விவசாயிகளின் நண்பரா மோடி?

By வ.ரங்காசாரி

“பெரிய நிறுவனங்களுக்கும் அந்நிய நிறுவனங்களுக் கும் தேவைப்படும் சலுகைகளை அடுத்தடுத்து வழங்குவதில்தான் அக்கறை காட்டுகிறார், அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காகத்தான் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார்” என்று பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டப்படுகிறது.

அது முழுக்க முழுக்க உண்மையல்ல. தொழில்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தினால்தான் விவசாயத்துறை, சேவைத்துறை போன்றவற்றிலும் வேலைவாய்ப்பு ஏற்படும் வருவாய் பெருகும் என்பதால் யாராக இருந்தாலும் தொழில்துறையைத்தான் முடுக்கி விட நினைப்பார்கள். அதில் தவறு காண முடியாது. விவசாயத் துறையில் வளர்ச்சி என்பது நீண்டகால திட்டமிடலும் உழைப்பும் தேவைப்படும் துறை. படிப்படியாகத்தான் அதை முன்னேற்ற முடியும்.

நைரோபி மாநாடு

தொழில்துறைக்கே தேவைப்படும் மூலப் பொருள்கள் பலவற்றைத் தருகிறது என்பதாலும், கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பைப் பெற்று வாழ்வதாலும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண உதவுவதாலும் வேளாண்துறை முக்கியத்துவம் பெறுகிறது.

சேவைத் துறைகூட விவசாய உற்பத்தி அதிகம் இருந்தால்தான் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இத்தகைய விவசாயத் துறைக்கு மோடி என்ன பங்களிப்பைச் செய்யப் போகிறார் என்பது இன்னும் 3 வாரங்களில் தெரிந்துவிடும். கென்யா தலைநகர் நைரோபியில் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும் உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) மாநாடு டிசம்பர் 15-ல் நடைபெறவிருக்கிறது. அதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மேற்கொள்ளும் விவசாயிகளின் நலன்களைக் காக்கும் நடவடிக்கைகள் எப்படி ஏற்கப்படப் போகின்றன என்று பார்க்க வேண்டும்.

2001-ல் தோஹாவில் உலக வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் தொடங்கின. வளரும் நாடுகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி தந்தன. ஆனால் சொன்னதற்கு மாறாக, பேச்சுவார்த் தையில் ஒப்புக் கொண்டவற்றுக்கு மாறாகத்தான் 14 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. நைரோபியில் நடக்கவிருக்கும் மாநாட்டில் இது மொத்தமாக குழி தோண்டி புதைக்கப்படலாம்.

தங்களுடைய விவசாயி களுக்குத் தரப்படும் மானியம் எதிலும் யாரும் கை வைத்துவிடாதபடிக்குக் காப்பாற்றுவதில் அமெரிக்காவும் பிற தொழில்வள நாடுகளும் வெற்றி பெற்றுவிட்டன. அத்துடன் மட்டுமல்ல, ஏற்கெனவே அளித்துவரும் மானியம் தவிர அவற்றை மேலும் அதிகரிக்கவும் அவை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அமெரிக்கா விவசாயிகளுக்குத் தரும் மானியம் நபர் வாரியாக 50,000 டாலர்கள். இந்தி யாவில் தரப்படுவதோ வெறும் 200 டாலர்கள்.

அக்டோபர் மாதம் புதுடெல்லியில் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட உச்சி மாநாடு நடந்தது. 2001-ல் நடந்த பேச்சில் ஒப்புக்கொள்ளப்பட்ட தோஹா வளர்ச்சி திட்டங்களின் அடிப்படை அம்சங்கள் நிறைவேற்றப்படாமல் அந்தப் பேச்சுவார்த்தையை அப்படியே கைவிடுவதற்கு நாம் ஒப்புக்கொள்ளக்கூடாது என்று ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களிடையே வலியுறுத்தினார் மோடி. உணவுப் பாதுகாப்புக்காக அரசே விவசா யிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்து முடைக்காலச் சேமிப்பாகக் கையிருப்பில் வைத்துக் கொள் வதையும் விவசாயத்தைப் பாதுகாக்க சிறப்பு செயலியக்கங்களை மேற் கொள்வதையும் கைவிட நாம் ஒப்புக் கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத் தினார்.

மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் குறைந்தபட்சக் கொள் முதல் விலை அல்லது ஆதார விலை என்பது உற்பத்திச் செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய அடக்கவிலை இல்லை என்றாலும் ஓரளவுக்கு அது விவசாயிகளுக்கு பற்றுக்கோடாக இருக்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் கூறுவது என்னவென்றால், எந்த வேளாண் பொருளுக்கும் அரசு அடிப்படை விலையை நிர்ணயிக்கக் கூடாது, சந்தைதான் அதை நிர்ணயிக்க வேண்டும் என்பதாகும். இது விவசாயிகளை மட்டுமல்ல நுகர்வோர்களையும் ஒருசேர வஞ்சிப்பதாகும். அரசு அறிவிக்கும் ஆதார விலை காரணமாக வியாபாரிகளால் அதைவிட விலை யைக் குறைத்து வாங்கிக்கொள்ள முடிவதில்லை. விளைச்சல் அதிக மாக இருக்கும்போது அல்லது எல்லா வயல்களிலும் அறுவடை நடக்கும்போது விலை சரிவதும் கேட்பு குறைவாக இருப்பதும் இயல்பானது. நுகர்வோரில் பெரும்பாலானவர்கள் ஏழையாக இருப்பதால் விளைச்சல் அதிகமாக இருக்கும்போது வாங்கி வீட்டில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாது.

மொத்த வியாபாரிகள், இடைத்தரகர்கள் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து, தேவை மிகும்போது நல்ல லாபத்துக்கே விற்க உதவும். இது நாளடைவில் விவசாயிகளால் விவசாயத்தைக் கைவிடும் நிலை மைக்குக் கொண்டு செல்லும். எனவேதான் வளரும் நாடுகள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றன.

பொது விநியோக அமைப்புகள் மூலம் (ரேஷன் கடைகள்) முக்கிய மான உணவு தானியங்களை நியாய விலைக்கு அரசு விற்பதால் விலை வாசி உயர்வு தடுக்கப்படுவதுடன் ஏழைகளாலும் வாங்கிப் பசியாற முடிகிறது. இவ்விரு அம்சங்களையும் தான் நீக்கிவிட வேண்டும் என்று உலக வர்த்தகப் பேச்சில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

விவசாயத்துக்கு உர மானியம், விதை மானியம், இலவச மின்சாரம், குறைந்தபட்ச ஆதரவு விலை, அரசின் நேரடி கொள்முதல் மையங்கள், ஈரப்பதம் அதிகம் இருந்தாலும் வாங்கும்படியான நீக்குப் போக்குகள் போன்றவை இருந்தும் விவசாயிகள் கடனில் உழன்று வறுமையில்தான் வாழ்கிறார்கள்.

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவித்து அரசே கொள்முதல் செய்யக்கூடாது, கொள்முதல் செய்வதை முடைக் காலக் கையிருப்புக்காகவும் பொது விநியோகத்துக்காகவும் அரசே வைத்துக்கொள்ளக்கூடாது என்பது தான் முக்கியமான ஆட்சேபங்கள்.

எல்லா தானியங்களும் அறுவடை யின்போதே சந்தைக்கு வந்துவிட்டால் சர்வதேச அளவில் விலை குறையும் என்று வாதிடுகின்றன. ஒரு வாதத்துக்கு இதை ஒப்புக்கொண்டாலும் அதை முழுக்க வாங்கி பணக்கார நாடுகள் தங்களுடைய தொழில்துறைக்குப் பயன்படுத்திக்கொள்ளத்தான் வழி வகுக்கும். பிறகு ஏழை நாடுகள் உணவு தானியங்களைப் பெற வேண்டும் என்றால் பணக்கார நாடுகள் நிர்ணயிக்கும் அதிக விலையைக் கொடுத்துத்தான் இறக்குமதி செய்து கொள்ள வேண்டும். மேலோட்டமாகப் பார்க்கும்போது சுதந்திர வர்த்த கத்துக்குச் சார்பாகத்தான் அவர்கள் பேசுகின்றனர் என்று தோன்றும்.

உலக நாடுகளுக்கிடையே வர்த்தகம் தடையில்லாமலும் சுதந்திர மாகவும் நடைபெற வேண்டும் என்பதற் காகத்தான் உலக வர்த்தக நிறுவனம் (டபிள்யு.டி.ஓ.) ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அந்த அமைப்பையே செயலிழக்க வைக்கும் வகை யில் அமெரிக்கா உள்ளிட்ட தொழில்வள நாடுகள் வெவ்வேறு பதாகைகளில் தங்களுக்குள் வர்த்தக உடன்படிக்கைகளைச் செய்துகொள்கின்றன. சுதந்திர வர்த்தகம் நடைபெறாதபடிக்குப் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வளரும் நாடுகளின் பொருள்களை நிராகரிப்பதே வளர்ந்த நாடுகள்தான்.

இந்தச் சூழலில் சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்குள் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொண்டு தொழில்வள நாடுகளின் சுயநல நோக்கமுள்ள முடிவுகளையும் வழிகாட்டல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும். அறிவுசார் சொத்துரிமையைக் காப்பது உள்பட அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) போல உலக வர்த்தக அமைப்பையும் தங்களுக்குக் குற்றேவல் செய்யும் அமைப்பாக மாற்றவே அமெரிக்காவும் தொழில்வள நாடுகளும் முயல்கின்றன. அவற்றின் சதிகளை முறியடிக்க வேண்டும்.

இந்திய மக்கள் தொகை 125 கோடிக்கும் மேல். அதில் சுமார் 60% பேர் விவசாயத்தையே நம்பி யிருக்கின்றனர். சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களை விட வேலைக் காக அதை நம்பியிருப்பவர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். அமெரிக்கா முழுக்க வலைபோட்டுத் தேடினாலும் மொத்தமே 25,000 (பெரு) விவசாயிகள்தான் கண்ணுக்குத் தெரிகின்றனர். இவர்களுடைய நலனைக் காக்க இடைவிடாமல் பாடு படும் அமெரிக்காதான், இந்திய விவசாயிகளைச் சந்தை பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடச் சொல்கிறது.

10 கோடி மக்களைக் கொண்ட பிஹாரில் விவசாயிகள் அதிலும் ஏழைகள் அதிகம். அங்கே சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் முடிந்து விட்டது. முடிவைப்பற்றி இங்கே விவாதிக்க வேண்டாம். அடுத்து அசாம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம் ஆகியவற்றில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இங்கெல்லாம் கணிசமான எண்ணிக் கையில் விவசாயிகள் இருக்கிறார்கள். சர்வதேச அரசியல் உள்ளூர் அரசியலை ஆட்டிப்பார்க்கக்கூடியது. மோடி இதற்கு இடம்தரக்கூடாது.

- rangachari.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்