பெருமை பெறும் தமிழகம்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ கூட்டம் காணொளி வாயிலாக சமீபத்தில் நடைபெற்றது. அந்த உரையில் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியான ‘திராவிட மாதிரி’ (Dravidian Model) வளர்ச்சிதான் இன்றைய தேவை என ஸ்டாலின் கூறினார். இதற்கு அவர் மேற்கோள் காட்டியப் புத்தகம் ஜீன் டிரீஸ் மற்றும் அமர்த்தியா சென் இணைந்து எழுதிய ‘An Uncertain Glory : India and Its Contradictions’. இந்தப் புத்தகம் ‘நிச்சயமற்ற பெருமை: இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்’ என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. பேராசிரியர் பொன்னுராஜ் மொழிபெயர்த்திருக்கிறார். பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.

ஜீன் டிரீஸ் மற்றும் அமர்த்தியா சென் இருவரும் வறுமை, பற்றாக்குறை பிரச்சினைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் பல ஆண்டுகள் உழைத்திருக்கின்றனர். இந்தியப் பொருளாதாரம், இந்திய சமூகத்தின் சிக்கல்களைப் பற்றிய ஆழமான அறிவும் புரிதலும் கொண்டவர்கள் இந்த பொருளாதார வல்லுனர்கள். ஜீன் டிரீஸ் வறுமை, பசி, பற்றாக்குறைக்கு எதிரான போராட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அமர்த்தியா சென் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். இதில் ஜீன் டிரீஸ், முதல்வர் ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூலில் அவர்கள் தமிழகத்தைப் பற்றி மிகச் சிறந்த முறையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். குறுகிய காலத்தில் விரைவான முன்னேற்றத்தைப் பெற்ற மாநிலம் தமிழகம் என அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பள்ளிகளில் இலவச மதிய உணவு, சுகாதார மையங்கள், பொது விநியோகம் முறை, சாலைகள், போக்குவரத்து, நீர் விநியோகம், மின்சார இணைப்புகள் போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றியுள்ளது. மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தில் பல சிறந்த
சமூகநலச் சேவைகள் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்று என்பது இன்றளவிலும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

மிகப் பெரிய அளவில் இலவசமாக மருத்துவ வசதிகள் இல்லாவிட்டாலும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சுகாதாரப் பாதுகாப்பு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்ற ஒரு விரிவான வலையமைப்பை தமிழகம் கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தின் சுகாதாரம் தொடர்பான குறிகாட்டிகள் (Indicators) மிகச் சிறப்பாக உள்ளன. உதாரணமாக, மகப்பேறின்போது தாய் / குழந்தை இறப்பு விகிதம் பிற மாநிலங்களைக் காட்டிலும் குறைவு. பல்வேறு சமூகப் பின்னணியில் இருந்து நோயாளிகள் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு வழக்கமாக சென்று தங்களது உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் அடிப்படை மருந்துகளுடன் சிகிச்சையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில்தான் பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்துவந்த திராவிடக் கட்சிகள் மதிய உணவு மட்டுமல்லாமல் இலவச சீருடை, சைக்கிள், இலவசப் பாடப்புத்தகங்கள், சுகாதார பரிசோதனை என புதிய நலத் திட்டங்களையும் மேற்கொண்டனர். இதைப் போன்று ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருள்களும் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் சீரான முறையில் விநியோகிக்கப்படுகிறது. 1920-களில் பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட சமூக சீர்திருத்தமுயற்சிகள், பின்தங்கிய வகுப்பினருக்கான அரசியல் அதிகாரம், தமிழ் சமூகத்தில் ஆக்கபூர்வமாக ஈடுபட்ட பெண்களுக்கான அமைப்புகள் ஆகியவைதான் இந்த வகையான கட்டமைப்பை தமிழ்நாட்டில் உருவாக்க காரணமாக அமைந்திருக்கின்றன என நூலாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அதை ஸ்டாலின் தனது உரையிலும் குறிப்பிட்டார். முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் எஸ். நாராயணன், இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழங்களில் வருகைதரு பொருளாதார பேராசிரியாக விளங்கும் ஜீன் டிரீஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இத்தகைய உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமிழகத்தை ஒரு முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்கிற முதல்வரின் இலக்கு நமக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

பொதுவாக புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு உருவாக்கும் குழுக்களும் கமிட்டிகளும் வழங்கும் ஆலோசனைகள் கோப்புகளாக உருப்பெற்று பின்னர் அரசாங்க அலமாரிகளில் தூசு பிடிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி இருக்காது என்று தோன்றுகிறது. உலக அளவில் பொருளாதாரத் துறையில் மிகச்சிறந்த வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை உருவாக்கியதன் மூலம் தான் போகும் வழி தனி வழி என கோடு காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஏற்கனவே சீரான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழகம் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொருளாதார ஆலோசனைக் குழு வழங்கும் யோசனைகள் செயல் வடிவம் பெற்றால் முதல்வர் எதிர்பார்க்கும் தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு, தனிநபர் வருமானம், வேலைவாய்ப்பு போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய ‘திராவிட மாதிரி’ சாத்தியம்தான்!

somasmen@gmail.co

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்