எண்ணித் துணிக: தலைமை பதவி லேசுப்பட்டதா?

By செய்திப்பிரிவு

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, satheeshkrishnamurthy@gmail.com

ஸ்டார்ட் அப் தொடங்குவதால் மட்டுமே ஒருவர் அதன் எம்.டி. ஆகலாமா என்று நான் சென்ற வாரம் கேட்டது சிலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தொழில் தொடங்குவதால் மட்டுமே ஒருவருக்கு அதன் தலைவனாகும் திறமை வாய்க்கிறதா என்று சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்திப் பேசலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அந்தப் பட்டிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்று. முதலீடு செய்வதால் மட்டுமே முதலாளி ஆக முடியாது என்பது என் எண்ணம். ஆகக் கூடாது என்பது என் திட்டவட்ட கருத்தும் கூட.

ஒரு குழந்தையைப் பெற்றதால் மட்டுமே ஒருவர் தந்தை ஆகிவிடுவாரா? அந்தக் குழந்தையைச் சரியாக வளர்த்து, நன்றாகப் படிக்க வைத்து,பதமாகக் கற்றுத் தந்து, நயமாகப் பேசி நல்லவனாக்கி, பெரியவனாக்கும் செயல்களைப் பொறுப்போடு செய்யும்போதுதான் ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கிறார். தன் மகனை சான்றோன் என்றுமற்றவர் சொல்ல கேட்கிறார். அப்பொழுதுதான் தந்தையாகிறார்! இதைஅனைவருமா செய்கிறார்கள். தந்தைக்கான கடமையைச் செய்யாதவர்களை, குழந்தைகளைச் சரிவர பராமரிக்கத் தவறுபவர்களை ‘இவனல்லவா அப்பா’என்றா போற்றுகிறோம்? ‘இவனெல்லாம் ஒரு அப்பாவா’ என்றல்லவா கழுவிஊற்றுகிறோம். அதனால் குழந்தையைப் பெற்றார் என்பதால் மட்டுமே ஒருவர் தந்தை ஆக முடியாது. தந்தை எனகூறவும் கூடாது. அப்படி கடமை தவறுபவர்கள் பெரிதுவக்கவும் முடியாது.

ஆக, பெற்றதோடு நிற்காமல் குழந்தையை வளர்க்க தெரிய வேண்டும் என்றாகிறது. குழந்தை என்றால் ஓகே. நாம் நம் பெற்றோரால் வளர்க்கப்பட்ட விதத்திலிருந்து, மற்றவர்கள் பராமரிக்கும் பக்குவத்தை கண்டு நம் குழந்தைகளை ஏதோ வளர்க்க முடிகிறது. வளர்த்தும் விடுகிறோம். ஸ்டார்ட் அப் அப்படியல்ல. அதை நிர்வகிக்க தனித் திறமைகள் உண்டு. பிரத்யேக தகுதிகள் உண்டு. பணமும், ஸ்டார்ட் அப்புக்கு ஐடியாவும் இருந்தால் மட்டுமே யாருக்கும் இது அப்படியே வாய்த்துவிடுவதில்லை.

பணம் இருக்கிறது என்பதால் ஸ்டார்ட்அப் தொடங்குகிறார் ஒருவர். பிசினஸ் ஐடியா கிடைத்தது என்பதால் அதைக்கொண்டு தொழிலை நிர்மாணிக்க ஆரம்பிக்கிறார். இதனால் மட்டுமே கம்பெனியின் தலைவன் சீட்டில் அமர அவர் நினைக்கலாம். ஆனால் அந்த சீட்டில் அமர்வதால் மட்டுமே தலைவனுக்கு தேவைப்படும் தகுதிகளும் தன்மைகளும் திறமைகளும் அவருக்கு கிடைத்துவிடுமா? தலைவர் நாற்காலிஎன்பது என்ன அத்தனை சல்லிசானதா? இல்லை மேஜிக் பாக்ஸா? உட்கார்ந்தவுடன் அத்தனை தகுதிகளும் சொய்யென்று அவருக்குள் சென்றுசங்கமிக்க!

ஒரு கம்பெனியை நிறுவி நிர்வகித்து நல்ல விதமாக நடத்துவது லேசுபட்ட காரியமல்ல. அப்படி லேசுபடாததால்தான் தொடங்கப்படும் பல கம்பெனிகள் காணாமல் போய் கடை சாத்தப்பட்டுவிடுகிறது. அதுவும் ஸ்டார்ட் அப் என்பது குழந்தை வளர்ப்புபோல. இருபத்தி நான்கு மணி நேர பராமரிப்பு பரிபூரணமாய் தேவை. முன்னூற்று அறுபத்தி ஐந்து நாளும் புதுசுபுதுசாய் பிரச்சினைகள் முளைத்த வண்ணம் இருக்கும். ஸ்டார்ட் அப்பை சரியாக நடத்த, கம்பெனியை நிர்வகித்துச் செல்ல, பள்ளம்மேடுகளில் பதமாகப் பயணிக்க பல தகுதிகள் தன்மைகள் திறமைகள் தேவை. பணம் இருப்பதால் மட்டுமே அது கிடைத்துவிடாது. ஐடியாஉங்களுடையது என்பதால் தலைவனுக்கு உண்டான குணங்கள் உங்களுக்கு ஆட்டோமெடிக்காய் அருளப்படுவதும் இல்லை.

முதலீடு செய்த பாவத்துக்கு தலைவனாகி தலைவர் நாற்காலியில் அமர்ந்துபோகப் போக அதை கற்றுக்கொள்ள முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். காரை காசு கொடுத்து வாங்கிவிட்டீர்கள் என்பதற்காக அதை கற்றுக்கொள்ளாமல் ஓட்ட முடியுமா? அட, நீங்கள் ஓனர் என்பதால் கார் தானே நீங்கள் உட்கார்ந்ததும் ஓடுமா. இரண்டு மூன்று பேரை இடித்து, நாலைந்து வண்டிகள் மீது மோதி ஏழெட்டு ஆக்சிடண்ட் செய்து ஒரு வேளை கற்றுக்கொள்ள முடியலாம். உங்களுக்கு ஆயுசு கெட்டியாக இருந்தால். ஸ்டார்ட் அப் எம்டி சீட்டில் அமர்ந்து தலைவனாகும் வித்தையை கற்றுக்கொள்வதும் அது போலவே. செய்யும் தொழிலுக்கு சேதாரம் வரும். செய்கூலி அதிகமிருக்கும். அதாவது உங்கள் ஸ்டார்ட் அப்புக்கும் உங்களைப் போல் ஆயுள் கெட்டியாக இருந்தால்!

ஸ்டார்ட் அப் என்பது தினம் நடக்கும்தீ விபத்து போல. விஷயம் தெரிந்தவனுக்கே ததிங்கினத்தோம் காட்டும். உங்களுக்கு அந்த அறிவும் திறமையும் இருந்தால் தாராளமாக எம்டி சேரில் அமருங்கள். அமர்வது என்ன அமர்வது, படுத்துக்கொண்டே நிர்வாகம் செய்யுங்கள், யார் வேண்டாம் என்றார்கள். என் முதலீடு, என் ஐடியா, என் பிசினஸ் அதனால் நான்தான் எம்டி என்று கூறுவது தப்பாட்டம். சிறுவர்கள் தெருவில் கிரிக்கெட் ஆடும் போது பேட் பால் என்னுடையது, அதனால் நான் தான் கேப்டன் என்று கூறும் சிறுவனுக்கும் உங்களுக்கு வித்தியாசம் இல்லாமல் போகும். தெரு கிரிக்கெட் பரவாயில்லை. தோற்றால் நஷ்டமில்லை. என் முதலீடு, என் ஐடியா அதனால் நான்தான் ஸ்டார்ட் அப்கேப்டன் என்று அமர்ந்தால் தொழில் தெருவுக்கு வந்துவிடும்!

நமக்கு வரவில்லை என்றால் வற்புறுத்தி அமராமல் நிர்வாகம் நன்குதெரிந்த ஒருவரை எம்டி சேரில் அமர்த்துங்கள். அவரோடு சேர்ந்து உழையுங்கள். அவரிடமிருந்து நிர்வாகம் கற்றுக்கொள்ளுங்கள். திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். அனுபவங்களை சேகரியுங்கள். ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிர்வாகம் நன்றாகத் தெரிய, நெளிவுசுளிவுகள் புரிய, நீங்கள் அந்த எம்டி சேரில் அமர முடியும். பேட் இருக்கிறது என்பதற்காக ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படாமல், திறமை இருக்கிறது என்பதற்காக நீங்கள் கேப்டனாக்கப்பட்டால்தான் உங்களுக்கே உங்கள் கம்பெனியில் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்.

அதெல்லாம் இல்லை, எனக்கு நிர்வாகத் திறமை உண்டு, கம்பெனியைவெற்றிகரமாக வழிநடத்திச் செல்லும் தகுதி உண்டு, நான் பெரிய எம்டியாக்கும் என்று இன்னும் பேசினால் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் தொடங்கிய தொழில் என்ற ஒரே காரணத்துக்காக எம்டி சேரில் அமர ஆசைப்படுகிறீர்களே, உங்களுடையது போலவே உள்ள இன்னொரு கம்பெனியில் உங்களுக்கு எம்டி வேலை கிடைக்குமா? உங்களை அழைத்து அமர்த்துவார்களா? மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதில் சொல்லுங்கள். மாட்டார்கள் என்றால் உங்கள் தொழில் மட்டும் என்ன பாவம் பண்ணியது சார்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 mins ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்