ராணுவக் கொள்முதலில் தீவிரம் காட்டும் அரசு

By வ.ரங்காசாரி

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், பராக் ஏவுகணை ஊழல், சவப்பெட்டி ஊழல், டாடா டிரக் ஊழல் என பாதுகாப்புத் துறையில் நாட்டையே உலுக்கிய பல ஊழல்கள் நிகழ்ந்துள்ளன. நாட்டின் பாதுகாப்புத் துறையில் நிகழ்ந்த இத்தகைய ஊழல்கள் அரசுகளையும் மாற்றியுள்ளது. இனியும் இந்த நிலை தொடரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது தற்போது பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு. இதனாலேயே இந்திய ராணுவத்துக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், தளவாடங்கள், சாதனங் கள் போன்றவற்றைக் கொள்முதல் செய்வதில் பாரதிய ஜனதா தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதிய கொள்கையைக் கடைப் பிடிக்கிறது.

இந்தியாவிலேயே தயாரிப்பது, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது அத்துடன் அதில் பெரும் பகுதியை இந்திய தொழிற்கூடங்களில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துகொள்வது, வெளிநாட்டு நிறுவனங்களிடம் தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கும் ஒப்பந்தம் செய்துகொண்டு இந்திய சூழலுக்கேற்பத் தயாரிப்பது, இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி - வளர்ச்சி அமைப்பை வலுப்படுத்துவது, இந்திய தனியார் துறையில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங் களுடன் தொழில்கூட்டு வைத்துக் கொண்டு தயாரிப்பவற்றையும் வாங்கி ஊக்குவிப்பது என்பதே அந்தக் கொள்கை.

பிற நாட்டுடன் போர் என்று வந்தால் இந்திய ராணுவத்துக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், வெடிகுண்டுகள், சாத னங்கள், தளவாடங்கள் போன்றவற்றைப் போதிய அளவில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். போர் நீடித்தால் உள்நாட்டு ஆலைகளில் உற்பத்தியை விரைவுபடுத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். செயற்கைக் கோள் களையும் அவற்றை ஏவுவதற்கான ஏவு வாகனங்களையும் செய்யும் நம்மால் இயந்திரத் துப்பாக்கிகள், பீரங்கிகள், கவச வாகனங்கள், டேங்குகள், விமானங்கள், கப்பல்கள், படகுகள், நீர்மூழ்கிகள், குண்டு துளைக்காத கவச ஆடைகள், இரவிலும் பார்க்க உதவும் கண்ணாடிகள், பனிப் பிரதேசத்தில் குளிர் தாக்காமலிருக்கும் சிறப்பு ஆடைகள் போன்றவற்றைத் தயாரிக்க முடியாதா என்ற கேள்வியின் அடிப்படையில் விடை காணும் முயற்சியாக ராணுவக் கொள்முதல் கொள்கை வகுக்கப்படுகிறது.

லார்சன் அண்ட் டூப்ரோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் ஃபோர்ஜ், டாடா, புஞ்ச்லாயிட் என்ற இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொழில்கூட்டு வைத்துக்கொண்டு இந்தியாவிலேயே தயாரிக்க வாய்ப்புகள் அதிகமாகியிருக்கிறது. அந்நிய முதலீட்டு வரம்பு 49% ஆக உயர்த்தப்பட்டிருப்பதால் வெளிநாடுகள் ஆர்வம் காட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா போன்ற நிறுவனங்கள் ராணுவத்துக்குத் தேவைப்படும் ஜீப்புகளையும் கனரக லாரிகளையும் நல்ல தரத்தில் தயாரித்து விற்கின்றன.

ரூ.80,000 கோடி

ஜேட்லி தலைமையில் 26.10.2014-ல் கூடிய ராணுவக் கொள்முதல் பேரவை ரூ.80,000 கோடி மதிப்புள்ள கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்தது. 6 பாரம்பரியமான நீர்மூழ்கிக் கப்பல் கள், 2 மிட்ஜெட் நீர்மூழ்கிகள், 12 டோர்னியர் ரக விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. விமானங்கள் பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல். விமானத் தொழிற்சாலையில் கட்டப்படும்.

இவற்றின் விலை மட்டும் ரூ.1,850 கோடி. கடற்படையிடம் 40 டோர்னியர் விமானங் கள் உள்ளன. இவையல்லாமல் டாங்குகளைத் தகர்க்கும் ஏவுகணை குண்டுகள் 8,000-ம் அவற்றைச் செலுத்துவதற்கான லாஞ்சர்கள் 300-ம் வாங்க முடிவு செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.3,200 கோடி. இந்தியாவில் உள்ள ஆயுதத் தளவாட ஆலையால் உற்பத்தி செய்யப்படும் கவச வாகனங்கள், ரூ.2,000 கோடி மதிப்பில் 360 வாங்கவும் முடிவு செய்யப்பட்டது.

ரூ.30,000 கோடி

15.7.2015-ல் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் கூடிய ராணுவக் கொள்முதல் பேரவை (டி.ஏ.சி.) ரூ.30,000 கோடி மதிப்புக்கு வெவ்வேறு சாதனங்களையும் ஆயுதங்களையும் வாங்க ஒப்புதல் தந்தது. 428 பீரங்கிகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.16,900 கோடி. 1950-களில் தயாரிக்கப்பட்ட எல்-70 இசட்யு-23 ரக பீரங்கிகள் தரைப்படையால் பயன்படுத்தப்படுகிறது.

அத்துடன் இந்தியக் கடற்படை தனக்கு தேவைப்படும் ‘பி8ஐ’ ரக கண்காணிப்பு விமானங்களை வாங்கவும் பேரவை அனுமதி அளித்திருக்கிறது. இந்தியக் கடற்படையிடம் ஏற்கெனவே 8 நீண்டதொலைவு கண்காணிப்பு விமானங்கள் இருக்கின்றன. மேலும் 4 வாங்க ரூ.4,380 கோடி செலவு பிடிக்கும். இந்த விமானங்கள் நீர்மூழ்கிகளுக்கு எதிராகவும் போரிட வல்லவை.

ரஃபேல் போர் விமானங்கள்

பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரஃபேல் ரக போர்விமானங்கள் 126 வாங்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவற்றின் பெரும்பகுதியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பான உடன்பாட்டைப் பேசி முடிப்பதில் இழுபறி ஏற்பட்டது. பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றபோது 36 விமானங்களை உடனே இறக்குமதி செய்ய, அந்நாட்டு அரசுடன் பேசி இறுதி செய்துவிட்டார். எஞ்சிய விமானங்கள் எப்படி பெறப்படும் என்பது இனிமேல் தெரியவரும். 126 விமானங்களுக்கும் சேர்த்து ரூ.1.2 லட்சம் கோடி செலவாகும்.

விமானிகளுக்குப் பயிற்சி தரும் விமானங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்காமல் எச்.ஏ.எல். தயாரிக்கும் விமானங்களையே பயன்படுத்துவது என்ற முடிவும் இந்த அரசால் எடுக்கப்பட்டிருக்கிறது.

கடற்படைக்குத் தேவைப்படும் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவில் கட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் 4 பெரிய நீர் மூழ்கிகள். மற்ற 2 கடற்படை வீரர்கள் எளிதில் சென்று பகைநாட்டுக் கப்பல்களைத் தாக்கி அழிப்பதற்கானவை. அத்துடன் மும்பை, கொல்கத்தா, கொச்சி ஆகிய கப்பல்கட்டும் கூடங்களுக்கு போதிய ஆர்டர்கள் தரப்பட்டிருப்பதுடன் கார்வாரில் உள்ள துறைமுகத்தை விரிவுபடுத்தி அங்கும் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சட்டப்பூர்வமாக அனுமதிக்க முடிவு

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரத்துக்குப் பிறகு இடைத்தரகர்கள் இல்லாமல் கொள்முதல் செய்ய முற்பட்டதாலும் புதிய கொள்முதல்களில் ஈடுபடத் தயக்கம் காட்டியதாலும் முப்படைகளும் ஆயுதங்கள், சாதனங் கள் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட் டிருக்கிறது. எனவே வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடிப் பிரதிநிதிகள் வராவிட்டாலும் அவர்களுடைய முகவர்களை, அவர்கள் இந்தியாவில் பதிவுசெய்துகொண்டவர்களாக இருந்தால் அனுமதிப்பது என்ற முடிவை அரசு எடுத்திருக்கிறது. இதற்கான நடை முறைகள் சட்டப்பூர்வமாக்கப்படும். தரகுப் பணமாக ஏதும் தரப்படா மலிருக்கவும் வழிகாணப்படும்.

அணுசக்தி விமானந்தாங்கி கப்பல்

முற்றிலும் உள்நாட்டிலேயே அணு சக்தியில் இயங்கும் விமானந்தாங்கி கப்பலை தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. ரூ. 63 ஆயிரம் கோடி செலவிலான இந்தக் கப்பல் கட்டுவதற்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. இந்தக் கப்பலில் 50 விமானங்களை நிறுத்த முடியும்.

இதுவரை மொத்தம் ரூ.1,10,000 கோடிக்குக் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் 90% இந்தியாவில் தயார் செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகுவதுடன் தொழில்துறை வளர்ச்சியும் அதிகரிக்கும். அத்துடன் அரியதான அந்நியச் செலாவணியும் மிச்சப்படும். அனைத்துக்கும் மேலாக ஊழல் குற்றச்சாட்டுகளையும் தவிர்க்க முடியும்.

rangachari.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்