உலக பொருளாதாரத்தை உருக்குலைக்கும் கோவிட்-19

By செய்திப்பிரிவு

சொக்கலிங்கம் பழனியப்பன்,
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட். www.prakala.com

கோவிட்-19 வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இதுவரை 80,000-க்கும் மேற்பட்டநபர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3,000 பேர் இந்தவைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 57 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) இந்த வைரஸை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

உலகமெங்கிலும் மக்கள் பிரயாணத்தை ரத்து செய்கின்றனர். கூட்டமாக ஒரே இடத்தில்கூடுவதை பல நாடுகள் தடை செய்துள்ளன. பள்ளி, தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு பல நாடுகள் விடுமுறை அறிவித்துள்ளன. மறுபக்கம் பல மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் இந்த வைரஸுக்கு தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க வெகுவேகமாக செயல்பட்டு வருகின்றன. உலகெங்குமுள்ள அரசாங்கங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுவருகின்றன.

நம்நாட்டில் இதுவரை 28 நபர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.மற்ற கோவிட்-19 பாதித்த நாடுகளைக் காட்டிலும் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாவிட்டாலும், மக்களிடையே பீதியை ஏற்படுத்திஇருக்கிறது. நமது பங்குச் சந்தை பெருவாரியாக சரிந்துள்ளது. அதுபோலவே பல சர்வதேச பங்குச்சந்தைகளும் பலத்த சரிவைச் சந்தித்துள்ளன.

இன்று, உலக வர்த்தகம் என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்து வளர்ந்துகொண்டிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் பல பெருகிவிட்டன. இன்று பல இந்தியநிறுவனங்கள், பல்வேறு நாடுகளில் தொழில்செய்து வருகின்றன. அதேபோல் ஒவ்வொரு நாட்டு நிறுவனங்களும், பல்வேறு நாடுகளில் தொழில்புரிந்து வருகின்றன. சாஃப்ட்வேரிலிருந்து சால்ட் வரைக்கும் உலக அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

கட்டிடம் கட்டுவதற்கு மணல்கூட நாம் இறக்குமதி செய்கிறோம். இவ்வாறு வர்த்தகம் உலக அளவில் செழிக்கும்போது, பரவக்கூடிய நோய்கள் ஏதேனும் வந்தால் அது வர்த்தகத்தைப் பெருவாரியாகப் பாதிக்கும். மக்கள் உயிருக்குப் பயந்து பிரயாணம் செய்ய மாட்டார்கள், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல மாட்டார்கள், வேலை செய்யும் இடங்கள் மூடப்படும், கல்வி நிறுவனங்கள் மாதக்கணக்கில் கூட மூடப்படலாம். ஹோட்டல்களுக்கு தங்க ஆட்கள் வரமாட்டார்கள், கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு ஆட்கள் வரமாட்டார்கள், இதுபோன்ற பொருளாதார சிக்கல்கள் வளர்ந்து கொண்டே செல்லும். தொழில் சில மாதங்களுக்கு இல்லையென்றால், நிறுவனங்கள் வாங்கியிருக்கும் கடனுக்கு, வங்கிகளுக்கு இ.எம்.ஐ செலுத்த முடியாது. இதனால் வங்கிகள் சிக்கலுக்கு உள்ளாகும். தொழில்கள் சரியாக நடக்கவில்லையென்றால் அரசாங்கத்துக்கு உரிய வரி வந்து சேராது. ஆக அரசாங்கமே சிக்கலில் மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

ஆக இதுபோன்ற தொற்று நோய்கள் பொருளாதாரத்தில் பேரழிவையே ஏற்படுத்தலாம். பழைய காலங்களைவிட இன்று உலகம் பல துறைகளில் அதிநவீனமடைந்திருந்தாலும், பயம் என்பது மாறாத ஒன்றாகவே இருக்கிறது. ஏனென்றால் இது உயிருடன் சம்பந்தப்பட்டதல்லவா? இன்றைக்கு உள்ள விஞ்ஞான வளர்ச்சியில், சீக்கிரமே இந்த கோவிட்-19 வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடுவார்கள். ஆனாலும், அதுவரை உள்ள காலம், கஷ்ட காலம்தானே? அதுவரை தொழில்கள் இழந்த இழப்பு, மீட்க முடியாததுதானே?

பொருளாதாரத்தைச் சீர்செய்ய பொதுவாக அரசாங்கங்கள் செய்யும் நடவடிக்கைகள் இதுபோன்ற நோய் பாதிப்புகளுக்கு பயனளிக்காது. உதாரணத்துக்கு, பொருளாதாரத்தை ஊக்குவிக்க வரிகளை குறைக்கலாம் அல்லது மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கலாம். ஆனால் அதுபோன்ற நடவடிக்கைகள் இந்த தொற்றுநோய் விஷயத்தில் பயனளிக்காது. பயனளிக்கக் கூடிய விஷயம் யாதெனில், இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதும், இந்த நோயை மேலும் பரவவிடாமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதும்தான்.

உலகப் பொருளாதாரத்துக்கு கடந்த காலத்தில் நாம் பிரச்சினை என நினைத்த அமெரிக்கா – சீனா வர்த்தக யுத்தம், சிற்சில நாடுகளில் நடக்கும் போர்கள், தீவிரவாத செயல்கள் போன்றவற்றைவிடவெல்லாம் பயங்கரமானது இதுபோன்ற தொற்றுநோய்கள். ஏனென்றால் வர்த்தக யுத்தம், போர்கள் போன்றவற்றில் நிறுவனங்களுக்கும் சரி, நாடுகளுக்கும் சரி மாற்று வழிகள் இருந்தன. ஆனால், இந்த விஷயத்தில் மாற்று வழி ஒன்றுமேயில்லை. அதனால்தான், உலகமே கோவிட்-19வைக் கண்டு நடுங்குகிறது. இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் போனால் பல நாடுகளில் நிறுவனங்கள் வேலையைவிட்டு ஊழியர்களை நிறுத்தும் அபாயம் உள்ளது. அது மேலும் நாடுகளின் பொருளாதாரங்களை வீழ்ச்சியடையச் செய்யும்.

சீனா தும்மினால் உலகத்துக்குஏன் சளி பிடிக்கிறது?

உலகளவில் சீனா இன்று இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும். அதுமட்டுமல்லாமல் சீனா, உலக அளவில் நம்பர் 1 வர்த்தக நாடாகும். உலகிலேயே மிகவும் அதிகமாக ஏற்றுமதி செய்யக்கூடிய நாடும் சீனாதான். 2017-ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின்படி, சீனா 2.41 டிரில்லியன் டாலர்களுக்கு உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. ஆனால், சீனா இறக்குமதி செய்ததோ 1.54 டிரில்லியன் டாலர்களுக்குத்தான். ஆக 873 பில்லியன் டாலர் வர்த்தகம் சர்ப்பிளஸ் ஆகும். (100 கோடி = 1 பில்லியன் மற்றும் 1,000 பில்லியன் = 1 டிரில்லியன்) இதுபோன்ற டிரேட் சர்ப்பிளஸ், அமெரிக்கா உட்பட, வேறு எந்த நாட்டுக்கும் இல்லை.

சாதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால், உலகின் பல நாட்டில் உள்ள பல கோடி மக்கள் தங்களது தேவைகளுக்கு சீனாவின் உற்பத்தியை சார்ந்து உள்ளார்கள். ஆகவேதான், சீனா தும்மினால் பல நாடுகளுக்கு சளி பிடிக்கிறது.

சீனா உலகுக்கு பல பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதிலும் உற்பத்தித் துறை சார்ந்த பொருட்களைத்தான் மிகுதியாக ஏற்றுமதி செய்கிறது. டெக்ஸ்டைல் துறை ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. மேலும் ரப்பர் டயர்கள், ஒயர்கள், வீடியோ உபகரணங்கள், லோ வோல்டேஜ் உபகரணங்கள், பொம்மைகள், தேயிலை,மரங்கள், தாதுக்கள், விலையுயர்ந்த உலோகங்கள், பேப்பர், சுத்தகரிக்கப்பட்ட பெட்ரோலியம் போன்ற பொருட்களையும், இன்னும் பல்வேறு பொருட்களையும் ஏற்றுமதி செய்கிறது.

உலகெங்கிலும் இந்தத் தொற்றுநோயின் பிரதிபலிப்பு பங்குச் சந்தை குறியீடுகளில் தெரிகிறது. சீனப் பங்குச் சந்தையின் குறியீடு சற்று குறைந்துள்ளது; காரணம் சீன அரசாங்கத்தின் குறுக்கீடு அதிகமாக இருப்பதுதான். இதுபோன்ற சமயங்களில் பல குறுக்கீடுகள் செய்து சந்தை அதிகமாக வீழ்ச்சி அடையாமல் சீன அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். அது தவறு என்றாலும், அங்கு யாராலும் அதை தட்டிக்கேட்க முடியாது.

சீனா தாக்கத்தின் வலியை அதிகமாக பல நாடுகள் உணர்வதற்கு ஒரு முக்கியக் காரணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடந்த 20 ஆண்டுகளில் தங்களுடைய தேவைகளுக்காக சீனாவை முழுக்க முழுக்க நம்பியிருந்ததுதான். பல பன்னாட்டு நிறுவனங்களின் போர்டு ரூம்களில் ஒரே நாட்டை சார்ந்திருப்பது புத்திசாலித்தனமா என்ற கேள்வி எழ ஆரம்பித்துள்ளது. சீனாவின்வலி இந்தியாவுக்கும் மற்றும் பல நாடுகளுக்கும் இனி வரும் காலங்களில் சாதகமாக அமையலாம்.

இந்தியாவுக்கு கூடுதல் சாதகம், இந்திய அரசாங்கம் சில மாதங்கள் முன்னர் அறிவித்த நிறுவன வரி குறைப்பு! நிறுவன வரி குறைவாக இருப்பதாலும், அதே சமயத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது ரிஸ்க்கை டைவர்ஸிஃபை செய்ய நினைப்பதாலும் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்க பல பன்னாட்டு நிறுவனங்கள் வரும் மாதங்களில் முன் வரலாம். இப்பிரச்சினையின் தொடர்ச்சியாக, சந்தைகளை சற்று ஊக்குவிப்பதற்காக வட்டிகளை பல மத்திய வங்கிகள் குறைக்கலாம் என பல நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். பல பொருளாதாரங்களுக்கு இந்த இன்னலில் ஒரு சிறிய நற்செய்தி என்னவென்றால், கச்சா எண்ணையின் விலை குறைந்துள்ளதுதான். கச்சா எண்ணெய்யின் விலை குறைவு இந்திய பொருளாதாரத்துக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.

கோடைக் காலம் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவும் என பலர் எதிர்பார்க்கிறார்கள். உலகெங்கிலும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் இந்த கோவிட்-19 வைரஸின் பிரச்சினைதான். பொருளாதாரங்கள் வீழ்ச்சி அடையும் நிலையில், தங்கம் ஒன்றுதான் தலைதூக்கிநிற்கும் என்ற நம்பிக்கைதான் இந்த விலை உயர்வுக்குக் காரணம். இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தவுடன், பங்குச் சந்தை உயரும். அச்சமயத்தில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படும்.

சீனாவின் முக்கியத்துவம்

இந்தியா அதிகமாக இறக்குமதி செய்வது சீனாவில் இருந்துதான்–69 பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி செய்கிறோம். அதே சமயத்தில் அந்நாட்டுக்கு நாம் ஏற்றுமதி செய்வது 15 பில்லியன் டாலர்களுக்குத்தான். ஆக, அந்த ஒரு நாட்டுடன் மட்டும் நமது வர்த்தக பற்றாக்குறை கிட்டத்தட்ட 54 பில்லியன் டாலர்கள் ஆகும். இதுபோல் பல நாடுகள் பற்றாக்குறையில்தான் சீனாவுடன் வர்த்தகம் புரிந்து வருகின்றன. அதாவது ஒவ்வொரு நாட்டுக்கும் சீனாவில் இருந்து ஏற்றுமதி அதிகம்; அதே சமயத்தில் அந்நாட்டில் இருந்து சீனா இறக்குமதி செய்வது குறைவு. இப்பிரச்சினை இருக்கும் வரைக்கும், சீனாவின் முக்கியத்துவம் உலகளவில் ஓங்கித்தான் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இதுபோல் பல தொற்றுநோய்களை பல கால கட்டங்களில் இந்த உலகம் சந்தித்துள்ளது. அன்றிருந்ததைவிடவெல்லாம் உலகம் இன்று மிகவும் நவீனமாக மாறிவிட்டது. ஆகவே, இந்த கோவிட்-19 வைரஸ் பிரச்சினைக்கு சீக்கிரமே தீர்வு கிட்டும் என்று நம்பலாம். அப்போது பொருளாதாரங்கள் மீண்டும் மேலெழுந்து வரும் என்ற நம்பிக்கையுடன் தொடர்வோம்! சீனா உலகுக்கு பல பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதிலும் உற்பத்தித் துறை சார்ந்த பொருட்களைத்தான் மிகுதியாக ஏற்றுமதி செய்கிறது. டெக்ஸ்டைல் துறை ஏற்றுமதியில் 
முன்னிலை வகிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்