இந்தியாவில் 2020ஆம் ஆண்டு நிலவரப்படி 55,000க்கும் மேலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இவற்றில் 3200 ஸ்டார்ட் அப்கள் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 63 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன. இந்த அளவுக்கு இந்தியாவில் ஸ்டார்ட் அப் சூழல் மேம்பட முக்கிய காரணம் அரசின் பல்வேறு கொள்கை முடிவுகளும், ஊக்குவிப்புத் திட்டங்களும் என்றால் மிகையில்லை. கடந்த 7 ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா என அரசு கொண்டுவந்த திட்டங்களுக்குக் குறைவே இல்லை.
அதுமட்டுமல்லாமல் இந்திய ஸ்டார்ட் அப் சூழலை வளர்த் தெடுக்க அரசு இதுவரை 50க்கும் மேலான கொள்கை முடிவுகளை எடுத்திருக்கிறது. பல்வேறு கடன் உதவி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இன்று உலக அளவில் ஸ்டார்ட் அப் தொழில்களில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால், இத்தகைய வளமான ஸ்டார்ட் அப் சூழல் தற்போது மெல்ல மெல்ல காணாமல் போகிற நிலைக்கு ஆளாகியுள்ளது என்பதுதான் வருத்தமான விஷயம்.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் சந்தையில் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் கணினி, இன்டர்நெட், டிஜிட்டல் தளம், செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் என்று பல்வேறு புதிய துறைகள் உருவாகி இருக்கின்றன. இவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கை
முறையில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகியிருப்பதோடு பல்வேறு தொழில் வாய்ப்புகளையும் திறந்து விட்டிருக்கிறது. மக்களின் தேவை மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கானத் தீர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து புதிது புதிதாக தொழில் சிந்தனைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.
இதுதான் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அடிப்படையாகவும் இருக்கிறது. பல இளைஞர்கள் இந்த உந்துதலினால்தான் வேலைக்குப் போவதை விடவும் சொந்தமாகத் தொழில் செய்து முன்னேறலாம் என்ற கனவில் ஸ்டார்ட் அப் பக்கம் திரும்புகிறார்கள். அவர்களுக்காகவே வென்சர் கேபிடல், சீட் இன்வெஸ்ட்மென்ட், ஏஞ்சல் இன்வெஸ்டர் என்று உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறார்கள். ஆனால் இத்தனை சாதகங்கள் இருந்தாலும், இந்தியாவில் சில அடிப்படை நெருக்கடிகளை மீறி ஒரு துறையில் ஒரு புதிய நிறுவனம், ஒரு புதிய தொழிலதிபர் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை அடைய முடிகிறதா என்றால் இல்லை. காரணம் இன்றும் இந்தியாவில் பாரம்பரிய பெரு நிறுவனங்களின் ஆதிக்கம்தான் தொடர்கிறது.
விலை போன பிளிப்கார்ட்
இந்தியாவில் ஸ்டார்ட் அப் சூழல் தனது உற்சாகத்தை இழக்க ஆரம்பித்தது பிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட்டிடம் விலை போனதிலிருந்து என்று சொல்லலாம். சச்சின் பன்சால், பின்னி பன்சால் இருவரின் கனவு இது. 2007-ம் ஆண்டிலிருந்து கடும் முயற்சியில் உலக அளவில் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானுக்கு நிகரான சந்தையை உருவாக்கியது பிளிப்கார்ட். ஆனால், 2018ல் அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டிடம் விலை போனது. வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தை மட்டும் வாங்கவில்லை. அதனுடன் சேர்த்து மிந்த்ரா, போன்பே, இ கார்ட் உள்ளிட்டவற்றையும் வாங்கியது.
பிக்பேஸ்கெட் ஸ்டார்ட் அப் நிறுவனம்
அதேபோல் 10 வருடமாக இயங்கி வரும் பிக்பேஸ்கெட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை டாடா டிஜிட்டல் நிறுவனம் வாங்குவதற்கான முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. அதன் 64 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்புதலுக்கு இந்திய போட்டி ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. பிக்பேஸ்கெட் ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்தியாவின் உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்களை வீடுகளுக்கே டெலிவரி செய்யும் சந்தையை உருவாக்கிய முன்னோடி நிறுவனமாகும்.
இந்தியாவில் வெற்றிகரமாக இயங்கக்கூடிய முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றும்கூட. இதன்மூலம் டாடா தனது ரீடெய்ல் பிசினஸ்களான குரோமா, ட்ரென்ட் போன்றவற்றை டிஜிட்டல் தளத்துக்குக் கொண்டு செல்ல அதற்கு உதவியாக இருக்கும். டாடா குழுமம் 24 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. டார்க் மோட்டார்ஸ், பேடிஎம், ஸ்நாப்டீல், ஓலா, க்யூர் ஃபிட், கார்தேகோ, அர்பன் லேடர் ஆகியவை அவற்றில் சில.
இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் செயின்களில் ஒன்றான ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கையகப் படுத்துவதற்கான நடைமுறைகள் அனைத்தையும் நிறைவுசெய்துவிட்டது. இதுமட்டுமல்லாமல் ரிலையன்ஸ் நிறுவனம் 14 ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கையகப்படுத்தியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை வளர்ந்துவரும் துறைகள் சார்ந்தவை.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், பிளாக்செயின், ஆகுமென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, கேமிங், பொழுதுபோக்கு சார்ந்தவை. கைப்பற்றிய ஸ்டார்ட் அப்களில் எம்பைப், ஃபின்ட், கிராப், சாவன், டெசராக்ட், ஹாம்லேஸ், நெட்மெட்ஸ், பாலாஜி டெலிஃபிலிம்ஸ் மற்றும் ஈராஸ் இன்டர்நேஷனல் உள்ளிட்டவை அடங்கும். இந்தியாவில் 55 ஆயிரம் ஸ்டார்ட் அப்கள் இருந்தாலும் இன்னமும் இந்திய ஆன்லைன் சந்தை என்பது 10 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது. அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் 20 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவின் ஆன்லைன் சந்தை 33 பில்லியன் டாலர்.
பெருநிறுவனங்கள் தீவிரம்
இதில் பெரும்பான்மை சதவீதத்தை அமேசானும், வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட்டும்தான் வைத்திருக்கின்றன. காரணம் ஆன்லைன் வர்த்தக சூழலில் தொடர்ச்சியாக புதிய புதிய ஸ்டார்ட் அப்கள் வந்தாலும் அவற்றால் போட்டியைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. இத்தகைய நெருக்கடிகளும், சிக்கல்களும் பெரும்பாலும் அந்தத்துறைகளில் நுழைய விரும்பும் பெரிய நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்றன என்று பரவலாக விமர்சிக்கப்படுகிறது அதற்கேற்பவே பெரு நிறுவனங்களின் செயல்பாடுகளும் இருக்கின்றன.
வளர்ந்துவரும் எந்தத் துறைகளையும் பெரு நிறுவனங்கள் விட்டுவைக்கத் தயாராக இல்லை. தொடர்ந்து அவை தங்களின் தடத்தை எல்லா வளர்ச்சியிலும் பதிக்க துடிக்கின்றன. தொடர்ந்து தங்களின் சாம்ராஜ்யத்தை, முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் பெருநிறுவனங்கள் தீவிரமாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் தற்போது புதிதாக ஒரு முயற்சியை முன்னெடுத்து, சிறிது சிறிதாக நிறுவனத்தின் சந்தையை விரிவுபடுத்தும் போக்கிலிருந்து விலகி, வளர்ந்துவரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து அவற்றைக் கைப்பற்றுவதன் மூலம் விரைவிலேயே தங்களுக்கான சந்தையை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. இதனால் உடனடியான லாபம் சாத்தியமாகிறது. இதனால் பெருநிறுவனங்களுக்கு தோல்வி, நஷ்டம் உண்டாவது குறைகிறது. இதனால் ஆரம்பக்கால பரிசோதனை முயற்சிகள் எதுவும் இல்லாமல், சிறு முதலீட்டை செய்வதன்மூலம் யாரோ ஒருவரின் கனவில், உழைப்பில் ஏறி சவாரி செய்யும் போக்கு உருவாகிவிடுகிறது.
சமீபத்தில் பெரு நிறுவனங்கள் புதிதாக நிறுவனங்களை உருவாக்கியதை விடவும், சிறு சிறு தொழில் முனைவோர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கைப்பற்றியதுதான் அதிகம். பல புதிய தொழில்முனைவோர்களின் கனவுகளின் மீது ஏறித்தான் பெருநிறுவனங்கள் தங்களுடைய முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பார்க்கின்றன. இப்போது என்ன குறைந்துவிட்டது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நல்ல விலை கொடுத்துதானே வாங்குகிறார்கள் என்று கேட்கலாம்.
காணாமல்போன ஸ்டார்ட் அப் தொழில்கள்
ஆனால், ஒரு ஸ்டார்ட் அப் என்பது வெறும் நிறுவனம் மட்டும் அல்ல. தொழில் முனைவில், பிசினஸில் சாதிக்கத் துடிக்கும் அடுத்தடுத்த தலைமுறையினரின் ஒட்டுமொத்த நம்பிக்கை அது. அப்படியான நம்பிக்கை சிதையும்போது, அரசியலில் வாரிசுகள் ஆதிக்கம் இருப்பது போலவே மீண்டும் மீண்டும் தொழில்துறையில் சிலரின் ஆதிக்கம் மட்டுமே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை உருவாகிவிடுகிறது. இதனால் அடுத்தடுத்து புதிய முயற்சிகளை மேற்கொள்ள துடிப்பவர்களுக்குப் பெருத்த அடியாக மாறிவிடுகிறது. நாமும் ஒருநாள் அமேசான், அலிபாபா மாதிரி வளர்வோம், அம்பானி, டாடா போல் வலம் வருவோம் என்ற லட்சியக் கனவில் இருக்கும் தொழில்முனைவோர்களின் சிறகுகள் பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் துண்டிக்கப்படுவது நடந்துகொண்டேதான் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் 50க்கும் மேலான ஸ்டார்ட் அப் தொழில்கள் காணாமல் போயிருக்கின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் 1994க்கு முன் இல்லாத நிறுவனங்கள்தான் இன்றைய ஆன்லைன் சந்தைகளைத் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. அங்கெல்லாம் ஸ்டார்ட் அப் கனவுகளுக்கு வெற்றியின் உத்தரவாதம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் புதிதாக வளரும் துறைகளில் கூட முதலிடத்தில் அம்பானியும் டாடாவும்தான் இருப்பார்கள் என்ற நிலையை என்னவென்று சொல்வது? அதுவும் அவர்கள் சொந்த முயற்சியில் அந்த நிலையை எட்டினால்கூட பரவாயில்லை. புதிய சிந்தனைகளை, புதிய கண்டுபிடிப்புகளை, புதிய தொழில்களை பெரிய நிறுவனங்கள் கைப்பற்றுவதன் மூலம், ஒரு துறையின் பெரும்பான்மை சந்தையை எளிதில் பிடித்துவிடுகின்றன.
நிறுவனங்களின் ஆதிக்கம்
ஆனால் அந்த சந்தையை உருவாக்கியது ஒரு புதிய தொழில்முனைவோரின் புதிய சிந்தனையும் உழைப்பும். இன்னொரு பெரிய நிறுவனம் ஒரு துறையில் இருக்கிறது என்பதற்காகவே தானும் அந்தத் துறையில் நுழைய வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையும் நிறுவனங்களைக் கையகப்படுத்துவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அதேசமயம் பெரும்பாலான தொழில்முனைவோர்களுக்குத் தொடக்கத்தில் இருக்கும் வேகம் தொடர்ந்து நீடிப்பதில்லை. எதற்காக இவ்வளவு நெருக்கடிகளையும், சிக்கல்களையும் தாங்கிக்கொண்டு தொழிலை நடத்தி செல்ல வேண்டும் என்ற மனநிலை உருவாகிவிடுகிறது. அதனாலேயே நல்ல விலை கிடைக்கிறது என்று விற்றுவிட்டு வெளியே வந்துவிடுகிறார்கள்.
தொடர்ந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியடைவதும், கைப்பற்றப்படுவதும் தொடர்வதால் பாதிக்கப்படுவது தொழில்முனைவோர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் பணிச்சூழலும்தான். ஏனெனில், பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் நிர்வாகத்தில் பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டுவருகிறார்கள். பணியாளர்களை அணுகும் விதம், பணியாளர்களுக்கான சலுகைகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்களின் வாழ்வியல் முறைகளிலும் அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் தொழில்சூழல் மேம்படுவதோடு, பணிச்சூழலும் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகின்றன. ஆனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியடைவதாலும், அவை கைப்பற்றப்படுவதாலும் மீண்டும் மீண்டும் பாரம்பரியமான நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, பணிச்சூழல் அதே பழமையான போக்கிலேயே செயல்படுவதற்கான நிலையே தொடர்கிறது.
தயக்கம், பதட்டம்
கரோனா பாதிப்பு காலத்தில் ஆன்லைனில் அதிக வர்த்தகம் நடந்திருக்கிறது. இந்தியர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்வதை அதிகரித்துவருகிறார்கள். பொழுதுபோக்கிலும் டிஜிட்டல் தளம்தான் பெரும்பான்மை என்ற நிலை வந்திருக்கிறது. டிஜிட்டல் பேமென்ட் முறைகளால் இவை அனைத்தும் மிகவும் எளிதாகியிருக்கிறது. எவ்வளவு புதிய வாய்ப்புகள், துறை
கள் உருவானாலும் மீண்டும் மீண்டும் இந்தியத் தொழில்துறையின் ஆதிக்கம் பெரு நிறுவனங்களின் கைகளில்தான் போய் சேருகின்றன. இது இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் அடுத்தடுத்து கால்பதிக்க விரும்புபவர்களுக்குத் தயக்கத்தையும் பயத்தையும் உண்டாக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
saravanan.j@hindutamil.co.i
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago