எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com
ஜூன் 2001. ஈலானுக்கு வயது 30. மரணம்மலேரியா வடிவில் வந்து கதவைத்தட்டியதால், மனதில் பல ஆத்மசோதனைகள், எடை போடல் – நான்ஜெயித்தவனா இல்லை தோற்றவனா? இதுவரை இரண்டு ஸ்டார்ட் அப் கம்பெனிகள் தொடங்கியிருக்கிறேன். உயிரைவிட்டு உழைத்திருக்கிறேன். முதல் கம்பெனி ஜிப் 2. ஆனால், தொடங்கிய நிறுவனத்திலிருந்தே எட்டி உதைத்தார்கள். 22 மில்லியன் கிடைத்தது என்பது மட்டுமேஒரே திருப்தி.
இரண்டாம் கம்பெனி X.com. அதிலும் “எங்க ஏரியா, உள்ளே வராதே” கதை. கம்பெனி எங்கே போகிறதென்றே தெரியவில்லை. நிலைக்குமா அல்லது மூழ்குமா என்னும் கேள்விக்குறிகள். தான் நினைக்கும் மாற்றங்கள் எதுவுமேசெய்ய முடியாத கையறு நிலை. பணம் பண்ணுவது மட்டுமே வாழ்க்கையல்ல. இறந்தாலும் வாழும்படி மகத்தான மாற்றம் செய்ய வேண்டும். கனவுக்கோட்டைகள் ஒவ்வொன்றாகச் சிதறுகின்றனவே? வேடிக்கை மனிதரைப்போல் வீழ்ந்துவிடுவோமோ என்று பயம்.
X.com பொறுப்புகள் இல்லாததால், ஏகப்பட்ட நேரம் கைகளில். ஒவ்வொரு விநாடியும் உழைத்து உழைத்துப் பழகிய ஈலானுக்கு இது மாபெரும் தண்டனை. ஏதாவது செய்யும் துடிப்பு, வெறி. ரத்தத்தில் ஊறிய சிறுவயது விண்வெளிப் பயண ஆசை விழித்துக்கொண்டது. அவருடைய முதல் ஹீரோ, விமானப் பயணம் உயிர்மூச்சாக வாழ்ந்த தாத்தா ஜாஷுவா.
பாட்டியும் சாகச விரும்பி. கணவர் ஒற்றை எஞ்சின் விமானத்தில் ஆப்பிரிக்கா, ஆசியா வழியாக ஆஸ்திரேலியா போய்த் திரும்பும் 30,000 மைல்கள் துணிகரப் பயணம் செய்தவர். மெய்சிலிர்க்கும் தங்கள் அனுபவங்களை, The Flying Haldemans: Pity the Poor Private Pilot என்னும் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். இந்தப் பக்கங்களை ஈலான் சிறுவயதில் கரைத்துக் குடித்திருக்கிறார்.
அடுத்த தாக்கம், அவர் வாசித்த அறிவியல் புனைவுக்கதைகள். ஐசக் அஸிமோவ் எழுதிய Foundation, Foundation and Empire, and Second Foundation என்னும் மூன்று நூல்கள்; The moon is a harsh mistress என்னும் ராபர்ட் ஹைன்லைன் (Robert Heinlein) படைப்பு; டக்ளஸ் ஆடம்ஸ் உருவாக்கிய The Hitchhiker’s Guide to the Galaxy. விண்வெளிப் பயணத்தைச் சிலாகிக்கும் இந்தப் புத்தகங்கள் ஈலான் மனதில் கனவுலகையே உருவாக்கியிருந்தன.
இந்தப் புத்தகங்கள் பற்றி நினைவூட்டிக்கொள்ள அத்தியாயம் 4– ஐப் பார்க்கவும்.
கனவை நனவாக்க அவர் எடுத்த முதல் அடி, சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 356 மைல்கள் தூரத்தில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்குக் குடி பெயர்தல். காரணம்? அந்த நகரம்தான், விண்வெளி ஆர்வலர்களின் வேடந்தாங்கல். வருடத்தில் 300 நாட்கள் வெயில். பருவநிலையில் குறைவான ஈரப்பசை. பரந்து விரிந்த காலி இடங்கள். பறக்கும் சோதனைகள் நடத்த இவை அத்தனையும் மிகத் தோதான அம்சங்கள்.
லாக்ஹீட் (Lockheed) கார்ப்பரேஷன் என்னும் நிறுவனம் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் தயாரிப்பவர்கள். தங்கள் தொழிற்சாலையை லாஸ் ஏஞ்சல்ஸை அடுத்த ஹாலிவுட்டில் (ஆமாம், அமெரிக்காவின் கோடம்பாக்கமான ஹாலிவுட் நகரம்தான்) நிறுவியிருந்தார்கள். லாக்ஹீட் மட்டுமல்லாது, பிற ஊர்களில் தொழிற்சாலை வைத்திருந்த விமானத் தயாரிப்புக் கம்பெனி போயிங் (Boeing) கார்ப்பரேஷன், அமெரிக்க விமானப்படை ஆகியோர் சோதனை ஓட்டங்கள் நடத்தியது லாஸ் ஏஞ்சல்ஸில்தான். California Science Center – Air and Space Gallery, Museum of Flying , Western Museum of Flight, Tomorrows Aeronautical Museum என்னும் விமானங்கள் தொடர்பான அருங்காட்சியகங்கள் இங்கும், அருகாமையிலும் இருக்கின்றன.
விண்வெளி ஆர்வலர்கள் பல சங்கங்கள்அமைத்து, அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்தார்கள். தங்கள் ஆராய்ச்சிகளை, படித்தவற்றை, கேட்டவற்றைப் பகிர்ந்துகொள்ளும் அரங்கம். ‘‘மார்ஸ் சொசைட்டி” (Mars Society) அத்தகைய ஒரு அமைப்பு. செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது இவர்கள் கனவு. ஈலான் இந்தக் கழகத்தில் சேர்ந்தார். 500 டாலர்கள் அன்பளிப்பு கேட்டார்கள். 5,000 கொடுத்தார். ஆர்வலர்கள், விண்வெளி விஞ்ஞானிகள் ஆகியோர் அறிவுஜீவிகள். ஆனால், கோடீஸ்வரர்களல்ல. பணம் பத்தும் பேசுமே? அவரை இயக்குநர் குழு அங்கத்தினராகத் தேர்ந்தெடுத்தார்கள். கழகத்துக்கு ஒரு லட்சம் டாலர்கள் நன்கொடை தந்தார். மதிப்பு இன்னும் எகிறியது. ஈலான்அவர்களின் வாராந்தரக் கூட்டங்களில் தவறாமல் பேசுவார். பேசத் தொடங்கினால் நிறுத்தவே மாட்டார்.
தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் நாசா (National Aeronautics and Space Administration - NASA), அமெரிக்க நாட்டின் ஆராய்ச்சி நிறுவனம். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization, ISRO, (இஸ்ரோ) போன்றது. நாஸா விஞ்ஞானிகள் பலர் மார்ஸ் சொசைட்டியில் அங்கத்தினர்கள். ஈலான் இவர்களுடன் நட்புறவு ஏற்படுத்திக்கொண்டார். மார்ஸுக்கு ராக்கெட் மூலம் மனிதர்களை அனுப்பும் கம்பெனி தொடங்கப்போவதாகச் சொன்னார். அவர்கள் கேட்ட அடுத்த கேள்வி,``எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள்?”
ஈலானின் பெருமையான பதில்,``30 மில்லியன்.”
விஞ்ஞானிகள் மரியாதைக்காக அவருக்கு வாழ்த்துச் சொன்னார்கள். ஆனால், விரைவிலேயே ஈலான் கேலிப்பொருளானார். ஏனென்றால், 1969–ஆம் ஆண்டில் சந்திரனில் முதன்முதலாக அடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong), இரண்டாமவர் எட்வின் ஆல்ட்ரின் (Edwin Aldrin) ஆகியோரைச் சுமந்து சென்ற அப்பல்லோ 11 திட்டத்துக்கு அமெரிக்க அரசு செலவிட்ட தொகை 25.4 பில்லியன் டாலர்கள் (அன்றைய மதிப்பில் சுமார் 19,050 கோடி ரூபாய்.) ஈலானின் சொத்தான 30 மில்லியனை வைத்துப் பொம்மை ராக்கெட்தான் விடமுடியும் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு ஈலான் யாரென்று தெரியாது.
ஈலான் ஆழம் தெரியாமல் கால் வைக்கவில்லை. ஒவ்வொரு அடியையும் அளந்து வைத்தார். அவருடைய தீர்க்கதரிசனம், சிந்தனையின் பலமான அடித்தளம் யாருக்கும் புரியவில்லை என்பதுதான் நிஜம். மாபெரும் நாடகாசிரியர் பெர்னார்ட் ஷா சொன்னார், ``நீங்கள் எதையாவது பார்க்கும்போது, ஏன் என்று கேட்பீர்கள். நான் இதுவரை இல்லாத ஒன்றை நினைப்பேன். அது ஏன் இல்லை என்று கேட்பேன்.” ஈலானுக்கும் இதே மனப்போக்குதான். 30 மில்லியனில் விண்வெளிப் போக்குவரத்துக் கம்பெனியை ஏன் தொடங்கமுடியாது என்று கேட்டுக்கொண்டார். இத்தகையவர்கள் முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள். நான்கு பேர் ”உங்களால் முடியாது” என்று எதையாவது சொன்னால், கொழுந்துவிட்டு எரியும் வெறியோடு அதை நடத்திக் காட்டுவார்கள்.
எந்தத் தொழில் தொடங்கினாலும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதுஈலானின் கொள்கை விஞ்ஞானிகளிடம் ஆலோசனை. இதன்படி, Rocket Propulsion Elements, Fundamentals of Astrodynamics, Aerother modynamics of Gas Turbine and RocketPropulsion போன்ற கடினமான உயர் தொழில்நுட்பப் புத்தகங்களைப் படித்தறிந்தார். விஞ்ஞானிகளோடும் அறிவார்ந்த உரையாடல்கள் நிகழ்த்தும் தேர்ச்சி. எந்தத் துறையில் வெற்றி காண வேண்டுமானாலும், முதல் தேவை, விவரங்கள் சேகரித்தல். விஞ்ஞானிகளோடு உரையாடல்கள், கூட்டங்கள், புத்தகங்கள், நாளிதழ்கள், பத்திரிகைகள் எனப் படு மும்முர அறிவுத்தேடல்.
விண்வெளி பிசினஸில் அப்போது அரசாங்கங்கள் மட்டுமே ஈடுபட்டிருந்தன. தனி மனிதர்கள் யாருமே இல்லை. தன்னைப்போன்ற தனி மனிதன் ஜெயிக்கவேண்டுமானால், செலவை முடிந்த அளவு குறைக்க வேண்டும். அரசாங்கம் எப்போதுமே ஊதாரித்தனமாகச் செலவிடும். ஆகவே, தன் செலவை அவர்களோடு ஒப்பிடவே கூடாது. மலிவு விலையில் ராக்கெட்கள் எங்காவது கிடைக்குமா என்று தேடினார். விண்வெளி தொடர்பாக நடக்கும் பொருட்காட்சிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றுக்குப் போனார். அப்போது கிடைத்தது ஒரு சேதி – ரஷ்யாவில் ராக்கெட்கள் மலிவு விலைக்குக் கிடைக்கலாம். காத்திருப்பதே நம்ம ஆளுக்குக் கிடையாதே? முடிவெடுத்துவிட்டால், உடனே ஆக் ஷன்.
ரஷ்யா ஏன் அடிமாட்டு விலைக்கு ராக்கெட்கள் விற்க வேண்டும்? அரசியல், அரசியல், அரசியல்.
(புதியதோர் உலகம் செய்வோம்!)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago