புதிய பட்டதாரிகளின் கதி என்ன?

By முகம்மது ரியாஸ்

நினைத்துப்பார்த்திராத அளவில் சூழல் மாறி இருக்கிறது.இந்த நான்கு மாத ஊரடங்கு காலகட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பைவிட அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அதிக பாதிப்பைத் தந்திருக்கிறது. கரோனா பரவலுக்கு முன்பே இந்தியா மிக மோசமான பொருளாதாரச் சரிவையும், வேலையிழப்பையும் சந்தித்துவந்தது. தற்போது அது மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்தியா எதிர்கொள்ளும் பெரிய சவால்,வேலையிழப்பும் வேலையில்லா திண்டாட்டமும்தான்.

மார்ச் மாதத்தில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது,முதலில் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையிழப்பை எதிர்கொண்டனர். தொற்றுப் பரவலால் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படவும், பல்வேறு தொழில்களும் முடங்கின. நிறுவனங்கள் பலவும் வருமான இழப்பைச்சந்தித்துள்ளதால் பணி நீக்க நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதனால் தற்போது வேலையிழப்பு பூதாகரமாக மாறியிருக்கிறது. இந்தச் சூழலில் புதிதாக கல்லூரி படிப்பு முடித்து வெளிவரும் மாணவர்களின் நிலை என்னவாகும்?

வெடிக்கக் காத்திருக்கும் வேலையின்மை

மார்ச் மாதத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆரம்பத்தில் சில பல்கலைக்கழகங்கள் இணையவழி வகுப்புகளை நடத்தின. அதன் பிறகு நிலைமை தீவிரமடையவும் அவையும் நிறுத்தப்பட்டன. பெரும்பான்மையான பல்
கலைக்கழகங்கள் இறுதி வருட மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளையும் தற்போது ரத்து செய்துள்ளன. இந்த வருடம் 85 லட்சம் மாணவர்கள் பட்டதாரிகளாக வெளிவர உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அனைத்துக் கல்லூரிகளிலும் வளாக நேர்காணல்கள் நடைபெறுவதில்லை என்றாலும், இறுதி வருட மாணவர்களுக்கு உடனடி வேலை உத்தரவாதம் என்பது வளாக நேர்காணல்கள் மூலமே சாத்தியப்பட்டு வந்தது. பெரும்பாலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதிதாக பணியாளர் தேர்வுகள் நிகழும். தற்போது அது முற்றிலுமாகத் தடைப்பட்டு இருக்கிறது. மார்ச் மாதத்தோடு கல்லூரிகள் மூடப்பட்டதால் வளாக நேர்காணல்கள் முற்றிலுமாக நின்றுள்ளது. மட்டுமல்லாமல், முந்தைய மாதங்களில் வேலைக்கு தேர்வானவர்களும் இன்னும் பணிக்கு அழைக்கப்படாமல் இருக்கின்றனர். சில நிறுவனங்கள் வழங்கிய பணி ஆணைகளை ரத்து செய்துள்ளன.

மதிப்பிழக்கும் இழக்கும் சான்றிதழ்கள்

உதாரணத்துக்கு தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம். இங்கு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில்பவர்களில் பெரும் சதவீதத்தினர் வளாக நேர்காணல்கள் மூலம் வேலை பெறுபவர்கள் அல்ல. ஏனெனில்வளாக நேர்காணல்கள் என்பது முன்னணி கல்லூரிகளில் மட்டுமே நடைபெறுகிறது. மீதமுள்ள கல்லூரிகளில் பட்டப்படிப்புக்கான சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. அவரவர்க்கான வேலையை அவர்களேதான் தேடிப்பிடிக்க வேண்டும். பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை, படிப்பு முடித்த முதல் வருடத்திலேயே வேலை பெறுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. பெரும்பாலானோர் கல்லூரி முடித்துவிட்டு சில மாதங்கள் வீட்டிலேயே தங்கிவிடுகின்றனர்.

அதன் பிறகு சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வந்து வேலை தேடுகின்றனர். தற்போது ஒரு வேலையில் சேர்வதற்கு கல்லூரிப் பட்டம் மட்டும் போதாது. அந்தந்தத் துறை சார்ந்து அப்போது புழக்கத்தில் இருக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கற்க வேண்டும். அதற்கென்று மூன்று, ஆறு மாத கால அளவில் சான்றிதழ் படிப்பு இருக்கிறது. கல்லூரியில் ஒரு வருடத்துக்கு செலவிட்ட தொகையவிட இந்த குறுகிய கால சான்றிதழ் படிப்புக்கான தொகை அதிகம்.

ஆனால் அவற்றைப் படித்தால்தான் வேலை என்ற நிலை உருவாகி இருக்கிறது. அவற்றைப் படித்தப் பிறகும்அவர்களிலும் பலர் வேலை கிடைக்காமல் ஏதோ ஒரு வேலையைச் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாவதுண்டு. பெரும்பாலானோர் படித்தபடிப்புக்கு ஏற்ற வேலையில் இருப்பதில்லை. கிடைத்த வேலையில் ஒட்டிக்கொள்கிறார்கள். பலர் குடும்ப நெருக்கடி காரணாமாக தங்கள் படிப்புக்கு சம்பந்தமில்லாத, படிப்பே தேவையில்லாத வேலையில் இறங்கியுள்ளனர்.சோமேட்டோ, ஸ்விக்கி, டன்சோ என டெலிவரி பாய்களாக உள்ளனர்.

தேங்கி நிற்கும் வாழ்வு

தற்போதையை நிலையில் ஒரு பட்டாதாரி இளைஞன்,அவனது பெற்றோர் ஈட்டியதையும் விடவும் குறைவான வருமானம் ஈட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். புதிய பட்டதாரி ஒருவரின்ஆரம்ப நிலை ஊதியம் ரூ.10,000க்கும் குறைவு. படிப்பு முடித்து வேலையை பெறுவதற்கு நீண்ட காலம் செலவிடுதல் ஒருபுறம், குறைந்த ஊதியம் மறுபுறம் என பட்டதாரிகளின் வாழ்க்கைத் தரம் மோசமானதாக மாறி இருக்கிறது. அது அவர்களை பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லாமல் இருத்திவிடுகிறது. பெண்கள் விஷயத்தில் வேலைவாய்ப்பு என்பது அவர்களின் சுதந்திரத்துக்கான ஒரு வழியாக இருந்தது. தற்போது அதுவும் தடைபட்டுள்ளது.
வேலை செய்யும் வயதில் உள்ள இளம் வயதினர் அதிகம் இருப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கான காரணிகளில் ஒன்றாக எப்போதுமே பார்க்கப்படுவதுண்டு.

மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால் அவர்களின் படிப்புக்கான வேலைகள் இங்கு உருவாக்கப்பட வில்லை. விளைவாக, கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து இருக்கிறது. வங்கிகளில் வாராக் கடன்களில் கல்விக் கடனும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. துறைவாரியாகப் பார்த்தால் உற்பத்தி துறை மற்றும் கட்டுமானத் துறை அதிக வேலைவாய்ப்பை தரக்கூடியதாக இருந்தது. ஆனால், 2012 முதலே இந்தியாவில் இவ்விரு துறைகளில் முதலீடு குறிப்பிடும்படியாக நிகழவில்லை. வேலையின்மைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

மற்றத் துறைகளிலும் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் முதலீடுகள் செய்யப்படவில்லை. தற்போது கரோனா சூழலில் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இதனால் புதிய வேலை வாய்ப்புகள் என்பது தற்சமயம் முற்றிலும் இல்லாமல் போய்விடுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டாலும் நிறுவனங்கள் இயல்புநிலைக்குத் திரும்ப சில காலங்கள் பிடிக்கும்.தற்போது வேலையிழப்பைச் சந்தித்துள்ள அனுபவமிக்கவர்கள் புதிய வேலையைப் பெற முயல்வார்கள். இதனால் புதிய பட்டதாரிகள் இவர்களுடன் போட்டிபோட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

திறன் இல்லா இந்தியா

இவையெல்லாம்போக இந்திய இளைஞர்கள் வேலைக்கான திறன்களைக் கொண்டிருப்பதில்லை என்பதே பல நிறுவனங்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.பொதுவாக இங்கு கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுவதற்கும் தொழில் நிறுவனங்களில் பார்க்கக் கூடிய வேலைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. பெரும்பாலும் வேலையிடத்தில்தான் அவர்கள் அனைத்தையும் புதிதாகவே கற்றுக்கொள்கிறார்கள். இத்தகைய நிலையில் தான் இந்தியக் கல்விச் சூழல் இருக்கிறது.

இந்தியக் கல்வி அமைப்பின் போதாமையாலும்,வெளிநாட்டு கல்வி முறையின் மீதான ஈர்ப்பினாலும் வெளிநாடுகளில் சென்று படிப்பது பலரது கனவாகவே இருக்கிறது. ஆனால், தற்போதைய சூழலில் வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பது, வேலை செய்வது எல்லாமே சவாலாக மாறியிருக்கிறது. அங்கேயும் பல்கலைகழகங்கள் இணைய வழி வகுப்புக்களுக்கு மாறி உள்ளன. சமீபத்தில்,வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா தொடர்பாக அமெரிக்க அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகங்களில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறியுள்ள வெளிநாட்டு மாணவர்கள் இனி அமெரிக்காவில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இம்மாத முதல் வாரத்தில் அமெரிக்கா அரசு அறிவித்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பவும் தற்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும் இதுபோன்ற முடிவுகளை எப்போது வேண்டுமானலும் ஒரு நாடு அறிவிக்கும் என்ற நிலை உள்ளது. எனவே படிப்புக்காகவும் வேலைக்காகவும் வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை இனி குறையலாம்.

யதார்த்தம்

இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்க யதார்த்தம் இந்தியக் கல்வி அமைப்பில் நிலவும் ஏற்றத்தாழ்வை முகத்தில் அறைந்தாற்போல் காட்டுகிறது. இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரான குல்தீப் குமார், நான்காம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் தன் இரு மகள்களுக்கு ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட் போன் வாங்கப் போதிய பணம் இல்லாமல், அவருக்கு வருமானம் கொடுத்துவந்த மாட்டை விற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார். இப்படி பல வழிகளிலும் இந்தியாவில் கல்வி,வேலைவாய்ப்பு என்பது ஏற்றத் தாழ்வுமிக்க மிக மோசமான சூழலை எட்டியுள்ளது.

கல்வி சார்ந்தும் வேலை வாய்ப்பு சார்ந்தும் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அரசு உணர வேண்டும். மனிதத்தையும், சுதந்திர சிந்தனையையும், கற்பனையையும், தொழில் திறனையும் வளர்த்தெடுக்கும் கல்வி முறையையும், அதற்கான வேலை
வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமே இந்தியா உண்மையான வளர்ச்சியை நோக்கி நகர முடியும். இந்தப் பொறுப்பை அரசு தட்டிக்கழித்தால் மக்களின் வாழ்க்கைத் தரமும் நாட்டின் பொருளாதாரமும் தற்போது இருப்பதைவிடவும் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும்!

முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்