மக்களுக்கு என்ன செய்தது எல்ஐசி?

By செய்திப்பிரிவு

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் நிறை குறைகளைக் காட்டிலும் நாடு முழுவதும் அதிகம் விவாதிக்கப்பட்டது எல்ஐசி விவகாரம் என்றால் மிகையில்லை. எல்ஐசியின் பங்குகளை விற்கப் போவதாக அறிவித்த அடுத்த நொடி இணையதளங்களில் மீம்களும் கருத்துகளும் குவிந்தன. பாதுகாப்பான வாழ்க்கைக்கு எல்ஐசி பாலிசி எடு என்று சொல்வார்கள், இப்போது எல்ஐசிக்கே ஒரு பாலிசி எடுக்க வேண்டும் போலிருக்கிறதே என்பது போன்ற கலாய் ரகங்களும் அவற்றில் உண்டு. எல்ஐசி விஷயத்தில் ஏன் மக்களுக்கு இவ்வளவு ஆர்வம், இதுவரை ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப் போவதாக அறிவிக்கப்பட்டன. அவற்றுக்கெல்லாம் கிடைக்காத கவனம் எல்ஐசிக்கு ஏன் கிடைக்கிறது என்று பார்க்கும்போதுதான், ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் வாழ்க்கையில் எல்ஐசி என்ன பங்காற்றியிருக்கிறது என்பது புரியும்.

எல்ஐசி பாலிசி என்றாலே ஒருகாலத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடுவார்கள். எல்ஐசி ஏஜெண்டுகளின் பாடு படாதபடாக இருக்கும். காரணம், எல்ஐசியில் பாலிசி எடுத்தால் ஏதாவது கெடுதல் வந்து சேரும் என்று சிலருக்கு விநோதமான எண்ணம்கூட அப்போதெல்லாம் இருந்தது. அதுமட்டுமல்லாமல் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை திட்டத்தை முறையாக முடித்தால்தான் பலன். இல்லையெனில் கட்டிய பணம் திரும்பக் கிடைக்காது. ஆனால், ஆயுள் காப்பீடு பற்றியஎண்ணம் போகப் போக வாழ்க்கை முறையை மாற்றியமைத்தது. எல்ஐசியும் மக்களிடம் காப்பீடு குறித்த எண்ணத்தைப் போக்க பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது. அதேசமயம் பல கவர்ச்சிகரமான திட்டங்களையும் அறிவித்தது.

வருமானம் ஈட்டும் பலரும் தங்களுடைய எதிர்காலத்துக்காகவும், வாழ்க்கையில் முன்னேறவும், பிள்ளைகளின் படிப்பு, வேலை போன்றவற்றுக்காகவும் சேமிப்புகளைத் திட்டமிடத் தொடங்கிய பிறகுதான் காப்பீடு எடுப்பது குறித்தும் நல்ல முறையாக யோசிக்க ஆரம்பித்தார்கள்.

மக்கள் எப்போதுமே தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள். இதனால், பலரும் பலவகை சேமிப்புத் திட்டங்களில் பணத்தைச் சேமித்துவருகின்றனர். தங்கம், ரியல் எஸ்டேட், பிக்சட் டெபாசிட் எனப் பலவகைகளில். இந்த வரிசையில் காப்பீடுக்கும் இடம் இருந்தது. நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களும் கூட, சிறுக சிறுக சேர்த்து பாலிசி முடிவில் ஒரு நல்ல தொகைகிடைக்கும்படியான திட்டங்களை ஆர்வமுடன் செயல்படுத்திவந்துள்ளனர். இதன் மூலம் பலர் எல்ஐசி சேமிப்பை வைத்து வீடு கட்டியிருக்கலாம், மேற்படிப்பை முடித்திருக்கலாம், திருமணத்தை நடத்தியிருக்கலாம் இப்படி மக்களின் வாழ்க்கையில் பல்வேறு நல்ல விஷயங்களில் மக்களோடு மக்களாக எல்ஐசியும் நின்று, வாழ்ந்து, வளர்ந்திருக்கிறது. (சில தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் எல்லாம் இன்ஷூரன்ஸ் எடுத்தே பணக்காரர்களான கதைகளும் உண்டு!)

எல்ஐசி பலருக்கு நிதி சார்ந்த ஒழுக்கத்தையும், நெருக்கடியைச் சமாளிக்கும் வழியையும் பொறுமையையும் வளர்ச்சியையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. இதனால் மக்களுக்கு எல்ஐசி என்பது சேமிப்பு திட்டம் என்பதைத் தாண்டி, வாழ்க்கையோடும் கலந்திருந்தது. எல்ஐசி ஏஜெண்டுகள் பாலிசியை விற்பதில் நச்சரிப்பு செய்து தொல்லை கொடுத்தாலும், பாலிசிதிட்டங்களின் முடிவு காலத்தில் நல்ல பலனைத் தரும்போது அனைவரும் அடுத்த பாலிசி எடுக்க ஆர்வமுடன் தயாராவார்கள்.

இன்று எல்ஐசியின் கீழ் 40 கோடி பாலிசிதாரர்கள் இருக்கிறார்கள். மக்கள் தொகை கணக்கிட்டீன்படி பார்த்தால், உலகஅளவில் எல்ஐசி பாலிசிதாரர்களை ஒரு நாடாக நினைக்கும் பட்சத்தில், 3-வது பெரிய நாடாக விளங்கும். அப்படியொரு பாரம்பரியம் கொண்ட நிறுவனத்தின் நம்பகத்தன்மையை மத்திய அரசின் பங்கு விற்பனை முடிவு குலைத்துவிடுமோ என்ற பயம்தான் இப்போது எல்லோருடைய மனதிலும் எழுந்திருக்கிறது. 1956-ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தபோது தனியார் காப்பீட்டு நிறுவனங்களை நாட்டுடமையாக்கி எல்ஐசி எனும் பொதுத் துறை நிறுவனம் உருவாக்கப்பட்டது. அப்போது சில நிபந்தனைகள் வகுக்கப்பட்டன. எல்ஐசி-யில் வரும் லாபத்தில் 95 சதவீதத்தை மக்களுக்கு திருப்பித் தர வேண்டும், 5 சதவீதத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும். அன்றிலிருந்து இன்றுவரை எல்ஐசி இதைப் பின்பற்றிவருகிறது. அப்போது மத்திய அரசு மூலதனமாக எல்ஐசிக்கு ரூ.5 கோடி வழங்கியது. இன்றுஎல்ஐசியின் மதிப்பு ரூ.30 லட்சம் கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிலர் இந்த மதிப்பீடு குறைவு இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் எந்தவொரு நிறுவனத்தின் மதிப்பும் எல்ஐசியை நெருங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இத்தகைய பெருமை வாய்ந்த அரசு நிறுவனத்தை ஏன் பங்கு விற்பனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்?

மக்களுக்கு மட்டுமல்ல இந்தியப் பொருளாதாரத்துக்கும் எல்ஐசி மிக முக்கிய பங்காற்றியிருக்கிறது. எல்ஐசி திரட்டும் நிதியினை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சி பணிகளிலும் முதலீடு செய்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் எல்ஐசி நிறுவனம் நாட்டின் வளர்ச்சிக்காக உதவி வருகிறது. 2019-20-ம் ஆண்டில் மத்திய அரசுக்கு 3 ஆயிரம் கோடி நிதி வழங்கி உள்ளது.எல்ஐசி நல்ல முதலீட்டாளராகவும் இருந்துள்ளது. மக்களின் பணத்தை சரியான பங்குகளில் முதலீடு செய்து - நல்ல வருமானம் ஈட்டி லாபகரமான நிறுவனமாகத் தொடர்ந்து இருந்துவருகிறது. பல சமயங்களில் எல்ஐசி பணத்தை எடுத்து பொதுத் துறை வங்கிகளையும் நிறுவனங்களையும் மீட்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதும் இங்கே கவனிக்க வேண்டும். பல நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து நிறுவனங்களின் நிதிநிலை மோசமாகாமல் இருக்கவும் இது உதவியாக இருந்துள்ளது. எல்ஐசி இந்தியப் பங்குச் சந்தையில் 2019-20 நிதி ஆண்டில் ரூ.72 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இது அந்நிய முதலீட்டாளர்கள் செய்த முதலீட்டை (ரூ.65000 கோடி) காட்டிலும் அதிகம். பங்குச் சந்தையை நிலையாக வைத்திருக்க பலமுறை அரசு எல்ஐசியை பயன்படுத்தியிருக்கிறது. 2012-ல் அரசு விற்பனை செய்த 5 சதவீத ஓஎன்ஜிசி நிறுவனப் பங்கில் 4.4% பங்கை வாங்கியது எல்ஐசி. இப்படி எல்ஐசியில் நிதி தொடர்பான முடிவுகள் பல எடுக்கப்பட்டபோது பெரிய அளவில் பிரச்சினைகளை உருவாக்கவில்லை. முழுவதுமாக அரசு நிறுவனமாக இருந்ததால் முடிவுகள் எடுப்பதில் பிரச்சினை இல்லாமல் இருந்தது. தனியார் பங்கீடு இருந்தால் இனி இதுபோன்ற முடிவுகள் எடுப்பதில் பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. பட்டியலிடப்படுவதால் வெளிப்படைத்தன்மை வரும் என்றாலும், முதலீட்டு முடிவுகள் குறித்து இயக்குநர் குழுவில் எழும் சிக்கல்கள்தான் இப்போது பேசுபொருளாக இருக்கிறது. பங்குதாரர் யார் வேண்டுமானாலும் நிறுவனத்தின் முதலீடுகள் குறித்து கேள்வி எழுப்பலாம். இதற்கான விதிமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் வருமா என்பதும் பார்க்கப்பட வேண்டும்.

அதேபோல் எல்ஐசியின் லாபத்தை பகிர்ந்தளிப்பதில் உள்ள விதிகளில் மாற்றங்கள் வருமா என்பது அடுத்த கேள்வி.தனியார் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் பாலிசிதாரர்களுக்கு அதிகபட்ச போனஸை எல்ஐசி வழங்குகிறது. தனியார்நிறுவனங்கள் 10 சதவீதத்தை பங்குதாரர்களுக்கும் 90 சதவீதத்தை பாலிசிதாரர்களுக்கும் வழங்குகிறது. எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு 95 சதவீதத்தை வழங்குகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் இந்த லாப பகிர்வு என்பது பங்குதாரர்களுக்கும் பாலிசிதாரர்களுக்கும் இடையே பிரச்சினையை உருவாக்கலாம். மேலும், எல்ஐசி தனது அனைத்துவிதமான நிதி நிலை நிகழ்வுகளையும், கடன் விவரங்களையும் செபிக்கு குறிப்பிட்ட காலத்தில் வழங்கியாக வேண்டும். பங்குதாரர்கள் அனைவருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டும்.

5 சதவீத பங்கை விற்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என்று கேள்விக்கு எல்ஐசி ஊழியர்கள் தரப்பில் சொல்லப்படுவது இதுதான். பங்குகளை வாங்கி உள்ளே வரும் கார்ப்பரேட்டுகள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வருவதில்லை, லாபம் ஈட்டுவதற்காக வருபவர்கள், மக்களுக்குத் தர வேண்டிய 95 சதவிகிதத்தைக் குறைப்பார்கள். நிர்வாகக் கட்டமைப்பை சிதைப்பார்கள் என்கிறார்கள். இந்த வாதத்தையும் மறுக்க முடியாது. காரணம், ரயில்வே, ஏர்வேஸ், வங்கிகள் என எல்லாவற்றிலும் தனியாரின் பங்களிப்பு சந்தையில் போட்டியை உருவாக்கி இருந்தாலும் மெல்ல அவை மக்களின்மீது அதிக செலவையும் திணித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தரமான சேவையைப் பெற அதிகம் செலவு செய்யத்தான் வேண்டும் என்ற போக்கு தனியார்மயம் அதிகரித்துவருவதால் தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது.

காப்பீட்டு துறையில் பல தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தாலும் எல்ஐசியின் இடத்தை நெருங்கக் கூட முடியவில்லை.

அதற்கு முக்கிய காரணம் அரசு தரும் உத்தரவாதம் எல்ஐசியிடம் இருப்பதாலும், எல்ஐசி தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் சிறப்பான சேவைகளை வழங்கிவருவதும்தான். அரசு நிறுவனம் நன்றாக சேவை வழங்கினால் அதை தவிர்த்து வேறு தனியார் நிறுவனங்களை நாடி மக்கள் போவதில்லை என்பதற்கு சரியான உதாரணமாக எல்ஐசி இருக்கிறது. இப்போது அதற்கும் பங்கம் நேர்கிறதோ என்ற எண்ணம் எல்லோரிடமும் எழுந்துள்ளது.

எல்ஐசி விஷயத்தில் அரசு எடுக்கும் முடிவு நடுத்தர மக்களின் கடின உழைப்பால் சிறுக சிறுக சேர்த்த பணத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வெளிப்படைத்தன்மை அவசியம்தான். அதேசமயம் எல்ஐசி பாலிசியின் அரசு உத்தரவாதம் காக்கப்படும் என்றாலும், நிர்வாகத்திலும், நிதி தொடர்பான முடிவுகளிலும் எந்த பிரச்சினைகளும் எழுந்துவிடக்கூடாது. தனியார் பங்களிப்பை ஊக்குவித்தால் நிச்சயம் அது நிர்வாகத்திலும், நிதி சார்ந்த முடிவுகளிலும் மாற்றங்களை நிகழ்த்தவே அதிக வாய்ப்புள்ளது என்பதையும் மறுக்க முடியாது. எனவே அரசு எல்ஐசி விஷயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்காமல் தீர ஆராய்ந்து முடிவெடுக்கலாம். ஏனெனில், எல்ஐசி மக்கள் சொத்து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்