சீனாவின் இடத்தைக் கைப்பற்றுமா இந்தியா?

By ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

karthi@gkmtax.com

கரோனா வைரஸின் புதுப்புது அவதாரங்கள், அதனால் ஏற்பட்ட உயிர் பலிகள், பொருளாதார சரிவு, தொழில் முடக்கம், வேலையிழப்பு என துயர்மிகுந்த கால கட்டமாகவே ‘2020’ கடந்திருக்கிறது. ஒரே ஒரு ஆறுதல், கரோனாவுக்கான தடுப்பு மருந்துகளைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறது. ஒரு வகையில் சென்ற ஆண்டு, மனித குலத்துக்கு சில பாடங்களை கற்பித்துச் சென்றிருக்கிறது. தொழில் நடத்துவது, பணம் சம்பாதிப்பதில் புதிய பாணி. சேமிப்பு, சிக்கனம், முதலீடு, ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கை, சத்தான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவற்றில் புதிய பாடங்களை, மனித குலத்திற்கு ‘கிருமி யுத்தம்’ கற்பித்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக '2020'-ம் ஆண்டு, தொழில் வளர்ச்சியில் சீனாவின் இடத்தைக் கைப்பற்றும் வாய்ப்புகளை இந்தியாவுக்குத் தந்திருக்கிறது.

சோகமும் நம்பிக்கையும்

பெருநகரங்கள் தொடங்கி, சிறு நகரங்கள் வரைக்கும், சிறிய கடைகள் முதல், பெரிய ஷோரூம்கள் வரை, பல இடங்களிலும் காலி செய்யப்பட்டு, ‘இடம் வாடகைக்கு’ பலகை தொங்கி, பார்ப்பவர்கள் மனதை கலங்கடிக்கிறது. பல தலைமுறையாக பார்த்த தொழில்கள் கரைந்து காணாமல் போயிருக்கின்றன. அதே சமயம், தமிழ்நாட்டின் பல நகரங்களிலும், ‘ஓப்பனிங் ஷார்ட்லி’ என்ற பலகைகளுடன் புதிதாக தயாராகி வரும் ஷோரூம்களை காணும்போது, புது நம்பிக்கையுடன், மனம் உற்சாகம் கொள்கிறது. தொழிலை இழந்த பல முதலாளிகள், உற்சாகம் வரவழைத்துக் கொண்டு, ‘இதுவும் கடந்து போகும்’ என்று தொழிலாளராக பணிக்குச் செல்கின்றனர். வேலை இழந்த பலர், புது நம்பிக்கையுடன் சிறு தொழில் தொடங்கி முதலாளியாகி இருக்கின்றனர்.

பிழைத்திருப்பதே சாதனை

கரோனா வைரஸ் பரவல் தொடங்கி, ஒன்பது மாதங்கள் கடந்து விட்டன. கரோனா வேகமாக பரவத் தொடங்கிய போது, மக்களிடம் வாழ்வு குறித்த அச்சம் இருந்தது. ‘நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றி நினைக்காதீர்கள். உயிர் பிழைத்திருப்பதே சாதனை’ என்ற சிந்தனையே விதைக்கப்பட்டது. வேலை, தொழில் இழந்த அடித்தட்டு, நடுத்தர மக்களுக்காக, எல்லா உலக நாடுகளுமே, தங்கள் ஜிடிபியில், 10 சதவீதம் முதல் 20 சதவீதம் அளவிற்கு, நிவாரணம் மற்றும் சலுகைகள் அளித்துஉதவின. கடந்த ஏப்ரலில், நாட்டில் இதுவரை இல்லாத வகையில், வேலை வாய்ப்பின்மை 23 சதவீதம் என்ற உச்சம் தொட்டது.

ஏப்ரல், மே மாதங்களில் வைரஸ் தொற்று பயம் போய், தொழில் மற்றும் வேலையை தக்க வைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. அதன் பின்னர், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபரில் தளர்வுகள் தொடங்கியபோது, தனியார் துறை பணியாளர்கள் சலுகை இழப்பு, சம்பளக் குறைப்பு, போனஸ் இழப்பு, வேலை இழப்பு என்று பல வகை சோதனைகளில் சிக்கினர். புதிதாக கட்டி விற்பனைக்காக காத்திருக்கும் பிளாட்டுகள் (அப்பார்ட்மென்ட்கள்) தேக்கமடைந்தன.

மீட்சி தொடங்கியது

ஊரடங்கு தளர்வுகளுக்குப்பின், இந்திய பொருளாதாரம், குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் அசுர வேகம் எடுத்தது. நவராத்திரி, துர்கா பூஜை, தசரா பண்டிகை. அதன்பின் தீபாவளி என கொண்டாட்டங்கள் தொடர்ந்ததால், நாடு முழுவதும் பெரும்பாலான மக்களிடம் உற்சாக அலை எழுந்தது. அப்போது, அமேசான், மிந்த்ரா, பிளிப்கார்ட் போன்ற ‘ஆன்லைன்’ வர்த்தக வலைதளங்கள் ஐந்தே நாளில் ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் பார்த்து வரலாறு படைந்தன. ஜி.எஸ்.டி. வசூல் ரூபாய் ஒரு லட்சம் கோடியை கடந்து ஆச்சரியமளித்தது.

கரோனா காலத்தில், வேளாண் தொடர்புடைய தொழில்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சத்து மிகுந்த உணவு பொருட்களுக்கான உற்பத்தி, விற்பனை அதிகரித்தது. அடுத்ததாக, ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு, தங்கம் விலை உயர்ந்தது. பங்குச்சந்தைகள் உயர்வை நோக்கிச் சென்றன. நிலம் விற்பனை அதிகரித்தது. நாடு முழுவதும், வீட்டு மனைகளும், விவசாய பூமிகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளன. இதில், விவசாய பூமி விற்பனை பல இடங்களில் சுமார் 30 சதவீதம் அளவிற்கு விலை உயர்ந்திருக்கிறது.

‘கே’ எனும் எச்சரிக்கை மணி

பொருளாதார மீட்சியை எளிதாகப் புரிந்து கொள்ள அவற்றை ‘வி’ (V) வடிவம், ‘யூ’(U) வடிவம், ‘டபிள்யு’ (W) வடிவம் என்று பல வடிவங்களில் பொருளாதார நிபுணர்கள் அடையாளமிடுகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் மீட்சியுறுவதை ‘வி’ வடிவம் என்று குறிப்பிடப்பட்டால், வீழ்ந்த சில காலங்களிலேயே அது மீண்டும் வேகமாக மீட்சியடைந்து, மேலெழுந்துவிட்டது என்பதாக பொருள் பொருளாதார மீட்சி, ‘யூ’ வடிவாக இருந்தால், பொருளாதாரம் மந்த நிலை அடைந்து, மீள்வதற்கு அது கொஞ்ச காலம் எடுத்துக் கொண்டதாக கருதலாம். ‘டபுள்யூ’ வடிவாக என்று குறிப்பிட்டால், பொருளாதாரம் வீழ்ந்து, மீட்சி பெறும் நேரத்தில், மீண்டும் வீழ்ந்து எழுந்ததாகப் பொருள். தற்போது இந்தியாவின் பொருளாதார மீட்சி ‘கே’ (K) வடிவமாக இருக்கிறது.

‘கே’ (K) வடிவத்தில், ஒரு அம்பு மேற்புறமும், ஒரு அம்பு கீழ்ப்புறமாகவும் செல்வதுபோலவே, நாட்டின் ஒரு தரப்பு மக்களின் செல்வ வளம் மேல் நோக்கி உயர்ந்தும், மற்றொரு தரப்பு மக்களின் பொருளாதார நிலை கீழ் நோக்கி செல்வதையும் குறிக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழை, நடுத்தர மக்கள் மேலும் ஏழைகளாகவும் மாறிவருகிறார்கள் என்பதையே அது உணர்த்துகிறது. கரோனாவிற்குப் பிறகு, நாட்டில் ஒரு பக்கம், வேலை இழப்பு, தொழில் முடக்கம், மறுபக்கம், பங்குச் சந்தை எழுச்சி, தங்கம் விலை உயர்வு, ரியல் எஸ்டேட் தொழில்துறை உத்வேகம் போன்றவை இந்தியப் பொருளாதாரம், ‘கே’ வடிவ பொருளாதார மீட்சியை நோக்கி செல்வதையே உணர்த்துவதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு நல்ல செய்தி

கரோனாவுக்கான தடுப்பு மருந்துகளை இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தயாரித்துள்ளன. ஆனால், இந்த சூழ்நிலையிலும்கூட, சீனா தயாரித்துள்ள தடுப்பு மருந்தை வாங்குவதற்கு, உலக நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. தனது தடுப்பு மருந்தின் தரத்தை நம்ப வைக்க சீனா மிகவும் மெனக்கெடுகிறது. சீனா மீதான வெறுப்பினால், அங்கிருந்து இடம்பெயர்ந்து தங்கள் தொழில் நிறுவனங்களை, இந்தியா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் நிறுவவே அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஐரோப்பிய நாடுகள் நினைக்கின்றன.

அவற்றின் முதல் சாய்ஸ், இந்தியா. இக்கட்டான பொருளாதார சூழ்நிலையிலும், ‘மேட் இன் இந்தியா’ பொருட்கள் மீது உலக மக்களுக்கு புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதே ஒரு நம்பிக்கையான நல்ல செய்தி. நடந்து வரும், கிருமி போர்’ காரணமாக, சீன பொருட்களையோயோ, சீன வர்த்தகத்தையோ உலக நாடுகள் அறவே ஒதுக்க முடியாது. ஆனால், சீனாவைப் புறக்கணிக்கும் நாடுகளால், வருங்காலத்தில், கணிசமாக பொருளாதார பலமடைய, பலனடையப்போவது இந்தியாதான்.

புதிய சிக்கல்கள்

ஆனால், அதற்கான பலனை முழுமையாக நமது தொழில்துறை அடைவதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன. உற்பத்திப் பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படாமல், மூலப் பொருட்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மூலப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் தாங்கள் ஒப்புக் கொண்ட விலைக்கு பொருட்களை உற்பத்தி செய்து தருவதில் சிரமங்கள் உள்ளன. மூலப் பொருள் இறக்குமதி செய்ய நினைக்கும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு ‘கவுன்டர்வெய்லிங் டூட்டி’ 20 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதனால் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றன. தவிர, உலக நாடுகளில் பெரும் தொகை கரோனா நிவாரணமாக கொடுக்கப்பட்டுள்ளதால் பண வீக்கம் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளமே, தொழில்துறைதான். வேலை வாய்ப்பு, வரி வருவாய் போன்றவை அதிகரிக்க தொழிலதிபர்களின் அர்ப்பணிப்பும், உழைப்புமே காரணம். ஆகவே, கரோனாவிற்கு பிறகு நமது தொழில்துறை சந்திக்கும் பிரச்சினைகளைக் களைய எடுத்து வரும் முயற்சிகளுக்கு, மத்திய நிதி அமைச்சரும், துறை வாரியாக, மத்திய, மாநில அரசு அதிகாரிகளும் கூடுதல் முன்னுரிமை கொடுத்து, துரிதப்படுத்தினால் விரைவில் இலக்கை அடைவோம்.

இனியும் பிற நாடுகளை நம்பி இருக்காமல், நமக்கான தேவைகளை நாமே உற்பத்தி செய்வதற்கு, சுயசார்பு நிலையை எட்ட, பிரதமர் மோடியின் திட்டப்படி, இந்திய தொழில்துறை, புது உத்வேகத்துடன் எழ தொடங்கி இருக்கிறது. அதற்கு அடிப்படையாக விளக்கும் நமது தொழிலதிபர்கள், வணிகர்கள், தொழில் முனைவோரிடமும் அதே உத்வேகம் இருக்கிறது. அந்த நம்பிக்கை தனல் இருக்கும் வரை நமது வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி குறித்து அச்சம் கொள்ள அவசியமில்லை.

சீனாவின் தந்திரம்

தற்போதைய பொருளாதாரச் சூழலில், இந்தியாவில் இருந்து ஸ்டீல் உட்பட மூலப்பொருள் ஏற்றுமதி சீனாவுக்கு அதிகரித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கரோனாவுக்குப் பிறகு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் சீனாவில் இருக்கும் தங்கள் நிறுவனங்களை வேறு நாடுகளுக்கு இடப் பெயர்ச்சி செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன. அவ்வாறு வெளியேறும் நிறுவனங்கள் பல, இந்தியாவிற்கு வருவதற்குதான் அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த சூழ்நிலையில், இந்திய மூலப் பொருட்களை, சீனா அதிக அளவில் வாங்கி குவிப்பதற்கு, உலக நாடுகளால், இந்தியாவிற்குக் கிடைக்கப்போகும் சர்வதேச தொழில் வாய்ப்புகள், அன்னிய தொழில் முதலீடுகளை தடுக்கும் நோக்கமாகவும் இருக்கலாம். உலக பொருளாதாரத்தை, மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க போடும் சீனாவின் தந்திரமாகவும் இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்