இந்தியத் தொழில் வளர்ச்சியை அளவிட வேண்டும் என்றால் இந்திய உருக்குத் தொழில் என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்தால் போதும். அந்த அளவுக்கு பிற தொழில்களுக்கு உந்துசக்தியாக இருப்பது உருக்குத் தொழில். என்ன காரணத்தாலோ இந்தத் தொழில் பல்வேறு அலைக்கழிப்புகளுக்குத் தொடர்ந்து ஆளாகிக் கொண்டே இருக்கிறது.
சர்வதேச அளவில் ஏற்படும் சவால் களைச் சமாளிப்பதற்கு முன்னால் உள்நாட்டில் தொடர்ந்து கிளம்பிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கவே அதற்கு நேரம் சரியாக இருக்கிறது. கச்சா உருக்கு உற்பத்தியில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம். 2014-15 ஆம் ஆண்டில் மட்டும் 905 லட்சம் மெட்ரிக் டன் உருக்கை உற்பத்தி செய்திருக்கிறோம். இந்தி யாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) உருக்குத் தொழிலின் பங்களிப்பு மட்டும் 2%. சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்துறையில் வேலை செய்கின்றனர். விவசாயம், கனரக தொழில்துறை, இலகு ரக தொழில்துறை, அடித்தளக் கட்டுமானத் துறை, மோட்டார் வாகனங்கள் என்று எந்தத் துறைக்கும் தரமான உருக்கு இல்லாமல் எதையும் செய்துவிட முடியாது. இந்தியாவில் உருக்குத் தொழிலுக்குச் சாதகமாக இருப்பது ஏராளமாகக் கிடைக்கும் இரும்புத் தாதும், ஊதியம் குறைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையும்தான்.
2009-10-ல் இந்தியாவின் நபர்வாரி உருக்கு நுகர்வு 51 கிலோவாக இருந்தது. 2014-15-ல் 60 கிலோவாக உயர்ந்திருக்கிறது. உலக சராசரி 216 கிலோ. 2015-16-ல் இந்தியாவில் உருக்கு நுகர்வு 7% அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட இது 2% அதிகம். அதாவது இந்தியத் தொழில்துறை உருக்கைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு இது நல்லது. ஏப்ரல் 2000 தொடங்கி மே 2015 வரையில் இத்துறைக்குக் கிடைத்துள்ள அந்நிய முதலீட்டின் மதிப்பு 870 கோடி அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயில் சுமார் 56,550 கோடி. இதுவல்லாமல் இந்திய நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.
விலை சரிவால் பாதிப்பு
பொதுவாக விலைவாசி குறைந் தால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மட்டுமல்ல, உருக்கின் விலையும் சரிந்து வருகிறது. உற்பத்திப் பெருக்கம் ஒரு புறம் இருக்க, பொருளாதார மந்த நிலை காரணமாக உலக நாடுகளின் தொழில்துறைகளில் உருக்குக்கான தேவை குறைந்து வருகிறது. அதைவிட முக்கியம் சீனா தன்னுடைய தேச வருவாயை அதிகப்படுத்த உருக்கைக் கடுமையாக விலை குறைத்து வெளிநாடுகளில் குவித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 6 மாதங்களில் 524 லட்சம் டன்களை விற்றிருக்கிறது சீனா. சீனாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டதால் உலக அளவில் உருக்குக்கான கிராக்கி குறைந்து விட்டது. அந்நாடும் விலைகுறைத்து விற்பதால் பிற நாடுகளால் உருக்கை அதிக விலைக்கு விற்க முடிவதில்லை. இப்படி இரட்டை பாதிப்பை சீனா ஏற்படுத்திவிட்டது. சீனா மட்டும் அல்ல தென் கொரியா, மலேசியாவும் கூட விலை குறைத்து இந்தியாவுக்கு விற்கின்றன. எனவே பொருள் குவிப்பு தடுப்பு வரியை இந்தியா அவற்றின் மீது விதித்திருக்கிறது. ஆனால் இதே குற்றச்சாட்டை இந்திய உருக்கு நிறுவனங்கள் மீது அமெரிக்காவும் சுமத்துகிறது.
இந்தியாவின் 10 முன்னணி உருக்கு நிறுவனங்களில் சுமார் 5 நிறுவனங்கள் உருக்காலைக்கான நிலத்தைப் பெறுவதில் ஏற்பட்ட நீண்ட காலதாமதத்தாலும், சுற்றுச் சூழல் துறையின் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட இடர்களாலும் பாதிக்கப் பட்டுள்ளன. இந்திய வங்கித்துறையின் வாராக்கடன் அளவில் 10%, உருக்குத் தொழிலுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய உருக்குத் துறை ஒன்றல்ல பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
முதலீடு
இரும்பு, உருக்குத் துறைக்கு கோடிக் கணக்கான ரூபாய் முதலீடு தேவை. வளரும் நாடாக இருப்பதால் இந்தியாவால் அதை உள்நாட்டில் திரட்ட முடிவதில்லை. அரசுத் துறை நிறுவனங்கள்கூட வெளிநாட்டு நிதியுதவியுடன்தான் நிறுவப்பட் டுள்ளன.
தொழில்நுட்பம்
1960-களிலும் 1970-களிலும் இந்திய உருக்குத்துறை தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தியதால் வளர்ச்சி கண்டது. அத் தொழில்நுட்பம் வெளி நாடுகளிலிருந்து பெறப்பட்டது. அடுத்த 20 ஆண்டுகளில் மூலப்பொருளின் விலை உயர்வு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, லாப விகிதக் குறைவு போன்ற காரணங்களால் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்த செலவிடப்படவில்லை. இதனால் வளர்ந்த நாடுகளைவிட மிகவும் பின்தங்கிய தொழில்நுட்பத்தில் உற்பத்தி நடக்கிறது. ஜப்பானிலும் கொரியாவிலும் 1.1 டன் கச்சா உருக்கிலிருந்து 1 டன் நல்ல உருக்கு தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவில் இதற்கு 1.2 டன் தேவைப்படுகிறது. உருக்கு தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் தொழில்நுட்ப மேம்பாடும் உற்பத்தித் திறன் வளர்ச்சியும்தான் லாபத்தை அதிகப்படுத்தும். நமக்கு அதில்தான் பின்னடைவு.
குறைந்த உற்பத்தித் திறன்
உலகிலேயே இந்தியாவில்தான் நபர்வாரி உற்பத்தித் திறன் மிகவும் குறைவு. ஒரு தொழிலாளி ஓராண்டில் அதிகபட்சம் 90 டன்கள் முதல் 100 டன்கள் வரையில்தான் உற்பத்தி செய்கிறார். ஜப்பான், கொரியாவில் இது 600 டன்கள் முதல் 700 டன்கள் வரையில் இருக்கிறது. அமெரிக் காவில் கலட்டின் என்ற சிறு உருக் காலையில் 300 தொழிலாளர்கள் 12 லட்சம் டன் சூடான உருக்குச் சுருள்களைத் தயாரிக்கின்றனர். இந்தியாவில் இதைத் தயாரிக்க 5,000 தொழிலாளர்கள் தேவைப் படுகின்றனர்.
திறமைக்குறைவான அரசுத்துறை
இந்திய உருக்கு உற்பத்தியில் அரசுத்துறை உருக்கு நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உருக்கு உற்பத்தியைவிட பிற சமூகநலப் பணிகளுக்காக அதிகம் முதலீடு செய்யப்படுகிறது. தொழிலாளர் களுடன் நிர்வாக உறவு சரியில்லை. திறமைக்குறைவான நிர்வாகம், முழுக் கொள்ளளவுக்கு உற்பத்தி செய்யத் தவறுவது போன்றவற்றால் உற்பத்தி குறைவதுடன் இழப்பும் அதிகமாகிறது.
முழுத் திறன் இல்லை
இந்திய உருக்காலைகள் தங்க ளுடைய முழுக் கொள்ளளவுக்கு ஒருபோதும் உற்பத்தி செய்வதில்லை. துர்காபூர் உருக்காலை அதிகபட்சம் 50% அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்கிறது. வேலைநிறுத்தம், கதவடைப்பு, மூலப்பொருள் பற்றாக் குறை, ஆலையை இயக்க மின்சாரம் போதாத பற்றாக்குறை, திறமையற்ற நிர்வாகிகள் என்று இதற்குப் பல காரணங்கள்.
தேவை அதிகரிப்பு
உருக்கு உற்பத்தி குறைவாக இருந்தாலும் இந்தியாவின் அடித் தளக் கட்டுமானத் துறையில் பிரம் மாண்டமான பணிகள் மேற்கொள் ளப்படுகின்றன. எனவே உருக்குக் குக்கான தேவை பல மடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதைச் சமாளிக்க அரியதான அந்நியச் செலாவணியைக் கொடுத்து இறக்குமதி செய்யப்படுகிறது.
நிலக்கரிக்கு தட்டுப்பாடு
இந்தியாவில் நிலக்கரி அபரி மிதமாகக் கிடைத்தாலும் இரும்பை உருக்கி உருக்கைத் தயாரிக்கத் தேவைப்படும் தரமுள்ள கரியில்லை. எனவே ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இதனால் உற்பத்திச் செலவு கணிசமாகக் கூடுகிறது.
இப்போதுதான் கிருஷ்ணா கோதாவரி நதிப்படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாய்ப்பு ஆராயப்படுகிறது.
இயந்திரங்கள் பழையவை, தொழில் நுட்பம் மிகவும் மூத்த தலை முறையைச் சேர்ந்தவை, உள்நாட்டுக் கரி அதிக வெப்பம் தருவதில்லை, தொழிலாளர்களுடைய உற்பத்தித் திறன் மிகவும் குறைவு, மின்சார சப்ளையும் தொடர்ச்சியாகக் கிடைப் பதில்லை என்ற காரணங்களால் தயாராகும் உருக்கு சாதனங்கள் நல்ல தரத்தில் தொடர்ந்து கிைடப்பதில்லை. இதனால் செலவு அதிகமாவதுடன் தயாரிப்புக்கும் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. தரமும் குறைவாக இருக்கிறது.
இந்தக் காரணங்களால் இந்திய உருக்குத்துறை பெருத்த பின்னடைவு களைச் சந்தித்து வருகிறது. அரசும் மனம் தளராத விக்கிரமாதித் தனாக சரி செய்யும் நடவடிக்கை களைத் தொடர்ந்து மேற்கொண்டுள் ளது.
rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago