வட்டி விகிதம் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த செப்டம்பர் மாதத்தின் ஹாட் டாபிக். ஒரு பக்கம் அமெரிக்க மத்திய வங்கி உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, இன்னொரு பக்கம் இந்திய ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு என இரண்டு எதிர் பார்ப்புகளும் இடையே இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகமாகி வந்தன.
ஒரு எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தவில்லை என்று அறிவித்துவிட்டது. 2008-ம் ஆண்டில் இருந்தே 0 முதல் 0.25 சதவீதம் என்ற நிலையிலே வட்டி விகிதம் உள்ளது. இந்தியாவும் இப்போது குறைந்த வட்டி விகிதத்தை எதிர்நோக்கியுள்ளது.
ஏன் குறைந்த வட்டி?
பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கப் படுத்துவதற்காக வட்டி விகிதம் குறை வாக வைக்கப்பட்டிருக்கும். வட்டி குறை வாக இருந்தால், பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யாமல் ஏதாவது செலவு அல்லது முதலீடு செய்யப்படும். அப்போது பொருளாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும் என்பதுதான் லாஜிக்.
இதற்காகத்தான் கடந்த 2008-ம் ஆண்டு முதல் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப் படாமலே அமெரிக்க மத்திய வங்கி இருந்தது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை குறைவது மற்றும் பணவீக்கம் ஓரளவு அதிகரித்ததால் வட்டி உயர்த்தப்படும் என்று அமெரிக்க மத்திய வங்கி ஏற்கெனவே தெரிவித்தது.
பொருளாதார மந்தநிலை உச்சத்தில் இருந்தபோது வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இப்போது அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை பாதியாக 5.1 சதவீதமாக குறைந்தது. கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு இது குறைவாகும். இதனால் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்த நிலைமையில் கடந்த மாதம் சீனாவின் நாணய (யுவான்) மதிப்பு குறைக்கப்பட்டது. இதனால் சீன சந்தைகள் மட்டுமல்லாமல் சர்வதேச சந்தைகளும் சரிந்தன. சீனாவின் நாணய மதிப்பு குறைந்தால் சீனாவின் ஏற்றுமதி அதிகரிக்கும். சீனப்பொருட்கள் குறைவான விலைக்கு அமெரிக்காவில் கிடைக்கும். இதனால் உள்நாட்டு பொருள்களுக்கு தேவை குறையும். இதுதவிர, சர்வதேச பொருளாதார வளர்ச்சி சரியில்லை. சந்தைகள் ஏற்ற இறக்கமாக இருப்பதால் இப்போதைக்கு வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெனட் ஏலன் அறிவித்தார்.
அடுத்த நாளே இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன. பெரும்பாலான ஆய்வாளர்கள் இது இந்தியாவுக்கு நல்லது என்று அறிவித்தார்கள். தவிர பெரும்பாலான நிபுணர்கள் வரும் 29-ம் தேதி ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
என்ன காரணம்?
அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தினால் அங்கு முதலீடு குவியும். அப்போது இந்தியாவில் இருந்து முதலீடுகள் வெளியேறும். அப்போது வட்டியை உயர்த்த வேண்டும். குறைந்தபட்சம் குறைக்கா மலாவது இருக்க வேண்டும். இப்போது வட்டியை உயர்த்தாதால், நாம் குறைக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் இல்லாவிட்டால் அக்டோபர் கடைசியில் அல்லது டிசம்பர் ஆரம்பத்தில் அமெரிக்கா வட்டியை உயர்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அது தலைக்கு மேல் தொங்குகிற கத்தி என்பதில் சந்தேகம் வேண்டாம். இந்த நிலைமையில் ஊக்க நடவடிக்கை மூலம் வளர்ச்சியை உயர்த்துவது என்பது தற்காலிகமானது. பிரேசிலிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும் என்று ரகுராம் ராஜன் பஞ்ச் வைத்திருக்கிறார்.
அனைத்து கண்களும் செப் -29 க்காக காத்திருக்கின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago