riyas.ma@hindutamil.co.in
ஆண்டு 2015. இரு இளைஞர்கள். இருவரும் ஒரே கல்லூரி. அதில் ஒருவன் படிப்பு முடித்துவிட்டு, தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராக சேர்கிறான். அவனுக்கு மாத ஊதியம் 15,000 ரூபாய். ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவனுடைய ஊதியம் 18,000 ரூபாய். மற்றொரு, இளைஞன் கல்லூரி முடித்துவிட்டு மென்பொருள் துறையில் பணிக்குச் சேர்கிறான். தொடக்கத்தில் அவனுடைய மாத ஊதியம் 25,000 ரூபாய். ஐந்து வருடத்துக்குப் பிறகு தற்போது அவனுடைய மாத ஊதியம் 1.5 லட்சம் ரூபாய்.
ஒரே கல்லூரி, ஒரு பாடப் பிரிவு. இருவரும் சம அளவு திறன் கொண்டவர்கள். ஆனால், ஒருவனின் ஊதியம் 18 ஆயிரம் ரூபாய். மற்றொருவனின் ஊதியம் 1.5 லட்சம் ரூபாய். எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு? இந்த ஏற்றத்தாழ்வு, அவர்கள் இருவருக்கிடையேயானதாக மட்டுமல்ல, அவர்கள் குடும்பம், சமூகம் என கிளை பரப்பிக்கொண்டே செல்லும். அதேபோல், இந்த ஏற்றத்தாழ்வு துறை சார்ந்ததாகவோ, பிராந்தியம் சார்ந்ததாகவோ மட்டும் இல்லை. பாலினம், சாதி, மதம், மொழி, இனம், நாடு என வெவ்வேறு தளங்களிலும் வேறூன்றி இருக்கிறது.
இந்தியாவில் பிறக்கும் ஒரு குழந்தையும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையும் சம திறன் கொண்டிருந்தாலும் இருவரின் பொருளாதார, சமூக மேம்பாடு ஒன்றாக இருப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வுதான் தற்போது உலகம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சினை. ஏற்றத்தாழ்வு என்பது புதிதல்ல என்றாலும், 1980-க்குப் பிறகு, அதாவது தாராள பொருளாதாரக் கொள்கை, உலக நாடுகளில் நடைமுறைக்கு வந்த பிறகு, ஏற்றத்தாழ்வு மிகப் பெரிய அளவில் அதிகரிக்கத் தொடங்கியது.
கரோனா பரவலுக்குப் பிறகு உலகின் ஏற்றத்தாழ்வு இன்னும் உச்சம் அடைந்திருக்கிறது. கரோனா பரவல், உலக நாடுகளில், ஒரே நேரத்தில் ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி இருக்கிறது. வரலாற்றில் இதற்கு முன் இவ்வாறு ஒரே நேரத்தில் அனைத்து நாடுகளிலும் ஏற்றத்தாழ்வு அதிகரித்ததில்லை. கரோனா ஊரடங்கு கால கட்டத்தில் மட்டும் உலக அளவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. கோடீஸ்வரர்கள் மேலும் மேலும் செல்வத்தைக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனையோர் ஏழ்மையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
ஏன் இவ்வளவு ஏற்றத்தாழ்வு?
உலகின் பொருளாதாரக் கட்டமைப்புதான் இத்தகைய ஏற்றத்தாழ்வுக்குக்கு காரணம் என்கிறது சமீபத்தில் வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில், உலகப் பொருளாதார மாநாடு சென்ற வாரம் நடைபெற்றது. அதையொட்டி ஆக்ஸ்ஃபாம், உலகின் ஏற்றத்தாழ்வு குறித்து ‘the inequality virus’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கரோனா வைரஸ் எவ்வாறு உலகில் ஏற்றத்தாழ்வை அதிகரித்திருக்கிறது என்பதையும், உலகின் பொருளாதாரக் கட்டமைப்பு எவ்வாறு நியாயமற்றதாக இருக்கிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தற்போதைய ஏற்றத்தாழ்வுக்கு மூன்று காரணிகள் முதன்மைக் காரணங்களாக இருப்பதாக அந்த அறிக்கைக் குறிப்பிடுகிறது. தாராள பொருளாதாரக் கொள்கை, ஆணாதிக்கப் போக்கு, வெள்ளை மேலாதிக்கம். 1980களில் தாராளமய அடிப்படையில் உலகின் பொருளாதாரக் கட்டமைப்பு உருவாகத் தொடங்கியது. கட்டுப்பாடற்ற சுதந்திரமான சந்தை, தனி மனிதவாதம் ஆகியவை தாராளமய பொருளாதாரத்தின் அடிப்படை.
அது, பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டைக் குறைத்து, தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகப்படுத்துகிறது. இந்தப் பொருளாதாரக் கொள்கையானது சந்தை என்பது சுயாதீனமானது என்றும், அது நிறம், பாலினம், இனம் பாகுபாடற்று இயங்கக்கூடியது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறது. அதன் பார்வையில், தனி மனிதனின் வாழ்க்கைப் போக்கு என்பது அவனது திறமை, முயற்சி, தேர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது என்பதாகும்.
ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளில் தாராள பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்திய விளைவுகள் நடைமுறையில் வேறொன்றாக இருக்கிறது. சமூகத்தில் சில பிரிவுகளிடம் மட்டுமே, அதாவது உயர் வர்கத்தினரிடமே, செல்வம் குவிந்துகொண்டு இருக்கிறது. மற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருந்தாலும் அதே நிலைமையிலே இருக்கின்றனர். கடந்த 40 வருடங்களில், உலகின் 1 சதவீதத்தினரின் வருமானம், உலகின் மக்கள் தொகையில் பாதி மக்களின் மொத்த வருமானத்தைவிட இருமடங்காக உயர்ந்து இருக்கிறது.
உலகின் 2000 கோடீஸ்வரர்களிடம் இருக்கும் சொத்தானது, அவர்களின் 2 ஆயிரம் தலைமுறையினர் வாழ்க்கைக்கு செலவிடத் தேவையான அளவை விடவும் அதிகம். இன்னொரு பக்கம். உலகின் பெரும்பாலான மக்கள் மிகச் சொற்பமான வருமானத்தைக் கொண்டிருக்கின்றனர். கரோனா ஊரடங்கு கொண்டுவரப்பட்ட சமயத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பசியால் மரணித்துக்கொண்டிருந்தனர். ஒட்டு மொத்தத்தில் தாராளமயத்தின் அடிப்படையிலான அரசியல் – சமூக - பொருளாதார கட்டமைப்பானது, ஒரு சமூகத்தில் இருக்கும் உயர் வர்க்கத்தினரிடமே அதிகாரமும், செல்வமும் குவிய வழி செய்திருக்கிறது.
ஏற்றத்தாழ்வை சரி செய்ய முடியுமா?
அதீத ஏற்றத்தாழ்வு என்பது மனித இனம் தோன்றியது முதல் இருந்துகொண்டிருக்கிறது என்றும், அது இயற்கையானது, அதை அரசின் கொள்கை மாற்றங்களால் சரி செய்ய முடியாது என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுவதுண்டு. மேலோட்டமாகப் பார்த்தால், அந்த வாதங்கள் சரிதான் என்று தோன்றும். ஆனால், சில வரலாற்று மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமக்கு வேறொரு உண்மை புலப்படும்.
ஸ்வீடனில் நிகழ்ந்த மாற்றத்தைப் பார்ப்போம். 1925களில் ஸ்வீடனில் வருமான ஏற்றத்தாழ்வு அப்போதைய துருக்கியோடு ஒப்பிடக்கூடியதாக இருந்தது. அந்த சமயத்தில் ஸ்வீடன் அதன் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றியது. பொது சுகாதார வசதி, ஓய்வூதியம் என மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி பொருளாதாரத் திட்டங்களை அந்நாட்டு அரசு வகுத்தது. விளைவாக, அடுத்த முப்பது ஆண்டுக்குள்ளாக, ஸ்வீடனில் ஏற்றத்தாழ்வு பாதியாகக் குறைந்தது. வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு காலங்களில் உருவாகிய ஏற்றத்தாழ்வுக்கு அரசின் சமூக, பொருளாதார திட்டங்களே காரணம் என்பதையும், மக்கள் நலத் திட்டங்கள் வழியே ஏற்றத்தாழ்வை சரி செய்ய முடியும் என்பதையும் இது உணர்த்துகிறது.
சாதி, மதம் ரீதியிலான ஏற்றத்தாழ்வு
வெள்ளை இன மேலாதிக்கமும், ஆணாதிக்கப் போக்கும் தற்போதைய ஏற்றத்தாழ்வுக்கு முக்கியமான காரணங்கள் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கை குறிப்பிடுகிறது. வெள்ளை மேலாதிக்கத்தால், கறுப்பின மக்கள் எவ்வளவு பாதிப்பைச் சந்தித்திருக்கிறார்கள் என்பதை அந்த அறிக்கை விவரிக்கிறது. வெள்ளை மேலாதிக்கத்தை, இந்தியச் சூழலில் சாதிய ஒடுக்குமுறை என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை மீண்டும் மீண்டும் பாலினப் பாகுபாடு பற்றி பேசுகிறது.
பொருளாதாரம் சார்ந்து, உலக அளவில் ஆண் – பெண் பாகுபாடு நிலவுவதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவில் நிலைமை இன்னும் மோசம். கரோனாவுக்கு பிறகு, பலர் ஊதியமின்றி வேலைபார்த்து வருகின்றனர். ஆறு மாதங்களாக ஊதியம் பெறாமல் வேலை பார்ப்பவர்களும் இருக்கின்றனர். இதில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கையே அதிகம். இந்தியாவில் பெண்கள் இடையிலான வேலையின்மை கரோனாவுக்கு முன்பு 15 சதவீதமாக இருந்தது.
தற்போது 18 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை கடந்த ஒரு ஆண்டில் 60 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இந்தியாவில் பாலினப் பாகுபாடு பொருளாதார ரீதியாக, வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்டதாக மட்டுமில்லை; சமூக ரீதியாகவே தீவிரமான பாகுபாடு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ (The great indian kitchen) என்ற மலையாளத் திரைப்படம், இந்திய சமூகத்தில் பெண்களின் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதை பட்டவர்த்தமாகக் காட்டுகிறது.
ஏற்றத்தாழ்வை எப்படி சரி செய்வது?
ஏற்றத்தாழ்வைச் சமாளிப்பதற்கான முதன்மையான வழிமுறைகளில் ஒன்று, வரிவிதிப்பு. கோடீஸ்வரர்களுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் அதிக வரி விதிக்க வேண்டும் என்றும், அந்தப் பணத்தைக் கொண்டு மக்களுக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை இலவச சேவை வழங்க வேண்டும். மிகக் குறிப்பாக, மருத்துவம், கல்வி போன்ற சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று ஆக்ஸ்பாம் வலியுறுத்துகிறது. ஒருவர் வேலையிழப்பது என்பது இந்த உலக இயக்கத்திலிருந்து அவர் துண்டிக்கப்படுவதாக மாறி இருக்கிறது. அந்தவகையில் வேலை உத்திரவாதத்தை உருவாக்குவது ஒரு அரசின் கடமையாகிறது.
வேலை பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள், பிணிக்கால ஊதியம், பேறுகால விடுப்பு, வேலையிழந்தவர்களுக்கான சலுகைகள், ஓய்வூதியம் ஆகியவற்றை அனைவருக்கும் உறுதி செய்ய வேண்டும் என்று ஆக்ஸ்ஃபாம் வலியுறுத்துகிறது. இவற்றையெல்லாம் எப்படிச் செய்வது? தொழிற் செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் நலனை முதன்மைப்படுத்தியாதாக மாற்ற வேண்டும் என்று ஆக்ஸ்ஃபாம் கூறுகிறது. காலநிலை மாற்றம் மனித குல இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அதைத் தடுக்கும்வகையிலான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்துகிறது.
ஆக்ஸ்ஃபாம் அறிக்கையானது ஏழை-பணக்காரர், வெள்ளை இனம் –கறுப்பு இனம், ஆண் - பெண் பாகுபாடு என்பதன் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வை அணுகி இருக்கிறது. ஆனால், நாம் இவற்றைக் கடந்தும் நாம் ஏற்றத்தாழ்வை பார்க்க வேண்டியது அவசியம். உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், திருநர் சமூகத்தினர், தன்பாலின உறவாளர்கள், பழங்குடி மக்கள் இவர்கள் குறித்து பொது சமூகம் சிந்திப்பதில்லை. இவர்களுக்கான பொருளாதாரப் பாதுகாப்பை, சமூகப் பாதுகாப்பை உருவாக்கிட வேண்டும். இவர்களின் பிரச்சினைகளும் பொது உரையாடலுக்குள் வர வேண்டும். அதுவே, உண்மையான சமத்துவமிக்க சமூகத்தை உருவாக்க வழிசெய்யும்.
கோடீஸ்வரர்கள் பெரும் கோடீஸ்வரர்களானார்கள்
கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் உயர்ந்துள்ளது. அவற்றைக் கிட்டத்தட்ட 13.80 கோடி ஏழைகளுக்கு தலா ரூ.94 ஆயிரம் ரூபாய் என பிரித்து வழங்க முடியும் என்று ஆக்ஸ்ஃபாம் ஆய்வு தெரிவிக்கிறது.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்புகடந்த மார்ச் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் ஒரு மணி நேரத்துக்கு அவர் ஈட்டிய வருவாய் 90 கோடி ரூபாய். நான்கு தினங்களில் அவரது சொத்து மதிப்பில் ஏற்பட்டிருக்கும் உயர்வானது, அவருடைய நிறுவனங்களில் பணிபுரியும்
1.95 லட்ச ஊழியர்களின் வருடாந்திர ஊதியத்தை விடவும் அதிகம். இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் முதல் 11 இடங்களில் உள்ளவர்கள், கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஈட்டிய வருமானத்தைக் கொண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு அல்லது சுகாதாரத் துறைக்கு 10 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago