ramesh.m@hindutamil.co.in
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் பலர் காலையில் எழுந்திருக்கும்போதே “ஐயோ” என்ற அலறலோடு, நெஞ்சம் பதைபதைக்கும் செய்தியைப் படித்தபடிதான் கண்விழிக்கின்றனர். போதாக்குறைக்கு சமூக வலைதளங்களி்ல் உலா வரும் செய்திகள், ஒரு முறைக்கு பல முறை வந்தடைந்து ரத்த அழுத்தத்தை பன்மடங்காக்குகிறது. அதுவும் பிரச்சினையே நமக்குதான் என்றால் சொல்லவா வேண்டும். ‘வங்கிகளில் உங்கள் பணம் பத்திரமாக உள்ளதா?’, ‘உங்கள் சேமிப்புக்கு யார் பொறுப்பு?’, ‘நாட்டின் கடன் சுமையைக் குறைக்க வங்கிகள் மூலம் வாடிக்கையாளர் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது’ என்பன போன்ற தகவல்கள் அல்லது வதந்திகள் நிச்சயம் சராசரி மனிதனை பாதிக்காமல் இருக்க முடியாது.
நாட்டில் விபத்து மற்றும் தற்கொலைகளை தடுக்க முடியாததைப் போல வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்வதும் வாடிக்கையாகி வருகிறது. பொதுத்துறை வங்கியான ‘ஐடிபிஐ’, அதைத் தொடர்ந்து தனியார் துறை வங்கியான அதுவும் புதிய தலைமுறை தொழில்நுட்பங்களைக் கொண்டதான ‘யெஸ் வங்கி’ ஆகியன தொடர் தோல்வியைச் சந்தித்தன. கூட்டுறவு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்ட ‘பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி’யும் (பிஎம்சி) மூடு விழா கண்டது. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என்பதோடு நில்லாமல் மிகப்பெரிய வங்கியல்லாத நிதி நிறுவனமான ‘ஐஎல் அண்ட் எஃப்எஸ்’ மற்றும் ‘திவான் ஹவுசிங் பைனான்ஸ்’ (டிஹெச்எஃப்எல்) நிறுவனமும் வாடிக்கையாளர்களின் தூக்கத்தைத் தொலைக்கக் காரணமாக அமைந்தன.
தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக தென்னகத்தில் மிகவும் பாரம்பரியமாக இயங்கிவந்த லட்சுமி விலாஸ் வங்கியும் தன் பங்கிற்கு பலருக்கு பெருத்த கிலியை ஏற்படுத்தியது. தற்போது மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா பகுதியில் அமைந்துள்ள ‘மன்தா அர்பன் கூட்டுறவு வங்கி’ புதிய சேமிப்புகளைப் பெறவும், கடன் அளிக்கவும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒரு வங்கியில் ரிசர்வ் வங்கி தலையிட்டு இதுபோன்ற கட்டுப்பாடு விதிக்கிறது என்றால் அதுவே அந்த வங்கி விரைவில் மூடுவிழா காணப்போகிறது என்பதற்கான அறிகுறியாக அமைந்துவிடுகிறது.
‘லட்சுமி விலாஸ் வங்கி’ தற்போது சிங்கப்பூரைச் சேர்ந்த ‘டிபிஎஸ் சிங்கப்பூர்’ நிறுவனத்தின் அங்கமான ‘டிபிஎஸ் இந்தியா’ வங்கியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ரிசர்வ் வங்கி தலையிட்டு இதுபோன்று ஏதேனும் ஒரு தீர்வை கண்டுவிடுகிறது. அந்த வகையில் இதுவரையில் பெரிய அளவில் பிரச்சினை உருவாகவில்லை என்று வாதிடலாம். ஆனால் பணத்தை எடுக்க நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகள் மூன்று மாதத்துக்கு விதிக்கப்படும்போது அந்த சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை அளவிட முடியாது.
பழைய தலைமுறை வங்கிகளின் நெருக்கடிகள்
லட்சுமி விலாஸ் வங்கியை பழைய தலைமுறை வங்கி (ஓபிஎஸ்பி) என ஆர்பிஐ வகைப்படுத்தியுள்ளது. 94 ஆண்டு பழமையான லட்சுமி விலாஸ் வங்கி தடுமாற்றத்தைச் சந்தித்தைப் போல பெரும்பாலான பழைய தலைமுறை வங்கிகள் பல்வேறு கால கட்டங்களில் பலவிதமான சோதனைகளைச் சந்தித்துள்ளன. அதிலும் குறிப்பாக 1991-ம்
ஆண்டு தாராளமயமாக்கல் சூழலில் பெரும் நெருக்குதலையும் இவை எதிர்கொண்டு வந்துள்ளன.
சிட்டி யூனியன் வங்கி, கும்பகோணம், தமிழ்நாடு (1904), கரூர் வைஸ்யா வங்கி, கரூர், தமிழ்நாடு (1916), கேத்தலிக் சிரியன் வங்கி, திருச்சூர், கேரளா (1920), தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, தூத்துக்குடி, தமிழ்நாடு (1921), நைனிடால் வங்கி, நைனிடால், உத்திராகண்ட் (1922), கர்நாடகா வங்கி, மங்களூர், கர்நாடகா (1924), லட்சுமி விலாஸ் வங்கி, கரூர், தமிழ்நாடு (1926), தனலட்சுமி வங்கி, திருச்சூர், கேரளா (1927), சவுத் இந்தியன் வங்கி, திருச்சூர், கேரளா (1929), பெடரல் வங்கி, ஆலப்புழை, கேரளா (1931), ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி, ஸ்ரீநகர், ஜம்மு அண்ட் காஷ்மீர் (1938), ஆர்பிஎல் வங்கி, கோல்ஹாபூர், மகாராஷ்டிரா (1943) போன்ற பழையதலைமுறை வங்கிகள் சராசரியாக 95 ஆண்டு பழமையானவை.
இவற்றில் 9 வங்கிகள் தென் மாநிலங்களை தலைமையகமாகக் கொண்டு செயல்படுபவை. தற்போது செயல்படும் இந்த வங்கிகளில் பெரும்பாலான வற்றில் போதுமான மூலதன விகிதம் (சிஏஆர்) திருப்திகரமாகவே உள்ளது. ஆனால் இவற்றின் வாராக் கடன் விகிதம் (என்பிஏ) சற்று கவலை யளிப்பதாகவே உள்ளது. குறிப்பாக கரூர் வைஸ்யா வங்கி, நைனிடால் வங்கி, ஜம்மு அண்ட்காஷ்மீர் வங்கி ஆகியவற்றில் வாராக்கடன் விகிதம் ரிசர்வ் வங்கி வரையறுத்ததைவிட அதிகமாகவே உள்ளது. இதேபோல கேத்தலிக் சிரியன் வங்கிக்கு பங்கு மீதான வருமானம் மைனஸ் நிலையில் உள்ளது.
தனலட்சுமி வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கிக்கு இது வரையறுக்கப்பட்டதைவிட குறைவாக உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பங்கு மீதான வருமானம் குறைந்து வருவதற்கு புதிய தலைமுறை பொதுத்துறை வங்கிகளின் வருகையும் ஒரு காரணம். என்றாலும், இது புதிய பிரச்சினை அல்ல. 1981 முதல் 1997 வரையான காலத்தில் பழைய தலைமுறை வங்கிகள் சந்தித்துள்ள நெருக்கடிகளை ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. மூலதன ஆதாரம் இல்லாதது மட்டுமின்றி, கடன் தர நிர்பந்திப்பது, வாராக் கடனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட ஒதுக்கீடு செய்யாதது, குறைந்த லாபம் ஆகியவையும் இவற்றின் செயல்பாடுகளை குறைத்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கியைப் போல கேத்தலிக் சிரியன் வங்கியும், தனலட்சுமி வங்கியும் கடும் நெருக்கடியில் இயங்கிவருகின்றன. இவ்வங்கிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு சில பிரத்யேகமான காரணங்களும் உண்டு. இவ்வங்கிகளால் பெருமளவில் கிளைகளை விஸ்தரிக்க முடியாதது அவற்றில் ஒன்று. ஏனென்றால் இந்த வங்கிகளின் தனித்துவமே இவை அந்தந்த பிராந்தியத்தில் மிகவும் பிரசித்தமாக விளங்கியதுதான். இத்தகைய பழைய தலைமுறை வங்கிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுவருவதற்கு அரசின் பொருந்தாத சில கட்டுப்பாடுகளாலும் முக்கிய காரணம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
நம்பிக்கையை காப்பாற்றுங்கள்
இந்தியாவில் வங்கிகள் தோல்வியடைவது இந்தியாவின் நிதி வரலாற்றில் ஒருங்கிணைந்த அங்கமாகவே மாறிவிட்டது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வங்கி முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களும் இந்தியாவில் மிக மிகக்குறைவு. இப்போது கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் வங்கிகள் வழக்கமான நெருக்கடியை விட கூடுதல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது கண்கூடு.
சர்வதேச பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ள சூழலில் இத்தகைய தனியார் வங்கிகள் எப்படி தாக்குப் பிடிக்கப் போகின்றன என்பதற்கு காலம்தான் பதிலாக அமையும். அரசாங்கத்தை நம்புவதுபோல் மக்கள் வங்கிகளை நம்புகின்றனர். இவ்வளவு காலம் வங்கி கணக்கு இல்லாமல் இருந்த ஏழை மக்களும், அரசு தொடங்கித்தந்த ஜன்தன் கணக்கில் தங்களது பணத்தை பெரும் நம்பிக்கையுடன் சேமிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது நம்பிக்கை தகர்ந்து விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு வங்கிக்கும், அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்
கும் உள்ளது என்பதை அவை உணர வேண்டும்.
திருடன் கையிலேயே சாவியா?
1 பொதுமக்களின் சேமிப்பை காக்க பல்வேறு சட்ட திட்டங்களை வகுக்கும் ரிசர்வ் வங்கியையும் மீறி பல தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. ஆனாலும் சில பல சமயங்களில் ரிசர்வ்வங்கி அளிக்கும் பரிந்துரைகள் வங்கி மீதான நம்பகத்தன்மையை சிதைத்துவிடக்கூடியதாகத்தான் இருக்கிறது.
2 பெரிய நிறுவனங்கள் தங்களது நிதித் தேவையை பூர்த்தி செய்துகொள்ள வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்ற பரிந்துரையும் இதில் ஒன்றாகும். நெட்பிளிக்ஸ் நிறுவனம் ‘பேட் பாய் பில்லியனர்கள்’ (Bad Boy Billionaires) என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது.
3 விஜய் மல்லையா, நீரவ் மோடி, சுப்ரதா ராய், ராமலிங்க ராஜு ஆகியோர் அரசியல் செல்வாக்குடன் வங்கிகளை எந்த அளவுக்கு சூறையாடினர் என்பதை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் இந்த ஆவணப்படம். வங்கிகள் இம்மூவர் வசம் இல்லாதபோதே இவர்கள் வங்கிகளின் நிதி வளத்தை சூறையாடியுள்ளனர். இவர்கள் வசம் வங்கிகள் இருந்தால் அதில் முதலீடு செய்தவர்களின் கதி என்னவாகும்? ரிசர்வ் வங்கி குழுவின் பரிந்துரைக்கு பதிலாக அமைந்துள்ளது நெட்பிளிக்ஸின் ஆவணப்படம்.
4 தவறுகள் நிகழ்ந்த பிறகு அதை திருத்த புதிய சட்டங்கள் போடுவதையே ரிசர்வ் வங்கி வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
5 எதற்கெடுத்தாலும் மேலை நாட்டினரை உதாரணமாகக் கொண்டு பார்க்கும் அரசு, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழில்துறையினர் வங்கி தொடங்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதை ஏன் உணரவில்லை என்பது கேள்விக்குறி.
6 இந்தியா போன்ற நாட்டில் நிறுவனங்களின் நிதித் தேவைக்கு வங்கித் தொடங்க அனுமதி தந்தால், பல்லாயிரக்கணக்கானோரின் சேமிப்புகள் வாராக் கடனாவதும் அதற்கு தீர்வாக அரசு நிதி அளிக்க வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்படுவதும் தொடர்கதையாக ஆகிவிடும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago