வயிற்றில் அடிக்கும் ‘‘ஜீரோ-அவர்’’ வேலை ஒப்பந்தம்!

By வ.ரங்காசாரி

வேலையில்லாத் திண்டாட்டத் தைப் போக்க அரசுகள் முயற்சி எடுத்த காலம் போய்விட்டது. ‘கிடைக்கிற வேலையில் சேர்ந்துகொள், நிர்வாகத்துக்குப் பிடிக்கிறவரை வேலையில் இரு’ என்று அரசுகளே சொல்லத் தொடங்கிவிட்டன. நிரந்தர வேலை என்பது அருகிவிட்டது; ஒப்பந்த வேலை என்பதும் ‘நேர’ அடிப்படையிலும் ‘உருப்படிகள்’ அடிப்படையிலும் தொழிலுக்குத் தொழில் வேறுபடுகிறது. இப்போது பெரிய தொழில் நிறுவ னங்கள் ‘‘ஜீரோ-அவர்’’ (Zero-Hour) பணி ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் இது நடைமுறையில் இருக்கிறது.

‘‘ஜீரோ-அவர்’’ பணி ஒப்பந்தம் என்றால் வழக்கமான நேரத்தில் பிற தொழிலாளர்களுடன் ‘‘ஜீரோ-அவர்’’ ஒப்பந்த தொழிலாளர்களும் அந்த ஆலைக்குச் செல்ல வேண்டும். உள்ளே வேலை அதிகம் இருந்தால் இவர்களுக்கும் வேலை தரப்படும். வேலையைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும். உள்ளே நுழைந்த உடனேயே வேலை தரப்படும் என்பது நிச்சயமல்ல. வழக்கமான தொழிலாளர்களுக்கு வேலை பிரித்துத் தரப்பட்டவுடன் அவர்கள் வேலையை முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் பொருத்து, அல்லது சிறிது நேரம் கழித்து மேலும் வேலை வந்து சேருவதைப் பொருத்து ‘ஜீரோ-அவர்’ ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலை தரப்படும்.

இவர்கள் ஆலைக்குள் 8 மணி நேரம் இருந்தாலும் 12 மணி நேரம் இருந்தாலும் அவர்கள் ஆலையில் இருந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு தரப்பட மாட்டாது. இவர்கள் அந்த வேலையைச் செய்து முடிக்க மொத்தம் எத்தனை மணிநேரம் எடுத்துக்கொண்டார்கள் என்று தனியாகக் கணக்கிடப்படும். இதற்குத்தான் நவீன சாதனங்கள் பல வந்துவிட்டனவே? எனவே ‘வேலை செய்த நேரத்துக்கு’ மட்டுமே ஊதியம் வழங்கப்படும். வேலை செய்யாமல் ஆலையிலேயே இருந்த நேரத்துக்கு ஊதியம் கிடையாது.

வேலைதேடும் மூத்தவர்கள் இந்த ‘ஜீரோ-அவர்’ ஒப்பந்த வேலையை ஒப்புக்கொள்வதில்லை. நாள் முழுக்க வேலையில்லாமல் இருந்தாலும் இருக் கலாம், இப்படி வேலை செய்த நேரத் துக்கு மட்டும் கணக்கிடப்படும் ஊதிய முறை வேண்டாம் என்று அவர்கள் நிராகரித்துவிடுகின்றனர். இதுவரை வேலையே கிடைக்காத இளைஞர்கள் இந்த முறையில் வேலைசெய்ய வருகின்றனர். ஓரிரு மணி நேரத்துக் காவது வேலைசெய்து கூலி பெற வேண்டும் என்பதும், வேலை செய்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதும் அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது.

தொழிலாளர்களைச் சுரண்டும் முறை இது என்பதில் சந்தேகமே இல்லை. ஆலைக்குள் வேலை கிடைக்கும் என்று காத்திருக்கும் நேரத்தில், வெளியில் வேறு எங்கு வேலை இருந்தாலும், அதுபற்றிய தகவல் கிடைத்தாலும் அந்த வேலைக்குச் செல்ல முடியாது. நாள் முழுக்க உள்ளே வைத்துக்கொண்டுவிட்டு ‘இன்றைக்கு வேலை கிடையாது போங்கள்’ என்றாலும் வெறுங்கையோடுதான் போக வேண்டும்.

மேலை நாடுகளில் வேலை கிடைக்கா தவர்களுக்கு அரசே உதவித் தொகை வழங்குகிறது. சில நாடுகளில் சாப்பாட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அதைக் கொண்டுபோய் எந்த உணவகத்தில் கொடுத்தாலும் அதில் உள்ள பண மதிப்புக்கு உணவு கொடுத்துவிடுவார்கள். இப்படி ‘ஜீரோ-அவர்’ ஒப்பந்த வேலைக்குப் போனால், அந்த அரசு உதவியும் நின்றுபோய்விடுமே என்ற அச்சத்தில் பலர் வேலைக்குப் போவதில்லை.

ஒரு நாள் முழுக்க ஆலையில் இருந்தாலும் ஓரிரு மணி நேரம் மட்டுமே வேலை, அதற்கேற்ற கூலி என்றால் குடும்பச் சாப்பாட்டுக்கு போதாதே என்ற கவலையால் பலர் ஏற்பதில்லை. அதே சமயம், திருமணமாகாத இளைஞர் களுக்குக் குடும்பப் பொறுப்பு அதிக மில்லை என்பதால் ஏற்பதற்குத் தயங்கு வதில்லை. ‘ஜீரோ-அவர்’ ஒப்பந்த முறையைக் கொண்டுவரும் ஆலை நிர்வாகத்தின் மீது, தொழிலா ளர்களுக்கு இருக்கும் அவநம்பிக்கை யாலும் இம் முறைக்கு ஆதரவு அதிகம் இல்லை.

இளைஞர்கள் ஆதரவு

16 வயது முதல் 24 வயது வரையிலான இளைஞர்களில் 47% பேர் ‘ஜீரோ-அவர்’ வேலை ஒப்பந்தத்தை ஏற்கத் தயார் என்று கூறினர். ஒட்டுமொத்தமாக, வேலையில்லா இளைஞர்களிடையே இதற்கான வரவேற்பு சராசரியாக 40% ஆக இருந்தது. 55 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோரில் 24% பேர் தான் இந்த வேலைவாய்ப்பை ஏற்க முன்வந்தனர். இத்தகைய ‘ஜீரோ-அவர்’ வேலை ஒப்பந்த முறைக்குத் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தொழிலாளர்களின் வறுமையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் பயன்படுத்திக் கொண்டு அவர்களுடைய உழைப்பைச் சுரண்டுவதற்கான திட்டம் இது என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

ஜெரிமி கார்பின் எதிர்ப்பு

பிரிட்டனில் தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் ஜெரிமி கார்பின் இந்த ‘ஜீரோ-அவர்’ ஒப்பந்த முறையைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த ஒப்பந்த முறையைத் தடை செய்யப் போராடுவேன் என்று அறிவித்துள்ளார். வாரத்துக்குக் குறைந்தபட்சம் இத்தனை மணி நேரம் வேலை வழங்க வேண்டும் என்று போராடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

பிரிட்டனில் வேலை கிடைக்காத இளைஞர்களின் எண்ணிக்கை 23%. அவர்களில் 25% பேருக்கு இப்படி ‘ஜீரோ-அவர்’ ஒப்பந்த முறையில் பணியாற்ற விருப்பமா என்று அழைப்பு வந்துள்ளது.

இந்த ஆண்டு மே 8 முதல் 14 வரையில், 1,001 வேலையில்லாத் தொழிலாளர்களிடம் ஆய்வு செய்ததில் இந்த விவரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவர்களில் 47% பேர் இந்த வேலை வேண்டாம் என்று நிராகரித்துள்ளனர்.

பட்டினியாக இருப்பதைவிட கால் வயிற்றுக் கஞ்சிக்காவது வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் இதைத் தேர்வு செய்கின்றனர்.

வேலை செய்து அனுபவம் பெறுவோம் என்று நினைக்கும் சிலருக்கு இந்த ஏற்பாடு பிடித்திருக்கிறது. ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் இவர்களை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது என்பது முக்கியம். இவர்களும் தொழிலாளிகள்தான் என்று கண்ணியமாக நடத்தப் போகிறதா, எவ்வளவு குறைவாக கூலி கிடைத்தாலும் பரவாயில்லை என்று வந்தவர்கள்தானே என்று அலட்சியப்படுத்தப் போகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

நிரந்தர வேலைவாய்ப்பு, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, கூடுதல் வேலைக்கு கூடுதல் ஊதியம், போனஸ், மானிய விலையில் அல்லது இலவச உணவு, நல்ல ஓய்வு, மருத்துவ வசதி ஆகியவற்றைத் தங்களுடைய உரிமையாகப் பெற வேண்டிய தொழிலாளர்கள் இப்போது ஒவ்வொன்றையும் யாசித்தோ, வழக்காடியோதான் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. தொழிலாளர்களின் நலனுக்கான அமைப்புதான் தொழிற்சங்கம் என்ற கண்ணோட்டம் மாறி, தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அமைப்பு என்ற கண்ணோட்டம் பரவி வருகிறது.

தொழிலாளர்களிடம் வாக்குகளையும் தொழிலதிபர்களிடம் நன்கொடை களையும் பெறும் அரசியல் தலை வர்கள், வளர்ச்சி, ஏற்றுமதி இலக்கு, உற்பத்திப் பெருக்கம், உற்பத்தித் திறன் என்ற வார்த்தைகளை முன்னிறுத்தி தொழிலாளர்களின் சுரண்டலுக்குத் துணை போகிறார்கள். தொழிலாளர்களின் வேலை முறை இன்னும் என்னென்ன விதங்களில் மாற்றப்படும் என்று தெரியவில்லை.

குடை ரிப்பேர் செய்கிறவர், மெத்தைக்கு பஞ்சு அடைப்போர், கலாய் பூசுவோர் என்று வீதிகளில் கூவிக்கூவி தங்களுடைய சேவைகளை விற்கும் தொழிலாளர்கள் 8 மணி நேரம் சுற்றினாலும் கிடைக்கும் வேலை ஒன்றிரண்டுதான் என்றால் அதற்கேற்ப சொற்ப கூலியே வாங்குகின்றனர். அவர்களுடைய நிலைக்கு ஆலைத் தொழிலாளர்களும் இறக்கப்படு கின்றனர்.

அமைப்பு ரீதியாக திரட்டப்படாத கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பட்டியலில், லட்சக்கணக்கான ஆலைத் தொழிலாளர்களையும் சேர்க்கும் வகையில் நவீன முதலாளித்துவம் ‘ஜீரோ-அவர்’ ஒப்பந்த வேலை முறையைக் கண்டுபிடித்திருக்கிறது.

rangachari.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்