யு டர்ன் 30: பஜாஜ் ஆட்டோ - காந்திஜியின்  ஐந்தாவது மகன்!

By செய்திப்பிரிவு

உங்களுக்கு ஒரு டூ வீலர் வாங்க வேண்டும். டீலர் ஷோ ரூமுக்குப் போகிறீர்கள். அங்கு, சேல்ஸ்மேன் ராஜ உபசாரம் செய்கிறார். ஏன் அவர் தயாரிப்பை வாங்க வேண்டும், போட்டிக் கம்பெனிகள் டூ வீலர்களைவிட அவர்கள் மோட்டார் சைக்கிள் / ஸ்கூட்டர் எப்படித் தரத்தில் சிறந்தது, விலையில் குறைந்தது என்று மூளைச் சலவையே நடத்துகிறார். உங்களிடம் மொத்தப் பணம் இல்லையா? ஃபைனான்ஸ் கம்பெனி ஆள் ஷோ ரூமிலேயே இருக்கிறார். அவர் காட்டிய இடங்களிலெல்லாம் கையெழுத்து. ஒரு சின்ன செக். உங்கள் டூ வீலரை ஓட்டிக்கொண்டு ஜாலியாக வீட்டுக்குப் போகலாம். 

சுமார் 50, 60 வருடங்கள் பின்னோக்கிப் போகலாம். ``சேட்டக்”(Chetak) என்னும் ஸ்கூட்டர் வாங்க ஆசைப்பட்டீர்களா? உங்கள் மாமாவோ, மச்சானோ வெளிநாட்டில் இருக்க வேண்டும்; உங்களுக்காக அமெரிக்க டாலர் அல்லது இங்கிலாந்துப் பவுண்ட் ஆகிய அந்நியச் செலாவணி கொடுக்க வேண்டும். அப்போது மட்டுமே நீங்கள் டீலர் கடைப் பக்கம் போக முடியும். ``வெஸ்பா” (Vespa) என்னும் ஸ்கூட்டர் வாங்க ஆசையா? முழு விலையான 10,000 ரூபாய் தந்துவிட்டு, 12 வருடங்கள் (ஆமாம், 4,380 நாட்கள்) காத்திருக்க வேண்டும். சேட்டக், வெஸ்பா என்னும் இரண்டு வகை ஸ்கூட்டர்களையும் தயாரித்தவர்கள், பஜாஜ் ஆட்டோ கம்பெனி.  

1945 -ல் பிறந்த பஜாஜ் ஆட்டோ கம்பெனியின் வரலாற்றில் இப்படிப் பற்பல சுவாரஸ்ய அத்தியாயங்கள். இதை நிறுவிய ஜம்னாலால் பஜாஜ் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. வறுமை காரணமாக, மகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்த பச்சிராஜ் என்னும் தூரத்து உறவினருக்குத் தத்துக் கொடுத்தார்கள். 

வசதியான வியாபாரியான இவருக்கு வலதுகரமாக விளங்கிய ஜம்னாலால் சிறந்த பயிற்சி பெற்றார். இந்தக் காலகட்டத்தில் ஜம்னாலால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம். 1915 -ல் காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அவர் பேச்சுகள் ஜம்னாலாலைப் பெரிதும் ஈர்த்தன. மகாத்மாவை அடிக்கடி சந்தித்தார். இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஆரம்பம். 

1926 – ல் பச்சிராஜ் அமரரானார். பிசினஸ் பொறுப்பை ஜம்னாலால் ஏற்றார். அப்பா இல்லாத ஏக்கம் அவர் அடிமனதில் இருந்தது. காந்திஜியைத்  தந்தையாக்கிக் கொள்ளும் ஆசை . மகாத்மாவுக்கு ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவ்தாஸ் என்னும் நான்கு மகன்கள். தன்னை ஐந்தாவது மகனாக ஏற்றுக்கொள்ளுமாறு ஜம்னாலால் காந்திஜியிடம் வேண்டினார். அவரும் சம்மதித்தார். சொன்னார், ``தன் உடல், உள்ளம், பணம் ஆகிய அனைத்தாலும், என் எல்லா முயற்சிகளுக்கும் ஜம்னாலால் முழு ஒத்துழைப்புத் தந்தார்.”  

காந்திஜியின் விருப்பத்தை நிறைவேற்றிய அப்படியான ஒரு நிகழ்ச்சி, ஜம்னாலால் வாழ்க்கையிலும், இந்தியத் தொழில் வரலாற்றிலும் முக்கிய மைல்கல். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரும்பு விவசாயிகளை சர்க்கரை ஆலை முதலாளிகள் கசக்கிப் பிழிந்துகொண்டிருந்தார்கள். கரும்புக்கு அடிமாட்டு விலை. விவசாயிகளின் கண்ணீர் துடைக்க காந்திஜி விரும்பினார். உத்தரப் பிரதேசத்தில் சர்க்கரை ஆலை தொடங்குமாறு ஜம்னாலாலைக் கேட்டுக்கொண்டார். அப்பா விருப்பம் என் கட்டளை என, ஐந்தாம் மகன் 1931 - ம் ஆண்டு ஹிந்துஸ்தான் ஷுகர் மில்ஸ் என்னும் கம்பெனி தொடங்கினார். பஜாஜ் குழுமத்தின் முதல் தொழில் உற்பத்தி முயற்சி. 

1942. இந்திய சுதந்திரத்துக்கு உழைத்த ஜம்னாலால் விடியலைப் பார்க்காமலேயே, தன் 57 -ம் வயதில் அமரரானார். மூத்த மகன் கமல்நயன் குழுமத் தலைவரானார். பல்வேறு புதிய துறைகளில் இறங்கினார். நவம்பர் 29, 1945. குழுமத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். கமல்நயன், தன் தாத்தா பெயரில், பச்சிராஜ்  டிரேடிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிட்டெட் (Bachraj Trading Corporation Private Limited) என்னும் பெயரில் புதிய கம்பெனி தொடங்கினார். 

இத்தாலி நாட்டில் ``பியாஜியோ” (Piaggio) என்னும் நிறுவனம் 1946 முதல் ``வெஸ்பா” பிரான்டில் ஸ்கூட்டர்கள் தயாரித்தார்கள். செம ஈஸியாக ஸ்டார்ட் செய்யும் இந்த வாகனங்கள் உலகளவில் நம்பர் 1 இடம் பிடித்தன. 1948. பச்சிராஜ், பியாஜியோவின் ஸ்கூட்டர்களையும், ஆட்டோ ரிக்‌ஷாக்களையும் இறக்குமதி செய்து விற்கத் தொடங்கினார்கள். இவை அமோக வரவேற்பைப் பெற்றன.   

இந்திய டூ வீலர்கள் சகாப்தத்தில் தமிழகத்தொழில் அதிபர்களின் பங்கு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அத்தியாயம். இந்தியாவில் முதன் முதலாக மோட்டார் சைக்கிள் தயாரிப்பு தொடங்கியவர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரம் ஐயர். சாதாரணக் குடும்பத்தில் பிறந்த அவர் வாழ்வாதாரத்துக்காகச் சென்னை வந்து ‘‘மெட்ராஸ் மோட்டார்ஸ்” என்னும் கம்பெனி தொடங்கியிருந்தார். 1955 – ல், இங்கிலாந்தின் ராயல் என்ஃபீல்ட் கம்பெனியின் கூட்டுறவோடு, “என்ஃபீல்ட் இந்தியா” தொடங்கினார். 

இதேபோல், நம் நாட்டின்  முதல் ஸ்கூட்டர் தயாரிப்பாளர், “ஆட்டோமொபைல் புராடக்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிட்டெட்”  தொடங்கியவர், எம். ஏ. சிதம்பரம். செட்டி நாட்டு அரசர் ராஜா சர். அண்ணாமலைச்செட்டியாரின் மூன்றாவது மகன்; முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் தாய்மாமன்.  இத்தாலி நாட்டின் ``இன்னொசென்ட்டி” (Innocenti) என்னும் பிரபல நிறுவனத்தோடு கை கோர்த்து, அவர்களின் ``லாம்ப்ரெட்டா” (Lambretta)  ஸ்கூட்டர்களைத் தயாரிக்கத் தொடங்கினார்.   

அடுத்துக் களத்துக்கு வந்தது பச்சிராஜ் டிரேடிங். பியாஜியோவிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த வெஸ்பா ஸ்கூட்டர்களை இந்தியாவில் தயாரிக்க முடிவெடுத்தார்கள்.  இத்தாலியுடன் ஒப்பந்தம். 1959–ல் மகாராஷ்டிர மாநிலம் பூனே மாவட்டத்தில் இருக்கும் அக்குர்டி (Akurdi)  என்னும் சிறிய ஊரில் உற்பத்தி ஆரம்பம். கம்பெனி பெயரும், பஜாஜ் ஆட்டோ என்று மாற்றம்.  

1965. கமல்நயனின் மகன் ராகுல் பஜாஜ் அமெரிக்காவின் பிரபல ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். மேனேஜிங் டைரக்டராகப் பொறுப்பேற்றார். சிறு வயது முதலே, ராகுல் மனதில் ஜெயிக்கும் வெறி. எதில் இறங்கினாலும், நம்பர் 1 ஆக இருக்க வேண்டும். பள்ளியிலும், கல்லூரியிலும் படிப்பில் முதல் இடம். மாணவர் அவைத் தலைவர். பாக்சிங் சாம்பியன். போட்டி என்று வந்துவிட்டால் அவர் சிங்கம். பலம் அதிகமாகும், உடலில் அட்ரீனலின் அதிவேகமாகப் பாயும். இந்த வெறியைப் பிசினஸில் காட்டினார். தொடங்கியது பொற்காலம். 1969-ல் மொத்த உற்பத்தி ஒரு லட்சத்தைத் தாண்டியது. 

இந்தக் காலகட்டத்தில் இந்திய அரசியல் வானில் அதிரடி மாற்றங்கள். 1964. காமராஜர் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். நேருஜியின் திடீர் மறைவு. பிரதமர் பதவி ஏற்குமாறு கட்சியின், மக்களின் வேண்டுகோளைக் காமராஜர் மறுத்துவிட்டார். லால் பகதூர் சாஸ்திரியை அரியணையில் அமர்த்தினார். இரண்டே ஆண்டுகளில் அவரும் மறைய, பிரதமர் பதவி மறுபடியும் கர்மவீரரைத் தேடி வந்தது. முன்பு போலவே,  உதறித் தள்ளினார். 1966–ல் இந்திரா காந்தியைப் பிரதமராக்கினார். 

விரைவில், பிரதமர் இந்திராவுக்கு, கட்சியின் மூத்த தலைவர்களான காமராஜர், மொரார்ஜி தேசாய் ஆகியோருடன் பல மன வேறுபாடுகள். 1969–ல் உரசல் விரிசலானது. குடியரசுத் தலைவர் ஜாகீர் ஹூஸைன் பதவியில் இருக்கும்போதே திடீர் மரணம். அடுத்த ஜனாதிபதித் தேர்தல். காங்கிரஸ் கட்சி, சஞ்சீவ் ரெட்டியை வேட்பாளராக நிறுத்தியது. இந்திரா காந்தி, தன் சார்பாகத் தொழிற்சங்கத் தலைவர் வி.வி.கிரியைக் களம் இறக்கினார். 

கிரி வென்றார். நவம்பர் 23. காங்கிரஸ் கட்சி இந்திராவைக் கட்சியிலிருந்து நீக்கியது. இந்திரா தன் தலைமையில் போட்டிக் காங்கிரஸ் தொடங்கினார். ஒரிஜினல் காங்கிரஸ் காமராஜர் தலைமையில். காங்கிரஸின் 291 பாராளுமன்ற உறுப்பினர்களில் 226 பேர் இந்திரா பக்கம். திமுக–வும் ஆதரவு தந்தது. இந்திரா பிரதமராகத் தொடர்ந்தார். காந்திஜிக்கு நெருக்கமாக இருந்த பஜாஜ் குடும்பம் காமராஜர் அணிக்கு ஆதரவு தந்தது. இதனால், பிரதமர் இந்திராவோடு மனக் கசப்பு. 

1971. பொதுத் தேர்தல். இந்திராவின் காங்கிரஸ் மொத்த 518 இடங்களில் 352 இடங்களை ஜெயித்து, தாங்கள் தாம் நிஜக் காங்கிரஸ் என்று நிரூபித்தார்கள். மறுபடியும் இந்திரா பிரதமரானார்.  இந்திராவுக்கு மட்டுமல்ல, பஜாஜ் ஆட்டோவுக்கும் இது மிக முக்கிய வருடம். பியாஜியோ கம்பெனியுடன் போட்டிருந்த ஒப்பந்தம் முடிவு பெற்றது. இதைப் புதுப்பிக்கவும், பிற தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் போடவும் மத்திய அரசு மறுத்துவிட்டது.   

1972 – ல்  கமல்நயன் மரணமடைந்தார். ராகுல் பஜாஜ் ஆட்டோ சேர்மேன். 34 வயது இளைஞரின் முன்னால் சவால்கள், சவால்கள். தொழில்நுட்பத்துக்கு வெளிநாட்டு உதவி  இல்லை. அன்றைய ஆட்சியின் கொள்கைப்படி, இறக்குமதி, உற்பத்தி விரிவாக்கம் ஆகிய ஒவ்வொரு பிசினஸ் முடிவுக்கும் மத்திய அரசின் அனுமதி வாங்க வேண்டும். அவர்கள் அரசியல் காழ்ப்பால் பஜாஜுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள். சமாளிப்பாரா ராகுல்?      

- எஸ்.எல்.வி. மூர்த்தி, slvmoorthy@gmail.com 

(புதிய பாதை  போடுவோம்!) 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்