saravanan.j@hindutamil.co.in
கரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு சீனாவின் சர்வதேச மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஆச்சர்யப்படும் அளவில் கடந்த சில வாரங்களில் மிக முக்கிய நகர்வுகளை சீனா சாத்தியமாக்கியிருக்கிறது. அதில் முக்கியமானது ஐரோப்பிய யூனியனுக்கும் சீனாவுக்கும் இடையே உறுதியாகியுள்ள முதலீட்டு ஒப்பந்தம். ஐரோப்பிய யூனியனுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் செய்ய காத்திருந்த அமெரிக்காவுக்கு இது பெருத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.
இது சற்றும் எதிர்பாராத ஒன்று என்பது சர்வதேச அரசியல் பொருளாதார நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை இன்று நேற்றல்ல, கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்படுத்தும் முயற்சியில் ஐரோப்பிய யூனியன் இருந்துவந்திருக்கிறது. சீனாவுடன் இதுவரை 35 முறை இந்த ஒப்பந்தம் குறித்து விவாதம் நடத்தியுள்ளது.
உண்மையில் அமெரிக்காதான் ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான திட்டத்தில் இருந்தது.புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றதும் ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க புதிய அரசு நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த விஷயத்தில் சீனா முந்திக்கொண்டது. ஐரோப்பிய யூனியன் - சீனா இடையிலான இந்த முதலீட்டு ஒப்பந்தம் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு சீனாவில் கட்டற்ற சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சீனா தனது கட்டுப்பாடுகள் சிலவற்றையும் தளர்த்துவதாக உறுதி அளித்துள்ளது. சர்வதேச அளவில் வர்த்தகம்,தொழில்துறை போன்றவற்றில் அமெரிக்காவுக்கு அடுத்து ஐரோப்பிய யூனியன் விளங்குகிறது. ஆனாலும், ஐரோப்பிய யூனியன் சீனாவுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டதன் மூலம் தனது வர்த்தக சுதந்திரத்தை இழக்க நேரிடும் என சிலர் கூறுகின்றனர்.
ஏற்கனவே பல முறை சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள ஐரோப்பிய யூனியன் முயன்றபோது, சர்வதேச தொழிலாளர்கள் சட்டத்தை சீனா மதிக்காதது ஒரு தடையாக இருந்துவந்தது. மேலும் கட்டாய தொழில்நுட்ப பரிமாற்றம், வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் போன்றவையும் முட்டுக்கட்டையாக இருந்தன. இந்நிலையில் தற்போது சீனா தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்த முன்வந்துள்ளது. தொழில்நுட்ப பரிமாற்றத்தில் தளர்வு செய்ய முடிவு செய்திருப்பதோடு, சீன நிறுவனங்களுக்கு நிகரான சந்தை வாய்ப்புகளை, போட்டி சூழலை ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தப் புதிய ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியன் சீனாவுடன் 2009க்கு முன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் 25 அம்சங்களை புதுப்பிக்கும் வகையில் உள்ளது. அதன்படி ஐரோப்பிய நிறுவனங்கள் நேரடியாக சீனாவில் முதலீடு செய்யவும், தொழில் தொடங்கவும் முடியும். சீன நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துதான் தொழில் தொடங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சீனாவில் செய்யப்படும் முதலீடுகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதாகவும் இந்த ஒப்பந்தம் உள்ளதாகத் தெரிகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் உலகப் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும். உலகமயமாக்கலும், கட்டற்ற வணிக வாய்ப்புகளும் மேலும் மேம்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.
ஆனால் ஐரோப்பிய யூனியன் இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீனாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகும் என்று அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கூறிவருகிறார்கள்.மேலும் தொழிலாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த அம்சங்களை இந்த ஒப்பந்தம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், சிறிய ஆதாயத்துக்கு ஆசைப்பட்டு பெரிய இழப்புகளை ஐரோப்பிய யூனியன் சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். சீனா தனது வலுவான சந்தையின் மூலம் சர்வதேச அரங்கில் பேரம் பேசும் அதிகாரத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுவருகிறது.
தற்போதைய இந்த ஒப்பந்தமும் அதை உறுதி செய்கிறது. இந்த ஓப்பந்தத்தின் மூலம் சீனா பெரிய அளவில் பயன் அடையும். சர்வதேச அளவில் மிக முக்கிய, பொருளாதார, அரசியல் பலம் கொண்ட நாடுகள் ஐரோப்பிய யூனியனில் உள்ளன. அவற்றுடனான வர்த்தக ஒப்பந்தம் மீண்டும் சீனாவைத் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றும். புவிஅரசியல் சார்ந்து சீனா மேலும் பலம் பெறும். மேலும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முழு பலனை அடையும் முயற்சியில் ஐரோப்பிய யூனியன் தீவிரமாக இருந்தால், அதற்கான வாய்ப்புகளையும் தாராளமாக சீனா வழங்குமானால் அமெரிக்காவுடனான ஐரோப்பிய யூனியன் வர்த்தகம் படிப்படியாகக் குறையத் தொடங்கும். இதன்மூலம் பொருளாதார அளவிலும் சீனா பலம் பெறும்.
சீனாவை முற்றிலுமாக முடக்குவதற்குத் தேவையான அத்தனை முயற்சிகளையும் அமெரிக்கா எடுத்துவந்தது.குறிப்பாக ட்ரம்ப் நிர்வாகத்தில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு உச்சத்துக்கே சென்றது. மேலும், ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் இதர கூட்டாளி நாடுகளுடன் இணைந்து சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரை வலுப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.
ஆனால், அந்தக் கனவு இப்போது தவிடுபொடியாகி இருக்கிறது. ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம் செய்த குளறுபடிகளால் அமெரிக்கா ஸ்தம்பித்து இருக்கிறது.கூடவே கரோனா பாதிப்பினாலும் பெருத்த இழப்புகளை அமெரிக்கா சந்தித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக உறவை தனது எதிரி சீனாவுக்கு நழுவவிட்ட அமெரிக்கா அதன் புதிய அதிபருக்கு மேலும் சவால்களை அதிகரித்திருக்கிறது.
இந்த ஒப்பந்தம் 2022க்கு முன் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் சீனாவின் நிதி சேவைகள் துறை, ஆட்டோமொபைல், ஹெல்த், தொலைதொடர்பு, எலெக்ட்ரிக் கார் உள்ளிட்ட துறைகளில் பெரிய வர்த்தக வாய்ப்புகள் ஐரோப்பிய யூனியனுக்கு கிடைக்கும். கடந்த வருடம் ஐரோப்பாவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான பிரச்சினைகள் வலுவாக இருந்தன.ஐரோப்பிய யூனியன் மீது சீனா பல வர்த்தக தடைகளை அறிவித்தது.
ஆனால், தற்போது ஐரோப்பிய யூனியனுக்கு சீனா தனது கதவுகளைத் திறந்துவிட தயாராகி இருக்கிறது. கரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியது என்று கூறப்பட்டுவந்ததால் உலக அளவில் சீனாவுக்கு எதிரான மனநிலையை நாடுகள் கொ்ண்டிருந்தன.இதைச் சாதகமாகப் பயன்படுத்தி சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா திட்டமிட்டது.
சமீபத்தில் சீனா நிறுவனங்களை முடக்கும் நோக்கில் ஒரு சட்டத்தையும் கொண்டுவந்தது. மேலும் சீனாவின் வளர்ச்சியையும், அதன் சர்வதேச விரிவாக்கத்தையும் கட்டுப்படுத்த அடுத்தடுத்து நடவடிக்கைகளைத் திட்டமிட இருந்த அமெரிக்கா புதிய அதிபரின் வருகைக்காகக் காத்திருந்தது. ஆனால், இந்த இடைவெளியில் தன்னை மேலும் பலப்படுத்திக்கொள்ள சீனா துணிந்திருக்கிறது. ஐரோப்பிய யூனியனுடன் இறங்கிப் போயிருக்கிறது. அதன் கோரிக்கைகளை ஏற்று வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் கரோனா காரணமாக முடங்கிய சர்வதேச வர்த்தக உறவுகளைப் புதுப்பித்திருக்கிறது.
என்னதான் இந்த ஒப்பந்தத்தினால் ஐரோப்பிய யூனியனுக்கு ஆபத்து என்று அமெரிக்க தரப்பிலிருந்து கூறப்பட்டாலும்,ஐரோப்பிய யூனியனுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொருத்தே என்ன ஆகப் போகிறது, யாருக்கு என்ன பலன் என்பது தெரியும். ஒருவேளை இந்த ஒப்பந்தம் இருதரப்புக்கும் பலன் அளிப்பதாக, சுமுகமாக இருக்குமானால் அமெரிக்காவுக்குப் பெருத்த சிக்கலாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்கும் கணிசமான பாதிப்பு உண்டு. இந்தியா தற்போது முதலீடுகளை ஈர்க்க முயற்சித்துவருகிறது. பெரிய முதலீடுகளை மேற்கொள்ளும் நாடுகளில் பல ஐரோப்பிய யூனியனில் உள்ளன. அவை சீனாவுக்குச் சென்றால் இந்தியா வேடிக்கைப் பார்க்க வேண்டியதுதான்.
மக்கள் தொகை, வளங்கள், திறமை மற்றும் பெரிய சந்தை என எல்லா வகையிலும் சீனாவுக்கு நிகராக, இந்தியா இருந்தும் ஏன் சீனாவால் நிகழ்த்த முடிந்த இதுபோன்ற வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியாவில் சாத்தியப்படுத்த முடியவில்லை என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இருக்கிற ஒரே வித்தியாசம் இதுதான் சீனா தன்னுடைய சந்தையை சர்வதேச அளவில் நிகரற்ற ஒன்றாக கட்டமைத்த பிறகு அது பிற நாடுகளுடன் கூட்டு வர்த்தகத்தை பலப்படுத்துகிறது ஆனால் இந்தியச் சந்தையை பலப்படுத்துவதற்காகவே சர்வதேச உதவியை நாடவேண்டிய சூழலில்தான் நாம் இருக்கிறோம். கொள்கை அளவில் சீனாவில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது இந்தியா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago