ஒரு மாநிலத்துக்குள் நிகழும் விற்பனையின் மேல் அந்தந்த மாநில அரசே விற்பனை வரி விதிக்கலாம் என்ற அரசியல் சட்டப் பிரிவு மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரங்களில் முக்கியமான ஒன்று. இன்றும் மாநில அரசுகளின் மிக முக்கியமான அதிக வருமானம் தரக்கூடியது விற்பனை வரிதான். ஆனால் இந்த அதிகாரத்தை மாநிலங்கள் முறையாக பயன்படுத்தவில்லை என்பது தான் முக்கியக் குற்றச்சாட்டு.
விற்பனை வரி விகிதப் போட்டி
1970-ம் ஆண்டுக்கு பிறகு மாநிலங்கள் தனியார் முதலீட்டை ஈர்க்க ஆரம்பித்தன. உள்ளீடு பொருட்களுக்கு அருகிலோ அல்லது சந்தைக்கு அருகிலோ தங்கள் உற்பத்தி நிலையத்தை அமைக்க தனியார் முதலீட்டாளர்கள் முயற்சிப்பர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்கட்டமைப்பு வசதியும் இதற்கு முக்கியம். நல்ல சாலை வசதி, இட வசதி, தடையில்லா மின்சாரம், போதுமான உழைப்பாளர்கள் கிடைப்பது போன்ற பல அம்சங்களை கவனத்தில் கொண்டுதான் தொழில் முதலீடு நடைபெறவேண்டும்.
இவற்றை எல்லாம் ஓரளவிற்கு அளித்துவிட்டு, மாநிலங்கள் விற்பனை வரி சலுகையை காட்டி தனியார் முதலீட்டை இழுக்கத் துவங்கின. எங்கள் மாநிலத்தில் விற்பனை வரி விகிதம் குறைவு, முதல் 3 அல்லது 5 வருடங்களுக்கு விற்பனை வரி விலக்கு என்ற சலுகைகளை கொடுக்க ஆரம்பித்தன.
இதனால் வரி விகிதங்கள் மாநிலங்களிடையே ஏற்றத்தாழ்வுடன் இருந்தன. பரப்பளவில் மிக சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்கள் அருகில் உள்ள பெரிய மாநிலங்களின் வரி விகிதத்தைவிட குறைவாகவே தங்கள் விற்பனை வரி விகிதங்களை வைத்திருந்தன. சிறிய மாநிலங்களின் வியாபாரமும் விற்பனை வரியும் இதனால் உயர்ந்தன. இவ்வாறு தொடர்ச்சியான வரி விகிதப் போட்டி மாநிலங்களுக்கிடையே நடந்தன.
மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பல வியாபாரக் குழுக்களின் நெருக்குதலுக்கு ஏற்ப ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. அவ்வப்போது பொருட்களின் வரி விகிதங்கள் மாற்றப்பட்டன. சில மாநிலங்களில் 300 வகையான விற்பனை வரிகள் இருந்தன.
மாநில விற்பனை வரி VAT வரியாக மாறியது
பொதுவாக வரி அமைப்பு நிலையாகவும், சீராகவும் இருக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் விற்பனை வரி அமைப்பு மாறுபடுவதும், பல வரி விகிதங்கள் இருப்பதும், வரி அமைப்பும், வரி விகிதமும் அவ்வப்போது மாறுவதும், தேசிய அளவில் வியாபாரத்தை சிக்க லாக்குகின்றன. விற்பனை வரியின் அமைப்பு எல்லா மாநிலங்களிலும் ஒன்று போல இருக்கவேண்டும் என்ற கொள் கையை எல்லா மாநிலங்களும் 1990 களில் ஒப்புக்கொண்டன. இதன் முதல் கட்டமாக வரி விகிதங்களை சீராக்க வேண்டும். 2000-த்தின் தொடக்கத்தில் மாநிலங்கள் ஒன்று கூடி Floor sales tax rates என்பதை ஒப்புக் கொண்டன. இதன் மூலம் 2, 4, 12, 16 என்ற நான்கு அடிப்படை வரி விகித தொகுப்புகளை ஒப்புக்கொண்டன.
ஒவ்வொரு தொகுப்பில் உள்ள பொருட்களுக்கு, அந்த தொகுப்பு வரி விகிதத்தை விட குறைவாக வரி விகிதத்தை கொடுக்க முடியாது. இதனால் மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு வரி விகிதத்தை குறைப்பதை தவிர்த்தன. இருந்தாலும், இந்த கட்டுப்பாட்டையும் சில மாநிலங்கள் மீறின. சமசீர் விற்பனை வரி முறை VAT என்ற மதிப்பு கூட்டல் வரி அமைப்பில்தான் சாத்தியம் என்பதையும் மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. மதிப்பு கூட்டல் வரியின் அமைப்பை கடந்த வாரம் பார்த்தோம். அதில் உள்ள முக்கியமான அம்சங்களில் ஒன்று, ஒரு வியாபாரி செலுத்திய வரியை, தான் வசூலிக்கும் வரியிலிருந்து கழித்து மீதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதாகும். இதற்கு Input Tax Credit என்று பெயர்.
பொதுவாக VAT வரி செயல்படுத்த 4 கட்டுப்பாடுகள் அவசியம்.
1. ஒன்று அல்லது இரண்டு வரி விகிதங்கள் மட்டுமே இருக்க வேண்டும். இவையும் நிலையாக இருக்க வேண்டும். எனவே மாநிலங்கள் பல வரி விகிதங்களை வைத்துக்கொள்வதை தவிர்த்து, எல்லா பொருட்களையும் இரண்டு தொகுப்புகளாக கொண்டு இரண்டு வரி விகிதங்கள் வைக்கவேண்டும். இது வரி வசூலிப்பதை எளிதாக்கும்.
2. முடிந்தவரை எல்லா பொருட்களும் வரி விதிப்புக்கு உட்படுத்தவேண்டும். வேளாண் பொருட்கள் போன்ற சில பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கலாம்.
3. மாநிலங்களுக்கு இடையே உள்ள விற்பனையின் மீது விதிக்கப்படும் CST முழுவதும் நீக்கப்படவேண்டும்.
4. எந்த ஒரு மாநிலமும் குறிப்பிட்ட பொருட்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கக்கூடாது.
இந்த கருத்துகளை முன்வைத்து, VAT விற்பனை வரியில் இரண்டு வரி விகிதங்கள் இருக்கும் - அத்தியாவசிய பொருட்களுக்கு 4% VAT, மற்ற நுகர் பொருட்களுக்கு 12.5% VAT; விவசாயப் பொருட்களுக்கு VAT இருந்து விலக்கு; தங்கம் வெள்ளி மீது 1% VAT; பெட்ரோல், மதுவகைகள் VAT அல்லாத விற்பனை வரி விதிக்கலாம் என்று மாநிலங்கள் ஒப்புக்கொண்டு 2005-06 முதல் VAT வரியை அமல்படுத்தின. CST என்ற மாநிலங்களுக்கிடையே உள்ள விற்பனை மீதான வரி 4% இருந்து 2%ஆக குறைத்தாலும், இதனால் அதிக வரி வருவாய் இழப்பை தமிழகம் போன்ற தொழில்மயமான மாநிலங்கள் சந்திக் கின்றன. மேலும் CST முழுவதும் நீக்கப்பட வேண்டும் என்பது VAT வரி அமைப்பின் முக்கிய அம்சம். இதனால் ஏற்படும் வரி இழப்பை மத்திய அரசு கொடுக்கவேண்டும் என்று மாநிலங்கள் கேட்கின்றன.
நுழைவு வரி, octrai போன்றவை
மாநிலங்களில் விற்பனை வரி, மோட்டார் வாகன வரி விகிதங்கள் மாறுபடுவதால், ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்துக்கு வரும் பொருட்கள், குறிப்பாக வாகனங்கள் மீது நுழைவு வரி விதித்தன. இதே போல் பல உள்ளாட்சி அமைப்புகள் octrai என்ற நுழைவு வரி விதித்தன. இவற்றை பல மாநிலங்கள் விலக்கிக் கொண்டாலும், சிலவற்றில் இருக்கின்றன. இவற்றையும் நீக்கினால் தான் VAT வரி சிறப்பாகச் செயல்படும்.
இவற்றால் முன்பைவிட இப்போது மாநில விற்பனை வரி சீராகியுள்ளது. இப்போது மாநில அரசின் VAT விற்பனை வரியையும், மத்திய அரசின் CENVAT வரியையும் இணைத்து GST என்ற புது வரி அமைப்பை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கின்றன.
- seenu242@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
32 mins ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago