யு டர்ன் 31: பஜாஜ் ஆட்டோ – அறுபதை முப்பது வெல்லுமா?

By செய்திப்பிரிவு

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

ராகுல் சாதாரண மனிதரில்லையே? போராளியல்லவா? பஜாஜ் ஆட்டோவின் பலங்களை, பலவீனங்களைத் துல்லிய
மாக எடை போட்டார். பொறியியல் வல்லுநர்களின் திறமைகளை கண்டு பிரமித்தார். ``எந்த வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்” என்னும் தன்னம்பிக்கை, “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?” என்னும் துணிச்சல், வந்தது. இந்த உற்சாக ஊற்றை ஒவ்வொரு ஊழியரின் மனத்திலும் ஊன்றினார். இந்தியத் தொழில்நுட்பத்தில் ஸ்கூட்டர்கள் வடிவமைக்கும் கனவுத் திட்டம் தொடங்கியது. பியாஜியோவின் ``வெஸ்பா ஸ்ப்ரின்ட்” (Vespa Sprint) என்னும் மாடலை முன்னோடியாக எடுத்துக்கொண்டார்.

வெளியுலகம் சிரித்தது – ‘குட்டிச் சுவரில் ஏறிக் கோழி பிடிக்கமுடியாதவன், வானத்தில் ஏறி வைகுந்தம் போக ஆசைப்படுவதுபோல்’, இதுவரை இத்தாலியின் பியாஜியோவின் ஊன்று கோலில் நடந்த பஜாஜ் ஆட்டோ மாரத்தான் ஓடப்போகிறதாம் என்று. ராகுலும் சிரித்தார் – அது தன்னம்பிக்கைச் சிரிப்பு. ஒரே வருடம். 1972. ``பஜாஜ் சேட்டக்*” ஸ்கூட்டர் வெளியானது. கண்ணைப் பறிக்கும் அழகு, லேசான அழுத்தத்தில் கிக்ஸ்டார்ட் உயிர்த் துடிப்பு. குருவை மிஞ்சிய சிஷ்யன். பியாஜியோவின் வெஸ்பாவை முந்தும் செயல்திறன், ஓட்டும் சுகம்.

பதினைந்தாம் நூற்றாண்டில், ராஜஸ்தான் மாநில மேவார் பகுதி மன்னராக இருந்தார் ரானா பிரதாப் சிங். மாவீரர். மொகலாயப் பேரரசர் அக்பரின் படைகளோடு பல போர்கள் நடத்தினார். அவர் குதிரையின் பெயர் சேட்டக். ஒரு போரில், ராஜாவும், குதிரையும் படுகாயமுற்றார்கள். சேட்டக் மன்னரைச் சுமந்தபடி போர்க்களத் திலிருந்து ஓடியது. பிரதாப் சிங்கைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றது. கடமையை முடித்தவுடன், தன் காயத்தின் ரத்தப் பெருக்கால் உயிர்விட்டது. இந்த வீரக் குதிரைக்கு அஞ்சலியாக, பாரம்பரியப் பெயரை பஜாஜ் ஆட்டோ வைத்தார்கள்.
அன்றைய பொருளாதாரக் கொள்கைப்படி, உற்பத்தி அளவை மத்திய அரசாங்கம்தான் நிர்ணயிக்கும். வருடத்துக்கு 20,000 சேட்டக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் லைசென்ஸ் தந்தார்கள். அதிகமாகத் தயாரித்தால் அபராதம், தண்டனை, லைசென்ஸ் பறிமுதல்.

சேட்டக் மாபெரும் வெற்றி. ஆர்டர்கள் மழை கொட்டியது. உற்பத்தியை அதிகரித்தால் அரசாங்கம் தண்டனை தரும். இதைச் சமாளிக்க ராகுல் ஒரு வழி கண்டுபிடித்தார். 1970 – களில் அந்நியச் செலாவணிக்கு ஏகப்பட்ட தட்டுப்பாடு. டாலரோ, பவுண்டோ தந்தால் மட்டுமே சப்ளை கிடைக்கும் என்னும் ரேஷன் முறையைத் தொடங்கினார். அப்படியும், குவிந்தன ஆர்டர்கள். கஜானாவில் பணம், தலைவர் மனதில் திட்டம், ஊழியர்கள் நெஞ்சில் அர்ப்பணிப்பு இருந்தால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும். சேர்ந்தன.1973-ல் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், வங்க
தேசம், ஹாங்காங், நைஜீரியா, சூடான், யேமன் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தொடங்கினார். சேட்டக்கின் தரம் கண்டு, இந்தோனேஷியா, தைவான் ஆகிய நாடுகளின் பிரபல தொழில் அதிபர்கள் பஜாஜ் ஆட்டோவுடன் கை கோர்க்க முன்வந்தார்கள். 1974–ல் இந்தக் கூட்டுறவுத் தொழிற்சாலைகள் எழுந்தன. பஜாஜ் ஆட்டோவின் புகழை வெளிநாடுகளில் பரப்பின.

1977, அதுவரை ஆட்டோ ரிக்ஷாக்களில் எஞ்சின் முன்புறம்தான் இருந்தது. தொழில்நுட்ப முன்
னேற்றமாக, பின்புறம் எஞ்சின் வைத்த வாகனங்கள் அறிமுகம். ஒரே வருடத்தில் ஒரு லட்சம் வாகனங்கள் விற்பனைச் சாதனை. 1981–ல், M–50 என்னும் புதிய மாடலை உருவாக்கினார்கள். அறிவிப்பு வந்தவுடனேயே, 11 லட்சம் ஸ்கூட்டர்களுக்கான ஆர்டர்கள். சேட்டக், M–50 இரு மாடல்களையும் சப்ளை செய்ய முடியாத நிலை. இரண்டாம் தொழிற்சாலை அமைப்பதற்காக விண்ணப்பம் செய்தார். தொழில் அமைச்சகத்தில் வேண்டுகோள் தூங்கியது. ராகுல் துணிச்சல் முடிவெடுத்தார். அனுமதி வாங்காமலேயே, அக்குர்டி தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகமாக்கினார். வந்தது அமைச்சரகத்தின் எச்சரிக்கை நோட்டீஸ்.

ராகுல் பதிலேதரவில்லை. அமைச்சரகம் சார்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அங்கே அரசுத் தரப்பு வழக்கறிஞரின் மிரட்டல் கேள்வி, “உங்களை ஏன் அரசு கைது செய்யக்கூடாது?” ராகுலின் பதில், ``தாராளமாக. என் தாத்தா இந்தியாவின் சுதந்திரத்துக்காகச் சிறைக்குப் போயிருக்கிறார். தாய்நாட்டின் உற்பத்தியைப் பெருக்கியதற்காக நானும் சிறை செல்லத் தயாராக இருக்கிறேன்.”ராகுல் மேல் கை வைத்தால் இந்தியத் தொழில் அதிபர்கள் கொதித்தெழுவார்கள் என்று உணர்ந்த அரசாங்கம் தண்டனை நடவடிக்கைகளைக் கைவிட்டது. ஆமாம் சாமியாக அரசாங்கத்துக்கு ஜால்ரா போட்டால் மட்டுமே பிசினஸில் நீடிக்க முடியும் என்று பிற தொழில் அதிபர்கள் வாழ்ந்த காலம் அது. நெஞ்சில் உரமும், நேர்மைத் திறனும் இருந்தால், அதிகாரபீடத்தின் எந்த அநீதியையும் வெல்லமுடியும் என்று நிரூபித்தார் ராகுல்.

1984. இந்திரா படுகொலை. ராஜீவ் காந்தி பிரதமரானார். அரசின் அணுகுமுறையில் அதிரடி மாற்றம். இரண்டாவது தொழிற்சாலை தொடங்கும் அனுமதி வந்தது. 1985–ல், மகாராஷ்டிர மாநிலம் வலூஜ் (Waluj) கிராமத்தில் இரண்டாவது தொழிற்சாலை. ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தவர், அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங். நடந்ததை மறப்போம், நடப்பதை நினைப்போம் என்னும் இருசார்பு அணுகுமுறை; அரசும், தொழிலும் பரஸ்பரம் காட்டிய உச்சகட்ட மரியாதை.

பஜாஜ் ஆட்டோவுக்கு இது ஆனந்த அதிர்ச்சி. அரசுடன் ஏற்பட்ட சுமுக உறவால், கம்பெனி வளர்ச்சி பன்மடங்காகும் என்று ராகுல் கணக்குப் போட்டார். ஆனால், காத்திருந்தன, நிஜமான பல அதிர்ச்சிகள். 1980–களில் உலக டூ வீலர் தொழிலில் மாபெரும் மாற்றங்கள். அதுவரை, கார் சந்தையில் உலக சாம்ராட்களாக இருந்த அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட் ஆகியோரைப் பின் தள்ளி, டொயோட்டா முதலிடம் பிடித்தது. இந்த வெற்றி தந்த உத்வேகத்தால், ஹோண்டா, கவாஸகி, சுஸூக்கி, யமஹா ஆகியோர் உலக மோட்டார் சைக்கிள்கள் மார்க்கெட்
டில் கண் வைத்தார்கள். அதிக மைலேஜ், மலிவு விலை ஆகிய காரணங்களால், அதுவரை முதலிடம் பிடித்த இத்தாலியின் பியாஜியோ, இன்னொசென்ட்டி ஆகியோரைப் புறம் தள்ளினார்கள்.

மோட்டார் சைக்கிள்கள் விற்பனை ஸ்கூட்டர்களைவிட அதிகமாகத் தொடங்கியது. 1984–ல், ராஜீவ் காந்தி பொருளாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கினார். பல்வேறு துறைகளில் வெளிநாட்டினரின் தொழில்
நுட்பமும், முதலீடுகளும் அனுமதிக்கப்பட்டன. ஹீரோ சைக்கிள்கள், ஹோண்டாவுடன் கை கோர்த்தார்கள். ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள் இந்திய வீதிகளில் வலம் வரத் தொடங்கின. பஜாஜ் ஆட்டோவும், ஜப்பான் நாட்டின் கவாஸகி ஹெவி இன்ட்ஸ்ட்ரீஸுடன் (Kawasaki Heavy Industries) தொழில்நுட்ப ஒப்பந்தம் போட்டார். 1986 –ல் பஜாஜ்- கவாஸகி மோட்டார் சைக்கிள்கள் அறிமுகமாயின.

இவை வெற்றி கண்டபோதும், ஹீரோ ஹோண்டாவின் விற்பனையைத் தொட முடியவில்லை. ஒரு முக்கிய காரணம், ஸ்கூட்டர்களின் பொற்காலம் இன்னும் தொடரும் என்று ராகுல் நம்பினார். ஆகவே, மோட்டார் சைக்கிள்களுக்கு அவர் உரிய முக்கியத்துவம் தரவில்லை. ராகுலின் நம்பிக்கையை நிஜமாக்கும் சில நிகழ்வுகளும் நடந்தன. பஜாஜ் ஆட்டோ, ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் என்னும் இரு குதிரைகளிலும் சவாரி. 1986. M–80 மாடல் அறிமுகம் செய்தார்கள். முதல் வருடமே, 5 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்ற மாபெரும் சாதனை. 1989–ல் “பஜாஜ் சன்னி” (Bajaj Sunny) என்னும் 50 CC ஸ்கூட்டரும், “பஜாஜ் லெஜன்ட்” (Bajaj Legend) என்னும் 100 CC ஸ்கூட்டரும் அறிமுகம். நல்ல விற்பனை.

இந்தக் காலகட்டத்தில், கம்பெனியிலும் பல உள் மாற்றங்கள். ராகுலுக்கு மூன்று வாரிசுகள். ராஜீவ், சஞ்சீவ் என்னும் இரண்டு மகன்கள். சுனைனா என்னும் மகள். ராஜீவ் பூனேயில் எஞ்சினீரிங் படிப்பை முடித்தார். இங்கிலாந்தில் உற்பத்தி தொடர்பான மேற்படிப்பு. 1990. தன் 24–ம் வயதில், Officer on Special Duty என்னும் பதவியில் பஜாஜ் ஆட்டோவில் சேர்ந்தார். புதிய மாடல்களை உருவாக்கும் துறையின் பொறுப்பு. அடுத்த நான்கு வருடங்களில், பல வெற்றிகரமான கவாஸகி மோட்டார் சைக்கிள்கள், பஜாஜ் ஸ்கூட்டர்கள். 1994–ல் உச்சம் தொட்டார்கள். 10 லட்சம் டூ வீலர்கள் உற்பத்தி, விற்பனை. ஹோண்டா, சுஸூகி, கவாஸகி ஆகியோருக்கு அடுத்தபடியாக, உலக டூ வீலர் தயாரிப்பில் பெருமைக்குரிய நான்காம் இடம்.

”கெளரவம்” சினிமா. அப்பா சிவாஜியும், அவர் சீராட்டிப் பாராட்டி வளர்த்த மகன் சிவாஜியும் நாளை நீதிமன்றத்தில் மோதப் போகிறார்கள். மூத்தவர் கேள்வி, ``அறுபதை இருபது வெல்லுமா உலகிலே?” பஜாஜ் ஆட்டோவிலும் இதே கதைதான். கம்பெனியின் வருங்காலப் பாதை பற்றி அப்பாவுக்கும், மகனுக்கும் தீவிர அடிப்படைக் கருத்து வேறுபாடுகள். பஜாஜ் ஆட்டோ ஸ்கூட்டர்களில் மட்டுமே தொடர வேண்டும் என்றார் ராகுல். ஸ்கூட்டர்களை மறந்து, மோட்டார் சைக்கிள்களில் கவனம் செலுத்தவேண்டும் என்றார் ராஜீவ். இருவரும் பிடிவாதக்காரர்கள். சாதனை படைத்தவரும், தன்முனைப்புக் கொண்டவருமான 61 வயது அப்பா ஒரு பக்கம். இளமைத் துடிப்போடு 33 வயது மகன் மறுபக்கம். ஜெயிக்கப்போவது யார்?

(புதிய பாதை போடுவோம்!)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்