ட் கேட்வே’ ஆக மாஸ்டர் கார்டு திகழ்கிறது. ஆகஸ்ட்2020 கணக்கின்படி, 5.8 கோடி கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதும், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பேமன்ட், அனைவருக்கும் வங்கிக்கணக்கு, வங்கி பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது போன்றவை வேகமெடுத்தன. சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கும், பானி பூரி விற்பவர்களுக்கும் கூட, இணைய வசதியும், டிஜிட்டல் பேமென்ட் சாதனங்களும் கிடைத்ததால், ரூபாய் நோட்டை தூக்கவேண்டிய அவசியமில்லாமல் போயின. ஷாப்பிங் செல்லும் எல்லோருக்கும் கார்டோ, மொபைல் செயலியோ மட்டும் போதுமானதாக இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மத்திய அரசு கண்காணிக்க தொடங்கியது. மேலும், 5 வருடங்களுக்குமுன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டதன் நோக்கமே, லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு போன்ற வற்றால் சம்பாதிக்கப்பட்டு, கணக்கில் காட்டப்படாமல் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை ஒழிப்பது, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும், தேசவிரோத சக்திகளுக்கு முறைகேடாக நடக்கும் பணபரிமாற்றத்தை தடுப்பது போன்றவைதான். அதையொட்டி, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளிலும் நிறையகட்டுப்பாடுகள் வந்தன.
அதேபோல், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் இந்திய வாடிக்கையாளர்களின் நிதிசெயல்பாடு விவரங்கள் அமெரிக்க கம்ப்யூட்டர் சர்வரில் சேமிக்கப்பட்டு வந்தன. அதை மாற்றி, இந்திய சர்வரிலேயே அதன் விவரங்கள் சேமிக்கப்பட வேண்டும். அப்போதுதான், அவசியம் ஏற்படும்போது, ரிசர்வ்வங்கி, தடையற்று கண்காணிக்க முடியும். ஆகவே இந்தியாவுக்குகென்று தனிதகவல் சேமிப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாஸ்டர் கார்டுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியது.
அந்த மாற்றங்களை செய்யாமல், கடந்த3 வருடங்களாக, காலம் தாழ்த்திவந்த காரணத்தால், ஜூலை22 ஆம் தேதிமுதல், மாஸ்டர் கார்டுகள் புதிதாக இந்தியாவில் வழங்குவதற்கு தடை விதித்து இந்தியரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடங்கியதுமே, இந்திய ரிசர்வ் வங்கிவழிகாட்டுதலில், ‘பேமன்ட் செட்டில்மென்ட் அன்சிஸ்டம்ஸ் ஆக்ட்’ கீழ், ‘நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’, நம் நாட்டுக்கென்று, லாப நோக்கமின்றி உருவாக்கிய, ‘‘ரூபே’’ கார்டுகளை பிரபலப்படுத்துவதற்காகவே, மாஸ்டர் கார்டுக்கு ‘‘செக்’’ வைக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு கிளம்பியது. தேசப் பாதுகாப்பிற்கான நடவடிக்கை என்று பேசப்பட்டது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது ஒவ்வொரு நாடும் அதற்கேற்ப சட்டங்களை நிறைவேற்றும். அப்படித்தான், ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரஷ்யா, துபாய், சீனா போன்ற பல நாடுகளில், வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு அனுமதி இல்லை. மாஸ்டர் கார்டுக்கு விதிக்கப்பட்ட தடையால் இந்தியாவின் நம்பி்க்கை உலக அரங்கில் அதிகரிக்குமே தவிர குறையாது. ஏனெனில் அந்நிய முதலீட்டையோ, வர்த்தகத்தையோ, பண பரிவர்த்தனைகளையோ தடைசெய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை.
‘‘எங்கள் நாட்டு வாடிக்கையாளர் விவரங்கள், எங்கள் நாட்டிலேயே இருக்க வேண்டும்’’ என்று கேட்பதில் என்னதவறு இருக்கிறது. மாஸ்டர் கார்டு தடைக்குப்பிறகு ஏற்பட்டுள்ள இப்போதைய சவால் என்னவென்றால், மாஸ்டர்கார்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அதன் ‘‘கேட்வே’’ வாயிலாக, பரிவர்த்தனைகள் நடத்திவந்த, எச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எஸ்.பேங்க்,ஆக்சிஸ் வங்கி, ஆர்.பி.எல்., வங்கி, ‘பஜாஜ் பின்சர்வ்’ போன்றவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்டுகள் வழங்க இயலாது. அவர்கள் புதிய வியாபார கூட்டாளிகளைத் தேடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் ஒரு சாதகம் என்னவென்றால், இதை பயன்படுத்தி புதிய தொழில் முனைவுகள் உருவாகலாம். புதிய ‘ஸ்டார்ட்-அப்’கள், புதிய விர்ச்சுவல் கார்டுகள்அறிமுகப்படுத்தப்படலாம்.
ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இப்போது மாஸ்டர்கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் யாரும், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவால் பாதிக்கப்படமாட்டார்கள். இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனையில்40 சதவீதம் மாஸ்டர்கார்டு மூலம் நடைபெறுகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். பணமதிப்பிழப்பு, கரோனா பாதிப்புகளுக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரம் மீண்டெழும் நேரத்தில், நுகர்வு சக்திக்கு ஊக்கமாக விளங்கும் இத்தகைய கிரெடிட் கார்டுகளின்தடை கொஞ்சம் பொருளாதார சுணக்கத்தையே உண்டாக்கும். அதை களைய, மத்தியஅரசும், இந்திய ரிசர்வ் வங்கியும், சம்பந்தப்பட்ட பேமன்ட் நிறுவனங்களும் இணைந்து சுமூகமுடிவு காண வேண்டும்.
திணறடித்து வரும் ‘‘யு.பி.ஐ.,’’!
விதிமீறல்கள் காரணங்களுக்காக சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டைனர்ஸ் கிளப் கார்டுகளைப் புதிதாக விநியோகிக்க தடை விதிக்கப்பட்டது. அதேவரிசையில் இப்போது மாஸ்டர்கார்டு இணைந்துள்ளது. இந்தியாவில் மாஸ்டர்கார்டு, விசா கார்டுகள்தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டைனர்ஸ் கிளப் கார்டுகள் எண்ணிக்கைபெரிய அளவில் இல்லை.
இந்தியாவில் வெளிநாட்டு கார்டுகள் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடு அறிமுகமாகும் சூழல் ஏற்பட்டபோது, ‘‘இந்தியாவில்தனி சர்வர் அமைப்பு ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நடைமுறை செலவு அதிகரிக்கும்’’ என்றுகூறிஅமல்படுத்த தயங்கின. மேலும், ‘‘இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சர்வர் அமைக்கப்படும் பட்சத்தில், சர்வதேச அளவில் நடைபெறும் கிரெடிட் கார்டு மோசடிகளைகண்டறிவது சிரமமான செயல்’’ என்று அமெரிக்க நிறுவனங்கள்கூறின.
இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும், இந்தியா தனக்கான, தனிபேமன்ட் கேட்வே, ‘‘யு.பி.ஐ.,’’ உருவாக்கியதும், நம் நாட்டு மக்கள், அதற்கு எளிதாக பழகிப் போனார்கள். கடந்தஜூன் மாதம் மட்டும், 280 கோடி பரிவர்த்தனை வாயிலாக, ரூ. 5.5 லட்சம் கோடிமதிப்புக்கான வர்த்தகம் நடந்துள்ளது.
‘‘யு.பி.ஐ.,’’ இன் இந்த இமாலய வளர்ச்சியால், மாஸ்டர்கார்டு போன்ற சர்வதேச ‘‘பேமண்ட்’ கேட்வே’’ நிறுவனங்களின் வர்த்தகத்துக்கு போட்டி ஏற்பட்டது. மாஸ்டர் கார்டு பேமண்ட் சேவையை, இந்தியாவில்75 வங்கிகள்/வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் கார்டு பயன்படுத்துபவர்களின் மூன்றில் ஒரு பகுதியினர், மாஸ்டர்கார்டு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
karthi@gkmtax.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago