குறள் இனிது: தோல்விக்கு மூன்று படிகள்

By சோம.வீரப்பன்

நடராஜன் ஒரு வித்தியாசமான மனிதர் (ஆமாம் பெயர் மாற்றியாச்சு) 1972ல் ஒரு வங்கியில் எழுத்தராய்ச் சேர்ந்து, படிப்படியாய் முன்னேறி 2010-ல் பணி ஓய்வு பெற்றார். எண்களின் மேல் அவருக்கு அளவிலாக் காதல். வரிசையாய் எழுதியிருக்கும் மூன்று இலக்க எண்களைக் கூட மனக்கணக்காய்க் கூட்டிவிடுவார். கால்குலேட்டரே வேண்டாம். அபார ஞாபக சக்தி. வங்கியின் பழைய சுற்றறிக்கைகளை தேதியுடன் சொல்லி அசத்துவார்.

ஆனால் வங்கியில் கணினிமயமாக்கப்படல் தொடங்கியவுடன் அவரது செல்வாக்கு படிப்படியாகக் குறைந்தது. லெட்ஜரில் இருப்பைக் கூட்டிக்கழித்துக் காட்டுவது முதலான எல்லா வேலைகளையும் கணினிகளே செய்துவிட்டன. வாடிக்கையாளரின் விபரங்கள் பட்டனைத் தட்டினாலே கிடைத்தன. கணக்கில் புலியாய் இருப்பதனால் இருந்த முக்கியத்துவம் போய்விட்டது.

இதனால் நடராஜனுக்குச் சிறுகச்சிறுகக் கணினிகள் மீதும் அதில் தேர்ச்சிபெற்றவர்கள் மீதும் வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது. நடராஜனுக்கு வங்கி கணினியில் பலமுறை பயிற்சி அளித்தும் அவர் மனம் அதில் லயிக்கவில்லை. அதைக்கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் நினைக்கவே இல்லை. மின்னஞ்சல் திறப்பதும், அனுப்புவதும் அவருக்குப் பிடிக்காதவை. வங்கி லேப்டாப் கொடுத்திருந்தாலும் உதவியாளர் மூலமே உபயோகிப்பார். தமது 57வது வயதில் கோட்ட அலுவலகத்தில் அவர் இரண்டாம் நிலை அதிகாரி.

அங்கே காளியப்பன் (மாற்றிய பெயர் தான்) எனும் 38 வயது துடிப்பான மனிதர் மூன்றாம் நிலை அதிகாரியாக வந்து சேர்ந்தார். இருவரும் உதவிப் பொது மேலாளர்களே. ஆனால் சீனியாரிட்டி காரணமாக காளியப்பன், நடராஜனுக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டியதாக இருந்தது. காளியப்பனுக்கு கணினியில் எல்லாம் அத்துப்படி. எதையாவது படித்துக்கொண்டே இருப்பார். தொழில்நுட்பம்தான் அவரது பலம். நீங்கள் எதிர்பார்த்தது போலவே நடராஜனுக்குக் காளியப்பனைக் கண்டாலே ஆகாது.

என் மகன் வயது அவனுக்கு என்பார். நடராஜன் விரும்பியிருந்தால் காளியப்பன் மூலமாகவே பலவற்றைத் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் இருவருக்கும் இடையில் பனிப்போரே தொடர்ந்தது. விதியின் விளையாட்டு அவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் பதவி உயர்விற்கான நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டனர். பெரும்பாலான கேள்விகள் நீங்கள் பதவி உயர்வு பெற்றால் என்ன செய்வீர்கள் என்கிற ரீதியில் இருந்தன. நடராஜனோ பழம்பெருமையே பேசினார்.

தான் கடந்த 15, 20 வருடங்களில் சந்தித்த சவால்களை எல்லாம் சொன்னார். அவை எடுபடவில்லை. காளியப்பன் கணினிமயமாக்கலை எப்படி எதிர்காலத்தில் வியாபாரத்தைப் பெருக்குவதற்குப் பயன்படுத்தலாம் என்பதைச் சொல்லி பதவி உயர்வும் பெற்றுவிட்டார். சீனியராக இருந்தாலும் நடராஜன் புறக்கணிக்கபட்டுவிட்டார். காரணம் அவரது அணுகுமுறை. தனக்கு கணினி செயல்பாடுகள் தெரியாதது பற்றி அவருக்கு வருத்தமே இல்லை.

அந்தக் குறைபாட்டை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார். மாறாக தற்புகழ்ச்சியிலேயே காலம்தள்ளி விட்டார். நீங்களும் நடராஜன் போன்ற நண்பர்களைச் சந்தித்து இருப்பீர்கள். அவர் காளியப்பனோடு நட்பு பாராட்டியிருந்தால் பயன்பெற்று இருப்பார் இல்லையா? எதிரிகள் அல்லது போட்டியாளர்களுடன் சாதுரியமாக நடக்காமலும், தன் தகுதியின் எல்லையை அறியாமாலும், தன்னைத் தானே வியந்தும் நடப்பவன் விரைவில் கெடுவான் என்கிறது குறள்!

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்

- குறள் (474)

somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்