உலகத்திலேயே மிகப் பெரிய சோகம் எது தெரியுமா? புத்திர சோகம். அதாவது, குழந்தை மரணம். ஈலானுக்கும், ஜெட்ஸ்ட்டினுக்கும் ஆண் குழந்தை பிறந்திருந்தான். பத்தாவது மாதம். குழந்தைக்குப் பால் கொடுத்தபின் அதன் அறையில் தூங்கவைத்தார்கள். சாதாரணமாக ஓரிரு மணி நேரங்களில் விழிப்பான். அப்போது சிணுங்குவான். இரண்டு மணி நேரம் ஆனது. ஏனோ அவன் அறையிலிருந்து சப்தமில்லை. ஜெஸ்ட்டின் அங்கே போனார். குழந்தையைப் பார்த்தார்.
மனதில் இனம் புரியாத சந்தேகம், பயம். அவனைத் தொட்டார். அசைவு இல்லை. உடல் ஜில்லிடுகிறதோ? நடுங்கும் கைகளோடு அவன் மூக்கில் விரல் வைத்தார். மூச்சு வந்தது. கொஞ்சம் ஆசுவாசம். ஈலானைக் கூப்பிட நினைத்தார். நாக்கு வறண்டு பேச்சே வரவில்லை. ஓடினார். ஈலானின் கையைப் பிடித்துக் குழந்தையின் அறைக்கு இழுத்துக்கொண்டு வந்தார். குழந்தை உடல் முழுக்க நீலம் பரவத் தொடங்கியிருந்தது. மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.
ஐ.சி.யூ. பிஞ்சுக்கைகளில் டிரிப்ஸ். முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க். வரிசை வரிசையாகப் பரிசோதனைகள். டாக்டர்களின் தீர்ப்பு - ஏதோ எசகுபிசகாகத் திரும்பிப் படுத்ததில், குழந்தை மூளைக்குப் பிராணவாயு போகவில்லை. மூளை “செத்துவிட்டது.” அடுத்த மூன்று நாட்கள் ஈலானுக்கும் ஜெஸ்ட்டினுக்கும் நரக நாட்கள். குழந்தை பிழைக்குமா என்று தெரியாது. அப்படி உயிர் தப்பினாலும், படுத்த படுக்கையாய், உணர்வுகள் இல்லாத ஜடமாக இருப்பானோ என்னும் பயங்கள். டாக்டர்கள் நடத்தியது ஜீவ மரணப் போராட்டம். தோற்றார்கள். கருகிவிட்டது மொட்டு. ஈலானும், ஜெஸ்ட்டினும் செல்வத் திருமகனை இழந்தார்கள்.
முத்துமணிப் பல்லக்கு முளைத்தெழுந்த சிறுகீரை தத்துங்கிளி தேவதாரு உதிர்த்த இலை கொத்துமலர் ஒன்றாய்க்கூடிச் சமைத்த முகம்பத்துமாதங்கூடப் பாலன் வயதாகவில்லை செத்துக் கிடக்கின்றான்; சிரித்தபடி கிடக்கின்றான்; மைகலையாக் கண்மீது மணி பதித்த சிப்பியெனச் சின்னஇமைமூடிச் செல்வன் உறங்குகிறான்! பூமியினைவிட்டுப் போவதுதான் சுகமென்றோ சாமிகொடுத்த மகன் தனைமறந்து தூங்குகிறான்! நூறு வயதானவர்கள் நோய்நொடி இல்லாதிருக்கப் பால்வடியும் பொன்னிதழைக் காலன் பறித்துவிட்டான்! கூற்றுவனுக்கென்ன குணக்கேடோ நானறியேன்! மக்கள் தொகையும் வருங்காலச் சூழ்நிலையும் தக்க இடம் நமக்குத் தாராதோ என்றஞ்சி சிக்கென்று கைச்சிறையில் சிரிக்குமிளம் பூந்தோட்டம் பக்கென்று வானில் பறந்தோடி விட்டதம்மா! பிஞ்சுமகன் போனான்; பெரியவர்கள் வாழுகிறோம்; மிஞ்சுவது யாதோ? விளைவதுதான் எவ்விதியோ? சஞ்சலமேன்? அந்தத் தனிக்கருணைக் கண்ணனிடம் நாமும் பறப்பவர்தாம் நாளையோ மறுதினமோ?* அது என்ன மாயாஜாலமோ? மனித வாழ்க்கையின் அத்தனை நிகழ்வுகளுக்கும், கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
தன் அண்ணன் மகன் பஞ்சு அருணாசலத்தின் பத்துமாதக் குழந்தை இறந்தபோது, குமுதம் பத்திரிகையில் சின்னத்தாத்தாவான கவிஞர் எழுதிய பாடல். ஈலான் – ஜெஸ்ட்டின் தம்பதிகளின் பேரிழப்புக்கும் எத்தனை கனகச்சிதமாகப் பொருந்துகிறது? இந்த வரிகளைத் தந்துதவிய கவிஞரின் மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஜெஸ்ட்டின் கதறிக் கதறி அழுதார். ஈலான் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. மனைவியிடமிருந்தும் விலகிப்போனார். ஈலான் சொன்னார், “இத்தகைய சந்தர்ப்பங்களில் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியாது. மிகச் சோகமான நிகழ்ச்சிகளைப் பற்றி ஏன் திரும்பத் திரும்பப் பேசவேண்டும்? கடந்துபோன சம்பவங்களுக்காகச் சோகத்தில் மூழ்கிக் கிடப்பது உங்களுக்கும், உங்களைச் சுற்றியிருப்போருக்கும் நல்லதல்ல.”
கணவன் பாசமே இல்லாத கல்நெஞ்சக்காரரா அல்லது கொந்தளிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாமல் தனக்குள் குமுறுபவரா? ஜெஸ்ட்டின் மனம் நிறைய விடை இல்லா வினாக்கள். கணவரைப் போல் வாழ்க்கையை எடுத்துக்கொள்ள அவரால் முடியவில்லை. வீட்டில் வெறுமை. மறுபடியும் குவா குவா சப்த கேட்க மனம் ஏங்கியது. ஈலான் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே, ஜெஸ்ட்டின் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவர்களை அணுகினார்.
வாழ்க்கைப் படகு சோகப்புயலில் சிக்கித் தடுமாறும்போது, ஒவ்வொருவரும் தேடும் நங்கூரங்கள் வித்தியாசமானவை. சிலருக்கு மது; சிலருக்கு மாது; சிலருக்கு ஆண்டவன். ஜெஸ்ட்டினுக்கு அடுத்த குழந்தை. ஈலானுக்கு அவர் வேலை. ஸ்பேஸ் X ஏற்கெனவே அவருக்கு உயிர்மூச்சு. இப்போது மனைவியை மறந்தார். தொழிற்சாலைதான் வாழ்க்கை. எப்போதாவது வீட்டுக்குப் போவார். நம் ஊரில் ஒரு சித்தர் பாடல் உண்டு; நந்தவனத்தில் ஓர் ஆண்டி நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி.
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. உலகம் ஈலானை இந்த ஆண்டியாகப் பார்த்தது. ‘‘இந்த ஆளுக்கு அதிர்ஷ்டம். தொடங்கிய இரண்டு ஸ்டார்ட்-அப்களிலும் கோடிக் கோடியாகப் பணம் கொட்டியிருக்கிறது. அதனால், பணத்தின் மதிப்பு தெரியவில்லை. விண்வெளி ஆராய்ச்சியின் அரிச்சுவடிகூடத் தெரியாதவன். 280 மில்லியனை வைத்துக்கொண்டு ஒரு வருடம் கூட இந்த பிசினஸில் தாக்குப்பிடிக்க முடியாது. கடலில் போட்ட பெருங்காயமாக அத்தனையையும் தொலைத்துவிட்டு அடுத்த வருடமே நடுத்தெருவில் நிற்கப்போகிறான்.”
ஈலானைப் பற்றிய தனிமனித விமர்சனங்கள் கீழ்த்தரம் தொட்டன. எரிக் ஜாக்ஸன் (Eric Jackson) என்னும் ஊழியர் 2004 – ஆம் ஆண்டில், The PayPal Wars: Battles with eBay, the Media, the Mafia and the Rest of Planet Earth என்னும் புத்தகம் எழுதினார். அவர் தீல் ஆதரவாளர். ஆகவே, ஈலான் மீது அமிலத் தாக்குதல். “ஈலான் தலைக்கனம் பிடித்தவர். முரட்டுப் பிடிவாதக்காரர். அவர் எடுத்த முடிவுகள் அத்தனையும் தவறானவை. பே பாலின் நிஜ ஹீரோக்கள் தீல், லெவிச்சின் இருவருமே.”
ஊடகங்கள் இந்த விமர்சனங்களை ஊதி ஊதிப்பெரிதாக்கின. ‘‘பே பால் கம்பெனி ஈலானின் ஐடியாவே இல்லை; ஜிப் 2 கம்பெனி விற்ற பணத்தால், தீல், லெவிச்சின் இருவரும் தொடங்கிய கம்பெனியில் நுழைந்தார். கூடாரத்துக்குள் புகுந்த ஒட்டகம் போல், பணபலத்தால், பே பாலின் அதிகப் பங்குகளைத் தன் வசமாக்கிக்கொண்டார். இன்னும் ஆறு மாதங்கள் அவர் சி.இ.ஓ – வாகத் தொடர்ந்திருந்தால், கம்பெனி திவாலாகியிருக்கும்” என்னும் மாய பிம்பத்தை உருவாக்கினார்கள்.
ஈலான் முதலில் இந்த விமர்சனங்களை உதாசீனம் செய்தார். ஆனால், மக்கள் மனங்களில் இந்த பிம்பம் பதிகிறது, தன் தொழில்முனைவர் வருங்காலத்தையே பாதிக்கும் என்று உணர்ந்தார். பதிலடி அறிக்கை தந்தார். பே பாலின் வெற்றிக்குத் தன் பங்காக அவர் எடுத்துவைத்த காரணங்கள்; “டாயிஷ் வங்கி”, “கோல்ட்மேன் ஸாக்ஸ்” ஆகிய துணிகர முதலீட்டாளர்கள் 100 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தது தன்னை நம்பி மட்டுமே. தீல், லெவிச்சின் ஆகியோருக்காக அல்ல.
டாட் காம் பிரச்சினைக் காலத்தில் துணிகர முதலீட்டாளர்கள் காணாமல் போனபோது, தான் போட்ட சொந்தப் பணம் மட்டுமே கம்பெனியைக் காப்பாற்றியது. பே பாலின் அதித் திறமைசாலிகள் என்று உலகம் கூறும் அத்தனைபேரும் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள். தான் சி.இ.ஓ – வாக இருந்த காலகட்டத்தில்தான், ஊழியர்கள் எண்ணிக்கை அறுபதிலிருந்து பல நூறுகளானது. ஈலான் தலைக்கனம் பிடித்தவர், முரட்டுப் பிடிவாதக்காரர் என்னும் குற்றச்சாட்டுக்கள் நிஜம்.
அதே சமயம், ஈலானின் பதில்களும், வார்த்தைக்கு வார்த்தை உண்மை. அவர் இல்லாவிட்டால், முதலீட்டாளர்கள் ஒருவர்கூட பே பால் பக்கமே வந்திருக்கமாட்டார்கள். யூ ட்யூப் தொடங்கிய சாட் ஹெர்லி (Chad Hurley), ஸ்டீவ் சென் (Steve Chen), ஜாவெத் கரீம் (Jawed Karim), யெல்ப் (Yelp) கம்பெனி நிறுவனர்கள் ஜெரமி ஸ்டாப்பெல்மேன் (Jeremy Stoppelman), ரஸ்ஸல் ஸிம்மன்ஸ் (Russel Simmons), லின்க்ட்இன் (Linkedin) நிறுவனர் ரெய்ட் ஹாஃப்மேன் (Reid Hoffman) போன்ற முன்னோடித் தொழில் முனைவர்கள் பே பால் பாசறையில் ஈலானால் பட்டை தீட்டப்பட்டவர்களே.
கீழ்த்தரமாக விமர்சிப்பவர்களுக்குத் தொடர்ந்து பதில் சொல்லித் தன் பொன்னான நேரத்தை வீணாக்க ஈலான் விரும்பவில்லை. ஸ்பேஸ் எக்ஸ் கம்பெனியில் முழுக் கவனத்தையும் ஒருமுகமாக்கினார். அதே சமயம், பிறர் கருத்துக்கள் அத்தனையையும் உதறித் தள்ளவில்லை. ராக்கெட் விடுவது மிக மிக ரிஸ்க்கான பிசினஸ் என்பதை உணர்ந்திருந்தார். சர்வ வல்லமையும், பண, தொழில்நுட்ப பலங்களும் கொண்ட அமெரிக்க அரசின் நாசா 1957 முதல் 1966 வரையிலான காலகட்டத்தில் செலுத்திய 400 ராக்கெட்களில் 100 பாதிவழியிலேயே எரிந்து சாம்பலான வரலாறு அவருக்குத் தெரியும். வழுக்கலான பாதையில் கையில் கண்ணாடிப் பாத்திரம் ஏந்தி நடக்கும் பயணம். கவனமாக அடியெடுத்துவைத்தார்.
ஈலான் கும்மிருட்டிலும் வெளிச்சத்தைப் பார்ப்பவர். நாசாவின் “தோல்விகளுக்கு” மத்தியில், இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளின் விண்வெளிச் சாதனைகள் அவருக்கு உற்சாக டானிக்காக இருந்தன. 1962 – ஆம் ஆண்டில், இந்தியா தன் விண்வெளி ஆராய்ச்சியைத் தொடங்கியது. அள்ள அள்ளப் பணமும், தொழில்நுட்ப வல்லுநர்கள் படையும் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஏகபோக ஆடுகளமாக இருந்த விண்வெளி ஆராய்ச்சியில் “வளரும் நாடான இந்தியாவா?”’ என்று கேலி செய்தவர்கள் பலர். கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடும்போது, இது வேண்டாத விரயம் என்று விமர்சித்தவர்கள் இந்தியாவிலேயே பலர். ஆனால், பதினேழே வருடங்களில் பாரதம் தன் ராக்கெட்களை வடிவமைத்தது, உருவாக்கியது, விண்வெளியில் வெற்றிகரமாக உலவ வைத்தது. விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியான ஆறு நாடுகளுள் ஒன்றாக இடம் பிடித்தது. ஒவ்வொரு இந்தியனையும் தலைநிமிரவைக்கும் இந்தப் பெருமையை நமக்குத் தந்தவர் - விக்ரம் சாராபாய்!
(புதியதோர் உலகம் செய்வோம்!)
slvmoorthy@gmail.co
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago