இயற்கையின் சீற்றத்துக்கு முன்பு கால தேச வர்தமானங்கள் கிடையாது என்பது எப்போதும் நிரூபணமாகியே வந்துள்ளது. அந்த வகையில் சென்னை சந்தித்த வரலாறு காணாத மழை வெள்ளமும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சந்திக்காத மிகப்பெரிய பேரவலத்தை சந்தித்துள்ளனர் சென்னை மக்கள். ஆசை ஆசையாய் வாங்கிய வீடுகள் வாழத் தகுதியற்றது என்கிற உண்மையை தங்கள் கண்முன்னே கண்டுணர்ந்த தருணங்கள் அவர்களது வாழ்நாளின் மிகத் துயரமான சம்பவமாக நினைவில் நிற்கக்கூடும்.
மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து ஓரிரு நாட்களில் சென்னை மாநகரம் மீண்டு விடும் என நம்பலாம். மீண்டும் தனது பரபரப்பான வாழ்க்கை முறைக்கு திரும்பி விடும். இழந்த உடமைகளையும், சொத்துக்களையும் மீட்பதற்கு இன்னும் சில மாதங்கள்/வருடங்கள் வரை மக்கள் தங்கள் உழைப்பை தர வேண்டி இருக்கும்.
ஏற்கெனவே பெய்த மழையில் தொழில்துறையினர் என்ன வகையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர் என்பதை அறிவதற்காக இடைவிடாது மழை பெய்துகொண்டிருந்த டிசம்பர் 1 ஆம் தேதி காலை அம்பத்தூரில் இருந்தேன். ஆனால் அந்த தொழிற்பேட்டையின் எந்த பக்கமும் செல்ல முடியாதவாறு மழை ஓயாமல் பெய்து கொண்டே இருந்தது. தொழிற்பேட்டை பேருந்து நிலையம் முதல் நான்கு பக்கமும் மழை வெள்ளம் ஆறுபோல ஓடிக் கொண்டிருந்து.
அம்பத்தூரில் இயங்கும் தொழில்நிறுனங்களின் சங்கமான `அய்மா’ (AMBATTUR INDUSTRIAL ESTATE MANUFACTURER'S ASSOCIATION ) அலுவலகம் செல்ல முடியவில்லை. எப்போதும் தொழிலாளிகள் பரபரப்பாக இருக்கும் தொழில் நிறுவனங்களின் வாசல்களில் காவலாளிகள் உணவுக்கும் வழியில்லாமல் மழையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
இடுப்புளவு தண்ணீரில் முடிந்த அளவு இயந்திரங்களை பாதுகாக்க போராடிக்கொண் டிருந்தனர் தொழிலாளர்கள். சாலையில் ஓடும் தண்ணீரில் எங்கெங்கோ நிறுவனங்களிலிருந்து அடித்துக் கொண்டு வரப்பட்ட பேரல்களும் பேன்களும், டயர்களும் மிதந்து சென்று கொண்டிருந்தன.
தீபாவளிக்கு பிறகு பெய்த மழையால் ஏற்பட்ட உற்பத்தி முடக்கத்திலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் டிசம்பர் 1-ம்தேதி மற்றும் 2-ம் தேதி பெய்த தொடர் மழை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு மழை வந்தால் அவர்கள் நிரந்தரமாக முடங்கிவிடும் அபாயமுள்ளது.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை 1,440 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுமார் 8,000த்துக்கும் மேல் உள்ளன. அம்பத்தூர் எஸ்டேட்டை ஒட்டிய பகுதிகளான பாடி, முகப்பேர், கொரட்டூர், பட்டரைவாக்கம், வில்லிவாக்கம் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளும் அம்பத்தூரை உலக அளவிலான சந்தையில் போட்டியிட வைத்துள்ளது.
மழை சற்றே நின்ற அடுத்த நாளும் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு சென்றிருந்தேன். அம்பத்தூர் தொழில்நிறுவனங்களில் சங்கமான அய்மா-வின் தலைவர் ராஜூவை அவரது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றேன்.
``இந்த மழை எங்களுக்கு உற்பத்தி இழப்பை மட்டும் கொண்டுவரவில்லை. இந்த மழையினால் உற்பத்தி இழப்பு ஏற்படும் என்று எங்களது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டால் தொழில் கைவிட்டு போய்விடும்.
தற்போதுவரை சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் பொருளாதார இழப்பை தொழிற்பேட்டை சந்தித்துள்ளது என்று குறிப்பிட்டவர், கள நிலவரங்களை உடனடியாக பெற முடியாததால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை’’ என்றும் குறிப்பிட்டார். இங்குள்ள தொழில் நிறுவனங்களில் சுமார் 70 சதவீத நிறுவனங்கள் ஆட்டோ மொபைல்துறை சார்ந்த உதிரிபாக தயாரிப்புகளில் உள்ளன.
லூகாஸ், சுந்தரம் பாசனர்ஸ், வீல்ஸ் இந்தியா, அசோக் லேலண்ட் நிறுவனங்களை நம்பி தொடங்கப்பட்ட இந்த தொழிற்பேட்டை அடுத்தடுத்த பல கார் உற்பத்தி நிறுவனங்களில் வருகையால் ஆசிய அளவில் மிக முக்கியமான தொழில் பேட்டையாக மாறியது.
சென்னை கார் உற்பத்தி மையமாக உலக அளவில் வளர வளர தொழிற்பேட்டையை நம்பி பல ஆயிரம் சிறு பட்டரையாளர்கள் உருவாகியுள்ளனர். இப்போது இங்குள்ள நிறுவனங்கள் மட்டுமல்ல, உலக அளவில் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்யும் ஒரு நடுத்தர நிறுவனத்தை நம்பி சுமார் 40 சிறுதொழில் நிறுவனங்கள் பிழைக்கின்றன.
ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்த அனுபவத் தை வைத்து சிறு தொழில்களை தொடங்கியவர்கள் தவிர, இதற்கென்றே உயர்கல்வி முடித்துவிட்டு வங்கி கடனில் தொழில் தொடங்கியவர்களும் இங்கு உள்ளனர்.
தற்போது வீல்ஸ் இந்தியா, டிவிஎஸ், ஹூண்டாய், மஹிந்திரா, பிஎம்டபிள்யூ, நிசான் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த நிறுவனங்களுக்கு வெளிமாநிலங் களிலும், வெளிநாடுகளிலும் உற்பத்தி ஆலை கள் உள்ளன. அவற்றுக்கும் இங்கிருந்து தான் உதிரி பாகங்கள் செல்கிறது.
தவிர இங்கு உற்பத்தி ஆலைகள் இல்லாத ஸ்கானியா போன்ற நிறுவனங்களுக்கும் உதிரிபாகங்களை அனுப்புகிறார்கள்.
எனவே சென்னையில் உற்பத்தி நிறுத்த பட்டாலும், வெளிமாநில / நாடு ஆலைகளின் தேவைகளுக்கு உதிரிபாகங்கள் அனுப் பியாக வேண்டும். அப்படி அனுப்பவில்லை என்றாலோ, தாமதமானாலோ ஆர்டர்கள் கைவிட்டு போய் விடும். தவிர ஆர்டர்களை வேறு மாநில தொழிற் பேட்டைகளுக்கு மாற்றிவிடுவார்கள். இதுதான் இங்குள்ள தொழில் நிறுவனங்களுக்கு இப்போதுள்ள பெரும் பயம்.
கிளைம் கிடைப்பதில் சிரமம்
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் படும் ஒரு இயந்திரத்தின் விலை தோராயமாக ரூ.30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய். பெரும்பாலான நிறுவனங்களில் இந்த இயந்திரங்கள், பாய்லர்கள் உள்ளிட்ட அனைத்தும் வெள்ள நீருக்குள் மூழ்கி செயலிழந்துள்ளன. இவற்றை திரும்ப இயக்க முடியாது.
இவை காப்பீடு செய்யப்பட்டிருந்தாலும், இதை கிளைம் செய்வதிலும் சிரமங்கள் இருக்கிறது என்கிறார்கள். கிளைம் கேட்டு விண்ணப்பித்தால், பழைய இயந்திரத்தை எடுத்துச் செல்லும் காப்பீடு நிறுவனங்கள் சோதனைக்கு பிறகு, இயங்கும் நிலையிலான இயந்திரங்களை திருப்பி கொடுத்து விடுகின்றனவாம். இதற்கு ஒரு மாதத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டும். இதற்கிடையில் புதிய இயந்திரத்தை வாங்கியிருந்தால் நஷ்டம்தான்.
தொழிலாளர் ஆணையம்
நிறுவனம் மூடப்பட்டிருந்த நாட்களுக்கு ஏற்ப தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்து வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்கின்றனர்.
வங்கிகள்
தொடர்ச்சியான உற்பத்தி முடக்கம், முதலீடுகள் இழப்பு, மீள் செலவுகள், ஆர்டர்கள் கைவிட்டு போவது என கடும் நெருக்கடிகள் உள்ளன. வங்கியாளர்கள் இதை புரிந்து கொண்டு எங்களுக்கு உதவ வேண்டும் என எதிர் பார்க்கின்றனர். சலுகைகள் கொடுக்கவில்லை என்றாலும், கடனுக்கான வட்டி மற்றும் ஓடி போன்றவற்றில் சில மாதங்களாவது நெருக்கடி கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
வீடு + தொழில் நிறுவனம் + ஊழியர்கள்
ஒரு தொழில்நிறுவன உரிமையாளரின் வீட்டிலும் வெள்ள நீர் புகுந்துவிட்டது. தொழில கத்திலும் தண்ணீர். வீட்டிலிருப்பவர்களை பாதுகாப்பாக இடம் மாற்றுவது ஒருபக்கம் என்றால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந் திரங்களை பாதுகாக்க வேண்டிய நெருக்கடி இன்னொரு பக்கம். இதற்கிடையில் மழையில் சிக்கிக் கொண்ட தங்களது தொழிலாளர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இப்படியான பல முனை தாக்குதல்களோடு பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் போராடிக் கொண்டிருந்தனர் பல தொழில்முனைவோர்கள்.
சமூக பொறுப்புணர்வு
அம்பத்தூர் தவிர, பட்டரைவாக்கம், மண்ணூர் பேட்டை, முகப்பேர் என சுற்று வட்டார பகுதி மக்களும் உணவு தண்ணீர் இன்றி தவித்தனர். தொழிற்பேட்டையை சார்ந்து இயங்கும் தினசரி கூலி தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், தொழிலாளர்களுக்கு உணவுகளை வழங்கும் கையேந்தி பவன்கள் என பல உதிரி தொழிலாளர்கள் இங்கு உள்ள னர். அவர்களுக்கான உணவு மற்றும் பிற தேவைகளுக்கும் தொழில்முனைவோர்கள் களத்தில் நின்றனர்.
என்ன காரணம்
அம்பத்தூர் தொழிற்பேட்டை மிக மோசமாக பாதிக்கப்பட்டதற்கு காரணம் அம்பத்தூர் ஏரியின் உபரி நீர் வெளியேற சரியாக திட்டமிடாததுதான். அம்பத்தூர் ஏரியின் உபரி நீர் கொரட்டூர் ஏரியை வந்தடைந்து அங்கிருந்து உபரி நீர் ரெட்டை ஏரிக்கு செல்லும். இதுதான் நீர்வழிப் பாதையாக இருந்தது. வழியில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், பொதுப்பணித்துறை இதற்கு மூடிய கால்வாய் திட்டத்தை முன்வைத்துள்ளது.
அம்பத்தூர் ஏரியிலிருந்து மூடிய கால்வாய் வழியாக கொரட்டூர் ஏரிக்கு உபரி நீரை கொண்டு செல்வதுதான் அந்த திட்டம். ஆனால் இதை முழுமையாக நிறைவேற்றாமல் பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே திறந்த கால்வாயாக மாற்றிவிட்டனர். ஏற்கெனவே இருந்த ஆக்கிரமிப்புகளோடு இப்போதைய ஆக்கிரமிப்புகளும் சேர, வெள்ள நீர் வெளியேற வழியில்லாமல் தொழிற்பேட்டை பகுதிக்குள் புகுந்துவிட்டது. இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். மேலும் கொரட்டூர் ஏரி, ரெட்டை ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றினால்தான் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இது ஒரு தொழிற்பேட்டையின் துயரம் மட்டுமே. சென்னையின் பல தொழிற்சாலை களும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. ஒரு தொழிற்பேட்டையின் அழிவு என்பது பல ஆயிரம் தொழிலாளிகளின் தற்கொலைக்கு சமமானது. அரசு உடனடியாக தலையிட வேண்டிய தருணம் இது.
பரிதவிப்பில் வெளிமாநில தொழிலாளிகள்
இங்குள்ள நிறுவனங்கள் வெளிமாநில தொழிலாளர்களை வாடகை வீடு எடுத்து தங்க வைத்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இவர்களுக்கு வேலை இல்லை என்றாலும் தங்குமிட வாடகை, உணவு, ஊதியம் போன்றவற்றை தொழில் நிறுவனங்கள் கொடுத்து கொண்டிருக்கின்றன. இதை செய்யவில்லை என்றால் ஊருக்கோ அல்லது வேறு தொழில்களுக்கோ சென்று விடுவார்கள். நிறுவன பாதுகாப்பில் இல்லாத தொழிலாளிகள் வேலைக்கு திண்டாடுகிறார்கள்.
ஆவணங்கள் தண்ணீரில்...
வருமான வரி ஆவணங்களை தொழில் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 7 வருடங்கள் வைத்திருக்க வேண்டும். பொதுவாக இங்குள்ள பல நிறுவனங்கள் தங்களது தொழிலகத்திலேயே சிறிய இடம் ஒதுக்கி அலுவலகமாக வைத்துள் ளனர். இந்த ஆவணங்கள், கணினி உள்ளிட்ட அலுவலக உபகரணங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வருமான வரித்துறையினர் இதை பரிசீலிக்க வேண்டும் என கோருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
40 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago