யு டர்ன்: திருப்புமுனைகள்

By செய்திப்பிரிவு

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

ஆப்பிள் கம்பெனி, இந்தியன் ரெயில்வே, ஐ.பி.எம், தெர்மாக்ஸ், ஜெனரல் எலெக்ட்ரிக், டி.டி.கே. குழுமம், ஜெராக்ஸ் கார்ப்பரேஷன், ஐடிசி கம்பெனி, லெகோ, டி. ஐ. சைக்கிள், டொயோட்டா, பஜாஜ் ஆட்டோ, கிரைஸ்லர் கார்ப்பரேஷன், சரிகம ஆகிய 14 கம்பெனிகளின் யூ டர்ன் அனுபவங்களைப் பார்த்தோம். இவற்றுள் 6 அமெரிக்க நிறுவனங்கள்; 1 டென்மார்க்; 7 இந்தியா.

இத்தகைய அனுபவங்கள் சீனா, ஜப்பான், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய எல்ல நாடுகளிலும் உண்டு. அதாவது, பிசினஸ் வீழ்ச்சியும், எழுச்சியும், குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே நடப்பவையல்ல, உலகளாவியவை. இதே
போல், கம்பெனிகளுக்கு மட்டுமே நடப்பவையல்ல; குறிப்பிட்ட தொழில்களில் நடக்கலாம், குறிப்பிட்ட தயாரிப்புப் பொருட்களில் நடக்கலாம். ஏன், தனிமனித வாழ்க்கையிலும் நடக்கலாம்.

சில உதாரணங்கள்:

தொழில் வீழ்ச்சியும், எழுச்சியும்

1960, 70 காலகட்டம். கிரேட் ஈஸ்ட்டர்ன் சர்க்கஸ், கமலா த்ரீ ரிங் சர்க்கஸ் போன்ற கம்பெனிகள் ஊர் ஊராக வருவார்கள். மூன்று நான்கு வாரங்கள் காட்சிகள். முழுக் குடும்பமும் வருவார்கள். மிருகங்களின் விளையாட்டு, டிரப்பீஸ், மரணக் கிணறு மோட்டார் சைக்கிள் ஓட்டம், மேஜிக், கோமாளிகளின் சேட்டைகள் என அரங்கமே அதிரும்.

1980-களில் தொலைக்காட்சிப் பெட்டிகள், கம்ப்யூட்டர்கள் மூலமாக, சினிமாக்கள், சீரியல்கள், கார்ட்டூன்கள், கிரிக்கெட் மாட்ச்கள், வீடியோ கேம்ஸ் என எல்லாப் பொழுதுபோக்குகளும் வீடுகளுக்கே வந்துவிட்டன. சர்க்கஸில் மிருகங்களைக் கொடுமைப்படுத்துவதாகச் சமூகநல ஆர்வலர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால், மிருகங்களை வைத்துச் செய்யும் விளையாட்டுகளின் மீது அரசாங்க, நீதிமன்றக் கட்டுப்பாடுகள் வந்தன. சர்க்கஸ் பார்க்கும் ஈடுபாடு மக்களுக்குக் குறைந்தது.

நம் நாட்டைப் போலவே, கனடாவிலும் சர்க்கஸ் மிகவும் பிரபலமான பொழுதுபோக்காக இருந்தது. கை லாலிபெர்ட்டே (Guy Laliberte) என்னும் சிறுவன் பள்ளி நாட்களிலேயே ஒரு கழைக் கூத்தாடிகள் கம்பெனியில் சேர்ந்தான். சகலகலா வல்லவன் ஆனான். அக்கார்டியன் (Accordion) என்னும் இசைக்கருவியைப் பிரமாதமாக வாசிப்பான். இரண்டு கால்களிலும் நீளமான மரக்கட்டைகளைக் கட்டிக்கொண்டு நடப்பான், வாயில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்து ஸ்டைலாக ஊதுவான். விரைவில், கனடா நாட்டு சர்க்கஸ் உலகின் சூப்பர் ஸ்டார் ஆனான்.

1980-களில், கனடாவிலும், கழைக்கூத்தாடிகளின் ஷோ, சர்க்கஸ் ஆகியவற்றைப் பார்த்த ஆண், பெண், குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோகேம்ஸ் ஆகிய மாற்றுப் பொழுதுபோக்குகளுக்கு மாறிவிட்டார்கள். ஏராளமான சர்க்கஸ் கம்பெனிகள் மூடின. லாலிபெர்ட்டேக்கு வேலை போனது.

அவருக்குத் தெரிந்த ஒரே வேலை சர்க்கஸ்தான். என்ன செய்யலாம் என்று யோசித்தார். குழந்தைகள் மட்டுமல்லாமல், முழுக் குடும்பமும் பார்ப்பதாகத் தன் ஷோ அமைய வேண்டும். என்ன செய்யலாம்? தொலைக்காட்சித் தொடர்களை முழுக் குடும்பமும் சேர்ந்து பார்த்து ரசித்தார்கள். அதாவது, மக்கள் எதிர்பார்ப்பு - கதைகளை மையமாகக்கொண்ட பொழுதுபோக்கு.

லாலிபெர்ட்டே மூளையில் இப்போது வெட்டியது ஒரு மின்னல். சாதாரணமாக சர்க்கஸில், டிரப்பீஸ், மிருக விளையாட்டுக்கள், ஜோக்கர்கள் காமெடி, மாஜிக் காட்சிகள் போன்ற பல ஐட்டங்கள் இருக்கும். ஆனால், இவை ஒவ்வொன்றுக்கும் தொடர்பு இருக்காது. சர்க்கஸ் காட்சிகளோடு, ஜனரஞ்சகமான தொலைக்காட்சி சீரியல்களைக் கலந்தால்... விளையாட்டு வீரர்கள், கோமாளிகள் பங்கெடுக்கும் சீரியலின் கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு என்று மாற்றினால்... 1985.

லாலிபெர்ட்டே Cirque du Soleil (பிரெஞ்ச் வார்த்தை. சூரிய சர்க்கஸ் என்று அர்த்தம்.) என்னும் சர்க்கஸ் கம்பெனி தொடங்கினார். தன் சர்க்கஸ் காட்சிகளை வலுவான கதையமைப்புக்கொண்ட நாடகங்களாக உருவாக்கினார். Cirque du Soleil தொடங்கி 34 வருடங்களாகி விட்டன. இன்று 40 நாடுகளைச் சேர்ந்த 5,022 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். வருட வருமானம் 4,590 கோடி ரூபாய். மரணப் படுக்கையில் இருந்த தொழிலுக்குப் புத்துயிர் தந்தது, லாலிபெர்ட்டே-யின் வித்தியாசமான சிந்தனை.

தயாரிப்புப் பொருள் வீழ்ச்சியும், எழுச்சியும்

நம் எல்லோருக்கும் தெரிந்த காட்பரீஸ் சாக்லெட் சம்பவம். 2003–ம் ஆண்டு. அப்போது வருட விற்பனை 80,000 கிலோ. இதில் கணிசமான பகுதி அதாவது சுமார் 10,000 கிலோ தீபாவளிக்கு விற்கும். அக்டோபர் 3. நெருங்குகிறது தீபாவளி. எல்லாக் கடைகளிலும் டெய்ரி மில்க், ஃபைவ் ஸ்டார், எக்லெர்ஸ், ஃபுருட் அண்ட் நட் கண்காட்சிகள். அப்போது வெடித்தது, கம்பெனியையும் காட்பரீஸ் ரசிகர்களையும் அதிரவைத்த அணுகுண்டு.

இரண்டு வாடிக்கையாளர்கள் மும்பையில் இரண்டு கடைகளில் டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினார்கள். அவற்றில் புழுக்கள் இருந்தன. மகாராஷ்டிர மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கமிஷனரிடம் (Food and Drug Administration Commissioner) புகார் கொடுத்தார்கள். முதல்கட்ட சோதனைகள் செய்த அவர், கம்பெனிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினார். பத்திரிகையாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து குற்றச்சாட்டை வெளியிட்டார். அடுத்த மூன்று வாரங்களுக்கு எல்லா ஊடகங்களிலும் இதுதான் தலைப்புச் செய்தி. இந்தியா முழுக்க இதுதான் பேச்சு. தீபாவளி விற்பனை அவுட்.

பிரச்சினை வெடித்த அக்டோபர் 3 அன்றே நிர்வாக இயக்குநர் பரத் பூரி ஊடகங்களைச் சந்தித்து நிலைமையை விளக்கினார். மக்கள் தொடர்புக் கூட்டங்கள் முக்கிய நகரங்களில் நடந்தன. தவறு தொழிற்சாலையில் அல்ல, கடைகளில் என்று விளக்கினார்கள். இத்தனை வருடங்களில் தரக் கோளாறு வருவது இதுவே முதல் முறை. ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் கடைகளில் காட்பரீஸ் சாக்லெட்கள் விற்கிறோம், பிரச்சினை இவற்றுள் இரண்டே இரண்டு கடைகளில் தாம் என்று தெளிவாக்கினார்கள்.

``காட்பரீஸ் - உண்மைச் செய்திகள்” என்ற தலைப்பில் நாடு தழுவிய 11 மொழிகளில், 55 ஏடுகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. ``நம்பிக்கைத் திட்டம்” (Project Vishwas) ஆரம்
பிக்கப்பட்டது. இதன்படி கடைகளைத் தொடர்ந்து பார்வையிட்டு, சாக்லேட்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்யப்பட்டன. சிறிய ஊர்க்கடைகளில் சாக்லேட்களின் தரம் காக்கும் வசதிகள் இருக்கவில்லை.

இதற்காகப் பாக்கேஜிங்கில் பல மாற்றங்கள். சாக்லெட்டுக்கு முதல் கேடயம் மெல்லிய அலுமினிய உலோகத் தகடு (Aluminium Foil) அதற்குமேல் பிளாஸ்டிக் பாக்கிங். இதற்குத் தேவைப்படும் எந்திரங்களுக்கான முதலீடே 25 கோடி ரூபாய் ஆனது. ``நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது” என இந்தச் சேதியை மக்களுக்குச் சொல்ல ஒரு குடுகுடுப்பைக்காரன் வேண்டுமே? மக்கள் அவன் சொல்வதைத் தயக்கமேயில்லாமல் நம்ப வேண்டும்? யார் அவர்? அப்போது ``கோன் பனேகா குரோர்பதி” என்னும் மாபெரும் வெற்றி நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த அமிதாப் பச்சனைத் தேர்ந்தெடுத்தார்கள்.

தொலைக்காட்சி விளம்பரம் தயாரித்தார்கள். அமிதாப்பச்சன் காட்பரீஸ் தொழிற்சாலைக்கு வருகிறார். ரவுண்ட் அடிக்கிறார். புதிய எந்திரங்கள், உற்பத்தி, பாக்கேஜிங் பற்றி அவருக்கு (அவர் மூலமாக நிகழ்ச்சி பார்க்கும் பொது மக்களுக்கு) விளக்குகிறார்கள். கடைசி ஷாட்! காட்பரீஸ் தரத்தில் முழு திருப்திப்பட்ட அமிதாப் சாக்லெட் பார் ஒன்றை எடுத்துச் சுவைத்துச் சாப்பிடுகிறார். மக்கள் மனத்தில் எல்லா சந்தேகங்களும் மறைய, நச்சென்று பதிந்தது. மறுபடி தன் முதல் இடத்தை மக்கள் மனத்திலும், மார்க்கெட்டிலும் காட்பரீஸ் பிடித்தது.

தனிமனித வீழ்ச்சிகளும், எழுச்சிகளும்

கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் அவர்களின் கழகங்கள் எத்தனை முறை படுதோல்வி கண்டிருக்கின்றன? ஒவ்வொரு முறையும், அவர்கள் கோட்டைக்குத் திரும்பவில்லையா?
1967 -ல் குண்டடி பட்ட எம்.ஜி.ஆர். தன் குரலை முழுக்கத் திரும்பப் பெறவேயில்லை. இந்தக் குறையை வென்று, அவர் 46 வெற்றிப் படங்கள் தந்ததும், தனிக்கட்சி தொடங்கியதும், மூன்று முறை முதலமைச்சரானதும் சரித்திரச் சாதனைகள்.

1982. அமிதாப்பச்சனுக்கு ஸ்டன்ட் காட்சியில் அடிபட்டது. மண்ணீரலில் படுகாயம். உயிர் பிழைப்பாரா என்றே சந்தேகம். மீண்டுவந்த அவர் இன்றுவரை, 37 ஆண்டுகளாய், தன் 76 வயதிலும் இந்திப் பட உலகின் முடிசூடா மன்னர். தாதா சாகிப் பால்கே வாழ்நாள் சாதனை விருது வென்றிருப்பவர்.

1979 –ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சினிமாவை விட்டே விலகிவிடுவார் என்று கணிக்கப்பட்ட ரஜினிகாந்த், 40 வருடங்களுக்குப் பிறகும், ``நான் திரும்பி வந்துட்டேன்” என்று சூப்பர் ஸ்டாராக முழங்குகிறார்.

14 முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட அஜீத், `தலை'யாக லட்சோப லட்சம் ரசிகர்கள் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டிருக்கிறார். சுதா சந்திரன். பரதநாட்டியக் கலைஞராகும் சிறுவயதுக் கனவுகள். பயிற்சி ஆரம்பம். பதினாறு வயதில் திருச்சியிலிருந்து சென்னைக்கு பஸ் பயணம். கார் விபத்து. காலை வெட்டிச் செயற்கைக் கால் பொருத்தும் கட்டாயம். அபாரத் துணிச்சலோடு கனவுகளைத் தொடர்ந்தார். தாங்கமுடியாத கால் வலியைச் சகித்துக்கொண்டு மறுபடியும் பரதநாட்டியம்.

இன்றுவரை, 54 தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, போஜ்புரி, மலையாளத் திரைப்படங்கள். (தமிழில் எடுத்துக்காட்டாகச் சில - சாமி 2, விழித்திரு, அமீரின் ஆதி பகவன்.) 56 தமிழ், இந்தி, மலையாளத் தொலைக்காட்சித் தொடர்கள். (தமிழில் எடுத்துக்காட்டாகச் சில – லட்சுமி ஸ்டோர்ஸ், தெய்வம் வந்த வீடு, கலசம், அரசி.) செயற்கைக் காலில் நடத்துகிறார் ஊடக ஆட்சி, சுற்றிப் பாருங்கள். பிசினஸ், அரசியல், சினிமா மட்டுமல்ல. எல்லாத் துறைகளிலும் இப்படிப்பட்ட மாமனிதர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள்.

(புதிய பாதை போடுவோம்!)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்