வளைகுடா நாடுகள் இனி இந்தியர்களுக்கு கைகொடுக்காதா?

By முகம்மது ரியாஸ்

riyas.ma@hindutamil.co.in

அது தென்காசி மாவட்டத்தில் இருக்கும்ஒரு தனியார் கல்லூரி. வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருபவர்கள் கரோனா பரிசோதனைக்காகவும், அதைத் தொடர்ந்த தனிமைப்படுத்தலுக்காகவும் அந்தக் கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் தங்கவைக்கப்பட்டார்கள். நான், பல நாள் போராட்டத்துக்குப் பிறகு சென்னையிலிருந்து சொந்த மாவட்டமான தென்காசிக்கு அப்போதுதான் திரும்பியிருந்தேன். மொத்தம் நாற்பது பேர் அந்தக் கல்லூரி ஆடிட்டோரியத்தில் தங்கியிருந்தோம்.

என்னைத் தவிர அனைவரும் வெளிநாடுகளிலிருந்து பல சிரமங்களுக்கிடையே ஊர் திரும்பியவர்கள். ஒவ்வொருவரின் படுக்கைக்கும் அருகில் பெரிய பெரிய டிராலிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டை சுட்டியது. கத்தார், சவூதி அரேபியா, யுஏஇ, பஹ்ரைன்... ஒவ்வொரு டிராலிகளுக்குப் பின்னும் ஒவ்வொரு கதைகள். ஏப்ரல் மாதம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து தங்கள் சொந்த மாநிலங்களை நோக்கி கால்நடையாக சென்றுகொண்டிருந்த அதே வேளையில், வெளிநாடுகளில் பணிபுரிந்துகொண்டிருந்த இந்தியர்கள் வேலையிழந்து இந்தியா திரும்பிவர பரிதவித்துக்கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்தே மத்திய அரசு ‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் பல்வேறு நாடுகளில் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியர்களை இந்தியா அழைத்துவரும் முயற்சியில் இறங்கியது.

இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்துவந்த இந்தியர்கள் வேலையிழந்து சாரைசாரையாக இந்தியா திரும்பிவந்துகொண்டிருக்கிற தற்போதைய சூழலில், அவர்கள் மூலம் இந்தியாவுக்குள் வந்துகொண்டிருந்த அந்நிய செலாவணி பணவரவு நடப்பு ஆண்டில் 23 சதவீதம் அளவில் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டில் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் மூலமாக வந்த அந்நிய செலாவணி 83 பில்லியன் டாலராக உள்ள நிலையில், 2020-ம் ஆண்டில் அது 64 பில்லியன் டாலராகக் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 1.75 கோடியைத் தாண்டுகிறது. வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்பும் பணமதிப்பின் அடிப்படையில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. மட்டுமல்லாமல், இந்தப் பணவரவு இந்தியாவின் ஜிடிபியில் 5 சதவீதம் வரையில் பங்கு வகிக்கிறது. ஆனால், தற்போதைய கரோனா காலகட்டம் அனைத்தையும் நொறுக்கி உள்ளது.

இரண்டாம் தாய் நாடு

உலகின் அனைத்து மூலைகளிலும் இந்தியர்கள் புலம்பெயர்ந்து வேலை செய்துவந்தாலும்,வேறெந்த நாடுகளைவிடவும் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளே மிக நெருக்கமான பிராந்தியங்களாக உள்ளன. 1970-களில் வளைகுடா நாடுகளில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்நாடுகளில் பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டது. அதைத் தொடர்ந்து அந்நாடுகளின் உள்கட்டமைப்பை உருவாக்க பெருமளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை ஆகிய ஆசிய நாடுகளிலிருந்து தொழிலாளார்கள் வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் சென்றனர். அவர்களால் இந்தியாவைவிட அங்குப் பல மடங்கு ஊதியம் ஈட்ட முடிந்தது.

வேலைக்காக வளைகுடா நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் கேரளா முதல் இடத்தில் இருக்கிறது. கேரளத்தவர்கள் வளைகுடா நாடுகளை இரண்டாம் தாய்நாடாக கருதுகின்றனர். கேரளாவில் நான்கில் ஒருவர் வளைகுடா நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவராக இருக்கிறார். அம்மாநிலத்தின் ஜிடிபியில் மூன்றில் ஒரு பங்கு வளைகுடா நாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தினாலானது. கேரளாவுக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களே வளைகுடா நாடுகளிலிருந்து அதிகப் பணவரவைப் பெறக்கூடியதாக இருக்கின்றன.

கடல் கடக்கும் தலைமுறைகள்

தமிழகத்தில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லீம்கள் பெருமளவில் வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் குடும்பச் சூழல் காரணமாக பாஸ்போர்ட் எடுக்கும் வயதை எட்டாத பலரும் பள்ளிக்கல்வியை தொடராமல் போலியாக மீசை வரைந்து தங்கள் வயதை உயர்த்திக்கூறி வளைகுடா நாடுகளுக்குப் பயணப்பட்டனர். இந்தியாவில் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் ஈட்டமுடியாத வருமானத்தை சில ஆண்டுகளிலே அங்கு ஈட்டினர். பெரும்பாலும் அங்கு அவர்களுக்கு அடிமட்ட வேலைகள்தான் எனினும் அவர்களில் வாழ்க்கை தரத்தை உயர்த்தியதில் அவை முக்கியப் பங்காற்றி இருக்கின்றன. இத்தகைய வெளிநாட்டு வேலைகளால் தமிழகத்தில் பல குடும்பங்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளன.

வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் மூன்றுவகையான வேலைகளைப் பெறுகின்றனர். மருத்துவர், செவிலியர், பொறியாளர், நிர்வாகி போன்ற உயர்மட்ட வேலைகள்; ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளர், நட்சத்திர விடுதிகளில் சமையல் கலைஞர் போன்ற இடைமட்ட வேலைகள்;கட்டிட வேலை, பண்ணைகள், கடைகள், வீட்டுப் பணியாளர் போன்ற அடிமட்ட வேலைகள் என அவரவர் கல்வித் தகுதி சார்ந்து வேலைவாய்ப்புகள் அமைகிறது. முந்தைய தலை முறையில் தந்தைகள் அடிமட்ட வேலைகளுக்கு வளைகுடா நாடுகளுக்குச் சென்றனர். தற்போது அவர்களது பிள்ளைகள் பொறியியல் முடித்துவிட்டு அங்கு உயர்மட்ட வேலைகளில் அமர்கின்றனர். எனினும், அவர்களும் அவர்களது தந்தைகளைப் போலவே குடும்பத்தைப் பிரிந்து தங்கள் இளமைக் காலத்தை கழிக்க வேண்டிய நிலையிலே உள்ளனர்.

2000 -2008 வரையிலான காலகட்டத்தில் பொறியியல் முடித்து வளைகுடா நாடுகளுக்குச் சென்றவர்கள் பெரிய சிரமங்களின்றி வேலை பெற்றனர். ஆனால் 2008-ல் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்குப் பிறகுசூழல் மிகவும் மோசமாக மாறியது. எண்ணெய் வளம், கட்டுமானம் தொடர்பான வேலைகளே வளைகுடா நாடுகளில் அதிகம் உருவாகிவந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுவரும் சரிவும், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கமும் அங்கு புதிய வேலைகள் உருவாக்கத்தை தடுத்துள்ளன. தற்போது கரோனா அந்த நெருக்கடிநிலையை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது.

கதவை மூடும் வளைகுடா

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக, சமீப ஆண்டுகளாக வளைகுடா நாடுகள் பொருளாதார நிச்சயமின்மையை எதிர்கொண்டுவருகின்றன. அதை எதிர்கொள்ளும் நோக்கில் ஜிசிசி எனப்படும் வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு தங்கள் நாடுகளில்உள்ள வேலைவாய்ப்புகளில் பிற நாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து தங்கள் நாட்டினரைக் கொண்டு நிரப்பும் திட்டத்தில் இருக்கின்றன. அதற்கான நடவடிக்கைகளையும் அவை மேற்கொண்டுவருகின்றன. குவைத் கிட்டத்தட்ட 8 லட்சம் இந்தியர்களை வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. வளைகுடா நாடுகளிலிருந்து மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றமேற்கத்திய நாடுகளிலும் இந்தியர்கள் வேலையிழப்பை எதிர்கொண்டு இந்தியா திரும்புகின்றனர்.

அமெரிக்கா அங்குள்ள வேலை வாய்ப்புகளில் வெளிநாட்டினருக்கான முன்னுரிமையைக் குறைத்துவருகிறது.கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை எதிர்கொள்ளும் நோக்கில் பல நாடுகள் புதிய பொருளாதார கட்டமைப்பை உருவாக்கும் கட்டாயத்தை எதிர்கொண்டுள்ளன. தற்போது வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்கள் தாயகம் திரும்பி வருவது எதிர்- உலகமயமாக்கலாக (reverse globalization) பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்தியா கடந்த 45 வருடங்களில் இல்லாதஅளவில் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றிருந்தவர்கள் வேலைஇழந்து இந்தியா திரும்பிக்கொண்டிருப்பது மிகத் தீவிரமான நெருக்கடியை இந்தியாவுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

திசைகள் திறக்கும்

வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்களில் பெரும்பாலானோர், குறைந்தது 15 வருடங்களுக்கு அங்கு நன்கு சம்பாதித்து, பிறகு ஊரில் சிறிதாக தொழில் ஒன்றை ஆரம்பித்து ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கின்றனர். அதற்கேற்பவே அங்கு ஈட்டும் வருமானத்தை தங்கள் சொந்த ஊரில் நிலத்தில், தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். கணிசமாக வங்கிகளிலும் சேமிக்கின்றனர். தற்போது வேலையிழந்து இந்தியா திரும்பியுள்ளதால் அவர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக வங்கி இருப்பில் கைவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் வங்கிகளுக்கு இது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்.

எனினும் வெளிநாடுகளிலிருந்து தொழிலாளிகள் இந்தியா திரும்புவது இந்தியாவின் அடுத்த கட்ட பரிணாமத்தில் முக்கியப் பங்காற்றும். அங்கு ஈட்டிய செல்வம், பெற்ற தொழில் அறிவைக்கொண்டு தங்கள் நாட்டில் தங்கள் வாழ்வுக்கான வழியை உருவாக்கும் முயற்சியில் அவர்கள் இறங்குவார்கள். இந்தப் பாதை வலி மிகுந்ததாயினும், அது பல புதிய திசைகளைத் திறக்கும் என நம்புவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்