பசிபிக் கடலோரத்தின் 12 நாடுகள் சேர்ந்து தங்களுக்குள் ஒரு வர்த்தக உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளன. இந்த உறவுக்கு டிபிபி (Trans Pacific Partnership) என்று பெயர். அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, சிலி, பெரு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, புரூணை, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், ஜப்பான் ஆகியவை அந்த நாடுகள். இவை வெறும் பசிபிக் கடலோர நாடுகள் மட்டுமல்ல, உலகின் ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) சுமார் 40% அளவைத் தங்கள் நாட்டில் உற்பத்தி செய்பவை.
இந்த உடன்படிக்கையில் உள்ள விஷயங்கள் இந்த நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே தெரியும். பேச்சு வார்த்தைகள் ரகசியமாகத்தான் நடந்தன. நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உடன்பாடு என்றாலும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பன்னாட்டு தொழில், வர்த்தக (பகாசுர) நிறுவனங்களின் நலனுக்காகவே தயாரிக்கப்பட்டவை என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த உடன்பாட்டால் இந்தியாவுக்கு நன்மையா, தீமையா என்று கேட்டால், தயக்கமின்றி சொல்லிவிடலாம் - தீமைதான் என்று. இந்த உடன்பாட்டுக்கு அந்தந்த நாடுகளின் நாடாளுமன்றங்கள் ஒப்புதல் தர வேண்டும். அமெரிக்காவிலேயே இதற்கு எதிர்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும் பெருந்தொழில் நிறுவனங்கள் யாரை, எப்படி சரிக்கட்ட வேண்டும் என்ற வித்தை பயின்றவை, எனவே நாடுகளின் ஒப்புதல் கிடைத்துவிடும். 12 நாடுகள் சேர்ந்து டிபிபி ஒப்பந்தம் செய்துகொண்டால் நமக்கென்ன அக்கறை என்று கேட்கலாம்.
இது அமலுக்கு வந்தால் இந்தியாவின் தொழில், வர்த்தகத்துறை கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும். இந்திய ஏற்றுமதியின் பெரும் பகுதி சரிந்துவிடும். ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் திணறத் தொடங்கும். வேகமாக வளர்ந்துவரும் சீனாவும் இந்தியாவும் ஒருசேர பின்தங்க நேரும். 12 நாடுகளின் முக்கிய நோக்கம் சீனாவின் ஏற்றுமதி வர்த்தகத்தைக் குறைப்பதுதான் என்றாலும் துணை விளைவாக இந்தியாவும் பாதிக்கப்படப் போகிறது.
உலக வர்த்தகப் பேச்சுவார்த்தை 20 ஆண்டுகளுக்கு முன்னால் தீவிரமானது. “எந்தெந்த நாடுகள் குறைந்த விலையில் ஒரு பொருளை விளைவிக்க முடியுமோ அல்லது தயாரிக்க முடியுமோ அதை பிற நாடுகளுக்கு உலகச் சந்தையில் தடைகள் ஏதும் இல்லாமல் விற்று அதிக லாபம் சம்பாதிக்க உலக வர்த்தக ஒப்பந்தம் உதவும்” என்று வளர்ந்த நாடுகள் வேப்பிலை அடித்தன.
குறைந்த விலையில் பொருள்கள் உலகச் சந்தையில் கிடைக்கும் என்று நம்ப வைக்கப்பட்டது. ஆனால் நடந்ததென்னவோ வளரும் நாடுகளின் சந்தைகள் வல்லரசுகளுக்குத் திறந்துவிடப்பட்டதும், வளரும் நாடுகள் சுரண்டப்படுவதும்தான். உலக வர்த்தக ஒப்பந்தம் எல்லோருக்கும் பொதுவானது, பலனளிப்பது என்றால், ‘பசிபிக் கடலோரம் வாழும் நாடுகள்’, ‘அட்லாண்டிக் கடலோரம் வாழும் நாடுகள்’ என்று தனித்தனியாக வணிக ஒப்பந்தங்கள் உருவாவது ஏன் என்று புரியவில்லை.
அறிவுசார் சொத்துரிமை அளிக்கும் உரிமைகளை பசிபிக் கடலோர நாடுகள் இனி தீவிரமாகப் பயன்படுத்தும் என்று தெரிகிறது. அதாவது வல்லரசு நாடுகளுக்குப் போட்டியாக, வளரும் நாடுகள் உற்பத்தியிலோ, விற்பனையிலோ எதைச் செய்தாலும் அது அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தை மீறுகிறதா என்று பார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நாடு ‘உரிய வகையில்’ அடக்கப்படும்.
பிற நாட்டு அரசுகள் மீது பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் வழக்கு தொடுத்து, தங்களுக்கான சந்தையைப் பெறவும் சலுகைகளை அனுபவிக்கவும் இழப்பீடு கோரவும் இந்த உடன்படிக்கை உறுதுணையாக இருக்கப் போகிறது. பகாசுர நிறுவனங்களின் எல்லையற்ற லாபத்தை யாரும் தடுத்து விடாமலிருக்கும் வகையில் விதிகளும் வர்த்தகச் சட்டங்களும் பயன்படுத்தப்படும். மருந்து மாத்திரைகளின் விலை கடுமையாக உயரும். ஒரு மருந்துக்குக் காப்புரிமை பெறும் நிறுவனம் அதை வேறு யாரும் தயாரித்துவிடாதபடிக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகளிலிருந்து 8 ஆண்டுகள் வரையில் பாதுகாப்பு பெறும்.
நெல், கோதுமை, கரும்பு போன்றவற்றுக்கு ‘ஆதார விலை’ என்ற பெயரில் ‘கொள்முதல் விலை’யை அறிவிக்கும் இந்திய அரசு, இனி அப்படி செய்யக்கூடாது என்று நெருக்குதல் தரப்படும். வேளாண் விளைபொருள்களின் விலையை, சந்தைதான் தீர்மானிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும். பழங்கள், காய்கள், தானியங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க குளிர்பதன மற்றும் உலர் சேமிப்பு கிடங்குகளைக் கட்டுவதற்கு அரசு உதவி செய்யக்கூடாது, மானியம் தரக்கூடாது என்றும் நெருக்குதல் தரப்படும்.
பசிபிக் கடலோர நாடுகள் உடன் பாட்டில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்தி ரேலியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகள் கையெழுத்திட்டிருப்பதை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் ஏற்றுமதியில் 25% அமெரிக்காவுக்கும் ‘ஆசியான்’ அமைப்பில் உள்ள நாடுகளுக்கும்தான் செல்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 4% அளவில் இருக்கிறது. கிட்டத்தட்ட 30% ஏற்றுமதி இந் நாடுகளுக்குத்தான் செல்கிறது. இனி இவை டிபிபி உடன்பாட்டால் பாதிக்கப்படலாம். உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 2.07% தான். ரூபாய் மதிப்பில் சராசரியாக 21,12,500 கோடி. இதிலும் 30% சரியும் என்றால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் அதிகரித்துவிடும்.
இந்தியாவின் ஏற்றுமதிகளில் முக்கிய இடம் பிடிப்பவை ஜவுளியும் தோல் பொருள்களும். வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளிடமிருந்து இந்தியாவுக்கு இனி போட்டி அதிகமிருக்கும். இந்த உடன்பாடு காரணமாக அவ்விரு நாடுகளும் வரிகள் ஏதும் இல்லாமல் டிபிபி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட முடியும்.
வியட்நாமுக்கும் மலேசியாவுக்கும் இந்தியா நூலிழைகளை அதிகம் ஏற்றுமதி செய்கிறது. இவற்றைக் கொண்டுதான் அவை ஆடைகளைத் தயாரிக்கின்றன.
ஆடை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வேறு நாட்டிடமிருந்து இழைகளை வாங்கக்கூடாது என்று டிபிபி வலியுறுத்தினால் இவ்விரண்டும் இந்தியாவிடமிருந்து வாங்குவதை நிறுத்திவிடும்.
அதனால் நூலிழைகள் தேங்கி இந்தியாவுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு கார் தயாரிப்பில் முக்கிய இடத்தைப் பிடிக்க இந்தியா பார்க்கிறது. ஆனால் டிபிபி ஒப்பந்தத்தால் ஜப்பானிடமிருந்து 11 நாடுகள் நேரடியாகவே கார்களை இறக்குமதி செய்துகொண்டுவிடும். அது இந்தியக் கார் தொழிற்சாலைகளுக்கு இழப்பை ஏற்படுத்தும். ஃபோர்டு, சுசூகி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
பசிபிக் கடலோரத்தில் நாம் இல்லாவிட்டாலும் டிபிபியில் நாமும் சேர்ந்திருக்கலாம்; ஆனால் அதன் பிறகு கிடைக்கும் பலனைவிட இழப்புகளே அதிகமாக இருக்கும். பெரிய நாடுகள் தயாரித்து அதிக விலைக்கு விற்கும் மருந்து, மாத்திரைகளை நாமும் அதே விலைக்கு வாங்கிப் பயன்படுத்த நேரிடும். அவர்கள் அறிவுசார் சொத்துரிமையை வலியுறுத் துவதே அதற்குத்தான். எனவே 12 நாடுகளுடன் ஒரே சமயத்தில் கூட்டாளியாக இருப்பதைவிட தனித்தனியாக இருதரப்பு வர்த்தக உடன்பாடுகளைச் செய்து கொள்ளலாம். இதுவரை சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ‘ஆசியான்’ என்ற அமைப்பு ஆகியவற்றுடன் இப்படி வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்.
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா வுடனான ஒப்பந்தங்கள் தொடர்பாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
அறிவுசார் சொத்துரிமை விவகாரங் கள், அவரவர் நாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களைப் பாதுகாப்பது, இந்தியத் தொழிலாளர்களை அமெரிக் காவில் அனுமதிப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் பேசிக்கொண்டிருக் கிறோம். திட்டவட்டமான முடிவை எட்டவில்லை. முடியும் என்று நம்பு கிறோம்.
பசிபிக் கடலோர நாடுகளுக்கு இடை யிலான ஒப்பந்தம் இறுதி வடிவத்தைப் பெற்றிருந்தாலும் அட்லான்டிக் கடலோர நாடுகளுக்கு இடையிலான பேச்சு முடியவில்லை. எனவே ஐரோப்பிய நாடுகள் கவலைப்பட காரணங்கள் இருக்கின்றன.
இந்தியாவில் தயாரிப்போம் என்ற கோஷத்தை மோடி உருவாக்கினார். நிறைய தயாரித்தால்தான் தொய்வின்றி ஏற்றுமதி செய்ய முடியும். அதற்கு பிற நாடுகளுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வின் மொத்த ஏற்றுமதி மதிப்பு சுமார் 58,50,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ண யிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்போதிருக்கும் 2%-லிருந்து 3.5% மாக உயர்த்துவது. இது சாத்தியம்தான், ஆனால் கடுமையாக உழைக்க வேண்டும்.
rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago