saravanan.j@hindutamil.co.in
கரோனா வைரஸ் பாதிப்பினால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் உண்மை நிலவரம் இதுவரையிலும் பேசப்படவில்லை. ஏனெனில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டும் இன்னமும் அத்தியாவசிய தேவைகளைத் தவிர பிற வர்த்தகங்களும் தொழில்களும் மீளவில்லை. எப்போது அனைத்தும் பழையபடி மீண்டுவரும் என்பது குறித்த தெளிவு இல்லை. மக்கள் நோய் தொற்றுக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். பெரும்பாலும் பணிச்சூழலும் வீட்டிலிருந்தபடி பார்க்கும் நிலைதான் உள்ளது. இப்போதைக்கு மக்களும் அத்தியாவசியங்களைத் தவிர்த்து பிற பொருட்களையும் சேவைகளையும் எதிர்பார்க்கவுமில்லை.
ஆனால், இந்தச் சூழல் இப்படியே நீடிக்காது. வேலை இழப்பு, ஊதியக் குறைப்பு ஆகியவற்றின் உண்மையான பிரச்சினைகள் இனிதான் விஸ்ரூபமெடுக்கும். மக்களின் சேமிப்பு ஏற்கெனவே கரையத் தொடங்கியிருக்கும். பெரும்பாலானோர் தங்களின் வருமானத்தை மீறிய செலவு வாழ்க்கை முறையில்தான் இருக்கிறார்கள். இதனால் பலருக்கு சேமிப்பு என்பதைவிட கடன்கள்தான் அதிகமாய் இருக்கின்றன. கடந்த நான்கு மாத வருமான இழப்பு என்பது பலரது வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியிருக்கும். எனவே வருமானம் ஈட்ட வழி தேடி மக்கள் வெளியே வந்தே ஆக வேண்டும். ஆனால், நடைமுறையில் அதற்கான வாய்ப்புகளும் சாத்தியங்களும் எந்த அளவுக்கு இருக்கின்றன?
1 அரசும் ரூ.20 லட்சம் கோடியும்: தற்போதைய நெருக்கடியில் இருந்து பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி தொகுப்பை அறிவித்தது அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால், இந்த நிதி தொகுப்பு என்பது மக்களுக்கான நிதி உதவியாகவோ நலத்திட்ட உதவியாகவோ இல்லை. மாறாக தொழில்களுக்கான கடன் உத்திரவாத திட்டங்கள் போன்றவையாகவே இருக்கின்றன. இந்த நிதி தொகுப்பு திட்டங்கள் இந்த ஊரடங்கு காலத்துக்குப் பிறகும் பிழைத்து நிற்கும் நிறுவனங்களுக்கு உதவுமே தவிர, நெருக்கடியால் மூட வேண்டிய நிலையில் இருக்கிற, அல்லது ஏற்கெனவே மூடப்பட்ட நிறுவனங்களுக்கு எந்தவகையிலும் உதவவில்லை.
மேலும் அரசு அறிவித்த இந்த நிதி தொகுப்பினால் அரசுக்குப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறையும் கடுமையான கடன் சுமையும் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அரசுக்கு இந்த நிதித் தொகுப்பில் உதவும் மிகப்பெரிய பொறுப்பு ரிசர்வ் வங்கியின் தலையில் விழுந்திருக்கிறது. ரிசர்வ் வங்கிதான் அரசுக்குப் பணம் வழங்க வேண்டும். நாட்டின் நிதி நிலையையும் ரூபாயின் மதிப்பையும் ஸ்திரமாக வைத்திருக்க தன்னுடைய சொத்துகளையும் செலவினங்களையும் சமநிலையுடன் வைத்திருக்கும் கடமையைச் செய்துவரும் ரிசர்வ் வங்கிக்கு தற்போது இந்த கூடுதல் பொறுப்பானது பெரிய சவால். அரசுக்கு நிதி வழங்க ரிசர்வ் வங்கி கூடுதலாகப் பணத்தை அச்சிட வேண்டும் என்ற யோசனையைப் பலர் முன்வைக்கிறார்கள்.
இதன்மூலம் ரிசர்வ் வங்கியின் செலவினங்கள் அதிகரிக்கும். நிதிநிலை சீர்குலையும்.இந்நிலையில் அரசுக்கு வேறு வழியே இல்லை. கடன் வாங்குவதும் மற்றும் சொத்துகளை விற்று நிதித் திரட்டுவதையும் அரசு மேற்கொள்ளும். இவற்றால் அரசின் கடன் சுமை அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டுக்கான அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கை முதல் காலாண்டிலேயே 83.2 சதவீதம் எட்டியிருக்கிறது. இதே காலாண்டில் அரசின் வரி வருவாய் 32.6 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்த சூழலில் அரசு முதலீடு என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.
2 ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதமும்: பொருளாதாரம் தற்போதுள்ள சூழலில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வேண்டுமா வேண்டாமா என்ற விவாதங்களுக்கு மத்தியில் கடந்த நிதி கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தில் மாற்றத்தை செய்ய வேண்டாமென்று முடிவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடி காரணமாக வட்டிவிகிதத்தை குறைத்து 4 சதவீதமாகக் கொண்டுவந்துள்ளது. இதற்கு மேலும் குறைப்பது என்பது ரிசர்வ் வங்கிக்கு ஆபத்தாக முடியும்.
காரணம், பணவீக்கத்தின் இலக்கு 4 சதவீதமாக உள்ளது. வட்டி விகிதம் 4 சதவீதத்துக்கும் கீழ் குறையும்போது ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆட்டம் காணத் தொடங்கும். ரிசர்வ் வங்கியின் வட்டி வருவாய் என்பது வட்டி விகிதத்திலிருந்து பணவீக்கத்தைக் கழித்த பிறகு மிஞ்சுவது. அப்படியிருக்கும்போது பணவீக்க விகிதம் வட்டி விகிதத்தை விடவும் அதிகமாக இருந்தால் ரிசர்வ் வங்கிக்கு ஏற்படும் இழப்பு அதன் நிதி சுமையை அதிகரிக்கும். இதனால் அதன் நிதி சமநிலை பாதித்து ரூபாய் மதிப்பை வலுவிழக்கச் செய்யும்.
3 முதலீடுகளும் வேலைவாய்ப்பும்: தற்போது பொருளாதாரம் உள்ள சூழலில் புதிய முதலீடுகள்தான் மிகவும் முக்கியம். புதிய முதலீடுகள் மூலம்தான் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க முடியும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இருப்பதற்கான சூழல் இருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை. பாஜகவின் இது வரையிலான ஆட்சியில் அரசின் முதலீடுகள் பெரிய அளவில் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம் ஏற்பட்ட வருவாய் இழப்பீடுகளைச் சரிசெய்யவே அரசின் வருவாய் சரியாக இருந்தது. தற்போதைய சூழல் இன்னும் மோசம். தற்போது அரசின் வரி வருவாய் என்பது வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் கடன் மற்றும் ஜிடிபிக்கு இடையேயான விகிதமும் அதிகரித்துள்ளது. கிட்டதட்ட 90 சதவீதம் உயர்ந்துள்ளது. மாநில அரசுகளின் வருவாயும் குறைந்துள்ளதால் நலத்திட்ட உதவிகளும் பெரிய அளவில் இருக்காது. எனவே அரசு முதலீடு என்பது சாத்தியமில்லாத ஒன்று.
எனவே அந்நிய முதலீடுகள், தனியார் முதலீடுகள் ஆகியவற்றை ஈர்ப்பதைவிட்டால் வேறு வழியில்லை. ஆனால், அரசு தற்சார்பு கொள்கையை அறிவித்துள்ளது. தற்சார்பு எனில் உள்நாட்டு சந்தைக்கான தேவைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது. இதுவரை இறக்குமதி மூலம் தேவைகளைப் பூர்த்தி செய்துவந்த நாம் இனி உள்நாட்டு உற்பத்தியை கைகொள்ள வேண்டுமெனில் அதற்கேற்ப முதலீடுகள் செய்யப்பட வேண்டும். ஆனால், முதலீடு செய்யும் சூழலில் இந்தியாவில் எத்தனை நிறுவனங்கள் தொழிலதிபர்கள் தொழில்முனைவோர்கள் இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி. இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் பல பெரிய நிறுவனங்களே தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகின்றன. பியூச்சர் குழுமம் கடனை சமாளிக்க முடியாமல் ரிலையன்ஸிடம் நிறுவனத்தை விற்கிறது.
வேளாண், டிஜிட்டல் துறை சார்ந்த நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவைத் தவிர பிற துறைகள் அனைத்துமே நிலையற்றத்தன்மையில் உள்ளன. சர்வதேச வர்த்தகமும் முன்புபோல் இல்லை. ஏற்றுமதி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. தேவையும் நுகர்வும் அதிகரித்தால்தான் புதிய முதலீடுகளுக்கு வாய்ப்பு உருவாகும். மீண்டும் நுகர்வு பழைய நிலைக்கு வருவதற்கு சில காலம் ஆகும். எனவே வரும் காலங்களில் வேலை வாய்ப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
4 ரியல் எஸ்டேட் துறையின் நிலை: அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் துறைகளில் ஒன்று ரியல் எஸ்டேட். ஆனால், ரியல் எஸ்டேட் ஏற்கெனவே பெரிய வீழ்ச்சியில் உள்ளது. தற்போது மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிழைப்புக்காக பெருநகரங்களை நோக்கி மக்கள் படையெடுத்ததால் ரியல் எஸ்டேட்டின் மதிப்பு குறையாமல் இருந்தது. துறை வீழ்ச்சி கண்ட நிலையிலும் வீட்டு விலையோ, வாடகையோ குறையவில்லை. ஆனால், இந்த ஊரடங்கு காலம் இதை தலைகீழாக மாற்றியிருக்கிறது. வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் சூழல் அதிகரித்ததால் பெருமளவிலான தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணி செய்தவர்கள் நகரங்களைக் காலி செய்துவிட்டு சொந்த ஊருக்குப் போயிருக்கிறார்கள். மேலும் புலம்பெயர் தொழிலாளர்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்பியாகிவிட்டது.
இந்த ஊரடங்கு காலத்தில் வாடகை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவித்ததை ஏற்றிருந்தால் ஒருவேளை மக்கள் வீடுகளை காலி செய்யாமல் ஊருக்குப் போயிருப்பார்கள் மீண்டும் நிலைமை சரியானால் திரும்பி வருவார்கள். ஆனால், எந்த உரிமையாளரும் வாடகை வேண்டாமென்று சொன்னதாகத் தெரியவில்லை. எனவே வீட்டிலிருந்து பணி செய்யும் சூழல், வேலைவாய்ப்பற்ற சூழல் போன்றவை நீடித்தால், நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துள்ள கட்டடங்கள் காலியாகும். வாடகை வீடுகள் காலியாகும். வீடு வாங்கி குடியேறுவதும் குறையும். உதாரணத்துக்கு சென்னையை எடுத்துக்கொண்டால் எங்கு பார்த்தாலும் வாடகை தட்டிகள் தொங்க ஆரம்பித்துவிட்டன. பல முன்னணி நிறுவனங்களின் அவுட்லெட்டுகள் கூட மூடப்பட்டுவிட்டன. அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்க ஆளில்லை. இவையெல்லாம் மாற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியாது.
5 வங்கிகளின் புதிய சிக்கல்: தற்போதுள்ள சூழலில் வங்கிகளின் தேவையும் சேவையும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆனால், வங்கிகளுக்குப் புதிய சிக்கல் ஒன்று உள்ளது. வங்கிகளின் இருப்பு என்பது அதிகமாகவும், கடன் வளர்ச்சி என்பது குறைவாகவும் உள்ளது. தற்போது தொழில்கள், வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், புதிதாகக் கடன் வாங்குவது என்பது குறைந்துள்ளது. ஏற்கெனவே வாங்கிய கடன்களும் கடன் ஒத்திவைப்பு திட்டத்தினால் திரும்ப வரவில்லை. இதனால் வங்கிகளின் வட்டி வருமானம் பாதித்துள்ளது.
அரசு அறிவித்துள்ள கடன் உத்திரவாத திட்டங்களும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. தொழில்கள் தங்களின் எதிர்காலம் என்பது என்னவென்று தெரியாமல் கடன்களை வாங்க தயாராக இல்லை. மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இழப்புகளைச் சரிசெய்ய கடன் வாங்குபவர்கள் அந்தக் கடனை எப்படி செலுத்துவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இப்படியான சூழலில் வங்கிகள் இருப்பு அதிகரிப்பு, கடன் வளர்ச்சி குறைவு மற்றும் வாராக்கடன் அதிகரிப்பு போன்ற சவால்களை எதிர்கொண்டிருக்கின்றன. இத்தனை சவால்களையும் மீறித்தான் இந்தியப் பொருளாதாரம் மீண்டு வர வேண்டியிருக்கிறது. அரசு இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு அதற்கேற்ப கொள்கைகளையும், சீர்திருத்தங்களையும் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் பொருளாதார பாதிப்பின் வடு ஆறாமலேயே தங்கிவிடும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago