பிரதமரை கலங்கடித்த ‘கால்-டிராப்’

By வ.ரங்காசாரி

ஹலோ….. யாரு, சார் நீங்க பேசறது சரியா கேட்கலை, இங்கு சிக்னல் கிடைக்கலை என்று மேலதிகாரியிடம் தப்பிக்க ஊழியர் காரணம் கூறுவதுண்டு. அதெல்லாம் அந்த காலம். இப்போதெல்லாம் நீங்க கூப்பிட்ட கால் எனக்கு வரவே இல்லை என்று சொல்லி இனி ஏமாற்றலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு கால் டிராப் முக்கிய பிரச்சினையாக இப்போது உருவெடுத்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி உள்பட எல்லாருமே கவலைப்படற கால்-டிராப் பிராப்ளம்தான்! அதாவது பேசிக் கொண்டிருக்கும்போதே தொடர்பு அறுபடுவது. கால் அழைப்பவருக்கு மணி அடிக்கும். ஆனால் இந்தப்பக்கம் கேட்காது. முக்கியமான தகவல்களைப் பேசுகிறவர்களுக்கு இது எரிச்சலையும் கோபத்தையும் ஊட்டுவதுடன் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. சந்தேகம் என்னவென்றால் செல் போன் சேவை அளித்துவரும் தனியார் நிறுவனங்கள் ‘அதிக வாடிக்கை யாளர்கள்’, ‘அதிக அழைப்புகள்’ என்ற லட்சியத்துடன் இரவு பகலாக உழைக்கின்றன, அதன் ஒரு பகுதியாக இந்த கால்-டிராப் உத்தியாக இருக்குமோ, என்னவோ என்று.

புதிய கோபுரங்களைத் தேவைக்கேற்ப நிறுவ முடியவில்லை, அதிகரித்துவரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைகேற்ப அலைக்கற்றை ஒதுக்கீட்டை அரசு அதிகரித்து அளிப்பதில்லை என்று செல்போன் சேவை அளித்துவரும் நிறுவனங்கள் இதை மறுக்கின்றன.

‘குறைந்த கோபுரங்கள்’ ‘அதிக வாடிக்கையாளர்கள்’ என்று வைத்துக்கொண்டால்தான் அதிக லாபம் என்பதால் செல்போன் நிறுவ னங்கள் மெனக்கெடுவதில்லை என்ற புகாரும் உண்டு.

இரண்டிலுமே பாதி உண்மையும் பாதி கற்பனையும் கலந்திருக்கிறது. பிரதமர் மோடி மட்டுமல்ல ‘டிராய்’ என்ற தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மாவும் இப்போது இதில் தீவிரம் செலுத்தி வருகிறார். தொலைத் தொடர்புத் துறையும் இப்போது முக்கிய பெரு நகரங்களில் இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே அழைப்புகள் துண்டிக்கப்படும் எண்ணிக்கை, அதன் வேகம் ஆகிய தகவல்களைத் திரட்டத் தொடங்கியிருக்கிறது.

செல்போன் கோபுரங்கள் பற்றாக்குறை

நாடு முழுக்க இப்போது 5,50,000 செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இன்னும் ஒரு லட்சம் கோபுரங்களை நிறுவி விட்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் தெரிவிக் கின்றன. தீபாவளி, பொங்கல், ஆங்கிலப் புத்தாண்டு, காதலர் தினம் ஆகியவற்றை ஒட்டி புது ஆஃபர்களில் லட்சக்கணக்கில் விற்றுக் கொண்டிருப்பதால் இது தீரவே தீராது என்றே தோன்றுகிறது. 500 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் வரை செல்போன்கள் விற்கப்படும் நாட்டில் இது மேலும் தீவிரமாகும் என்றே நம்ப லாம்.

செல்போன் கோபுரங்களைப் புதிதாக நிறுவ முயன்றாலும் அதற்கு இடம் கிடைப்பதில்லை என்பது செல்போன் நிறுவனங்களின் குற்றச்சாட்டு. செல்போன் கோபுரங் களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் தான் சிட்டுக்குருவி போன்ற சிறு பறவைகள் இறக்கின்றன என்றும் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் சூழலியலாளர்கள் முன்னர் புகார் தெரிவித்தனர்.

இப்போதும்கூட செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் தன்மை குறித்து நிறுவனங்கள் எதையும் பகிரங்கமாகத் தெரிவிப்பதில்லை. ஆனால் கோபு ரங்கள் நிறுவியுள்ள இடங்களில், ‘இது கதிர்வீச்ச உள்ள பகுதி’ என்கிற வாசகம் கொண்ட எச்சரிக்கைப் பலகை மட்டும் காணப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் இவற்றுக்குக் காவலா ளிகள்கூடக் கிடையாது. (எனவே தான், தங்களுடைய கோரிக்கைகளை அரசின் கவனத் துக்குக் கொண்டுவர விரும்புவோர் இதன் மீது ஏறி போராட்டம் செய்ய எளிதாக முடிகிறது!). அச்சப்படும் பலர் குடியிருப்புள்ள பகுதிகளில் இவற் றுக்கு இடம்தர மறுக்கின்றனர். அப்படியும் தர முன்வருவோர் அதிக வாடகை கேட்கின்றனர்.

டெல்லி, மும்பை, பெங்களூரு, சண்டீகர், ஜெய்ப்பூர், பாட்னா போன்ற நகரங்களில் செல்போன் உபயோகிப் பாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப கோபுரங்கள் இல்லை. குறைந்த அலைவரிசை உள்ள ரேடியோ பேண்டுகளாக இருந்தால் மிகக் குறைவான எண்ணிக்கை கோபுரங்கள் போதும். ஆனால் வெறும் பேச்சுத் தொடர்புக்காக மட்டுமல்லாது, ஆவணங்களை அனுப்புவது, புகைப் படங்களை அனுப்புவது, காணொலிக் காட்சிகளை வழங்குவது போன்ற மேம்பட்ட சேவைகளுக்கு 3ஜி, 4ஜி அலைவரிசைக் கற்றைகள் தேவைப் படுகின்றன. எனவே அலைவரிசைகளை அதிகப்படுத்தினால் அதிக எண்ணிக்கையில் கோபுரங்களையும் அதிகப்படுத்த வேண்டும்.

பல்வேறு பகுதிகளில் மக்களுடைய எதிர்ப்பு மற்றும் வழக்குகள் காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட கோபுரங்கள் செயல்படுவது நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. இதர காரணங் களுக்காக 12,000 கோபுரங்களைப் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. இதனாலும் உரையாடல்கள் பாதியில் அறுபட நேர்கிறது என்கிறார்கள்.

பொதுக் கொள்கை அவசியம்

கோபுரங்களை நிறுவுவது தொடர்பாக நாடு முழுவதற்கும் பொதுவான கொள்கை இல்லை. அந்தந்த மாநில அரசுகள் அளிக்கும் ஒத்துழைப்பு அல்லது உள்ளாட்சி மன்றங்கள் தரும் அனுமதியைப் பொருத்துத்தான் கோபுரங்களை நிறுவ முடிகிறது. இதுவும் ஒரு முக்கிய காரணம். கட்டடங்கள் மீது பூஸ்டர்கள் என்ற செயலூக்கிகளைப் பொருத்தினால் சேவை மேம்படும். இதற்கு ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக அனுமதி பெற வேண்டியிருக்கிறது. இதையே சாக்காக வைத்துக்கொண்டு செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள், சேவைக் குறைவுக்கு சப்பைக்கட்டு கட்டுகின்றன. குடிநீர், மின்சார சப்ளையைப் போல இதற்கும் பொதுவான நியதிகள், பொதுவான அனுமதி வழங்கு முறைகள் அவசியம் என்ற கருத்து பலப்பட்டு வருகிறது.

ராணுவத்திடமிருந்து பெறலாம்

ராணுவத்துறை வசம் உள்ள, அதிகம் பயன்படுத்தப்படாத அலைக் கற்றை வரிசைகளை அரசு பெற்று, செல்போன் சேவை நிறுவனங்களுக்கு விடுவிக்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும். செல்போன் சேவையும் மேம்படும். அலைக்கற்றைக்கு புதிதாக மேலும் முதலீடு செய்யத் தயங்கும் நிறுவனங்கள், தங்களுடன் இணக் கமாகச் செயல்படக்கூடிய மற்ற நிறுவனங்களின் அலைக்கற்றை வரிசைகளைப் பகிர்ந்துகொண்டு சேவையை மேம்படுத்தலாம்.

அரசு கட்டடங்களின் மொட்டை மாடிகளில் கோபுரங்களை நிறுவிக் கொள்ள அனுமதி தந்து, வாடகை வசூலித்துக்கொள்ள வேண்டும். கால்-டிராப் விவரங்களைத் தொடர்ந்து கண் காணித்து, வேண்டுமென்றே இதைச் செய்யும் நிறுவனங்கள் இருந்தால் அவற்றுக்கு அபராதம் விதித்து சேவையை மேம்படுத்த கட்டாய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் அல்லது உரிமத்தைத் தாற்காலிகமாக நிறுத்திவைப்பது போன்ற தண்டனை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்தியாவும் சீனாவும் இந்த ஆண்டு மட்டும் செல்போன் நிறுவ னங்கள் 1,29,000 கோடி ரூபாயை அலைக்கற்றைகளுக்காகவும் இதர வசதிகளுக்காகவும் செலவிட்டுள்ளன. 2014-ல் அவற்றுக்கிடைத்த வருவாய் ரூ.1,76,000 கோடி. அதே நேரத்தில் சீன நிறுவனங்கள் 2014-ல் சுமார் ரூ.1,67,500 கோடியைச் செலவிட்டுள்ளன.

கால்-டிராப் என்ற உரையாடல் அறுபடல் நிகழ்வு இந்தியாவில் சராசரியாக 12.5% ஆக சில பகுதிகளில் இருக்கிறது. அதாவது பத்து பேரில் ஒருவருக்கு உரையாடல் அறுபடுகிறது. இந்த அறுபடல் அதிகபட்சம் 2% வரையில் இருக்கலாம் என்று இப்போதைக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் டெல்லியில் இது 3% விட அதிகமாகவே இருக்கிறது. மும்பையில் பரவாயில்லை.

இழப்பீடு தீர்வா?

இந்த இழப்புக்கு இரண்டு விதமாக நுகர்வோர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கருத்து டிராய் அமைப்பிடம் இருக்கிறது. பாதிக் கப்படும் நுகர்வோருக்கு பேசுவதற்கான நேரத்தை அதிகப்படுத் துவது, அல்லது கட்டணத்தைக் குறைப்பது என்ற இரு வழிகளில் இழப்பீடு அளிக்கப்படலாம் என்று அது கூறுகிறது.

இது தொடர்பாக நுகர்வோர் தங்களுக்குத் தோன்றும் ஆலோ சனைகளை மத்திய அரசின் MyGov website இணைய தளத்துக்கு இம் மாதம் 21-ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.

இதற்கிடையே மத்திய அமைச் சரவை கூடி, நாட்டின் பல்வேறு பகுதி களிலும் சேவைகளை அளித்துவரும் செல்போன் நிறுவனங்கள் தங்க ளுடைய கோபுரங்களையும் அலைக் கற்றைகளையும் பரஸ்பரம் பிற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொண்டு அதிகபட்ச வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த செலவில் சேவை அளிக்கலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது.

rangachari.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்