சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றெல்லாம் இளவயது முதலே சொல்லிச் சொல்லி பெண்களை வீடுகளிலேயே மட்டம் தட்டி வளர்ப்பது நம்முடைய ரத்தத்தில் ஊறியிருக்கிறது. உலக அளவில் தாய்வழிச் சமுதாயமாக இருந்த மனித சமூகம், தந்தைவழிச் சமூகமாக மாறிய பிறகு ஆணாதிக்கச் சமூகமாக உருவெடுத்தது. இதனால் என்ன குடிமுழுகிவிட்டது என்று கருதுபவர்களும் அதிர்ச்சி அடையும் வகையில் ‘மெக்கென்ஸி உலக நிறுவனத்தின்’ (எம்.ஜி.ஐ) புதிய ஆய்வு முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாப கரமானது. அதிலும் இந்தியாவில் ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தியிலேயே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆண்களுக்குச் சமமாகப் பெண்களையும் நடத்தத் தவறுவது சமூக, கலாச்சார கண்ணோட்டங்களில் மட்டுமே அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இதன் பொருளாதார விளைவுகள் மலைக்க வைக்கின்றன.
12 லட்சம் கோடி டாலர்கள்
இப்போது உலகின் எல்லா நாடுகளிலும் உழைக்கும் வயதில் உள்ளவர்களில் சரி பாதிப்பேர் பெண்கள். அவர்களை ஊதியம் அதிகம் கிடைக்கும் துறையில் பணிபுரியவிடாமலும், பணிபுரியும் துறைகளிலும் குறைந்த ஊதியம் கொடுத்தும் வஞ்சிக்கிறது சமுதாயம். பெண்கள் அவர்களுடைய முழு பணித்திறனுக்கு ஏற்ற ஊதியத்தைப் பெற முடியாமல் பல்வேறு வழிகளில் தடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாடும் தங்களுடைய பிராந்தியத்தில் வேகமாக வளரும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஈடாக தாங்களும் வளர்ந்தால் 2025-ல் 12 லட்சம் கோடி டாலர்கள் மதிப்புக்கு அதாவது இப்போதிருப்பதைவிட 11% அதிகமாக ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை உயர்த்திக் கொள்ள முடியும். ஆண்களுக்கு இணையாக உழைக்கும் பெண்களுக்கு, ஆண்களுக்குத் தரப்படும் அதே ஊதியம் தரப்பட்டால் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு மேலும் 28 லட்சம் கோடி டாலர்கள் மதிப்புக்கு அதாவது இப்போதிருப்பதைவிட 26% அதிகரித்துவிடும். அதாவது சராசரி உற்பத்தி அதிகரிப்பைப்போல இரண்டு மடங்கு பெருகிவிடும். இந்தியாவில் 0.7 லட்சம் கோடி டாலர்கள், அதாவது 16% அதிகரிக்கும்.
15 அடையாளங்கள்
ஆண்களையும் பெண்களையும் சமமாக நடத்த வேண்டிய அல்லது பார்க்க வேண்டிய 15 பொதுவான அடையாளங்களை மெக்கின்ஸி நிறுவனம் பட்டியலிட்டது. 95 நாடுகளில் அந்த அடையாளங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்த்ததில் 40 நாடுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக இருப்பது தெரியவந்தது.
இந்த 15 அடையாளங்களைப் பொதுவாக 4 பிரிவாகப் பிரித் துள்ளனர். 1. வேலையில் சமத்து வம், 2. பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்புள்ள துறைகள் அல்லது அத்தியாவசியத் துறை கள், 3. சட்டப்பூர்வமான பணிப் பாதுகாப்பு உள்ள துறைகள் அல்லது அரசியல்ரீதியாக பாதுகாப்பு தேடக்கூடிய துறைகள், 4. உடல் ரீதியாகத் தீங்கு விளைவிக்காத வேலைகள் அல்லது சுயேச்சையாகச் செயல்பட வாய்ப்புள்ள வேலைகள் என்று இவை 4 பெரும் பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது.
ஆடவர்களுக்கு நிகராக பெண் களுக்கும் பணிப்பாதுகாப்பு, ஊதியம், படிகள், சலுகைகள், வேலை நேரம் போன்றவை தரப்பட்டால் உற்பத்தி அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கும் உற்பத்தியின் உலக அளவிலான மதிப்பு, ஓராண்டில் சீனாவும் அமெரிக்காவும் மொத்தமாக உற்பத்தி செய்யும் பொருளாதார மதிப்புக்குச் சமமாக இருக்கும்.
இன்னொரு முறையிலும் கணக் கிடப்பட்டது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்று எல்லா கண்டங்களிலும் உள்ள நாடுகள் ஆண்களுக்குச் சமமாக பெண்களுக் கும் ஊதியம், படிகள் போன்றவற்றை அளித்து, தங்கள் பகுதியில் வேகமாக வளரும் நாட்டுக்கு இணை யான பொருளாதார வேகத்தைக் கடைப்பிடித்தால் ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடு களின் ஓராண்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தி மதிப்புக்கு இணையாகத் தயாரிக்க முடியும். அவற்றின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு மேலும் 10% அதிகரிக்கும்.
நல்ல நிறுவனங்கள், அதிக ஊதியம் தரும் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு வேலைகளைத் தருவதில்லை. அப்படியே தந்தாலும் அவர்களை அதிக பொறுப்புள்ள பதவிகளுக்கு நியமிப்பதில்லை. பொதுவாக அதிக நேரம் செய்ய வேண்டிய வேலை, சலிப்பு ஏற்படுத்தும் வேலை, உடல் நலனுக்கு ஆபத்து விளைவிக்கும் வேலை, இழிவு என்று கருதத்தக்க வேலை, முக்கியத்துவம் அற்ற வேலை போன்றவற்றுக்கே பெண்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ உதவி, கைக்குழந் தைகளைப் பராமரித்துக்கொள் ளும் வசதி, போக்குவரத்து வசதி, காப்பீட்டு வசதி போன்றவை செய்து தரப்படுவதில்லை. தொழிற்சங் கங்கள் உள்பட அனைத்து இடங்களி லும் பெண்களுக்கு அடையாளத்துக் குத்தான் பிரதிநிதித்துவம் தரப்படு கிறது. ஊதிய வெட்டு, பணியிழப்பு, அதிக வேலை நேரம், அதிக பணிப் பொறுப்பு போன்றவை பெண்கள் மீது சுமத்தப்படுகிறது.
பெண்களுக்குச் சட்டப்பூர்வமாக உள்ள பணிப்பாதுகாப்பு, சட்டப்பூர் வமான சலுகைகள், உரிமைகள் எடுத்துச் சொல்லப்படுவதே இல்லை. பெண்களின் புகார்கள், ஆலோசனை களைக் கேட்பதே இல்லை. பெண் களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் நிறுவனங்கள் பெரும் பாலும் அவர்களை எந்த வேலைக்குச் சேர்த்துக் கொண்டனவோ அதே வேலையிலேயே நீண்டகாலம் வைத்து அவர்களுடைய ஆற்றலை வீணாக்குகின்றன. அவர்களுக்குக் கல்விப் பயிற்சி, தொழில்திறனை மேம்படுத்திக்கொள்ளும் பயிற்சிகளை நிறுவன வாயிலாக அளிப்பதே இல்லை.
பெண்களின் நிலை மேம்பட எல்லா துறைகளிலும் 6 விதமான தேவைகள் உள்ளது. உற்பத்தித் திறன் அதிகரிக்க நிதி ஊக்குவிப்புகளும் ஆதரவும், தொழில்நுட்பமும் கற்றுத் தரப்பட வேண்டும். பணிபுரிவதற்கேற்ற அடித்தளக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்க உதவவும், திறமையை வளர்த்துக் கொள்ள பயிற்சியும் வாய்ப்பும் அளிக்க வேண்டும். அவர்களுடைய தயக்கங்களையும் அச்சங்களையும் போக்கி அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக்கி முன்னேறச் செய்ய வேண்டும். அதற்கேற்ப சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அரசுத்துறையில் வேலைவாய்ப்புகள் குறைவு என்பதால் தனியார் துறையில் இதை முனைப்பாகச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர் நலத்துறையில்கூட பெண் தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்த தனிப் பிரிவுகளோ அதிகாரிகளோ கிடையாது. சமீபகால மாகத்தான் பாலியல் சீண்டல்கள் பற்றிய புகார்கள் அதிகரித்துள்ளதால், அத்தகைய புகார்களை உடனுக்குடன் விசாரிக்கவும் நடவடிக்கை எடுக் கவும் தனிப் பிரிவுகள் தொடங்கப் பட்டுள்ளன.
ஒரு நாட்டில் ஆண்களைவிட பெண்கள் மோசமாக நடத்தப்படு கின்றனர் என்பதை அறிய பின்வரும் அம்சங்கள் உதவுகின்றன. 1. பெண் சிசுக்களைக் கருவில் அழிப்பது, 2. பெண் குழந்தைகளின் இறப்பு, 3. பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளில் 1,000 ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளின் விகிதம், 4. ஆண் பெண் இடையிலான விகிதாச்சாரம், 5. பெண்களின் எழுத்தறிவு, 6. மகப்பேறின்போது தாயின் மரண விகிதம்.
இதில் முதலாவது அம்சப்படி, ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. 2001-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் குழந்தைகள் இருந்தன. 2011-ல் இதுவே 919 ஆகக் குறைந்துவிட்டது. 2011 கணக்கெடுப்புப்படி ஆண் களின் எழுத்தறிவு 82.14% ஆகவும் பெண்களின் எழுத்தறிவு 65.46% ஆகவும் இருக்கிறது. இந்த இடைவெளி அதிகம். மற்ற அம்சங்களிலும் பெண்களின் நிலை வருந்தும்படியாகவே இருக்கிறது.
தொழில், வர்த்தகம், சேவைப் பிரிவு என்ற மூன்றிலுமே பெண்களின் பங்களிப்பு அதிகம். ஆனால் விவசாயக் கூலியானாலும் வீடு கட்டும் தொழிலாளியானாலும் துப்புரவு வேலை செய்தாலும் செவிலியர், ஆசிரியர், அலுவலக ஊழியர் என்றாலும் பெண்களுக்குக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. இதற்கு ஏற்க முடியாத மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. இது பெண்களுக்கு உபரி வருமானம் என்று. உழைப்பு, வேலை என்று வரும்போது ஆண்களைவிட அதிகம் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு, கூலி என்று வரும்போது குறைத்துக் கொடுப்பது இரட்டைச் சுரண்டலாகும். இதைத்தான் மெக்கின்ஸி நிறுவன ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago