தொழிலில் ஏற்றம் காண தேவை டிஜிட்டல் மாற்றம்!

By செய்திப்பிரிவு

டிஜிட்டல் தொழில்நுட்பம் என்று பேச ஆரம்பித்தாலே பலருக்கு தெரியாத மொழியில் படம் பார்ப்பது போல் இருக்கிறது.

மிஷின் லர்னிங், ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் போன்ற வார்த்தைகளை கேட்டால் வேற்று கிரகவாசிகளின் பரிபாஷையோ என்று தோன்றுகிறது. பாதி விஷயங்கள் தலைக்கு மேல் பறக்க மீதி விஷயங்கள் தலை சுற்ற வைக்கிறது.

இவை சாதாரண மக்களுக்கு புரியவில்லை என்றால் பரவாயில்லை. போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் தொழிலதிபர்களுக்கு புரியாதபோது தான் பிரச்சனையே.

டிஜிட்டல் என்பது தொழிலில் இருந்தால் நல்லது என்ற கட்டத்தை தாண்டி அது இல்லையென்றால் தொழில் நடத்தவே முடியாது என்ற கட்டத்தில் இன்று வாழ்கிறோம். இதை தொழிலதிபர்கள் எத்தனை விரைவில் உணர்கிறார்களோ, அவர்களுக்கும் அவர்கள் தொழிலுக்கும் அத்தனை நல்லது. பலவீனத்தை பலம் வென்ற காலம் மலையேறி மெதுவானதை வேகமானது வெல்லும் காலம் இது!

தொழில் உலகம் இன்று ராட்சச வேகத்தில் பயணிக்கிறது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது. போட்டியாளர் அழுத்தம் நெருக்குகிறது. சந்தை உக்கிரமாகியிருக்கிறது.

வேகமாகச் செல்வது கூட மெதுவாகத் தெரிகிறது. முடிவெடுக்கவேண்டிய நேரம் முக்கால்வாசி சுருங்கிவிட்டது. ஒரு மாதத்தில் எடுத்த முடிவுகளை இன்று ஒரு வாரத்தில் எடுக்கவேண்டியுள்ளது. ஒரு வாரத்தில் எடுத்த முடிவுகளை ஒரு நாளில், ஒரு நாளில் எடுத்த முடிவுகளை நேற்றே என வேகமெடுக்க வேண்டியிருக்கிறது. சர்வம் வேக மயம்!

முடிவெடுப்பதை விரைவாக்கினால் மட்டுமே காலத்தின் வேகத்திற்கு ஏற்ப நம் தொழிலை ஈடுகொடுத்து பயணிக்க முடியும். இதற்குத் தேவையான மாற்றங்களை நாம் தொழிலில் செய்தால் அதுவே நம் தொழிலை இரு மடங்காக பெருக்கும். இதை செய்வது பெரிய கம்பசூத்திரம் அல்ல என்பதும் இதை எளிதாய் செய்ய வழி இருக்கிறது என்பதும் தான் ஆறுதலான விஷயம். இதற்கு டிஜிட்டல் டெக்னாலஜி உதவுகிறது.

டிஜிட்டல் என்றால் என்ன?

ஒரு வேலையை குறைந்த உழைப்பு, குறைந்த திறமை, குறைந்த நேரத்தில் கற்று செய்யும் திறனை பெறுவது. ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போம்.

வருவோர் போவோரிடம் நின்று வழி கேட்டுக்கொண்டு ஜானவாச கார் போல் மெதுவாய் சென்றது ஒரு காலம். இன்று கூகுள் மேப் வடிவில் டிஜிட்டல் உதவுகிறது. செல்லவேண்டிய இடத்தை கூகுள் மேப்பில் நுழைத்தால் அது நம் கையை பிடித்துக்கொண்டு அழைத்துச் சென்று சேர்க்கிறது.

போகவேண்டிய இடத்திற்கு அலுங்காமல் குலுங்காமல் விரைவில் டிஜிட்டல் கொண்டு சேர்க்கிறது. குறைந்த உழைப்பு, குறைந்த திறமை, கூகுள் மேப்பை ஈசியாய் கற்று பயன்படுத்தும் திறன் இருப்பதால் தானே இது சாத்தியப்படுகிறது. இது தான் டிஜிட்டல். இந்த டிஜிட்டலைப் பயன்படுத்தித் தானே ‘ஓலா’, ‘’ஊபர்’ போன்ற கம்பெனிகள் சக்கைப் போடு போடுகின்றன.

தொழிலை ஏன் டிஜிட்டலாக்கவேண்டும்?

இத்தனை காலம் தெரியாத கம்ப்யூட்டரை புரியாத மென்பொருளைக் கட்டிக்கொண்டா அழுதோம்? இவை இல்லாமல் தானே தொழில் செய்தோம். எதற்கு தொழிலை டிஜிட்டல், கூட்டல், கழித்தல் செய்துகொண்டு என்று கேட்பவர்களைப் பார்த்து கம்ப்யூட்டரே பரிதாபப்படும்.

’இன்றைய அவசரடி தொழில் யுகத்தில் ஒரே இடத்தில் நின்றிருந்தால் உலகம் உங்கள் மீது ஏறி நசுக்கிவிட்டுப் போய்கொண்டிருக்கும்’ என்றார் ‘பில் கேட்ஸ்’. தொழிலை டிஜிட்டலாக்குவது காலத்தின் கட்டாயம். கொஞ்சம் திறமையற்று தொழில் செய்தால் அங்கு வில்லங்கம் வரவேற்கப்படும்.

‘உங்கள் லாப அளவு தான் என் வாய்ப்பு’ என்றார் ’அமேசான்’ உரிமையாளர் ‘ஜெஃப் போஸோஸ்’. உங்கள் தொழிலை டிஜிட்டலாக்காமல் திறமையற்று நடத்தும்போது அமேசான் தன் பொருட்களை தள்ளுபடி விலையில் விற்று உங்கள் லாபத்தை கபளீகரம் செய்கிறது. இதற்கு அதன் டிஜிட்டல் சக்தி பெருந்துணையாக இருக்கிறது.

ஆக, அமேசான் போன்ற நிறுவனங்கள் விலை குறைத்து உங்கள் வயிற்றில் அடிக்கவில்லை. டிஜிட்டல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தாத தொழிலின் திறமையின்மையை தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது அவ்வளவே.

நீங்கள் உங்கள் தொழிலை டிஜிட்டலாக்கி திறமையாக செயல்படும் போது இந்த வில்லன்கள் உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று உங்கள் தொழிலோடு போட்டி போட தயங்குவார்கள். டிஜிட்டல் உங்கள் தொழிலை காக்கும் அகழியாகிறது. சுருங்கச் சொன்னால், ஒன்று தொழில்கள் டிஜிட்டலாகவேண்டும், இல்லை திண்டுக்கல் பூட்டு வாங்கவேண்டும்!

தொழிலை டிஜிட்டலாக்குவது எப்படி?

தொழிலை டிஜிட்டல் மாற்றத்திற்கு தயாராக்க முடிவு செய்துவிட்டீர்களா. நன்று. இதை வெற்றிகரமாக செய்து முடிக்க ஐந்து விஷயங்களில் மாற்றங்கள் செய்தால் போதும்.

வாடிக்கையாளர் அனுபவத்தில் மாற்றம் - அமேசானிற்கு தொடர்பு கொண்டு ஆர்டர் செய்த பொருள் எப்பொழுது வரும் என்று நாம் கேட்பதில்லை. ஏனெனில் தங்களிடம் ஆர்டர் செய்வது முதல் பொருளை பெறுவது வரையான முழு பயனத்தையும் அவர்கள் புரிந்து அதை எளிமையாக்கியிருப்பதால். அது போல் உங்கள் வாடிக்கையளர் அனுபவத்தில் தேக்கம் இல்லாமல் அதை எளிமையாக்கும் வழியை பாருங்கள்.

கலாச்சார மாற்றம் - உங்கள் பணியாளர்கள் உங்களிடம் ஒவ்வொன்றையும் கேட்டு செய்யும் வகையில் நிறுவனம் இருந்தால் அதில் மாற்றம் அவசியம். உங்களை கேட்காமல் தாங்களே செய்து முடிக்கும் வகையில் பணியை அவர்களுக்கு விளக்கி அதை செய்து முடிக்கும் அதிகாரத்தை அளியுங்கள். அந்த அதிகாரத்தை சரியாய் பயன்படுத்தி தவறு நேர்ந்தால் அத் தவறை மன்னிக்கும் மனப்பக்குவம் பெறுங்கள்.

நம் குழந்தைகளே நாம் சொல்வதை கேட்க மறுக்கும் போது நம் பணியாளர்கள் நாம் சொல்வதை கேட்டுத் தான் எதையும் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது இல்லையா?

உங்களிடம் கேட்காமல் உங்கள் பணியாளர்கள் பணி செய்யும் வகையில் உங்கள் முறையை எளிதாக்குங்கள். உங்களுக்கும் நேரம் மிச்சமாகும். வேலையும் தேக்கமின்றி நடக்கும். என்ன தான் இயந்திரங்களும், கணிணியும் இருந்தாலும் உங்கள் தொழில் நடப்பது உங்கள் பணியாளர்களால் என்பதை மறக்காதீர்கள்.

வியாபார அமைப்பில் மாற்றம் - டிஜிட்டல் மாற்றம் செய்யும் போது தொழில் அமைப்பு பாதிக்கப்படலாம். ஒரு இடத்தில் செலவுகள் குறையும். இன்னொரு இடத்தில் லாபம் கூடும். இதனால் நம் வியாபார அமைப்பை மாற்றவேண்டியிருக்கும். மாற்றங்களுக்கேற்ப அதில் புதுமைகளை புகுத்தவேண்டியிருக்கும். செய்யத் தயங்காதீர்கள்.

தொழில்நுட்ப மாற்றம் - கிரேக்க தத்துவ ஞானி ‘ஹிராக்ளிடஸ்’ கூறிய ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ தொழிநுட்பத்திற்கு அளவெடுத்து சொன்னது போலப் பொருந்தும். அதிக செலவு செய்து உங்கள் தொழிலில் ஒரு தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தியிக்கிறோம் என்பதற்காக அதை மட்டுமே வைத்திராமல் காலத்திற்கேற்ப புதிய தொழிநுட்பத்தை புகுத்திக்கொண்டே இருப்பது தான் தொழிலுக்கு புதுப் பொலிவைத் தரும்.

நம் மொபைலில் இருக்கும் செயலிகள் எத்தனை முறை நம்மை அப்டேட் செய்ய சொல்கின்றன என்பதை நினைத்துப் பாருங்கள். நம் தொழிலிலும் அப்படியான அப்டேட் வேண்டும். மேலும் அதற்கான சேவையைத் தரும் நிறுவனங்களிடம் மட்டுமே மென்பொருளை வாங்குங்கள்.

பணியாளர்கள் மனநிலை மாற்றம் - தொழிலதிபர்கள் முதல் பணியாளர்கள் வரை பலருக்கும் மாற்றம், மாறவேண்டும் என்றாலே ஒவ்வாது. அதுவும் கம்பெனிகளில் பழம் தின்று கொட்டை போட்ட பழம்பெருச்சாளிகள் இருந்தால் கேட்கவே வேண்டாம். மாறவேண்டிய அவசியத்தை தானும் உணராமல் உணர்ந்தவர்களின் உத்வேகத்தையும் தடுத்து உபத்திரவம் செய்வார்கள்.

முதல் காரியமாக, அவர்கள் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வாருங்கள். கம்பெனியின் வளர்ச்சியும் வெற்றியும் தான் முக்கியம், அதற்கு பணியில் மாற்றம் கொண்டு வருவதால் அவர்கள் வேலைக்கு எந்த பங்கமும் வராது என்பதை அவர்களுக்குத் தெளிவாக்குங்கள். ‘வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம், அதனால் யாருக்கு பெயர் வரும் என்று நாம் பார்க்காத வரை’ என்றார் முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ‘ஹாரி ட்ரூமென்’.

மேலே சொன்ன மாற்றங்களைச் செய்தால் உங்கள் மொத்த நிறுவனமும் கற்கும் நிறுவனமாக மாறும். நிறுவனத்தின் திறன் அதிகரிக்கும். உங்கள் லாபம் இன்னொருவருக்கு வாய்ப்பாகாமல் உங்கள் பைகளுக்குள்ளேயே இருக்கும்.

மொத்தத்தில் டிஜிட்டல் மாற்றம் உங்கள் தொழிலை எதிர்காலத்துக்குத் தயாராக்குங்கள். அப்புறமென்ன, உங்கள் நிறுவனம் தான் சந்தையில் உச்சம் தொடும்.

- குமார் வேம்பு,
நிறுவனர், தலைமை செயல் அதிகாரி, கோஃப்ரூகல் (Gofrugal)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்