முதல் செலவு: பரஸ்பர நிதிகளின் பல நன்மைகள்

By ஸ்ரீகாந்த் மீனாட்சி

இந்தியாவில் ஏறத்தாழ ஒரு கோடி பேர் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்கிறார்கள். நாட்டின் எந்தப் பகுதிகளில் இந்த முதலீட்டாளர்கள் அதிகம் உள்ளனர், எங்கிருந்து அதிக பரஸ்பர நிதி முதலீடுகள் வருகின்றன என்று பார்த்தால் அது கொஞ்சமும் சமமாக இல்லை என்பது புரியும். மும்பை மற்றும் மும்பை சார்ந்த பகுதிகளில் மட்டும் சுமார் 46% முதலீட்டாளர்கள் இருக்கின்றனர்.

புனேயையும் சேர்த்துக் கொண்டால் இது 50%க்கு மேல் செல்லும். குஜராத் மாநிலத்தையும் (மேற்கு மாநிலம் என்ற அளவில்) இதில் இணைத்தால், 60% பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள் இவ்விரு மாநிலங்களிலிருந்து மட்டுமே வருவது புலப்படும். இன்னொரு 15% புதுடெல்லி சார்ந்த பகுதிகளில் இருந்து. சென்னை மற்றும் தமிழகம்? மொத்தமாக 5 சதவீதத்திற்குக் குறைவாக.

5% முதல் 50% வரை

இதை ஏன் சொல்கிறேன்? ஒரு விதத்தில் இதை நான் எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். பரஸ்பர நிதிகளின் கொள்கை பரப்புச் செயலாளர் போலச் செயல்பட்டுக் கொண்டு தமிழில் இந்தக் கட்டுரைகளை நான் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்வதற்காக. சென்ற ஒரு வருடத்தில் பல நிதித்திட்டங்கள் முப்பத்தி ஐந்திலிருந்து ஐம்பது சதம் வரை தமது முதலீட்டாளர்களுக்கு ஈட்டிக் கொடுத்திருக்கின்றன.

ஒரு சில திட்டங்கள் இதற்கும் மேலே போய் எண்பது-தொண்ணூறு சதம் வரை கொடுத்திருக்கின்றன. இத்திட்டங்களிலும், பரஸ்பர நிதி என்ற முதலீட்டு முறையிலும் நம்பிக்கை வைத்து முன்னரே முதலீடு செய்திருந்தவர்கள் இத்தகைய பிரமாதமான லாபங்களில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் மிகக் குறைந்த சதவீதமே தமிழர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

பணம் உழைக்கும்

இந்த நிலை மாற வேண்டும். மாறி னால் நமக்கும் நல்லது, நாட்டிற்கும் (தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும்) நல்லது. உலகத்தின் மிகப் பெரும் செல்வந்தர்களிடம் கூட அவர்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை விட, அந்தப் பணத்தை அவர்கள் உழைக்க விட்டு (முதலீடு செய்து) சம்பாதித்த பணமே அதிகம். இந்த வரிசையில் நாம் ஒவ்வொருவரும் சேர வேண்டும்.

முதலீடு செய்க

அதற்கு தலையாய முறை பரஸ்பர நிதிகளின் மூலம் முதலீடு செய்வதே. இந்த முறையின் முதல் நன்மை, இது நமக்கு பங்கு வர்த்தகச் சந்தையில் முதலீடு செய்ய ஒரு ஏற்ற வகையை கொடுக்கிறது என்பதே. முன்பும் ஒரு கட்டுரையில் நான் சொன்னது போல, நேரடி பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய நமக்கு நிறைய நேர அர்ப்பணிப்பும், விஷய ஞானமும் தேவை.

அப்படி இல்லாமல் முதலீடு செய்ய முனைவது மிகவும் ஆபத்தானது. அதற்காக பங்குச்சந்தையில் முதலீடே செய்யாமல் இருப்பது ரொம்பத் தவறு. இவ்விரண்டுக்கும் இடையில் ஒரு முறையாக, பங்குச் சந்தையில் முதலீடுகளை நாம் செய்ய ஒரு ஊடகமாக இருப்பதே பரஸ்பர நிதிகள் நமக்களிக்கும் முதல் நன்மை.

பரவலாக்கம்

இரண்டாவது நன்மை, பங்குச்சந்தை முதலீட்டின் ரிஸ்கினைக் குறைத்தல். பரஸ்பர நிதிகளால் இது இரண்டு விதங்களில் சாத்தியப்படுகிறது. முதலாவது முதலீட்டினைப் பரவலாக்குதல் (diversification). நீங்கள் ஒரு சிறிய நிறுவனத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு அசம்பாவிதத்தால் அந்த நிறுவனம் நொடித்துக் கொண்டு மூடப்படுகிறது என்றால், உங்கள் மொத்த முதலும் வீணாகும் அல்லவா? மாறாக அதே பணத்தை ஒரு ஐந்து சிறு நிறுவனங்களில் முதலீடு செய்தால் என்ன ஆகும்?

ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்களுக்கு ஆபத்து வந்தாலும், மற்ற நிறுவனங்களில் செய்த முதலீடுகள் தரும் லாபங்கள் அவற்றுக்கு ஈடு கட்டி விடும் அல்லவா? இந்த வகையில் ஒரு முதலீட்டின் ரிஸ்கினைக் குறைப்பது தான் பரவலாக்குதலின் ஆதாரக் கோட்பாடு. ஒரு பரஸ்பர நிதி என்பது குறைந்தது பதினைந்து இருபது நிறுவனங்களில் முதலீடு செய்யும். சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் நிதித் திட்டங்கள் 80 நிறுவனங்களில் கூட ஒரே சமயத்தில் முதலீடு செய்யும். முதலீட்டாளருக்கு ரிஸ்க் குறைவது முதலில் இந்த அம்சத்தினால்தான்.

அபாயம் குறையும்

மற்றொரு விதத்திலும் பங்குச்சந்தை முதலீட்டின் ரிஸ்கினை பரஸ்பர நிதிகள் குறைக்கின்றன. அது ஒரு தகுதி வாய்ந்த நிதி மேலாண்மை நிபுணர் மூலமாக முதலீட்டினைப் பராமரிப்பது. இந்த நிபுணர்களுக்கு பொழுது விடிந்து பொழுது போனால் இது ஒன்றுதான் வேலை. எந்த நிறுவனத்திற்கு வளர்ச்சி சாத்தியங்கள் அதிகம் உள்ளது, எங்கே சிக்கல்கள் உள்ளன, எப்பொழுது முதலீடு செய்யலாம், எப்பொழுது வெளியேறலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்பது.

ஒரு மேலாண்மைக் குழுவாக இவர்கள் செயல்படுவார்கள். நிறுவனங்களை நேரடியாகவே சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகே சில சமயம் வர்த்தக முடிவுகளை எடுப்பார்கள். இதெல்லாம் சாதாரண முதலீட்டாளர்களுக்கு சாத்தியமா? ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட முறையிலேயே இது சாத்தியப்படும் அல்லவா? அதைத்தான் பரஸ்பர நிதிகள் செய்கின்றன.

தரமான நிதி மேலாண்மை

மூன்றாவது நன்மை இந்த மேற்கூறிய நன்மைகளெல்லாம் ஒரு குறைந்த கட்டண/செலவிலேயே சாத்தியப்படுகின்றது என்பது. இதுவரை நாம் இது பற்றிப் பேசவில்லை என்பதால் ஒரு சிறு அறிமுகம் தேவைப்படுகிறது. பரஸ்பர நிதிகளின் நிதி மேலாண்மை மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கு உங்கள் முதலீட்டிலிருந்தே கட்டணம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்தக் கட்டணம் என்பது ஒரு வருடத்திற்கு 1.25% த்திலிருந்து 3% வரை இருக்கும் (திட்டத்தைப் பொறுத்தது). இந்த கட்டண அளவு என்பது செபி (SEBI) அமைப்பினால் வரையறுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இந்தியாவில் பல பங்கு வர்த்தக மேலாண்மைக் கட்டணங்களோடு ஒப்பிடுகையில் இது குறைவானது என்பதால், குறைந்த செலவில் உங்கள் நிதி மேலாண்மைத் தரத்தை உயர்த்த பரஸ்பர நிதிகள் வழி வகுக்கின்றன என்பது உண்மை.

சுலபமானது

இந்த முக்கிய நன்மைகள் தவிர வேறு சில நன்மைகளும் உள்ளன. குறிப்பாக, பரஸ்பர நிதிகளிலிருந்து முதலீட்டினை வெளிக்கொணர்வது மிகவும் சுலபம். இணையம் அல்லது கைபேசி மூலமாகக் கூட சில கிளிக்குகளில் முடித்துக் கொள்ளக் கூடிய விஷயம். வரி விஷயத்திலும் பரஸ்பர நிதிகளுக்கு பல சாதகமான சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு பரஸ்பர நிதி என்பது குறைந்தது பதினைந்து இருபது நிறுவனங்களில் முதலீடு செய்யும். சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் நிதித்திட்டங்கள் 80 நிறுவனங்களில் கூட ஒரே சமயத்தில் முதலீடு செய்யும். முதலீட்டாளருக்கு ரிஸ்க் குறைவது முதலில் இந்த அம்சத்தினால்தான்.

srikanth@fundsindia.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்