மழை வெள்ளம் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பின் அதிர்ச்சிகளிலிருந்து மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கின்றனர் கடலூர் மக்கள். இதை இயல்பு வாழ்க்கைக்கு திரும்புதல் என்று சொல்ல முடியவில்லை. அவர்களது இயல்பு வாழ்க்கை என்பது வெள்ளத்துக்கு முன்னர் வாழ்ந்த வாழ்க்கைதான். ஒவ்வொருவரும் தங்களது பழைய சராசரி வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். பாதிப்பிலிருந்து மீண்டு தங்களது தினசரி உயிரோட்டத்தை தொடங்கிய கடந்த வாரத்தில் நாம் கடலூரில் இருந்தோம்.
இயற்கை பேரிடர்கள் அதிகம் தாக்கும் புவியியல் அமைப்பில் இருக்கும் கடலூர் மக்கள் தங்கள் வாழ்க்கையை இயல்பாக வாழ்ந்து பார்ப்பதற்கான சாத்தியங்களைக் குறைவாகவே கொண்டிருக்கின்றனர். இழந்த உடமைகள் குறித்த கவலை ஒருபக்கம் இருந்தாலும், உடனடி தேவைகளுக்கு உதவிகளை எதிர்பார்த்து நாட்களை கடத்திக் கொண்டிருந்த நிலைமையிலிருந்து சற்றே முன்னேற்றம் கண்டுள்ளனர். என்றாலும், தேவைகளின் அளவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக உள்ளது.
படுக்க பாய் இல்லை, குடிக்க தண்ணீர் கிடையாது... ஒரு பாயோ, போர்வையோ கிடைத்தால் குழந்தைகளையாவது தூங்க வைக்க முடியும் என்கிற ஆதரவற்ற நிலையில் இருந்தவர்களுக்கு, உடனடி தேவையாக இருந்த உணவு, மருத்துவம், உடைகள் உள்ளிட்ட அடிப்படை தேவை சார்ந்த பொருட்கள் பல திசைகளிலிருந்தும் வந்து சேர்ந்தது சற்றே ஆறுதளிக்கும் விஷயம்தான். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறபோது நன்றியோடு நினைவு கூர்கின்றனர் வந்து குவிந்த உதவிகளை.
ஆனால் இப்போது தேவை அவர்கள் எழுந்து நடப்பதற்கான ஊன்றுகோல் உதவிகள். கடலூரின் ஒவ்வொரு மக்கள் பிரிவினரும் ஒவ்வொரு விதமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நேரடி அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. மக்களின் பிரச்சினைகள், இழப்புகள் பொதுவாக பேசப்படுகிறதே தவிர, குறிப்பாக பேச வேண்டிய தேவை இருக்கிறது. இழப்புகள் பொதுவாக இல்லை என்பதற்கான நிலவரம் இது. எனவே தீர்வுகளும், உதவிகளும் பொதுவான அளவுகோல்களோடு இருக்கக் கூடாது என்பதே நாம் கண்டு கொண்ட உண்மை.
தொழில் நிறுவனங்கள்
கடலூர் முதுநகரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சிப்காட். முன்னர் 55 பெரு நிறுவனங்கள் இங்கு இயங்கி வந்தன. தொடர்ச்சியாக கடலூரின் ஏற்படும் இழப்புகளால் பல நிறுவனங்கள் இங்கிருந்து வெளியேறிவிட்டன. தற்போது கிளாரியண்ட் கெமிக்கல்ஸ், கெம்பிளாஸ்ட், சாசன் கெமிக்கல்ஸ், ஆசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களின் பாய்லர்களில் தண்ணீர் நுழைந்ததில் உற்பத்தி நிறுத்தப்பட்டன. நவம்பர் மாதம் பெய்த மழையிலேயே சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் நுழைந்து விட்டது. மின்சாரம் தடைசெய்யப்பட்டதால் உற்பத்தியை நிறுத்தினார்கள். உடனடியாக மின்சாரம் சீரமைக்கப்பட்டாலும், நவம்பர் 16, 17 தேதி மற்றும் டிசம்பர் 01 ஆம் தேதி மழை மீண்டும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது சிப்காட் பகுதியில் பல நிறுவனங்களுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. சிதம்பரம் செல்லும் வழியில் சாலையின் இடதுபுறம் கிராம பஞ்சாயத்து பகுதியாகவும், வலதுபுறம் நகராட்சி கட்டுப்பாட்டிலும் வருகிறது. வெள்ளத்தை வெளியேற்றும் கடமையை செய்வதிலும் அதிகார வரம்புகள் உள்ளதால் அல்லாடுகிறார்கள் தொழில்துறையினர்.
சிப்காட் பகுதியிலும் உள்ள சிறு தொழில்கள் உள்பட கோண்டூர் சிட்கோ விலும் இழப்புகளின் மதிப்பு கோடிகளில் உள்ளது. மழை வெள்ளத்தால் இழப்புகள் நிகழாதவாறு கட்டமைப்புகளை மேம்படுத்தினால் மட்டுமே இங்கு நிறுவனங்கள் நிலைத்து நிற்கும் என்பதுதான் நிலவரம்.
எஸ்.அசோக், தலைவர், சிறு குறு உற்பத்தியாளர்கள் சங்கம், கடலூர்.
புயல் மழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் கடலூர் பாதிக்கப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இழப்புகளை எதிர்கொண்டுதான் தொழிலை மேற்கொண்டு நடத்திவருகிறோம். இதுபோன்ற சூழ்நிலைகளில் எங்களுக்கு அரசின் பக்கபலம் தேவையாக இருக்கிறது. இங்குள்ள தொழில்துறை பாதிப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளது. கடலூர் மாவட்டம் முழுக்க சிறு சிறு தொழில்முனைவோர்கள் அதிகம் உள்ளனர். பெரிய இயந்திரங்களைக் கொண்டு தொழில் செய்பவர்கள் இங்கு கிடையாது. கையால் இயக்கப்படும் இயந்திரங்கள் மற்றும் ஹேண்ட் டூல்ஸ் கொண்டுதான் தொழில் செய்து வருகின்றனர். இரண்டு மூன்று பேர்களுக்கு வேலை கொடுப்பார்கள். பல வருடங்களாக சிறுக சிறிக சேர்த்த சொத்துக்களை கடந்த ஒரு மாத மழையில் மொத்தமாக இழந்து நிற்கின்றனர். மத்திய மாநில அரசுகள் உடனடியாக எங்கள் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு உதவிகரம் நீட்ட வேண்டும்.
மெக்கானிக் ஷெட்டுகள்
கடலூர் விழுப்புரம் சாலையில் கெடிலம் ஆற்றின் கரையோரத்தில், குறிப்பாக செம்மண்டலம் கோண்டூர் பகுதிகளில் மோட்டார் வாகன பழுதுபார்க்கும் சிறு சிறு மெக்கானிக் ஷெட்டுகள் பல உள்ளன. இரண்டு மூன்று பேர் வேலை பார்க்கும் இப்படியான ஷெட்டுகள் கடலூர் மாவட்டத்தில் 275 உள்ளன. கடலூர் நகரத்தில் மட்டும் 150 ஷெட்டுகள் உள்ளன. இவர்கள் ஒவ்வொருவருக்கும் பல ஆயிரம் முதல் பத்து லட்சம் வரை இழப்புகள் ஏற்பட்டுள்ளது. கோண்டூர் பகுதியில் பல மெக்கானிக் ஷெட்டுகளில் இப்போதும் தண்ணீரில் நிற்கின்றன வாகனங்கள்.
சர்வீஸ் செய்வதற்காக வந்த வாகனங்களுக்கு உரிமையாளர்கள் இன்ஷூரன்ஸ் கிளைம் செய்யவும் முடியாது. எப்சி முடித்த பிறகுதான் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். தவிர சிறிய விபத்து காரணமாக பழுதுபார்க்க ஷெட்டில் நிற்கும் வாகனத்துக்கு உரிமையாளர்கள் ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் கிளைமுக்கு அனுப்பி இருப்பார்கள். தற்போதைய இழப்பு அதைவிடவும் அதிகமாக இருந்தாலும் கிளைம் செய்ய முடியாது. எனவே ஷெட்டில் ஏற்பட்ட இழப்பு மெக்கானிக்குகளின் இழப்பாகவே எடுத்துக் கொள்ளப்படும். இந்த சுமையை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த செலவுகளை சமாளிக்க மெக்கானிக்குகள் வட்டிக்கு பணம் வாங்க தொடங்கியுள்ளனர். இந்த அசலையும் வட்டியையும் கட்டி முடிப்பதற்கே பல ஆண்டுகள் ஆகலாம். சிறிய அளவில் செய்பவர்களுக்கு வங்கிக் கடனும் கிடைப்பதில்லை.
இந்த தொழிலின் ஒவ்வொருவரது கண்களிலும் துயரம் தொக்கி நிற்கிறது. எதிர்காலம் குறித்த பயம் தேங்கி நிற்கிறது. எங்கள் குறைகளை கேட்டறிந்து கொள்வதற்காவது ஒரு அதிகாரி வரக்கூடாதா என காத்து கிடக்கின்றனர்.
லிங்கன் ஆர் ஹரிகரன். மாநில தலைவர் தமிழ்நாடு மோட்டார் அனைத்து வாகன பழுதுபார்போர் நல சங்கம்.
மழை வெள்ளத்தில் கம்ப்ரசர்கள் உள்ளிட பல கருவிகள் பழுதாகியுள்ளது. கையிருப்பில் இருந்த ஆயில், கிரீஸ், டூல்ஸ் என பொருள் இழப்புகளும் அதிகம். இனி வரும் காலங்களில் இது போல பாதிக்கப்படாமல் இருக்க இந்த தொழிலுக்கும் ஏற்ற இடங்களை ஒதுக்கி முறைப்படுத்தினால் இழப்புகளை குறைக்க முடியும்.
கயிறு உற்பத்தி
கயறு வாரியத்தின் மூலம் கயிறு திரிக்கும் தொழிலிலும் கடலூர் முக்கிய மையமாக இருக்கிறது. கடலூரின் சாலகரை பகுதியில் உள்ள கயிறு தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்ந்து சுமார் 200 குடும்பங்கள் தொழில் செய்து வருகின்றன. சுமார் 500 பேர் வரை வெளியிலிருந்து வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மூலப்பொருள் இழப்பு. இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்பவர்களுக்கு இயந்திரங்கள் தண்ணீர் மூழ்கி அதை சரி செய்யும் செலவுகள், மின் சாதனம் சீரமைப்புகள் என சிரமங்களை சந்தித்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக உற்பத்தி இழப்பினால் வேலையின்றி வீட்டுக்குள் முடங்கி நிவாரண உதவிகளைக் கொண்டே நாட்களை கடத்தியுள்ளனர். தற்போதுதான் கயிறு பஞ்சுகளை காயவைத்து வேலைகளை தொடங்கியுள்ளனர்.
மழையில் தேங்காய் பஞ்சுகள் நனைந்தால் கருத்து நிறம் மாற்றம் அடையும். மேலும் எடையும் அதிகரிக்கும். இதிலிருந்து திரிக்கப்படும் கயிறுகள் விற்பனை செய்ய முடியாது யாரும் வாங்க மாட்டார்கள். இங்குள்ள கூட்டுறவு சங்கமும் பல லட்சம் இழப்பை சந்தித்துள்ளது. இழப்பின் உண்மையான மதிப்பை வெளியில் சொல்லக்கூடாது என்பது அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு என்பதால் நஷ்டத்தின் உண்மையான மதிப்பை சொல்லவும் தயங்குகின்றனர் மக்கள்.
அன்றாடம் வேலை நடந்தால்தான் வருமானம் வரும். தவிர மூலப்பொருள் 3 லட்சத்துக்கும்மேல் நஷ்டம் அடைந்துள்ளது. ஒரு மாதமாக நிவாரண உதவிகளை கொண்டும், நகைகளை அடகு வைத்தும் ஓட்டினோம் பழுதான இயந்திரங்களை சரிசெய்வதே எங்களுக்கு பெரிய செலவாக இருக்கிறது. இதில் மின் இணைப்பை சரிசெய்து கொடுக்கவும் அதிகாரிகள் காசு கேட்கிறார்கள். எங்கிருந்து கொடுப்பது?
ஐஸ் உற்பத்தி
மீன்பிடி தொழிலின் துணைத் தொழிலாக ஐஸ் உற்பத்தி செய்யும் 42 நிறுவனங்கள் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுக்குமே பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலை திரும்ப தொடங்க வேண்டும் என்றால் மின்மோட்டார்கள், கம்ப்ரஸர்கள் புதிதாக வாங்க வேண்டும்.
ஒரு முறை உற்பத்தியை நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்கும்போது அமோனியம் வாயு அழுத்தம் காரணமாக விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. தவிர 48 மணிநேரம் எந்த உற்பத்தியும் இருக்காது.
கடந்த ஒரு மாதமாக மீன்பிடி தொழிலும் கிடையாது என்பதால் இதற்கான தேவை எழவில்லை. உற்பத்தியை நிறுத்தியதால் ஏற்பட்ட இழப்பு. மீண்டும் இயக்கும்போது, கூடுதல் மின் கட்டண சுமை என பல முனை பாதிப்புதான் இவர்களுக்கும். குறிப்பாக உற்பத்தியை நிறுத்தினால் ஐஸ் உறைய வைக்கும் குடுவைகள் துரு ஏறி விடும். இந்த குடுவைகளை திரும்ப பயன்படுத்த முடியாது. இந்த இழப்பும் இன்னும் கூடுதல் சுமை. பல இடங்களில் மின்சார இணைப்பு இன்னும் சரிசெய்யப்படவில்லை என்பதால் உற்பத்தி தொடங்கவும் முடியவில்லை.
மச்சரேகை, கவுசல்யா ஐஸ் பேக்டரி
சிப்காட் பகுதியில் உள்ள எனது ஐஸ் பேக்கரியால் நான் கூடுதல் பாதிப்படைந்துள்ளேன். இங்கு 7 சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளது. அதில் 2 மட்டுமே லாபமாக இயங்குகிறது. மற்றவர்கள் வரவுக்கு செலவுக்குமாக இருக்கிறோம். தற்போது பெரிய நிறுவனங்களுக்கு இணையாக எங்களையும் மின் கட்டணம் கேட்டு மின்வாரியம் அழுத்தம் தருகிறது.
முந்திரி உற்பத்தி
கடலூரை மையமாக வைத்து புவனகிரி, விருதாசலம், வடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி சுற்றுவட்டார பகுதிகளில் முந்திரி உற்பத்தி நடந்து வருகிறது. கடந்த மாத வெள்ளத்தில் மட்டும் இந்த தொழிலில் சுமார் 50 கோடிக்கு மேல் இழப்பு இருக்கலாம் என்கின்றனர். முந்திரி கொட்டை உடைக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் வெள்ளத்தில் பலத்த சேதம் அடைந்துள்ளன. பொதுவாக இது போன்ற சிறிய தொழில்கூடங்களை மண் பூச்சு கொண்டுதான் இந்த பகுதிகளில் கட்டியுள்ளனர். இவற்றின் சுவர்களும், புகை போக்கி குழாய்களும் வெள்ளத்தில் கரைந்து இடிந்துள்ளன. கட்டடம், இயதிரம், ஸ்டாக் என பல வகையிலும் இழப்பு.
பல இடங்களில் ஸ்டாக்கில் இருந்த முந்திரிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் சிறு தொழில் என்ற வகையில் மேற்கொண்டிருந்த தொழில்முனைவோர்கள் இந்த இழப்பை எடுக்க பல ஆண்டுகள் உழைக்க வேண்டும்.
விவசாயிகளிடம் முன்பணம் கொடுத்து முந்திரி கொட்டைகளை வாங்கும் இவர்கள், அதை பருப்பாக மாற்றி விற்பனை செய்யும் பணத்திலிருந்துதான் முந்திரி கொடுத்த விவசாயிகளுக்கு செட்டில்மெண்ட் செய்வார்கள். இப்படி பல நூறு பேர்களின் பெரு நஷ்டம் ஒவ்வொரு விவசாயி வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் முதல் 25 லட்சம் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சிமெண்ட் கற்கள் / அகல் விளக்கு
நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து கழிவாக கிடைக்கும் சாம்பலை வாங்கி கற்கள் மற்றும் சிமெண்ட் வேலைகள் செய்கிற தொழில் முனைவோர்கள் குறிஞ்சிப்பாடி, நடுவீரப்பட்டு பகுதிகளில் அதிக அளவில் உள்ளனர். மழையில்லாத காலத்தில்தான் இவர்களுக்கு வேலை. வழக்கமாக பல மழைகளை எதிர்கொண்டவர்கள்தான். ஆனால் இந்த வெள்ளத்தில் அவர்களது ஊரே தத்தளித்து மிதக்க, தொழிலகக் குடிசைகள் எம்மாத்திரம்?
பீங்கான் மற்றும் செராமிக் பொருட்கள், களிமண் அகல் விளக்குகள் தயாரிப்பதில் விருத்தாசலம் பகுதி முக்கிய இடத்தில் உள்ளது. இவர்களது சூளைகளும் மழை நீரால் தூர்ந்துள்ளது. கார்த்திகை மாதம்தான் அவர்களுக்கு முக்கியமான விற்பனை வாய்ப்பு. அது முற்றிலுமாக கை விட்டு போய்விட்டது.
பாண்டியன், மெக்கானிக், செம்மண்டலம்
மழை வந்த நவம்பர் மாதம் 09 தேதி மாலையில் இது வழக்கமான பெய்யும் மழைதானே என்றுதான் வீட்டுக்குச் சென்றேன். மழை விடிய விடிய கொட்டுகிறது. விடிந்தால் தீபாவளி. ஊரே வெள்ளக்காடாக இருக்கிறது. அடித்து பிடித்து ஷெட் பக்கம் வந்தால் சர்வீஸ் வந்த வாகனங்கள் தண்ணியில் மிதக்கிறது. ஒரு சின்ன வேலைக்காக வந்த வாகனத்தை ஷெட்டில் விடச் சொல்லி, காலையில் எடுத்துக் கொள்ளலாம் என்று உரிமையாளரை அனுப்பி வைத்தேன். அதை சரி செய்து கொடுத்தால் 350 ரூபாய் கூலி கிடைக்கும். இப்போது தண்ணீரில் மூழ்கிய அந்த வாகனத்தின் மொத்த செலவுகளை செய்ய வேண்டிய நெருக்கடியில் இருக்கிறேன். என்னால் முடியாது என வாடிக்கையாளரிடம் கை விரிக்க முடியாது. நான் தொழிலில் நிலைக்க வேண்டும் என்றால் இதை செய்யத்தான் வேண்டும். அப்போதுதான் கஸ்டமர்கள் நம்மிடம் வருவார்கள் என்கிறார். அந்த வாகனத்தின் உரிமையாளர் கொஞ்சம் காசு தருகிறேன் என்கிறார். நான் கந்து வட்டிக்கு வாங்கித்தான் செலவு செய்ய வேண்டும். இதுபோல சர்வீஸ் முடித்து அடுத்த நாள் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க இருந்த வாகனமும் தண்ணீரில் மூழ்கிவிட்டது. இதை சரி செய்து மீண்டும் வாகனம் இருந்த பழைய நிலையில் ஒப்படைக்க வேண்டும்.
பி.பாலகுமாரன், பி.பி புட்ஸ் ஸ்கொயர், இம்பீரியல் சாலை
ஹேட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு சொந்த ஊரில் தொழில் செய்ய வேண்டும் என விடாப்பிடியாக வாழ்ந்த தொழில்முனைவர் இவர். கப்பலில் சமையல் துறை பணி மற்றும் அடையாறு கேட் ஹோட்டலில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் கொண்டு, அரசின் தொழில்முனைவோர் கடன் வாங்கி 2013 ஆம் ஆண்டு இம்பீரியல் சாலையில் ஒரு வாடகைக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் பேக்கரியை நடத்தி வந்தவர். நவம்பர் 09 ஆம் தேதி மழையிலேயே கடைக்குள் தண்ணீர் புகுந்து மூழ்கி விட்டது.
’’ மழை வடிந்த பிறகு, கடையை சுத்தப்படுத்தி, பழுதான் இயந்திரத்தை சர்வீஸ்காக சென்னை அனுப்பினேன். விரைவில் கிடைத்துவிடும் திரும்ப தொழிலை நடத்த முடியும் என நம்பிக்கையோடு இருந்தால், சர்வீஸ் எடுத்துச் சென்ற சென்னை நிறுவனமும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. கூடவே மறுபடியும் கடைக்குள் தண்ணீர் புகுந்து என் கனவையே சிதைத்துவிட்டது’’ என்கிறார்.
கடைக்குள் மழைநீர் புகுந்துவிட்டது என்கிற கவலையில் வாய்விட்டே அழுதுவிடலாம்போல இருந்தது. பிள்ளைகள் கவலைப்படுவார்கள் என அடக்கிக் கொண்டோம். ஆனால் என் 10 வயது மகன் கண் கலங்கியதைப் பார்த்து நாங்களும் அழுதுவிட்டோம். இந்த கடையை நானும் எனது கணவரும் பார்த்து பார்த்து உருவாக்கினோம். இது அவரது கனவாக இருந்தது. எங்கள் குடும்பத்தின் ஒரே வருமானமும் இதுதான் என்று கண் கலங்கினார் அவரது மனைவி சிவகாமி.
பேஸ்மெண்ட் நிறுவனத்துக்கு இன்ஷூரன்ஸ் கிளைம் கொடுக்க முடியாது என இன்ஷூரன்ஸ் நிறுவனம் கைவிரிக்க என்ன செய்வது என தெரியாமல், கடன் கொடுத்த வங்கிக்கும், சேதமடைந்த கடைக்கும், கவலை தோய்ந்த வீட்டுக்கும் நடைபிணமாக அலைந்து கொண்டிருக்கிறார் பாலகுமாரன்.
தொடர்புக்கு: maheswaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago