கெய்ர்ன் இந்தியா வரி விவகாரம் அந்நிய முதலீடுகளைப் பாதிக்குமா?

தெளிவற்ற வரி விதிப்புக் கொள்கைதான் நமது அந்நிய முதலீடுகளை பாதிக்கும் காரணி என்பது அரசியல்வாதிக்கும் தெரியும், உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச் சிக்கு அந்நிய முதலீடுகளின் பங்களிப்பு மிகவும் அவசியமாக உள்ளது.

அந்நிய முதலீடுகளை ஈர்க்க வேண்டுமெனில் இங்கு தொழில் தொடங்குவதற்கான சூழல் எளிதாக இருக்க வேண்டும். அந்நிய முதலீட்டா ளர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது இங்கு நிலவும் வரி விதிப்பு முறைதான்.

வோடபோன் விவகாரம் பூதாகரமாக கிளம்பி அடங்கியுள்ள வேளையில் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பு முறையும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. இவை இரண்டுமே வெளிநாட்டு நிறுவனங் களாகும். தாராளமயமாக்கல் நடைமுறைக்கு வந்த பிறகும் எண்ணெய், எரிவாயு அகழ்வில் அந்நிய முதலீடுகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வரவில்லை. இதைத் தொடர்ந்து 1996-ம் ஆண்டில் இத்துறையில் 100 சதவீத அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன.

அப்போது இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி எனும் எடின்பர்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்காட்லாந்து நிறுவனம்.. இந்நிறுவனம் ஓஎன்ஜிசியுடன் இணைந்து ஆந்திர மாநிலம் ராவா எனுமிடத்திலும், குஜராத்தில் காம்பே வளைகுடாப் பகுதியிலும், ராஜஸ்தான் மாநிலத்திலும் எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டுள்ளது.

2005-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்நிறுவனம் மேற்கொண்ட அகழ்வில்தான் அதிகப்படியான கச்சா எண்ணெய் கிடைத்தது. இன்றளவும் கிடைத்து வருகிறது. 2006-ம் ஆண்டில் இந்நிறுவனம் இந்திய நிறுவனத்தை தனியாக உருவாக்கத் திட்டமிட்டது. இதன்படி உருவாக்கப்பட்டதுதான் கெய்ர்ன் இந்தியா நிறுவனமாகும்.

இதற்காக கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கான பங்குகள் ஒதுக் கப்பட்டு அது தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டது. தாய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி துணை நிறுவனமாக இருந்த கெய்ர்ன் நிறுவனத்தை கெய்ர்ன் இந்தியா நிறுவனமாக தனியாக உருவாக்கியது.

இதற்காக கெய்ர்ன் இந்தியா நிறுவனம் பங்குத் தொகைகளை கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சிக்கு வழங்கியது. இத்தகைய பங்கு பரிமாற்றத்தில் மூன்றாவது நிறுவனம் ஏதும் கிடையாது. இதற்கு 2006-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வோடபோன் விவகாரம் கிளம்பி யவுடன் முன் தேதியிட்டு வரி விதிக்கலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருந்தாலும் வோடபோனைத் தொடர்ந்து கெய்ர்ன் நிறுவனம் மீது வரி செலுத்த வேண்டும் என்று வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.

தாய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சிக்கு மூலதன ஆதாயம் பரிமாற்றம் செய்ததில் அடைந்த ஆதாயத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டது. 2014-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் ரூ. 10 ஆயிரம் கோடி வரியும் அதற்கு வட்டியாக ரூ. 10 ஆயிரம் கோடி ஆக மொத்தம் ரூ. 20 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும் என கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெய்ர்ன் இந்தியா நிறுவனம் மீது ஒரு வழக்கும், கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி மீது ஒரு வழக்கும் போடப்பட்டுள்ளது.

தாய் நிறுவனத்துக்கு பங்குத் தொகை அளித்தபோது அதற்குரிய வரியை பிடித்து (டிடிஎஸ்) செலுத்தத் தவறியது ஏன் என்று கெய்ர்ன் இந்தியா நிறுவனம் மீதும், இந்திய நிறுவனம் மூலம் அடைந்த ஆதாயத்துக்கு வரி செலுத்தாதது ஏன் என்று கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கெய்ர்ன் பிஎல்சி நிறுவனம் இது தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தை நாடியுள்ளது. அதில் இந்தியா-இங்கிலாந்து இடையே வரி விதிப்பு ஒப்பந்தம் உள்ளது என்றும். அந்த வகையில் இந்தியாவில் மேற்கொள் ளப்படும் முதலீடுகளுக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. 100 சதவீத அந்நிய முதலீடுகளை அனுமதித்த வேளையில் தேவையான போது 100 சதவீதம் விலகிக் கொள்ளும் வாய்ப்பும் இருந்தது.

இதனால் தாய் நிறுவனத்துக்கு அளித்த பங்குத் தொகைக்கு வரி பிடித்தம் செய்யவில்லை என்று கெய்ர்ன் இந்தியா நிறுவனம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. முன் தேதியிட்டு வரி விதிக்கும் முறை தொடராது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மேடைக்கு மேடை முழங்கி வருகிறார்.

ஆனால் முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி கொண்டு வந்த முன் தேதியிட்டு வரி விதிக்கும் சட்ட மசோதா கைவிடப்படவில்லை. இதனாலேயே இவ்விரு நிறுவனங்களும் செய்வதறியாமல் திகைக்கின்றன.

தெளிவற்ற வரி விதிப்புக் கொள்கைதான் நமது அந்நிய முதலீடுகளை பாதிக்கும் காரணி என்பது அரசியல் வாதிக்கும் தெரியும், உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும். இந்தியாவில் முதலீடு செய்த கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சட்ட பிரச்சினை சர்வதேச அளவில் விவாதிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை தொடரும் பட்சத்தில் அந்நிய முதலீடு வருமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE