உன்னால் முடியும்: வாய்ப்புகளை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்

By நீரை மகேந்திரன்

திருப்பூரைச் சேர்ந்தவர் என்.வேல்குமார். பிகாம் படித்துள்ளார். படித்து முடித்ததும் பனியன் நிறுவனங்களுக்கு கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார்.

சொந்த ஊர் திருப்பூர். இவரது அப்பா இரும்பு கடை வைத்துள்ளதால் படிக்கும் காலத்தில் பனியன் தொழில் பக்கமே போனதில்லை.படித்து முடித்த பிறகுதான் வேலை தேடிச் சென்றேன். அதுவரை அந்த தொழில் குறித்து எதுவுமே தெரியாது என்றார். தினசரி கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்த வேல்குமார் இன்று சொந்தமாக பிரிண்டிங் யூனிட் வைத்து பதினைந்து நபர்களுக்கு வேலை அளித்து வருகிறார்.

இந்த வாரம் உன்னால் முடியும் பகுதியில் இடம் பெறுகிறார் இந்த இளம் தொழில்முனைவர்.

திருப்பூரைப் பத்தி சொல்லவே வேண்டாம் உங்களுக்கு... என பேசத்தொடங்கினார். இங்கு வேலையில்லை என வேறு ஊருக்கு வேலை தேடிச் செல்ல வேண்டியதில்லை. வெளியூரிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்கள்தான் பாதிக்கு பாதிபேர். வேலையில்லை என்று சொல்பவர்கள் இங்கு குறைவுதான். அப்படித்தான் கல்லூரி படித்து முடித்ததும் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லத் தொடங்கினேன்.

தினசரி ரூ.200 சம்பளம். 21 வயதில் எந்த அனுபவமும் இல்லாமல் வேலைக்குச் சென்றபோது அது பெரிய தொகைதான். ஆனால் ஒப்பிடுகிறபோது அது குறைவான ஊதியம். என்னோடு பணியாற்றிய என் வயதுடைய இதர பணியாளர்களுக்கு அனுபவம் காரணமாக அதிக ஊதியம் கிடைத்ததால், அப்படி யோசித்தேன். இதனால் அனுபவம்தான் இந்த தொழிலில் மூலதனம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

எனது அப்பா இரும்பு கடை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால் நானும் அந்த தொழிலை பார்த்துக் கொள்வேன் என நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் தனியாக சம்பாதிக்க வேண்டும் என்றுதான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். சில மாதங்களில் பனியன் நிறுவன வேலைகளில் சில நெளிவு சுளிவுகள் தெரிந்து கொண்ட பிறகு நானும் என் நண்பர் ஒருவரும் சேர்ந்து தனியாக பிரிண்டிங் யூனிட் போடலாம் என முடிவெடுத்தோம். ஆரம்பத்தில் கொஞ்சம் முதலீடு திரட்டி பனியன்களுக்கு பிரிண்டிங் செய்வதற்கு ஏற்ப இரண்டு இயந்திரங்கள் வாங்கினோம்.

பனியன் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் பிராண்டுகளின் பெயரை பிரிண்டிங் செய்வார்கள். அந்த குறிப்பிட்ட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினோம். முதலில் சின்ன சின்ன நிறுவனங்களாக போய் ஆர்டர் வாங்கி வந்து செய்து கொடுத்தோம். இரண்டு வருடங்களில் நல்ல வளர்ச்சி இருந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக திருப்பூரின் சாயப்பட்டறை பிரச்சினை காரணமாக மொத்த ஊரும் ஸ்தம்பிக்கும் நிலைமை, தொழில் நிலவரம் தலைகீழாக மாறிவிட்டது. பெரிய பெரிய நிறுவனங்கள்கூட உற்பத்தியை முடக்கும் நிலைமைக்குச் சென்றுவிட்டன. இதனால் எங்களைப் போல சிறிய அளவில் ஆர்டர் எடுப்பவர்கள் நிலைமையும் மோசமாகிவிட்டது. அப்போதுதான் எனக்குத் திருமணமாகியிருந்தது. தொழில் நலிவு காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி. சில நாட்கள் நிறுவனத்தை நடத்தாமல் மூடிவிட்டோம்.

ஆனால் இதிலிருந்து மீண்டால்தான் திரும்ப தொழிலில் நிற்க முடியும் என்பதால் மனைவியின் நகைகளை அடகு வைத்து தொழிலை விடாப்பிடியாக நடத்தினோம். வேலை தெரிந்த ஆட்களையும் விட்டுவிட முடியாது. இரண்டு வருட கடும் போராட் டத்துக்குப் பிறகு திருப்பூரின் நிலைமை கொஞ்சம் மாறத்தொடங்கியதும் மீண்டும் தீவிரமாக வேலைகளை தேடத் தொடங்கினோம். இப்போது தனித்தனியாக தொழிலில் இறங்குவது என நண்பரும் நானும் முடிவெடுத்தோம்.

அந்த இரண்டு வருட கடும் போராட் டத்திலும் தாக்கு பிடித்து காத்துக் கொண் டிருந்ததால், நிலைமை சீராகும் தருணத்தில் ஆர்டர்களை பிடிக்க முடிந்தது. தொழிலை விட்டு விட்டு மீண்டும் தொடங்கியிருந்தால், அந்த சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன் படுத்தியிருக்க முடியாது. அதற்கு பிறகு என் மனைவியின் நகைகளை திருப்பிக் கொடுத்ததுடன், வங்கிக் கடனுதவி மூலம் தொழிலை விரிவுபடுத்தினேன். இரண்டு இயந்திரத்திலிருந்து தற்போது நான்கு இயந்திரங்கள் கொண்டு தினசரி 10 ஆயிரம் பனியன்களுக்கு பிரிண்டிங் போடும் அளவுக்கு வளர்ந்துள்ளேன். 15 நபர்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று முடித்தார்.

அனுபவம் மட்டுமல்ல, வெற்றிக்காக காத்திருக்கவும், வாய்ப்புகளை சரியான நேரத்தில் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். இதுதான் வேல்முருகன் அனுபவத்திலிருந்து தெரிந்துகொள்ளும் பாடம் என்றால் மிகையில்லை.

maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்