radhakrishnan.g@hindutamil.co.in
கரூர்12 மாவட்டம் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு உலகளவில் பெயர் பெற்றது. 1970களில் தொடங்கிய கரூரின் ஜவுளி ஏற்றுமதி மெல்லமெல்ல வளர்ந்து தற்போது ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய கேந்திரமாகத் திகழ்கிறது. இத்தொழில் சார்ந்து கரூரில் மட்டும் கிட்டத்தட்ட 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. கரூரில் தயாராகும் வீட்டு உபயோக ஜவுளிகளான கையுறை, கிச்சன் டவல், திரைச்சீலைகள், தலையணை உறைகள் போன்றவற்றின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.3,000 கோடி வருவாய் கிடைத்துவந்தது.
இவ்வாறாக, லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளையும், கோடிக் கணக்கில் வருவாயையும் ஈட்டித் தந்துகொண்டிருந்த இத்தொழில் சமீபமாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும் கன்டெய்னர் தட்டுப்பாடு காரணமாகவும் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக இந்தத் தொழில் பலத்த பாதிப்புக்கு உள்ளானது. ஆண்டுதோறும் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கான ஆர்டர்கள் முதலாண்டு நவம்பர் முதலேவரத்தொடங்கிவிடும். தவிர, ஜெர்மன் நாட்டின் பிராங்க்பர்ட் நகரில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் நடைபெறும் ஜவுளி வர்த்தகக் கண்காட்சியில் கரூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று ஆர்டர்களை பெறுவார்கள்.
கிறிஸ்துமஸ் ஆர்டர்களை ஜூன், ஜூலை மாதங்களுக்குள் முடித்து அனுப்பிவிடுவார்கள். கடந்தாண்டில் இதுபோல் பெறப்பட்ட ஆர்டர்களை முடிக்க ஏற்றுமதியாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தபோது கரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்துடன் உற்பத்தி நிறுத்தப்பட்டன. அதுவரை தயாரித்து வைத்திருந்த ஆர்டர்களை அனுப்ப முடியாமல் பல கோடி சரக்குகள் தேங்கி நின்றன. இதனால் உற்பத்தி செய்த ஜவுளிகளுக்கான பணத்தையும் பெற முடியாமல் ஏற்றுமதியாளர்கள் தவித்தனர்.
ஊரடங்குத் தளர்வைத் தொடர்ந்து அத்தொழில் மெல்லமெல்ல சீரடைந்து வந்துக்கொண்டிருந்தது. இந்தச் சூழலில், நூல், நான்-ஒவன் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு, கன்டெய்னர்கள் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக ஏற்றுமதியில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினரும், கரூர் பேரடைம் இன்டர்நேஷனல் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளருமான டாக்டர் கே.என். பிரபு சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்: “மூலப் பொருட்கள் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நூல் உற்பத்தியாளர்கள் நேரடியாக நூல் ஏற்றுமதியில் ஆர்வம் காட்டுவதால் விலை உயர்வு ஏற்படுகிறது. அதேபோல், கரோனா பாதிப்புக்குப் பிறகு தற்போது இந்தியா இறக்குமதியை குறைத்துவிட்டதால் கன்டெய்னர்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் துறைமுகங்களிலே சரக்குகள் தேங்கியுள்ளன.
ஆர்டர் வழங்கியவர்களுக்கு ஜவுளிகள் சென்று சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விளைவாக, அவர்களிடம் இருந்து ஏற்றுமதியாளர்களுக்கு வரவேண்டிய தொகையும் தாமதமாகிறது. இதனால் புதிய ஆர்டர்கள் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கு இத்தொழில், சுமார் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகவும் வேலை வாய்ப்பை வழங்குகிறது.
நாட்டுக்கு ஆண்டுக்கு பல கோடி வரை அந்நிய செலாவணி ஈட்டித் தருகிறது. இந்தச் சூழலில், நூல் நேரடி ஏற்றுமதிக்குகட்டுப்பாடுகள் விதித்து மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், கன்டெய்னர்கள் தட்டுப்பாட்டைப் போக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவைதவிர, கரூரில் சீரோ டிஸ்சார்ஜ் சாயப்பட்டறைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் பலரும் வெளியூர்களில் சாயமிட்டு வருகின்றனர். இதனால் கால, பண விரயம் ஏற்படுகின்றன. எனவே, கரூரில் சாயப்பூங்கா அமைக்கவும் அரசு முன்வரவேண்டும்” என்று அவர் தெரிவித்தார். கரோனா ஊரடங்கு காரணமாக பல தொழில்கள் முடக்கத்தைச் சந்தித்தன.
ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும் அவைபல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட படி இருக்கின்றன. மத்திய அரசு, தொழில் துறையினருக்கு சலுகைத் திட்டங்களை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், தொழில் துறையினருடன் கலந்தாலோசித்து அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை கேட்டறிந்து, தீர்வு காண வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago