அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள், கனடா தவிர பிற நாடுகளுக்கு கச்சா பெட்ரோலிய எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த 40 ஆண்டுக்கால தடையை ஒபாமா அரசு நீக்கியிருப்பது வியப்பாக இருக்கிறது. உலகச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை வீழ்ந்து கொண்டிருக்கும்போது அமெரிக் காவும் எண்ணெய் ஏற்றுமதியில் இறங்குவது புத்திசாலித்தனமான முடிவா என்ற கேள்வியும் எழுகிறது.
‘தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு 2 கண்களும் போக வேண்டும்’ என்ற அடிப்படையில் அமெரிக்கா இதைச் செய்திருக்குமோ என்று கூட சில அரசியல் நோக்கர்கள் இதைப் பார்க்கின்றனர். காரணம், தென் அமெரிக்க நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் சோஷலிசச் சிந்தனை கொண்ட இடதுசாரிக் கட்சிகள் தோற்று, வலதுசாரிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதற்கு முக்கிய காரணம் கச்சா பெட்ரோலியத்தின் சர்வதேச விலை வீழ்ச்சி அடைந்ததால் அந்நாடுகளால் எண்ணெய் ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் பெற முடியவில்லை.
இதன் விளைவாக அவற்றின் பொருளாதார வளர்ச்சி சரிந்தது. அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்ந்தது, வேலைவாய்ப்பும் உற்பத்தியும் குறைந்தன. மக்களிடையே கோபமும் கொந்தளிப்பும் ஏற்பட்டன. அரசின் பொதுவுடமைக் கொள்கைகளால் பிரச்சினை தீரவில்லை என்ற அதிருப்தி பரவியது.
அந்நாடுகள் மட்டுமல்லாமல் ரஷியாவும் அமெரிக்காவுக்கு வலுவான போட்டியாளராக சர்வதேச அரங்கில் தலையெடுக்கப் பார்க்கிறது. ரஷியாவை ஒரு கட்டுக்குள் வைக்க நினைக்கும் அமெரிக்கா, எண்ணெய் விலையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்ற எண்ணமும் பலருக்கு இருக்கிறது. தென் அமெரிக்க நாடுகளைப் போல ரஷியாவும் எண்ணெய், நிலவாயு ஏற்றுமதி மூலம் சம்பாதித்து வந்த கணிசமான வருவாய் இப்போது குறைந்துள்ளது. இதனால் அதன் பொருளாதாரம் வலுவிழந்து வருகிறது.
ரஷியா மீது ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் முன்னர் அறிவித்த பொருளாதாரத் தடை நடவடிக்கைகளால் ஏற்பட்ட சரிவிலிருந்தே மீளாத நிலையில், அமெரிக்காவின் புதிய முடிவு ரஷியாவுக்கு மேலும் வருவாய் இழப்பையே தரும் என்றே தெரிகிறது.
தடை ஏன்?
1970-ல் அரபு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய யோம் கிப்பூர் போரில் அந்நாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. இதனால் அமெரிக்கா மீது ‘எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகள்’ (ஒபெக்) பொருளாதாரத் தடை விதிக்கும் வகையில் எண்ணெய் விற்க மறுத்தன. இதனால் அமெரிக்காவின் பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று, கிடைத் ததை வாங்க வேண்டிய அவலம் உருவானது. இதையடுத்தே அமெரிக் காவிலேயே கிடைக்கும் பெட்ரோலிய எண்ணெயை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 1975 டிசம்பரில் தடை விதிக்கப்பட்டது.
இப்போது பாறைக்கடியில் கிடக்கும் எண்ணெயை எளிதாக எடுக்கும் நவீனத் தொழில்நுட்பம் காரணமாக, செலவு குறைவாகவும் அளவு அதிகமாகவும் எண்ணெய் எடுக்க முடிகிறது. வற்றிவிட்டது என்று கருதப்பட்ட எண்ணெய் வயல்களிலிருந்துகூட ஒட்டக் கறக்க முடிகிறது. இப்போது அமெரிக்க எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களிடம் கையிருப்பு அதிகரித்துவிட்டது. இது இப்படியே தொடர்ந்தால் எண்ணெய் விலை மேலும் சரிந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் இவற்றை விற்று பணமாக்கிக் கொள்ள அரசு தடையை நீக்கியிருக்கிறது. அமெரிக்காவில் கிடைக்கும் கச்சா பெட்ரோலிய எண்ணெயில் அடர்த்தி குறைவு, கந்தகமும் குறைவு.
அமெரிக்காவில் மட்டும் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் உற்பத்தி 2008-ல் அன்றாடம் 50 லட்சம் பீப்பாய்களாக இருந்தது 2015-ல் 90 லட்சம் பீப்பாய்களாக அதிகரித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 100 டாலர்களாக இருந்தது இப்போது 35 டாலர்களாகக் குறைந்திருக்கிறது. அமெரிக்காவில் பல தொழில் நிறுவனங்களின் எரிபொருள் செலவும் இந்த முடிவால் குறையும். விவசாயம், தொழில் நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், தரைவழிப் போக்குவரத்து நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள் என்று பலவற் றுக்கும் எரிபொருள் செலவு மிச்சப்படும். ஏற்றுமதி அதிகரிப் பதால் வெளிவர்த்தகப் பற்றாக் குறையும் குறைந்துவிடும். அமெரிக்கா வுக்குள்ளேயே வேலைவாய்ப்பும் உற்பத்தியும் அதிகரிக்கும். எண் ணெய், நிலவாயுத்துறையில் முதலீடு பெருகும்.
அதே சமயம், அமெரிக்கா கச்சா பெட்ரோலிய ஏற்றுமதியை அதிகரிப்பதால் அதை வாங்கும் பிற நாடுகள் தங்களுடைய சுத்திகரிப் பாலைகளில் அவற்றைச் சுத்தி கரிக்கும், இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவது அதிகரிக்கும் என்று சூழலியலாளர்கள் கவலைப்படு கின்றனர். கச்சா பெட்ரோலியமாக ஏற்றுமதி செய்தால் தங்களுக்கு வருவாய் குறைந்துவிடுமே என்று சில அமெரிக்க சுத்தி கரிப்பு ஆலைகளும்கூட கவலைப்படு கின்றன. எனவே அமெரிக்க அரசின் முடிவு நல்ல பலன்களைத் தருவதற்குப் பதிலாக நஷ்டத்தையே தரும் என்றுகூட சிலர் அஞ்சுகின்றனர்.
ஜோன்ஸ் சட்டம் ஒரு தடையா?
அமெரிக்காவில் 95 ஆண்டுகளுக்கு முன்பு ஜோன்ஸ் என்பவர் கொண்டு வந்த ஒரு தீர்மானம் சட்டமானது. அதன்படி அமெரிக்கத் துறைமுகங் களுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்லும் கப்பல்கள் அமெரிக்கக் கொடியுடைய சுதேசிக் கப்பல்களாகத்தான் இருக்க வேண்டும், அதன் உரிமையாளர்களும் அமெரிக்கர்களாகத்தான் இருக்க வேண்டும்.
இப்போது கச்சா பெட்ரோலிய எண்ணெயை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கினால் இச்சட்டப்படி தங்கள் நாட்டுக் கப்பல்கள் மூலம் கொண்டு செல்ல முடியாது. மேலும், அமெரிக்காவில் கச்சா எண்ணெய்யை வாங்கி அங்கேயே சுத்திகரிக்க வேண்டும் என்றால் அமெரிக்க கப்பல்களையே பயன்படுத்த வேண்டி இருக்கும். இந்த சவால் எப்படி தவிர்க்கப்படும் என்று பார்க்க வேண்டும்.
கட்சிகளுக்குள் உடன்பாடு
இந்த ஏற்றுமதித் தடை நீக்கம் தொடர்பாக குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. கச்சா பெட்ரோலிய எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடையை நீக்கினால் காற்றாலைகள் மற்றும் சூரியஒளி மின்னுற்பத்தி நிறுவனங்களை அதிக எண்ணிக்கையில் நிறுவ, மேலும் 5 ஆண்டுகளுக்குக் கடன் வசதியை நீட்டிக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கட்சியின் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், ஒபாமா அரசின் சுத்தமான காற்று, தண்ணீருக்கான கட்டுப்பாடுகளைத் தாமதப்படுத்த குடியரசுக் கட்சியினர் கூறிய உத்தேச யோசனைகளை ஜன நாயகக் கட்சியினர் தடுத்துவிட்டனர்.
சர்வதேச அளவில் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலை இப்படியே சரிந்து கிடக்காது, 2016-ம் ஆண்டின் பிற்பகுதியிலோ 2017-ம் ஆண்டின் தொடக்கத்திலோ மீண்டும் மளமளவென்று உயர்ந்துவிடும் என்று எண்ணெய்த்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே அமெரிக்க அரசின் முடிவுக்குப் பின்னால் ரகசிய திட்டம் ஏதும் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
- rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago