கிரிப்டோகரன்சி ஏன் தடை செய்யப்பட வேண்டும்?

By ஜெ.சரவணன்

saravanan.j@hindutamil.co.in

மொபைலே உலகமாகிவிட்ட இன்றைய சூழலில் சமீபகாலமாக டிஜிட்டல் யுகத்தினரிடம் அதிகம் புழங்கும் சொல்லாக ‘கிரிப்டோகரன்சி’ இருக்கிறது. தற்போது அடிக்கடி செய்திகளிலும் அடிபட்டு சாமான்யமக்களையும் சென்றடைய ஆரம்பித்திருக்கிறது. கம்ப்யூட்டர் கரன்சியான இந்த கிரிப்டோகரன்சியை அங்கீகரிக்க வேண்டும்என உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

ஆனால், இந்த கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அமெரிக்கா உட்பட பல வளர்ந்த நாடுகள் கூட சட்டபூர்வமாக அங்கீகரிக்க தயக்கம் காட்டுகின்றன. மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் தற்போது செயல்பாட்டில் இருக்கிறது. விரைவில் தனியார் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை அறிவிக்கவும், ரிசர்வ் வங்கியின் பிரத்யேக கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

கிரிப்டோகரன்சியை ஏன் தடை செய்ய வேண்டும், இதை அனுமதிப்பதனால் என்ன பிரச்சினை, எதற்காக ரிசர்வ் வங்கி பிரத்யேக டிஜிட்டல் கரன்சியைக் கொண்டுவர வேண்டும், அதற்கான அவசியம் என்ன போன்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கெல்லாம் பதில் தேடுவதற்கு முன், கிரிப்டோகரன்சியின் பின்னணியைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

ஒன்றை கொடுத்து இன்னொன்றை பெறுவது என்பது வர்த்தகத்தின் அடிப்படை. பழங்காலத்தில் பண்டங்களை மாற்றி வர்த்தகம் செய்தனர். அதன்பிறகு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அது மெல்ல வளர்ச்சி அடைந்து ஒவ்வொரு நாடுகளும் தனித்தனி நாணயங்களையும் அதற்கான மதிப்பையும் தங்களிடம் உள்ள தங்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்தனர். தற்போது சர்வதேச வர்த்தகத்துக்கான பெரும்பான்மை பரிமாற்ற நாணயமாக அமெரிக்க டாலர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி உலகத்தைப் புரட்டி போட்ட பிறகு, உலக நாணயங்களின் மதிப்பு என்பது நிலையற்றதாகத் தோன்றியதால்சதோஷி நாகமோடோ என்ற பெயரில் அடையாளம் தெரியாத நபர் 2009ல் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் பிட்காயின் என்ற டிஜிட்டல் கரன்சியை கம்ப்யூட்டரில் உருவாக்குகிறார். டிஜிட்டல் உலகில் களமாடும் புதிய தலைமுறையினர் சாதாரணமாக விளையாடும் வீடியோ கேமிலேயே நாணயங்களைக் குவிப்பதையும், மதிப்பெண்களை அள்ளுவதையும் சாகசமாகக் கொண்டாடிவருகின்றனர்.

அவர்களுக்கு இதுபோன்ற டிஜிட்டல் கரன்சி முறை புதியதாகவும் கவர்ச்சியானதாகவும் இருக்கவே விரைவிலேயே பிட்காயின் பிரபலமாகிறது. பல இடங்களில் கிரிப்டோகரன்சிகளைக் கொடுத்தால் பொருட்களும், சேவைகளும் கிடைக்கும்படியான சூழலும் உருவானது. இதனால் கிரிப்டோகரன்சியின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் 8000க்கும் மேலான கிரிப்டோகரன்சிகள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. கிரிப்டோகரன்சிகளின் இன்றைய சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலரைக் கடந்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சிகளில் முதன்முதலில் அறிமுகமான பிட்காயின் மதிப்பு நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. கிரிப்டோகரன்சிகளில் இரண்டாம் இடத்தில் உள்ள 2015ல் அறிமுகமான ஈதரம் மதிப்பு 10 மடங்கு உயர்ந்திருக்கிறது. நான் பெரியவனா, நீ பெரியவனா என்பதுபோல் இவை இரண்டுக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது. கிரிப்டோகரன்சிகளின் இந்த வளர்ச்சி பல இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. இந்திய ரூபாயில் ஒரு பிட்காயினின் மதிப்பு ரூ.37 லட்சம். ஈதரம் மதிப்பு ரூ.1.37 லட்சம். நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கான தளத்தை உருவாக்குவதில் மிகத் தீவிரமாக இருக்கின்றன.

இதற்காக பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய தயாராக உள்ளன. கிரிப்டோகரன்சி பற்றி கேள்விப்படும் முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்ய ஆர்வமாய் இருக்கிறார்கள்.இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள காயின்ஸ்விட்ச் என்ற கிரிப்டோகரன்சி ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆறு மாதங்களிலேயே 20 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ள சூழலில் இந்தியாவில் மட்டும் இதற்கு தடை விதித்தல் சரியான முடிவல்ல என்றும் ஒரு யுகத்தின் மகத்தான மாற்றத்தை இது கைவிடுவதாகிவிடும் என்றும் சொல்கிறது ஒருதரப்பு.

முக்கியமாக கிரிப்டோகரன்சிகளை அரசுகள் தடை செய்ய விரும்பக் காரணம் டிஜிட்டல் கரன்சியின் ஆதிக்கம் அதிகரித்தால் அதனால் நாட்டின் நாணய மதிப்பும் நாணயத்துக்கான அவசியமும் கேள்விக்குறியாகும் என்பதனால்தான். மேலும் ஒரு நாட்டின் நாணயம் என்பது பரிவர்த்தனைகளுக்கு அவசியமானதாக இருக்கிறது. நாணயத்துக்கான மதிப்புக்கு அந்தந்த அரசுகள் உத்தரவாதம் அளிக்கின்றன. ஆனால், கிரிப்டோகரன்சி எல்லா பரிவர்த்தனைகளிலும் எல்லா இடங்களிலும் செயல்படுத்த முடியும் என்ற நிலை வந்தால் நாணயத்துக்கான தேவை குறைய ஆரம்பிக்கும்.

இதனால் நாணயத்தின் மதிப்பும் சரிய வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. அதன்மூலம் அரசின் அதிகாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த கிரிப்டோகான்சி யார் என்றே தெரியாத நபர் மூலம் கம்ப்யூட்டரில் உருவான கரன்சி. தங்கம், வெள்ளி போல சுரங்கத்திலிருந்து உருவானதல்ல. இதற்கு எந்த வடிவமும் இல்லை. இதன் மதிப்பும் நிரந்தரம் இல்லை. தங்கம் இருப்பதன் அடிப்படையில் ஒரு நாட்டின் நிதிநிலை, நாணயத்தின் மதிப்பு ஆகியவற்றை வரையறுக்க முடிந்தது. தங்கம், வெள்ளி போன்றவற்றுக்கு, அவற்றுக்கென ஒரு பரிவர்த்தனை மதிப்பு இருக்கிறது. இது காற்றில் அப்படியே மறைந்துவிடப் போவதில்லை. ஆனால் கிரிப்டோகரன்சி அப்படியல்ல, எப்போது வேண்டுமானாலும் காணாமல்போகலாம். இதன் நம்பகத்தன்மை மிகவும் கண்மூடித்தனமானது.

மேலும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் பிரபலமாக இருக்க காரணமே அதிலிருக்கும் ரகசியத்தன்மைதான். யார் உருவாக்குகிறார் என்பது தெரியாது, யார் அனுப்புகிறார், யார் பெறுகிறார் என்பது எதுவும் தெரியாது. இதனால் இதனை நாணயமாகக் கருதுவதா அல்லது ஒரு கமாடிட்டியாக கருதுவதா என்பதில் தெளிவில்லை.

எப்படி இதன் பரிவர்த்தனையை வரி நடைமுறைக்குள் கொண்டுவருவது என்ற குழப்பமும் நீடிக்கிறது. மேலும் இது கறுப்புப் பணத்தை புழக்கத்தில் கொண்டுவரும் வழிகளில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. வங்கிகள் மூலமான பரிவர்த்தனைகளில் முறைகேடான, சட்ட விரோதமான பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது என்பதால் இதுபோன்ற வழிகள் மூலம் அவற்றை செயல்படுத்திவருகின்றனர். இதன் காரணமாகவும் இதற்கு தடை விதிக்க அரசுகள் விரும்புகின்றன.

தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு அனுமதி அளித்தால் அது பற்றி தெரியாதவர்களும் அதில் முதலீடு செய்ய வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கும் ஆசை பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சி வெளியிடுபவர்கள் லாபம் பார்ப்பார்கள். கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு லட்சத்தில் இருந்தாலும், அதில் ரூ.100 கூட முதலீடு செய்ய முடியும் என்பதால் அதைப் பற்றி போதுமான அறிவும் விழிப்புணர்வும் இல்லாதவர்கள் அதில் பணத்தைப் போட்டுவிட்டு பறிகொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

2018ல் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை செயல்படுத்துவது குறித்து விவாதம் எழுந்தபோதே ரிசர்வ் வங்கி கடுமையாக அதை மறுத்தது. கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைச் செயல்படுத்த தடை விதித்தது. இதை எதிர்த்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவே நீதிமன்றம் 2020 மார்ச்சில் ரிசர்வ் வங்கியின் தடையை நீக்கி உத்தரவிடுகிறது. தற்போது நாட்டில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் ஜோராக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இதைக் கட்டுப்படுத்துவதில் அரசு தீர்மானமாக உள்ளது. தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை அறிவிக்கவும், மத்திய வங்கியின் சார்பிலேயே டிஜிட்டல் கரன்சி ஒன்றை உருவாக்குவதையும் தீர்வாகத் திட்டமிட்டுள்ளது.

ஆனால், ரிசர்வ் வங்கி கொண்டுவரும் டிஜிட்டல் கரன்சியின் அவசியமும் நோக்கமும் என்ன என்பது இங்கேபெரும் கேள்விக்குறி. இதுவரையிலான தனியார் டிஜிட்டல் கரன்சிகளின் வரவேற்பும் வளர்ச்சியும் அதன் ரகசியத்தன்மைக்காகத்தான் உருவாகியிருக்கிறது. அப்படியிருக்க அரசின் கண்காணிப்பில் இயங்கும் டிஜிட்டல் கரன்சிக்கு எப்படியான வரவேற்பு இருக்கும் என்பது முதல் கேள்வி.

வாலட்டுகளையும் டிஜிட்டல் கரன்சி என்றும் சொல்லலாம். வாலட்டுகள் பிரபலமாகக் காரணம் அவை வழங்கும் சலுகைகளும், தள்ளுபடிகளும். அவை இல்லாதபட்சத்தில் வாலட்டுகளில் பணம் இருப்பு வைப்பதையே மக்கள் விரும்புவதில்லை. அப்படியிருக்க அரசு கொண்டுவரும் டிஜிட்டல் கரன்சிக்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்பதும் தெரியாது. மேலும் அதன் பயன்பாடு என்ன, மதிப்பு என்ன, யாரெல்லாம் அதில் முதலீடு செய்யலாம் என்பது போன்ற பல கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன.

ரிசர்வ் வங்கி கொண்டுவரும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைக்கானதா அல்லது முதலீட்டுக்கானதா என்பதும் கவனிக்கத்தக்கது. முதலீட்டுக்கானது மட்டும்தான் எனில், ஏற்கெனவே அரசு வெளியிடும் கடன் பத்திரங்கள், இடிஎஃப் ஃபண்டுகள் போன்றவற்றுக்கும் இதற்கு என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது. அரசு வெளியிடும் கோல்டு பாண்டும் ஒருவகையில் டிஜிட்டல் கரன்சி மாதிரிதான். இப்படி பல குழப்பங்களும் சிக்கல்களும் உள்ள நிலையில் அரசு டிஜிட்டல் கரன்சியைக் கொண்டுவர முயற்சிப்பது சரியாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

தற்போதைய தனியார் கிரிப்டோகரன்சி சந்தையின் அழுத்தத்தின் காரணத்தினால் அரசாங்க டிஜிட்டல் கரன்சியை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறதோ என்றும் தோன்றுகிறது. தனியார் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை விதிப்பது சரியான முடிவுதான். அதேசமயம் அரசின் பிரத்யேக டிஜிட்டல் கரன்சிக்கான தேவை என்ன என்பதையும் பார்க்க வேண்டும். ரொக்க நாணயத்தின் புழக்கம் குறைந்து கேஷ்லெஸ் என்கிற இலக்கு எட்டப்படும்பட்சத்தில் அரசு கொண்டுவரும் டிஜிட்டல் கரன்சி உதவியாக இருக்கலாம். ஆனால், அதற்கான சூழல் வருவதற்கெல்லாம் இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்