ramesh.m@hindutamil.co.in
இந்திய வங்கித் துறை அபாய கரமான சூழலில் இருப்பதை வங்கிகளின் நிதி நிலை தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்கள் உணர்த்துகின்றன. கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்த பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பிஎம்சி) முறைகேடு, அதைத் தொடர்ந்து கவனத்துக்குவந்த யெஸ் வங்கி மோசடி என வங்கிகளில் நிதி மோசடி தொடர்பான செய்திகளை தொடர்ச்சியாக கேள்விப்பட்டுவருகிறோம். வங்கிகளில் நிகழும் இத்தகைய மோசடிகள் வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கின்றன.
தற்போது அப்படியொரு நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட லட்சுமி விலாஸ் வங்கி. இந்திய வங்கித் துறை வரலாற்றில் இதுவரையில் நடந்திராத நிகழ்வு ஒன்று, சென்ற வாரம் லட்சுமி விலாஸ் வங்கியின் (எல்விபி) ஆண்டு பொதுக்கூட்டத்தில் அரங்கேறியுள்ளது. அந்தப் பொதுக்கூட்டத்தில் எல்விபி-யின் பங்குதாரர்கள் வங்கியின் இயக்குநர்கள் ஏழு பேரை பொறுப்புகளிலிருந்து வெளியேற்றியுள்ளனர். மோசடி மற்றும் வங்கி நிதியை தவறாக கையாண்டதாக டெல்லி காவல் நிலையத்தின் பொருளாதார பிரிவில் வங்கியின் இயக்குநர் குழு மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 94 ஆண்டு பாரம்பரியம் மிக்க வங்கி எவ்வாறு இப்படியொரு நிலைக்கு வந்தது?
மோசமான நிர்வாகம்
கரூரைச் சேர்ந்த ஏழு தொழிலதிபர்கள் இணைந்து 1926-ம் ஆண்டு லட்சுமி விலாஸ் வங்கியைத் தொடங்கினர். 1958-ம் ஆண்டு ஆர்பிஐ கட்டுப்பாட்டில் இயங்கும் வர்த்தக வங்கியாக மாற்றமடைந்த இவ்வங்கி 1961-ம் ஆண்டிலிருந்து 1965-ம் ஆண்டு வரையிலான நான்காண்டு காலகட்டத்தில் பெருமளவில் கிளைகளைத் தொடங்க ஆரம்பித்தது. 1974-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்துக்கு வெளியே தனது எல்லையை விஸ்தரிக்கத் தொடங்கிய எல்விபி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மும்பை, தலைநகர் டெல்லி, கொல்கத்தா, குஜராத், மத்தியப் பிரதேசம் என தற்போது மொத்தம் 19 மாநிலங்களில் 569 கிளைகள், 1,046 ஏடிஎம்கள் மற்றும் 7 விரிவாக்கக் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு மக்களின் நம்பிக்கையைப் பெற்று செயல்பட்டுவந்த எல்விபி சமீப சில ஆண்டுகளாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. வங்கியின் மோசமான நிர்வாகமே வங்கியின் தற்போதைய சரிவுக்கு காரணம் என்று கூறுகின்றனர்.
சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் வர்த்கர்களுக்கு மட்டுமே கடன் வழங்குதல் என்ற நிலையிலிருந்து மாறி பெரிய தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஆரம்பித்ததிலிருந்து பிரச்சினை ஆரம்பமானது. ரெலிகரே, ஜெட் ஏர்வேஸ் குழுமம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், நீரவ் மோடி குழுமம், காபி டே, ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கியுள்ளதாக வங்கியின் முன்னாள் ஊழியர் ஆர். சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
வரைமுறையின்றி வழங்கப்பட்ட கடன்கள் திருப்பி செலுத்தப்படாமல் போயின. 2017 கால கட்டத்தில் 2.67 சதவிகிதமாக இருந்த லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக் கடன் (NPA), மார்ச் 2020-ல்25.39 சதவிகிதமாக அதிகரித்தது. வங்கியின் நிரந்தர வைப்பு நிதி (fixed deposit) 31,000 கோடி ரூபாயில் இருந்து 15,143 கோடி ரூபாயாகச் சரிந்தது. வங்கியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் வங்கி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதன் காரணமாக வங்கி இத்தகையதொரு சரிவை எதிர்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக வங்கி ரூ.836.04 கோடி அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளது.வங்கியின் செயல்பாடுகளைக் கண்காணித்துவந்த ரிசர்வ் வங்கி, திருத்த நடவடிக்கைகளை (பிசிஏ) எடுக்குமாறு 2019-ம் ஆண்டிலேயே அறிவுறுத்தியது. வாராக் கடன் குறித்த விஷயத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்து. புதிய கிளைகள் தொடங்குவது, பங்குதாரர்களுக்கு ஈவுத் தொகை அளிப்பது உள்ளிட்டவை நிறுத்தப்பட்டன. வங்கியின் மூலதனம் குறைந்தது, சொத்து மீதான வருமானம் இரண்டு ஆண்டுகளாக சரிந்தது. இவை அனைத்தும் வங்கியின் சரிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
நம்பிக்கை இழப்பு
வங்கியின் நிர்வாகம் மீது அதிருப்திகொண்ட வாடிக்கையாளர்கள் வங்கியிலிருந்து வெளியேறியபடி இருந்தனர். வாடிக்கையாளர்களிடைய வங்கி மீது அவநம்பிக்கை அதிகரித்துவந்த நிலையிலே எல்விபி-யின் பங்குதாரர்கள் வங்கியின் இயக்குநர்களையே வெளியேற்றும் முடிவை எடுத்துள்ளனர். வங்கியின் இயக்குநர்கள் என். சாய் பிரசாத், ரகுராஜ் குஜ்ஜார், கோரிங்கா ஜகன்மோகன் ராவ், கேஆர் பிரதீப், பி.கே. மஞ்சுநாத், ஒய்என் லட்சுமிநாராயண மூர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வங்கியின் தினசரி நடவடிக்கைகளை நிர்வகிக்க, மீட்டா மக்கான், சக்தி சின்ஹா, சதீஷ் குமார் கால்ரா ஆகிய மூவர் அடங்கிய இயக்குநர் குழுவுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரம் வழங்கியுள்ளது.
ஓராண்டுக்கும் மேலாகவே உரிய முதலீட்டாளரை எதிர்நோக்கி வலை வீசி வருகிறது எல்விபி. கடந்த ஆண்டு இண்டியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைவது குறித்த பேச்சுவார்த்தை ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் ஹவுசிங் நிறுவனத்துடன் வங்கியை இணைப்பது சரியாக இருக்காது என்று இதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது ரிசர்வ் வங்கி. இதனால் வங்கி அல்லாத கிளிக்ஸ் கேபிடல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது எல்விபி. இரு நிறுவனங்களையும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தை ஏறக்குறைய இறுதி நிலையை எட்டியுள்ளது. ஏற்கெனவே இண்டியாபுல்ஸ் முதலீடு செய்வதற்கு மறுப்பு தெரிவித்த ரிசர்வ் வங்கி தற்போது கிளிக்ஸ் கேபிடல் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளை வாங்க முன்வந்தாலும்,அதற்கு ஆர்பிஐ முட்டுக் கட்டை போடலாம்.
மாற்று ஏற்பாடாக லட்சுமி விலாஸ் வங்கியை பஞ்சாப் நேஷனல் வங்கி கையகப்படுத்த ஆயத்தமாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வங்கியின் முதலீட்டாளர்களுக்கு பிரச்சினை இல்லை என்று கூறப்பட்டாலும், தொடர்ந்து நிதித்துறை மீதான நம்பகத்தன்மை மக்களிடையே குறைந்து வருவது கண்கூடு. ஏனென்றால் இந்தப் பிரச்சினை லட்சுமி விலாஸ் வங்கிக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்திய வங்கித் துறையே வாராக் கடன்களால் மிகப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
விஸ்பரூபம் எடுக்கும் வாராக் கடன்
# உலக அளவில் ஏனைய நாடுகளை விடவும் இந்தியாவில் வாராக் கடன் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மார்ச்சில் இந்திய வங்கிகளின் வாராக் கடன் 10.36 டிரில்லியன் ரூபாயாக இருந்து. அதன் பிறகு சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி வாராக் கடன் 9.4 டிரில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது.
# இவை வாரக் கடனாக அறிவிக்கப்பட்ட தொகைதான். ஆனால் வாராக் கடனாக மாறுவதற்கான சாத்தியம் கொண்ட கடன் தொகை அதிக அளவில் உள்ளது. கரோனா நெருக்கடி காரணமாக கடன்களை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அந்தக் கடன் தொகையில் 20 சதவீதம் உரிய காலத்தில் திருப்பி செலுத்தப்படாவிட்டால் கூடுதலாக 10 டிரில்லன் ரூபாய் வாராக் கடனாக சேரும்.
# அந்த வகையில் மொத்த வாராக் கடன் 20 டிரில்லி யன் ரூபாயை எட்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்தியாவின் வாராக் கடன் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
# மக்கள் வங்கியை நம்பியே தங்கள் பணத்தைப் போடுகின்றனர். வங்கிகள் இவ்வளவு அலட்சியமாக நடப்பது ஒட்டுமொத்த வங்கி அமைப்பின் மீது அவநவம்பிக்கை ஏற்படுத்துகிறது.
# பொருளாதார நெருக்கடி காரணமாக சமீபமாக மாதாந்திர வருமானம் ஈட்டும் ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுத்து வருகின்றனர். இதனால் வங்கியில் இருப்பு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் வங்கியின் நிதி நிலை இன்னும் நெருக்கடிக்கு உள்ளாகும்.
# ஒருபுறம் வாராக் கடன் அதிகரிப்பு, மறுபுறம் நிதி இருப்புக் குறைதல் என இந்திய வங்கிகள் மிக நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வருகின்றன. வங்கிகள் ஆட்டம் காண்பது ஒரு நாட்டின் பொருளாதார அடித்தளம் உடைந்து நொறுங்குவதன் அறிகுறி. என்ன செய்யப் போகிறது அரசு?
தனலட்சுமி வங்கியிலும் பிரச்சினை
தனியார் வங்கியான தனலட்சுமி வங்கியிலும் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ஆண்டு பொதுக் கூட்டத்தில் 90.49 சதவீத பங்குதாரர்கள் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுனில் குர்பக்ஸானிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். திருச்சூரை தலைமையிடமாகக் கொண்ட தனலட்சுமி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக மூன்றாண்டுகளுக்கு நியமிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருந்தது.
வங்கியின் செயல்பாடுகளுக்கும் குர்பக்ஸானியின் நடவடிக்கைகளுக்கும் ஒத்து வராது என்பதே முதலீட்டாளர்களின் பிரதான கருத்தாகும். இவர் பொறுப்பேற்ற சில மாதங்களில் வங்கியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த மூத்த அதிகாரிகள் பலரும் ராஜிநாமா செய்துள்ளனர்.
பகுதி நேர தலைவர் மற்றும் பொறுப்புகள் இல்லாத இயக்குநரான சஞ்ஜீவ் கிருஷ்ணனும் ராஜிநாமா செய்துள்ளார். இவருடன் இரண்டு இயக்குநர் குழு உறுப்பினர்களான கே.என். முரளி, ஜி. வெங்கட்நாராயணன் ஆகியோரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago