உன்னால் முடியும்: டிஜிட்டல் இந்தியா எங்களை வளர்க்கும்

By நீரை மகேந்திரன்

வெவ்வேறு இடங்களிலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று, ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்ட இரண்டு நபர்கள் இன்று பிசினஸ் பார்ட்னர்களாக இணைந்துள்ளனர். துபாயில்தான் முதலில் சந்தித்தோம். முதல் சந்திப்பின்போது இரண்டுபேருக்குமே தெரியாது நாங்கள் தமிழர்கள் என்று... பிறகு வேலைகளை சேர்ந்து செய்ய வேண்டிய சூழலில்தான் இரண்டுபேருமே தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டோம் என்று சுவராஸ்யமாக தொடங்கினர் முத்துக்குமாரும், சசிகுமாரும்.

பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வெளிநாடுகளுக்கு பறந்து திரிந்து வேலைபார்த்த இவர்களுக்கு சொந்த தொழில் தொடங்க ஆர்வம் வந்தது எப்படி? தொழில்முனைவோராக இறங்கிய பிறகு அதன் அனுபவம் எப்படி உள்ளது என்பதை வாசகர்களுக்காக கேட்டறிந்தோம்.

முதலில் முத்துக்குமார் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

உண்மையில் சொல்லப்போனால் எனது இந்த அளவுக்கான வளர்ச்சி என்பது திட்டமிட்டு வந்ததல்ல என்றுதான் சொல்வேன். ஒவ்வொரு வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொண்டதன் மூலம், அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதைத்தான் திரும்பிப் பார்க்க முடிகிறது என்று தொடங்கினார். அப்பாவுக்கு பூர்வீகம் காரைக்குடி பக்கம் என்றாலும், வேலை நிமித்தமாக திருப்பூரில் செட்டிலாகிவிட்டோம். குடும்பத்தில் நான்தான் மூத்த பையன்.

பனிரெண்டாவதில் சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவன்தான். ப்ளஸ் டூ- விற்கு பிறகு திருப்பூரில் பல வேலைகள். தொலைவழிக் கல்வியில் பிகாம் படித்துக் கொண்டே, ஒரு நண்பரது கம்ப்யூட்டர் சென்டருக்கு வேலைக்குச் சென்றேன். அங்கு லே அவுட் டிசைனிங் வேலைகளை கற்றுக் கொண்டேன். அதனோடு டேலி பயிற்சியும் படித்தேன்.

எனது தம்பி சென்னைக்கு படிக்க வந்த போது, அவனோடு நான் வேலை தேடிவந்தேன். ஒரு முன்னணி ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனத்தில் டேலியில் கணக்குகளைப் பார்ப்பதற்கான வேலை கிடைத்தது. அந்த நிறுவன கணக்கு வழக்குகளை டேலியில் செய்யும் காலத்திலேயே, அந்த நிறுவனம் விரிவாக்கப் பணிகளுக்காக பலரை வேலைக்கு எடுத்தது. அவர்களுக்கு டேலி பயிற்றுவிக்க என்னையே நியமித்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எனது திறமைகளை வளர்த்துக் கொண்டேன்.

பிறகு நிறுவனத்தின் சார்பில் பல பயிற்சிகள் கொடுத்ததுடன், மும்பை தலைமை அலுவலகத்துக்கே அழைத்துக் கொண்டனர். இதே காலகட்டத்தில் தொலைவழியில் இக்னோ பல்கலைக்கழகத்தில் எம்சிஏ சேர்ந்தேன். எஸ்ஏபி, இஆர்பி பல மென்பொருட்கள் பயிற்சி மற்றும் மேம்பாடு சார்ந்தும் கற்றுக் கொண்டேன்.

அடுத்து நான் சேர்ந்தது கோயம்புத் தூரிலிருந்து செயல்படும் ஒரு வெளிநாட்டு நிறுவனம். அந்த நிறுவனத்துக்காக நைஜீரியா, துபாய் என பல நாடுகளிலும் அவர்களது கிளைகளில் சாப்ட்வேர் இம்பிளி மெண்டேஷனுக்காக பணியாற்றினேன். அப்போதுதான் சசிகுமாரை சந்தித்தேன் என்று தனது பார்ட்னருக்கு அறிமுகம் கொடுத்தார். சசிகுமாருக்கு சொந்த ஊர் சென்னைதான்.

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன். சில்லரை வர்த்தகம், லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான பல நிறுவனங்களிலும் சாப்ட்வேர் தொடர்பான வேலைகளை செய்து கொண்டிருந்தேன். கடைசியாக துபாயில் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோதுதான் முத்துவை சந்தித்தேன். வேலை தொடர்பாக விவாதிக்கும்போதுதான் இதுபோன்ற புராஜெக்டுகளை தனியாக எடுத்துச் செய்தால் என்ன என்று திட்டமிட்டோம். இதற்காக துபாயில் இருந்து கொண்டே சென் னையில் நிறுவனம் தொடங்க திட்டமிட்டோம்.

முதலில் நிறுவனமாக பதிவு செய்து கொண்டு, ஆர்டர்கள் எடுக்க திட்டமிட்டோம். சிறிய வர்த்தக நிறுவனங்கள், சிறு உற்பத்தியாளர்களுக்கான மென்பொருட் களை கொண்டுசெல்வது என இறங்கினோம். ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை மென்பொருட்களுக்கு செலவழிப்பதை முதலீடாகக் கருதும் போக்கு இல்லை. மென்பொருட்களுக்கு ஆகும் செலவை இரண்டு வருடத்தில் பிரேக் ஈவன் எடுத்து விடலாம். மூன்றாவது வருடத்தில் இருந்து பராமரிப்பு செலவு மட்டுந்தான்.

ஆனால் ஒரு முறை செய்யும் முதலீட்டை செலவாகக் கருதுவதால், ஆண்டுக்கணக்கில் நிர்வாக செலவுகளை குறைக்காமலேயே செலவு செய்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது மைக்ரோசாப்ட் நிறுவன சாப்ட்வேர்களை மேம்படுத்திக் கொடுக்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தோடு கூட்டு வைத்துக் கொண்டு அவர்களது வாடிக்கையாளர்களுக்கு இங்கிருந்து செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நிறுவனத்தின் தொடக்க முதலீடுகள் எங்களது சேமிப்பிலிருந்துதான் செலவு செய்தோம். மேலும் ஆர்டர்கள் கிடைக்கும் வரை சமாளிக்க, முதலில் ஒருவர் வெளி நாட்டு வேலையிலேயே இருப்பது என தீர்மானித்து நான் வேலையிலேயே நீடித்தேன். தற்போது சில ஆர்டர்கள் கிடைத்துள்ளதால் முழுநேரமாக நானும் வந்துவிட்டேன் என்று சசிகுமார் தங்களது முயற்சிகளை கூறினார்.

நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பெரு நிறுவனங்கள் ஏற்கெனவே செய்து வருவதுதான் என்று சொல்லிவிட முடியாது. சிறு வர்த்தக நிறுவனங்களுக்கு சில லட்சங்களில் எஸ்ஏபி போன்ற நிர்வாக வேலைகளுக்கு உதவும் வேறு மென்பொருளை கொடுக்கிறோம்.

தமிழ்நாட்டில் இதற்கான அடுத்த கட்ட வேலைகளுக்கு திட்டமிட்டுள்ளோம். தற்போது மார்க்கெட்டிங் மற்றும் முதலீடுகளை திரட்டுவது என இரண்டு பக்க வேலைகளுக்கும் கவனம் செலுத்துகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட வேண்டிய முக்கிய பணிகளுக்கு புரிதல் கொண்ட நண்பர்களை இணைத்துள்ளோம். அடுத்த கட்டமாக இந்த வருட இறுதிக்குள் 10 பொறியியல் மாணவர்களுக்கு மென்பொருள் பயிற்சி கொடுத்து வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

எங்களது பணி அனுபவத்தை மட்டும் கொண்டு, வேறு எந்த பின்புலமும் இல்லாமல்தான் இந்த வேலைகளை மேற்கொண்டுள்ளோம். எங்களுக்கு முன்னர் வெற்றிபெற்ற மென்பொருள் நிறுவனங்களின் அனுபவம் உள்ளது. தமிழ்நாட்டில் சிறு வர்த்தக நிறுவனங்களில் மென்பொருளுக்கான தேவையும் உள்ளது. எதிர்கால இந்தியாவை தீர்மானிக்கும் டிஜிட்டல் இந்தியா என்கிற அரசின் திட்டமும் எங்களைப் போன்றவர்களுக்கு வெற்றிக்கான வாசலை திறந்து வைத்துள்ளது என்று நம்பிக்கையோடு பேசுகிறார்கள் இருவரும். நம்பிக்கை வெல்லட்டும்.

maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்