இரண்டு பேர் இணைந்து வாழும் குடும்பத்திலேயே பல பிரச்சினைகள் உருவாகிற போது, சமுதாய சிக்கல்களைச் சொல்லவா வேண்டும். தீர்க்கப்படாத பல பிரச்சினைகளோடுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது சமுதாயமும் உறவுகளும்.
ஆனால் தீர்க்கப்படாத பிரச்சினைகளால் ஒரு நாட்டின் வளர்ச்சி தேங்குகிறபோது அதற்கு தீர்வை தேட வேண்டியது உடனடி அவசியமாகும். அப்படியாக வர உள்ளதுதான் வர்த்தக நீதிமன்றங்கள். தொழில் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துக் கொள்ள இந்த நீதிமன்றங்கள் உதவும் என்கிறது மத்திய அரசு. விரைவில் இந்த நீதிமன்ற நடைமுறை வர உள்ள நிலையில் அது குறித்து பார்க்கலாம்.
தினசரி செய்திகளில் தவறாமல் இடம் பிடிக்கும் விவகாரங்களில் ஒன்று தொழில் தகராறுகள். சொத்து தகராறுகள் முதல் காசோலை மோசடி என சிறு வழக்குகள், சுரங்க முறைகேடு போன்ற பெரு நிறுவன வழக்குகள்வரை நாம் படித்து வருகிறோம். இதில் பெரும்பாலான வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக தேங்கி இருப்பவை.
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளில் சுமார் 30 சதவீத வழக்குகள் காசோலை மோசடி வழக்குகளாகவே உள்ளது என்கின்றனர். மேலும் முக்கிய நிறுவன வழக்குகள் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தேங்குவதால் பொருளாதார இழப்புகளும் ஏராளம். இதனால் காலத்துக்கு ஏற்ப இந்திய நீதிமன்ற நடைமுறைகளில் மாற்றங்கள் தேவை என்கிற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
அந்த வகையில் இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன வர்த்தக நீதிமன்றங்கள். வர்த்தக ரீதியான வழக்குகளை இந்த நீதிமன்றங்கள் கையாள உள்ளன.
முக்கியமாக நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வர்த்த கர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு இந்த நீதிமன்றங்கள் தீர்வுகளை வழங்கும். இந்த வர்த்தக நீதிமன்றங்கள் என்கிற நடைமுறை மூலம் இந்தியாவின் 200 ஆண்டுகால நீதிமன்ற முறையில் முதல்முதலாக மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
1991-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய பொருளாதார கொள்கை காரணமாக இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு செல்வதும், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதும் எளிதானது.
வெளிநாட்டு முதலீடுகளும் இந்தியாவை நோக்கி வரத்தொடங்கின. இதற்கு பிறகு தொழில் வழக்குகளும், பிரச்சினைகளும் இந்திய நீதிமன்றங்களுக்கு பெரும் சுமையாக அமைந்துவிட்டன.
ஏற்கெனவே இந்திய நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத வழக்குகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த நிலையில் தொழில் நிறுவன வழக்குகள் தேக்கம் காரணமாக அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயக்கம் காட்டின.
இதன்பொருட்டுதான் சிறப்பு பொரு ளாதார மண்டலங்கள் உருவாக் கப்பட்டு, அங்கு தொழில் புரியும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டன. இதில் நீதிமன்ற கட்டுப்பாடுகள் சார்ந்த விதி விலக்குகளும் அளிக்கப்பட்டன.
2014 மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவில் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள சொத்து சார்ந்த வழக்குகளின் எண்ணிக்கை 34,32,493 என்கிறது புள்ளிவிவரங்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 4,90,383 சொத்து சார்ந்த வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன. முக்கியமாக இந்த வழக்குகள் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவே தீர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் நிறுவனங்கள் சார்ந்த வழக்குகளும் பல ஆண்டுகளாக தேங்கினால் முதலீடு முடங்கும் அபாயம் உள்ளது. புதிய பொருளாதார கொள்கைகளுக்கு ஏற்ப நாட்டின் வர்த்தகம் வளர்ந்து வரும் நிலையில் இது சார்ந்த பிரச்சினைகள் நீதிமன்றத்தில் தேங்கினால் அது நாட்டில் முதலீடு செய்யும் மதிப்பையே சீர்குலைக்கும் என மத்திய அரசு முடிவு செய்தது.
ஏனென்றால் நமது பக்கத்தில் உள்ள சிறிய நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் வர்த்தகப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு எட்டப்படுகின்றன. இதற்கென்று தனியாக நீதிமன்றங்கள் வைத்துள்ளன.
ஏற்கெனவே இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் வர்த்தக நீதிமன்றங்கள் என்கிற நடைமுறை உள்ளது. நிறுவனங்கள் மற்றும் தொழில் சார்ந்த வழக்குகள் இந்த நீதிமன்றங்கள் மூலம் தீர்க்கப்படுகின்றன. இந்த நடைமுறையை இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்காக 2003 -ல் மத்திய அரசு ஒரு ஆய்வு நடத்தியது. மத்திய சட்ட வாரியம் மேற்கொண்ட இந்த ஆய்வு பல்வேறு நாடுகளின் வர்த்தக நீதிமன்ற நடைமுறைகளை ஆய்வு செய்து 2009ல் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது. இதில் வர்த்தக நீதிமன்றம் இந்தியாவுக்கு தேவை என்று கூறியிருந்தது. இதன்படி வர்த்தக நீதிமன்றத்துக்கான சட்ட மசோதா 2009ல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐந்து கோடிக்கும் அதிகமாக உள்ள வர்த்தகப் பிரச்சினைகளை இந்த நீதிமன்றங்கள் கையாளும். முக்கியமாக உயர் நீதிமன்றங்களில் இரண்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் தனியாக செயல்படும். இந்த நீதிமன்றங்கள் சாதாரண வர்த்தகப் பிரச்சினைகள் முதல், சர்வதேச பெரு நிறுவனப் பிரச்சினைகள் வரை கையாளும்.
அறிவுசார் சொத்துரிமை பிரச்சினைகள், மற்றும் பல வர்த்தக தகராறுகள் வரை கையாளும் என வரையறுக்கப்பட்டது. குறிப்பாக ஒரு கோடி மதிப்புக்கும் அதிகமான பிரச்சினைகள் ஆறு மாதங்களுக்குள் இந்த நீதிமன்றங்கள் மூலம் தீர்வு எட்டப்படும் என இந்த மசோதாவில் வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மசோதா அப்போது நிறைவேறவில்லை.
தற்போது மத்திய அரசு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருவதால், வர்த்தக நீதிமன்றம் என்கிற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
பழைய மசோதாவில் பல மாற்றங்களை மேற்கொண்ட சட்ட வாரியம் ஜனவரி 2015 ல் மீண்டும் மத்திய அரசுக்கு வர்த்தக நீதிமன்ற அறிக்கையை கொடுத்தது. இதன் அடிப்படையில் சட்ட மசோதவை மத்திய அரசும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சட்ட வரைவில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது. இந்த நீதிமன் றங்களில் மேற்கொள்ளப்படும் வழக்கு களுக்கு 6 மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும். மேலும் இந்த நீதிமன் றங்களில் வாய்தாக்கள் கிடையாது. இந்த நீதிமன்றங்களைச் செயல்படுத்த தற்போதைய சிவில் சட்டங்களில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படும் என்கிறது அந்த சட்ட வரைவு.
வர்த்தக நீதிமன்றங்கள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் இந்திய நீதித்துறையின் மதிப்பு சர்வதேச அளவுக்கு உயரும். அதே நேரத்தில் தொழில் பிரச்சினைகள் உடனடியாக தீர்வை எட்டும். இதன் மூலம் இந்திய பொருளாதார வளர்ச்சி மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago