சூரிய மின்னுற்பத்தி: இந்தியாவுக்கு டபிள்யூடிஓ நெருக்கடி

By வ.ரங்காசாரி

சூரிய மின்னுற்பத்தியில் இந்தியா புதிய இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி முன்னேறிவரும் வேளையில் உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) விதித்துள்ள தடை புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா அளித்துள்ள புகாரால் டபிள்யூடிஓ விதித்துள்ள இந்த தடை இத்துறை வளர்ச்சியில் தேக்க நிலையை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

`மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு அங்கமாக சூரிய மின்னுற்பத்திக்காக உள்நாட்டில் தயாரிக்கும் செல்கள் மற்றும் சூரிய பலகைகளை பயன்படுத்த வேண்டும் என்ற அரசு உத்தரவு செல்லாது என்று அறிவிக்குமாறு உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார் அளித்தது. அதை விசாரித்த டபிள்யூடிஓ இத்தகைய தடையை சமீபத்தில் விதித்துள்ளது. அமெரிக்கா அளித்த புகாரை ஏற்ற உலக வர்த்தக நிறுவனம், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான சாதனங்களைப் பயன்படுத்தும் விஷயத்தில் இந்தியத் தயாரிப்புகளுக்கும் வெளிநாட்டுத் தயாரிப்புகளுக்கும் இடையில் வித்தி யாசம் பார்க்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

இதை எதிர்த்து இந்திய அரசு மேல் முறையீடு செய்யும். இறுதித் தீர்ப்பு வர 2 ஆண்டுகள் பிடிக்கும், அதுவரை இந்தியாவில் சூரிய ஒளி மின்சார தயாரிப்புக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் செல்களையும் பலகைகளையும் பயன்படுத்த முடியும்.

இந்தத் தகவல் இன்னமும் அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் உலக வர்த்தக நிறுவன அதிகாரி ஒருவர் மூலம் கசியவிடப்பட்டுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் பல்வேறு இருதரப்பு வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொண்டுள்ளன. எனவே இந்திய அரசின் ஆணையால் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதிப்பு நேராமலும், இந்திய நிறுவனங்களின் பொருள்களுக்கு நல்ல பயன்பாடு இருக்கும் வகையிலும் தீர்வு காணப்படும் என்று இந்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க இந்தியா உகந்த நாடு. இங்கே ஆண்டின் பெரும்பகுதி நல்ல சூரிய ஒளி கிடைக்கிறது. கோடைக்காலங்களில் வெயில் வறுத்தெடுக்கிறது. சூரிய ஒளியிலிருந்து வெப்பத்தை ஈர்த்து அதை மின் ஆற்றலாக மாற்றும் தகடு மற்றும் பலகைகள் தயாரிப்பில் மேற்கத்திய நாடுகளும் சீனாவும் முன்னணியில் இருக்கின்றன. இந்தியாவிலும் இவற்றைத் தயாரிக்க முடியும் என்றாலும் இந்தியாவில் உற்பத்திச் செலவு மிகுதியாக இருக்கிறது. அதன் செயல்திறனும் குறைவாக இருக்கிறது.

ஒரு கோடி ரூபாய் மானியம்

சூரிய ஒளியிலிருந்து 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க சாதனங்களை நிறுவும் நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாயை மானியமாக தரத் தயார் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவிலேயே தயாராகும் செல் களையும் விசைப் பலகைகளையும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உள்நாட்டில் இந்தத் துறையில் முதலீடும் ஆராய்ச் சியும் அதிகரிக்க அரசின் இந்த ஊக்குவிப்பு நிச்சயம் உதவும். இந்திய நிறுவனங்கள் இந்தியத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தந்தால் தங்களுடைய தயாரிப்புகள் மிகப்பெரிய சந்தையை இழக்க நேரும் என்பதால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்சேபம் தெரிவிக்கின்றன.

உலகம் எங்கும் குறைந்த செலவில், நல்ல தரத்தில் பொருள்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உலக வர்த்தக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடப்போம் என்று உறுதியளிக்கும் நாடுகள்தான் அதில் உறுப்பு நாடுகளாக நீடிக்க முடியும். லாபத்தைவிட அதிகபட்ச பயன்பாடு என்பதுதான் இந்த உலக வர்த்தகத்தின் நோக்கமே. இதை அமெரிக்கா மனதில் கொள்ள வேண்டும்.

2022-க்குள் 1 லட்சம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இதில் மிகச்சிறிய அளவுதான், அரசின் மானியத்தைப் பெற்று தயாரிக் கப்படவுள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், பொது கட்டிடங்கள் போன்ற இடங்களில் கூரைகள் மீது நிறுவப்படவுள்ள சூரிய ஒளி மின்னுற்பத்தி அமைப்புகள் மூலம் மொத்தம் 40,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அரசின் மானியம் தரப்படும் திட்டங்களில் மொத்தமே அதிகபட்சம் 10,000 மெகாவாட் அளவுக்குத்தான் இருக்கும். அதிலும் 5,000 மெகாவாட் கூரை மீதுள்ள பிரிவுகள் மூலம் என்றால் எஞ்சியவை நிலத்தின் மீது நிறுவப்படும் சூரிய ஒளி மின்னுற்பத்திக் கருவிகள் மூல மானவை. எனவே இந்தியாவின் மானிய திட்டம் 10% மின்சாரத் தயாரிப்புக் கானதுதான். இந்த 10% மின்சாரம்கூட அதிகச் செலவில்தான் தயாரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது!

மேக் இன் இந்தியா சாத்தியமா?

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க இந்தியா ஆர்வமாக இருப்பதைப் பார்த்ததும் அந்தச் சாதனங்களை விற்று சாதனை படைக்க அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. இந்தியாவிலேயே தயாராகும் செல்களையும் விசைப் பலகைகளையும் பயன்படுத்துவதன் மூலம் மின்னுற்பத்திப் பிரிவு நிறுவனச் செலவுகளையும் இயக்கச் செலவு களையும் கணிசமாகக் குறைத்துவிட முடியும் என்று இந்தியா கருதுகிறது.

இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற இந்திய அரசின் லட்சியம் அதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அடுத்தது வேலைவாய்ப்பு. இந்தியாவில் இவற்றைத் தயாரிக்க ஊக்குவிப்பு கிடைத்தால் ஏராளமானோருக்கு வேலை கிடைக்கும். விலை குறைவாக இருந்தால் ஏராளமானோர் இவற்றை வாங்கி வீட்டில் நிறுவ ஆர்வம் காட்டு வார்கள் என்பதால் இந்திய அரசு சூரிய ஒளி மின்னுற்பத்தியை எல்லா நிறுவனங் களுக்கும் கட்டாயமாக்கியிருக்கிறது.

அமெரிக்காவின் இரட்டை வேடம்

உள்ளூர் தயாரிப்புகளையே பயன் படுத்த வேண்டும் என்ற இந்திய அரசின் உத்தரவு, வர்த்தகம் தொடர் பான முதலீட்டு முடிவுகளைக் கட்டுப் படுத்தும் தன்மையுடையது என்பதால் உலக வர்த்தக நிறுவனம் தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரியிருக்கிறது. அதே வேளையில் புதுப்பிக்கத்தக்க இயற்கை மின்னாற்றல் தயாரிப்புகளில் உள்நாட்டில் தயா ராகும் பொருள்களைக் கொண்டே சூரிய ஒளி மின்னுற்பத்தி சாதனங் களைத் தயாரிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு தன்னுடைய நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவே பிறப்பித்திருக்கிறது. உலக வர்த்தக நிறுவனத்திடம் மேல் முறையீடு செய்யும்போது இந்தியா அமெரிக்காவின் இரட்டை நிலையைச் சுட்டிக்காட்டி வாதிடும்.

ஏதாவது ஒரு பொருள் விலை குறைவு காரணமாக அமெரிக்காவில் அதிகமாக வந்து இறங்குகிறது என்றால் உள்நாட்டு தொழில், வர்த்தக நிறுவனங்களைக் காப்பதற்காக அமெரிக்கா உடனே அவற்றின் மீது வரி விதிக்கிறது. அந்த வரி விதிப்பு எப்படி இருக்கும் என்றால் அமெரிக்கப் பொருளின் அதிக விலைக்கும், இறக்குமதியாகும் வெளிநாட்டுப் பொருளின் குறைந்த விலைக்கும் இடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்பும் வகையில், விலையைச் சமப்படுத்தும் தீர்வையாக மாறிவிடும்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் மின்சாரம் தயாரிக்கப்படு வதை ஊக்குவிப்போம், சூரிய ஒளி மின்சார தயாரிப்பு முயற்சிகளில் ஒத்துழைப்போம் என்று அமெரிக்காவும் இந்தியாவும் இந்த ஆண்டின் முற்பகுதி யில்தான் ஒப்பந்தம் செய்துகொண்டன. அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது இந்தியா. இந்தியாவில் உள்ள வீடுகளுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் போதுமானதாக அல்லது கணிச மானதாக இருந்தால் அனல், புனல், அணு மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரத்தைத் தொழில் துறைகளுக்குத் திருப்பி விடுவது எளிதாக இருக்கும்.

இதனால் இப்போது நிலவிவரும் கடும் மின்சாரப் பற்றாக்குறையையும் போக்க முடியும். காற்று, சூரிய ஒளி ஆகிய இரு வழிகளில்தான் இந்தியா வால் மாசற்ற மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் வளர்ச்சிபெறவில்லை. இவற்றை யெல்லாம் தெரிந்து வைத்துள்ள அமெரிக்கா, இந்தியாவின் சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டங்களில் நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட ஒத்துழைக்க வேண்டுமே தவிர டபிள்யூடிஓ, உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் முட்டுக் கட்டை போடுவது என்பது அமெரிக் காவின் ஆதிக்க போக்கை வெளிப் படுத்துவதாகத்தான் இருக்கும்.

rangachari.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்